சுரேஜமீ

புகழ்

 

peak

உலகின் முதல் வெளிச்சம் தன்னில் பட்டபோது அழுதவன், தன்னை அடையாளப்படுத்த அடுத்தடுத்து வெளிச்சத்தை நோக்கியே நகர்கிறான் என்று சொன்னால் மறுப்பதற்கில்லை; கதிரொளிக்கும், மின்னொளிக்கும் உள்ள வித்தியாசம்தான் எது நிலையானது என்பதைத் தீர்மானிக்கிறது. ஒரு சொல்லைப் பொருள் கொள்வதில், இக்காலத்து இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் தவறு நேர்ந்துவிடக் கூடாது என்பதுதான் இன்றைய பதிவின் நோக்கம்!

புகழுக்கு மயங்காதவர்தான் எவருளர் என்பர்? எளிதில் காரியம் சாதிக்க விரும்பும் நபர் செய்யக் கூடிய முதல் வினையே, எவர் மூலம் அக்காரியம் நடைபெற வேண்டுமோ, அவரைப் பற்றி பெருமையாகப் பேசிக் காரியத்தை சாதிப்பர். இதைத்தான் ‘புகழ்’ என்று பெரும்பாலும் நம்பிக் கொண்டிருக்கிறோம்.

மொழியின் ஆளுமையில் வந்த பிழைதான் ஒருவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவதைப் ‘புகழ்’ என்று அர்த்தம் புனைய வைத்து விட்டதோ என்ற ஐயம் எழுகிறது.

சரி, அப்படியென்றால் ‘பெருமை’ என்ற சொல்லுக்கும் ‘புகழ்’ என்ற சொல்லுக்கும் பொருள் வேறுபடுகிறதா என்றால்,

ஆம்! என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.

எடுத்துக் காட்டாக, ஒரு மாணவர் வகுப்பில் ‘முதல் மாணவன்’ என்ற தகுதியைப் பெறுவது பெருமை சேர்க்கும் ;

ஆனால், அதே மாணவன் ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டு, பெரும்பான்மை மக்களின் நலனுக்காக, ஒரு புதிய கண்டுபிடிப்பை உருவாக்கினால்,

அது அவனுக்குப் புகழைச் சேர்க்கும்!

ஆக, பெருமை எனும் சொல்லைப் புகழுக்குப் பதிலியாகக் கொள்ளுதல் தவறு என்பதை முதலில் புரிந்து கொள்ளுதல் அவசியம்.
மேலாண்மை இயல் தத்துவத்தில் சொன்னால், புகழ் என்பது ஒரு இலக்குக்கு ஒப்பானது; அதை அடையக் கூடிய நிபுணத்துவம்தான் பெருமை என்று கொள்ளளாம்!

புகழ் என்பது காலம் தாண்டி நிற்கும் வலிமை உடைத்து. புகழ் என்பது ஒரு அசாதாரணமான, ஒரு தனித்தன்மை வாய்ந்த, ஒரு சிறப்பான செயலை,

முன்னுதாரணமாகக் கொள்ளக் கூடிய ஆற்றல் வாய்ந்த பண்பு என்றும் சொல்லலாம்!

அத்தகைய புகழ் பற்றித் தமிழ் இலக்கியங்கள் சொல்வதைப் பார்ப்போமா?

புறநானூறு

………….ஆண்டுநீ பெயர்ந்த பின்னும்,
ஈண்டுநீடு விளங்கும்,
நீ எய்திய புகழே!

ஒருவர் இறந்து ஆண்டுகள் போயினும், அவர் பற்றிய நினைவுகள் காலம் போற்றக் கூடியதாக இருக்குமாயின், அதுதான், இப்பாடலில் நாம் காணும் ‘புகழ்’ எனும் சொல்லின் பொருள்!

பலருக்கு நாம் அறிவதில் அல்ல புகழ்; பாருக்கு நாம் ஒரு முன் மாதிரியாக இருப்பது தான் ‘புகழ்’!

கடையெழு வள்ளல்களில் ஒருவன் பாரி எனும் மன்னன். அவன் ஒரு சமயம் வீதியில், தன தேரில் செல்லும்போது, ஒரு முல்லைக் கொடி, தான் படரக் கொம்பு இல்லாமல், தள்ளாடி நிற்பதைக் காண்கிறான். அச்சம்பவம் மன்னனின் மனதைப் பாதிக்க,

உடனே தான் வந்த தேரை, அந்த முல்லைக் கொடியின் பக்கத்தில் நிறுத்தி, தான் நடந்தே அரண்மனைக்குச் சென்று, அக்கொடியின் துயரத்தைப் போக்கினான் என்றால்,

அவன் ஆட்சிக் காலத்தில், தன் குடிமக்களை எவ்வாறு பாதுகாத்திருப்பான் என்று சிந்தியுங்கள்.

இதைத்தான் ‘புகழ்’ என்று இலக்கியங்கள் பறைசாற்றுகிறது!

திருக்குறள்

இரண்டு அடுத்தடுத்த குறள்கள் ‘புகழ்’ எனும் சொல்லை நமக்கு எளிதில் புரியவைக்கிறது என்றால் மிகையாகாது;

1. தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று!

தோன்றுதல் எனும் சொல், நிலையான உண்மையைக் குறிக்கலாம்; முதன் முதலில் அறியக் கூடிய ஒன்றைக் குறிக்கலாம்; அல்லது ஒரு பிறப்பைக் குறிக்கலாம்! இதுதான், நம் மொழியின் சுவையே!

நாம் எப்படிக் கையாள்கிறோமோ, அதற்குத் தகுந்தாற்போல் வளையக் கூடிய ஆற்றல் தமிழ் மொழியின் சிறப்பு.

அவ்வகையில், நம்மை இவ்வுலகு அறியச் செய்ய வேண்டுமெனில், நாம் அதற்குத் தகுந்த வகையில், ஒரு உயர்ந்த நெறியில் வாழ்பவராகவோ; அல்லது, பலர் போற்றக்கூடிய செயலைச் செய்தவராகவோ; அல்லது ஒரு நிலைத்த உண்மையை கண்டறிந்தவராகவோ இருந்தால்,

திருவள்ளுவர் சொல்லக் கூடிய ‘புகழ்’ எனும் சொல்லுக்கு இலக்கணமாக இருப்பவராகக் கருதப் படுவோம்;

இதையே, திருக்குறள் தென்றல் தங்கமணி வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால்,

நம் மனதில் எழக்கூடிய எண்ணங்கள் உயர்ந்த நோக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால், அது நிலைத்த புகழைத் தரக்கூடியது என்பார்!

அடுத்த குறள் ,

2. புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்?

ஒருவன் தான் காலத்தை வென்று வாழவேண்டும் என எண்ணினால், தான் அதற்கு ஏற்ப உழைக்க வேண்டும்! தன்னை பண்படுத்த வேண்டும்; மாறாக, தான் அவ்வாறு இருக்க முயலாமல்,

தன்னை பழிசொல்பவர்கள் மீது வருந்தித் தன் செயலில் முனைப்பைக் குறைக்கக் கூடாது!

ஆக, மேற்சொன்ன இரு குறள்கள் மூலம், திருவள்ளுவர், புகழின் அர்த்தத்தையும்; அதை அடைவதற்கு, நாம் என்ன செய்யவேண்டும் என்பதையும் மிகத் தெளிவாக வலியுறுத்துகிறார்.

இப்பொழுது சொல்லுங்கள்……

புகழ் என்பது ஒரு அழியாத சாதனையைக் குறிப்பதா? அல்லது ஏதோ ஒரு ஊடகத்தில் அல்லது ஒரு சமூகத்தில் அல்லது ஒரு அரங்கத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதா?

மாய வார்த்தைகளால் ‘புகழ்’ எனும் மாலை சூடிக் கொண்டீர்களானால், அது புற்று நோய்க்குச் சமமானது; உங்களை அறியாமலேயே, உங்கள் திறமைகளை அழிக்கும் கொடும் நோயாக உருவெடுக்கும்!

எனவே, நாம் சற்றுக் கவனமாக இருக்க வேண்டியது நம்மைப் பற்றிப் பிறர் கூறும் மயக்க வார்த்தைகளில்தான்! அவர்கள், நம்மைப் புகழ்கிறார்கள் என்று மயங்காமல்,

நம்மைச் சீர் தூக்கி, நாம் அதற்குத் தகுதியானவாரா என்று ஆய்வுக்கு உட்படுத்தி,

அதனைத் தலைக்கு ஏற்றாமல்,

நம் தரத்தை உயர்த்திக் கொள்வோமானால்,

நிச்சயம் நீடு புகழ் கொள்ளும் சிகரம் தொடுவோம்…..

தொடர்வோம்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *