சுரேஜமீ

நிறைவு

peak1

எளிதில் நிலைகொள்ளாத மனத்தில் எதிலும் நிறைவு என்பது இயலாத காரியம்தான். ஆனாலும், தேவைகளில் தெரிவும், உபயோகத்தின் தன்மையும், எண்ணங்களில் திண்மையும் இருந்தால்,

நிறைவு என்பது நிச்சயம் குடியிருக்கும் ஒரு கோயிலாக உங்கள் இதயம் இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை!

உலகத்தில் இன்னமும் சரிபாதி மக்களின் சராசரி வருவாய், நாள் ஒன்றுக்கு ரூபாய் 200க்கும் குறைவாகத்தான் இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. என்றாவது ஒரு நாள் நிலைமை மாறும் என்றுதான் இன்னமும் நம்பிக் கொண்டிருக்கும் மக்களின், வறுமையை ஒழிக்க மானுடம் பண்பட வேண்டும் என்பதை மறுக்க முடியாது.

ஒவ்வொரு செயலிலும் நாம் காணும் நிறைவுதான், நம்மை வளர்த்தெடுக்கும், ஒப்பற்ற பண்பு என்பதை அனுபவம்தான் நமக்குப் புரிய வைக்க முடியும்.

இன்னமும் நம்முடைய ஒவ்வொரு செயலும் , நம்மைப் பற்றிய அடுத்தவர்களின் பார்வையை எதிர் நோக்கியே இருக்கின்றன என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்; இதிலிருந்து விடுபடும் நாள் சொல்லும்,

உங்கள் வாழ்வின் ஒப்பற்ற இலட்சியப் பயணத்தையும்; இந்த வாழ்வின் அர்த்தத்தையும் என்பதை நினைவில் நிறுத்துங்கள்!

குழந்தைகளிடம் கற்றுகொள்ள ஏராளம் இருந்தாலும், மிக முக்கியமாக ஒன்றைக் கவனியுங்கள். குழந்தைகள் ஒவ்வொரு நிமிடமும் பரபரப்பாகவே இருக்கிறார்கள். எங்கிருந்து அவர்களுக்கு சக்தி கிடைக்கிறது?

இவ்வளவுக்கும, இன்றைய வாழ்வில் வாய்ப்புள்ளவர்கள் அனைத்து சொகுசு வசதிகளின் துணையோடு வாழ்ந்தாலும், களைப்பு என்பதை மறைக்கவோ, மறுக்கவோ முடிவதில்லை. அலுவலகத்திலிருந்து வந்தவுடன் ஒருவித அசாதாரண நிலையில்தான் இருக்க முடிகிறது. உடல் அசதி ஒரு பக்கம் இருந்தாலும், எண்ண ஓட்டங்கள்தான் உளைச்சலுக்குக் காரணமாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளத் தயக்கம் காட்டுகிறோம்!

ஆனால், குழந்தைகள் நேற்றையப் பதிவையோ, நாளைய கனவையோ சுமப்பதில்லை; அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம், இன்று….இந்தத் தருணம்….நிகழ் காலம்…..அவ்வளவே…!

நிகழ்காலத்தில் இருக்கும் ஒவ்வொரு தருணமும் இயற்கை வழங்கும் சக்தி அளப்பரியது என்பது நிதர்சனமான உண்மை.

மகிழ்ச்சி என்பது வசதிகள் தருவது அல்ல; வாழ்க்கை வாழ்வதில் இருக்கிறது என்பதை உணர்த்துவதுதான் ‘நிறைவு’ எனும் பண்பு என்று சொன்னால் மிகையாகாது.

நண்பர்களே, இதுகாறும் கடந்த 27 வாரங்களாக, வான் மண்டலத்தில் இருக்கும் 27 நட்சத்திரங்கள் போல, வாழ்வில் ஒளிவீசி ஏறு நடைபோடத் தேவையான பண்புகள் பற்றி எழுதி வந்தது குறித்து மன நிறைவு கொள்கிறேன்.

ஒன்றை உங்கள் நினைவின் ஆழத்தில் பதிய விரும்புகிறேன். இங்கு குறிப்பிடப்பட்ட எதுவும் புதிதல்ல. இதற்கு முன்பு எத்தனையோ மாமனிதர்கள் குறிப்பிட்டதை

ஒரு மாத்திரை அளவில், உங்களுக்குத் திரும்ப நினைவூட்டி, உறங்கிக் கிடக்கும் எண்ணங்களைத் தட்டி எழுப்ப முயற்சித்தேன் என்றுதான் சொல்ல வேண்டும்!

இதோ கடந்த 27 வாரங்களாக நாம் படித்த தலைப்புகளை ஒருங்கே இறங்கு வரிசையில் சுட்டி, உங்களின் கவனத்தை மீட்க விழைகிறேன்.

27. புகழ்
26. ஆளுமை
25. வாய்மை
24. திறமை
23. பொறுமை
22. எளிமை
21. கடமை
20. நேரம்
19. திட்டமிடல்
18. எண்ணங்கள்
17. உணர்ச்சி வயப்படுதல்
16. நட்பு
15. குடும்பம்
14. பெண்மை
13. மனம்
12. தெளிவு
11. வெற்றி
10. நம்பிக்கை
9. மனிதம்
8. வறுமை
7. செல்வம்
6. இயற்கை
5. இயற்கை
4. இயற்கை
3. புரிதல்
2. மதிப்பு
1. கல்வி

இவையெல்லாம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தால், தமிழுக்கு நன்றி சொல்வேன். பிரபஞ்சத்தில் மொழி தோன்றிய காலத்திலிருந்து, தனித்தன்மையுடன் விளங்கும் தாய்த்தமிழ் தந்த கொடைதான், இனம் காக்க, காலம் காலமாய் பதிவுகளைத் தாங்கி வருகிறது; வரலாறாய் தலை முறைக்கும் செல்கிறது!

எது நடந்ததோ,அது நன்றாகவே நடந்தது.
எது நடக்கிறதோ,அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்!

இதுதான் வாழ்க்கை; இதுதான் பயணம் என்பதை அறிந்தோர் வாழ்வில் நலம் பெறுகின்றனர்; மற்றவர் வருவதைத் தனதென்றும்; போவதைத் துயரென்றும் வெதும்புகின்றனர்!

நாம் எதைச் செய்தாலும், அதில் ஒரு நிறைவு இருக்க வேண்டும். அந்த நிறைவை ஏற்படுத்துவதாக, நம் செயல்கள் இருக்க வேண்டும்! அந்த வகையில், ‘சிகரம் நோக்கி’ என்ற இத்தொடரின் முதல் பாகத்தை நிறைவு செய்கிறேன்.

துணுக்குகளாக எழுத ஆரம்பித்த பொழுது, தொடராக எழுதவேண்டும் என ஊக்கமளித்த அன்புச் சகோதரி பவளா அவர்களுக்கும்,

வல்லமை ஆசிரிய குழுவிற்கும் மற்றும் கோடானுகோடி வாசகப் பெருமக்களுக்கும்,

ஆக்கமும், ஊக்கமும், ஒத்துழைப்பும் அளித்த அன்பு மனையாள் திருமதி.ரேவதி சுந்தருக்கும், குழந்தைகள் ஜனனி மற்றும் மீராவுக்கும்

தமிழின் தலையாய மூன்று எழுத்துக்களான ‘நன்றி’ எனும் மலரால் அலங்கரிக்கிறேன்.

இவ்வேளையில், நண்பர்கள் அனைவருக்கும் ஒரு செய்தியைப் பகிந்து கொள்ள விரும்புகிறேன். தற்சமயம் நான் எழுதிவரும் ‘வள்ளுவ மாலை’ எனும் நூலுக்கு உரை எழுத ஆரம்பித்திருக்கிறேன். இது விரைவில் உங்கள் அனைவரின் ஆசியால் புத்தகமாக வர இருக்கிறது.

உங்களின் வாழ்த்துக்களோடு இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன்!

அன்புடன்
சுரேஜமீ

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.