ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 23

0

சி. ஜெயபாரதன்.

கலில் கிப்ரான்

(1883-1931)

ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

மூலம் : கலில் கிப்ரான்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

பூரணம் அடைவது
______________

“இது எப்போதும் அறிந்ததுதான் : காதலுக்குத் தனது ஆழம் பிரிவு வேளை வருவது வரை தெரியாது.”
கலில் கிப்ரான்.
“கலைத்துவம் என்பது நமக்குத் தெரிந்ததற்கும், மர்மமான மறைதலுக்கும் இடைப்பட்ட ஒரு எட்டு வைப்பு.”
கலில் கிப்ரான்.
______________

பூரணம் அடைதல் எப்போது ?
______________

இவற்றை எல்லாம் உணர்ந்த பின்
இயற்கை யாகவே
பாதி வழி அறிந்திடு வான்
பரிபூரணப் பாதைக்கு !
குறிக்கோளை அடைய
சிந்திக்க வேண்டும் அவன்
தாயைச் சார்ந்துள்ள தானொரு
சேய் என்று !
தானொரு குடும்பத்தின்
பொறுப் புள்ள
ஒரு தந்தை என்று !
______________

காதலில் தோல்வி யுற்ற
வாலிபன் !
கடந்த வாழ்வை எதிர்க்கும்
பழமைவாதி !
ஆலயத்தில் வழிபடும் மனிதன் !
சிறையில் அடைபட்டுள்ள
ஒரு குற்றவாளி !
ஏட்டில் எழுதிக் குவித்திருக்கும்
இலக்கியப் பண்டிதன் !
இரவின் கருமைக்கும்
பகலின்
புரியா மைக்கும் இடையே
தடுமாறும்
ஓர் அறியாப் பாமரன் !
இனிமை உறுதிக்கும்
தனிமை முட்களுக் கிடையே
தவிக்கும்
கிறித்துவ மாடக் கன்னி !
உடலுறவுப்
பலவீனத் துக்கும்
உடற்பசித் தேவைக்கும்
இடையில்
அடைபட் டிருக்கும்
ஒரு விலை மாது !
கசந்த வாழ்வுக்கும்
கையா லாகாத பணிதலுக்கும்
மையத்தில் நையும்
ஓர் ஏழை மனிதன் !
பேராசைக்கும்
மனச் சாட்சிக்கும் இடையே
போரா டாத
ஒரு செல்வக் கோமான் !
அந்தி மயங்கிய ஒளிக்கும்
உதயச் சுடர் கதிருக்கும்
உள்ள இருளை உணர்ந்த
ஒரு கவிஞன் !
______________

யார் இப்படி
அனுபவம் பெறுவார் ?
எவர் இப்படி
உலகைக் காண்பார் ?
யார் இப்படி
புரிந்து கொள்வார் ?
பூரணம் அடைய முடியும்
தொடர்ந்து
இவ ரெல்லாம்
கடவுளின் நிழலாய் !
______________

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *