இரா.கோபி

காரைப் பார்க் பண்ணிவிட்டு நடக்க ஆரம்பித்தேன். மனம் குதூகலமிட்டது. இந்த ஆறு மாதத்தில் ஒரு பத்து வயது குறைந்தது போல ஒரு எண்ணம். நன்றாக டிரஸ் செய்துகொள்ளத் தோன்றுகிறது. அவன் வழக்கமாகக் காத்திருக்கும் பார்க் பெஞ்சில் உட்கார்ந்து இருந்தான். அவனை நெருங்க நெருங்க ஒரு ஆயாசமும் சூழ்ந்துகொண்டது. இன்று எப்படி நடந்துகொள்ளப் போகிறானோ? அவனை நெருங்க நெருங்கக் கூட யாரோ உட்கார்ந்திருப்பதும் தெரிந்தது. ஒரு பெண். ஒருக் கணம் எனக்கு நந்தினியின் ஞாபகம் வந்து மறைந்தது.

“சாரி கார்த்திக், ரொம்ப நேரமா வெயிட் பண்றியா?’ என்றேன்.

“பரவாயில்லை, ஒங்க அளவுக்கு வெயிட் பண்ணலியே” என்ற ஒரு வித நக்கலுடன்.

“இது யாரு, சொல்லவே இல்லையே?” என்றேன் அந்தப் பெண்ணை நோக்கி.

“இது அபிராமி, இவளைத்தான் அம்மா எனக்குப் பேசி வச்சிருக்காங்க” என்றான்.

“ரொம்ப சந்தோசம், ஏம்பா நீ நேரா வீட்டுக்கே வரவேண்டியதுதானே, ஏம்மா நீயாவது சொல்லக் கூடாதா” என்றேன்.

“நான் என்ன சொல்ல அங்கிள்” என்றாள்.

“மாமான்னுதான் கூப்பிடேன்” என்றேன்.

அவள் திருதிருவென்று விழித்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் இருந்துவிட்டாள்.

“இது உன் செலக்ஷனா, லக்ஷ்மிகரமா இருக்கா” என்றேன்.

“இல்லை அம்மாவோடது” என்றான்.

“ஒங்கம்மா ஏமாந்தது என்னோட ஒரு விஷயத்துல மட்டும்தான்னு சொல்லு” என்றேன்.

“எனக்கு அம்மா ஆறதுக்கு முன்னாடி அவங்க ஒங்க பொண்டாட்டி, அத மறக்காதீங்க” என்றான்.

அபிராமிக்கு ஒன்றும் புரியவில்லை.

“நீ கண்டுக்காதம்மா, அவன் அப்படித்தான்” என்றேன்.

அவனுடைய செல் போன் அடித்தது.

“அம்மாதான், பேசறீங்களா” போனை நீட்டினான்.

“நீ பேசு, நான் ஒரு வாக் போய் விட்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டு எழுந்துகொண்டேன்.

கார்த்திக்கை நினைத்தால் ஒருபக்கம் பெருமையாக இருக்கிறது. நாம்தான் மடத்தனமாக வீண் பிடிவாதம் பிடிக்கிறோமோ என்று கூடத் தோன்றியது. நந்தினி இப்போது எப்படி இருப்பாள் பார்ப்பதற்கு? இருபது வருடத்திற்கு முன்பு பார்த்தது. அந்த முகம்தான் இப்போது நினைவில் இருக்கிறது. கல்லுக்குள் தேரை போல் இப்போதும் மாறாத காதல் அவள் மேல் எனக்கு இருப்பது புரிகிறது. தஞ்சை பிரகாஷின் கதைகளில் வரும் கலியராஜன், சத்தியராஜன் கதாபாத்திரங்கள் ஞாபகம் வந்தது. அவர்களும் இதுபோல் நீண்ட நாட்கள் காத்திருப்பார்கள். ஒரே ஒரு வித்தியாசம். அவர்கள் அடிக்கடி தாங்கள் விரும்பும் பெண்ணைப் பார்க்கவாவது செய்வார்கள். என் விஷயத்தில் அதுவும் இல்லை. நந்தினியைப் பார்த்தால்தான் என்ன என்று சில சமயம் தோன்றும். கூடவே பட்ட அவமானங்கள் நினைவுக்கு வருகின்றன. நேர்ந்த அலைக்கழிப்பும் கொஞ்ச நஞ்சமா?

“அவள் வர மாட்டாள். உன்னால் ஆனதைப் பார்த்துக்கொள்” அவளுடைய அப்பா சொன்னது.

“அதை நீங்கள் சொல்ல வேண்டாம், நந்தினியைச் சொல்லச் சொல்லுங்கள்” இது நான்.

“அவர் ஆசீர்வாதம் செய்து அனுப்பினால்தான் நான் வருவேன்” இது நந்தினி.

அவர் அதைச் செய்யவே இல்லை. திருமணமாகி முதல் இரண்டு வருடங்களில் சேர்ந்து இருந்தது என்னவோ ஐந்து மாதங்களுக்கும் குறைவுதான். ஏதோ ஒரு காரணம் சொல்லி அழைத்துச் சென்று விடுவார்கள். வாரா வாரம் நான் சென்று பார்க்க வேண்டும். விஷயம் இதுதான். அவள் ஒரே பெண். அவர்கள் எதிர்பார்த்தது நான் அவர்கள் வீட்டோடு இருக்க வேண்டும் என்பது. நான் அதற்கு என்றுமே ஒப்புக்கொண்டதில்லை. அது போக என்னுடைய உறவினர்கள் யாரும் வரக்கூடாது என் அம்மா உட்பட. திருமணத்திற்கு முன் எனக்கு இது தெரியாது. நந்தினி ஏன் இதை முன்னமே சொல்லவில்லை எனபது புரியாத புதிர். நான் இது சம்பந்தமாகப் பேசும் போதெல்லாம் அவள் மௌனமாகவே இருந்துவிடுவாள். அவர்கள் பக்கத்து உறவினர்கள் உட்பட அனைவரும் விவாகரத்து வழக்கு தொடுக்கக் கோரியும் ஏனோ தெரியவில்லை என் மனம் அதற்கு ஒப்பவே இல்லை. என்றாவது காலம் கனியும் என்று இருந்துவிட்டேன். கிட்டத் தட்ட இருபது வருடங்கள் ஓடிவிட்டன. தனிமையிலேயே கழித்துவிட்டேன். ஒரு முழு நூற்றாண்டு காலத் தனிமை எப்படி இருக்கும் என்பதைக் கால் நூற்றாண்டுக்கும் குறைவான தனிமை எனக்கு உணர்த்திவிட்டது.

நான்கைந்து மாதங்களுக்கு முன் கார்த்திக்கிடம் இருந்து போன் வந்தது. “சார், என் பேர் கார்த்திக்”

“சொல்லுங்க சார், எந்த கார்த்திக்னு புரியலையே”

“எங்க அம்மா பேர் நந்தினி, உங்களுக்கு நிச்சயம் இந்தப் பேர் தெரிஞ்சிருக்கும்”

“தம்பி மன்னிச்சுக்குங்க, நேரடியா சொல்லுங்களேன்”

“நான் சொல்ற நந்தினி ஒங்க மனைவி”

எனக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை. சில வினாடிகளுக்குப் பிறகு, “கார்த்திக்கா பேசறது, எப்படிக் கண்ணா இருக்கே?”

“நான் உங்களைப் பார்க்கணுமே”

“சந்தோசம், நான் எங்க வரணும்”

“நீங்க வர வேணாம், நான் வரும் ஞாயிற்றுக்கிழமை வருகிறேன் அங்கே” என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டான். வந்து போன் செய்து என்னைப் பார்க்கிற்கு வரச் சொன்னான்.

கடைசியாக நான் அவனை ஒரு வயதில் பார்த்தது. அவனை இப்போது பார்த்தபோது கிட்டத்தட்ட நந்தினியின் முகம் எனக்குள் நிழலாடியது. அவள் கண்களைப் போன்ற பெரிய கண்கள் அவனுக்கு. உயரத்தில் அவள் தந்தையைக் கொண்டிருந்தான். நிறம் அவளை விடக் கொஞ்சம் மட்டுதான். என்னில் இருந்து எதையும் எடுத்துக்கொள்ளவில்லை அவன். நான் என்ன தந்தேன் அவனுக்கு?

கையில் ஒரு நாவலுடன் இருந்தான். அருகில் சென்று பார்த்ததில் அது நான் அண்மையில் படித்ததில் மிகவும் பிடித்த ஒரு சமகால எழுத்தாளரின் நாவல். ஓ, இதிலாவது நம்மைக் கொண்டிருக்கிறானே என்று ஆறுதல் அடைந்தேன். நந்தினியும் வந்திருப்பாளோ என்ற நப்பாசை ஒரு நிமிடம் மனதில் தோன்றி மறைந்தது. வீட்டிற்கு வராமல் பார்க்கிற்கு வரச் சொன்னதற்கு அவனைக் கடிந்துகொண்டேன்.

“வீட்லயே பேசலாமே, ஏன் இங்க”

“என்னன்னு சொல்லி வீட்டுக்கு வர்றது”

“அது ஒன் வீடுப்பா”

“அப்படித் தோணும்போது நான் வரேன்”

வேறெதுவும் பெரிதாகப் பேசத் தோன்றவில்லை. ஆனால் அவன் சென்ற பிறகு இன்னும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்திருக்கலாம் என்று தோன்றியது. புத்திர சோகம் எனபது பெரிய கொடுமை. புத்திரன் இருந்தும் அவனோடு சேர்ந்து இருக்க முடியாத கொடுமை அதைவிடப் பெரும் நரகம் என்பதை அந்தச் சமயத்தில் உணர்ந்தேன். அதற்குப் பிறகு போனில் நிறையப் பேசினோம். ஒரு முறையும் அப்பா என்று அவன் சொல்லவில்லை. நானும் அவன் போக்கிற்கு விட்டுப் பிடிக்கலாம் என்று இருந்துவிட்டேன். நான்காவது முறை வந்து பார்த்தபோது மெல்ல ஆரம்பித்தான்.

“நீங்க அம்மாகிட்ட பேசுங்களேன்”

“அவகிட்ட பேச ஒன்னுமில்லப்பா, பேசியும் ரொம்ப நாளாச்சே”

“கடைசி வரை இப்படித்தான் இருப்பீங்களா”

“நான் இருக்குறதே கடைசிலதானே” என்றேன் ஒரு வித விரக்தியுடன்.

அதன் பிறகு அவன் கோபமாகப் பேச ஆரம்பித்தான். “நீங்க இப்படித்தானா, பிடிவாதம் பிடிப்பீங்களா”

“இதுக்குப் பேர் பிடிவாதம் இல்லப்பா, ஒனக்கு எதுவும் தெரியாது”

“நான் சபா அங்கிள் கிட்ட எல்லாம் பேசிட்டேன். அவர் எல்லாம் சொல்லிட்டார், சரி ஒத்துக்கறேன், ஒங்கள ரொம்ப மட்டமா நடத்திருக்காங்க, நெறைய அலைகழிச்சிருக்காங்க, அதையே நெனச்சிக்கிட்டு இருக்கப் போறிங்களா”

“ஒங்கம்மா என்ன விட்டு ரொம்ப விலகிப் போயிட்டாப்பா, இனிமே ஒட்டுறது கஷ்டம். இந்தப் பேச்சை இதோட விட்டுடு”

அதன் பிறகு அவன் போன் பண்ணவேயில்லை. நான் பேசினாலும் தவிர்க்கப் பார்த்தான். மறுபடியும் அவனே போன் செய்து, இப்போது மீண்டும் பார்க்கில் சந்திக்கிறோம். கூடவே அபிராமியையும் கூட்டி வந்திருக்கிறான். அவர்கள் இருவரும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் போல் கடைசி வரை இணைந்து இருக்க வேண்டும். நான் திரும்ப அவர்கள் இருந்த இடம் அடைந்தேன். என் மனம் ஏற்கனவே நிறைய இளகி விட்டிருந்தது. அபிராமியைப் பார்த்ததில் இருந்து அளவில்லா மகிழ்ச்சி. எங்கே கார்திக்கையே பார்க்காமல் கண் மூடி விடுவேனோ என்று இருந்தேன். கடவுளே மிக்க நன்றி. என் பேரப் பிள்ளைகள் எப்படி இருக்கப் போகிறார்கள் என்று யோசிக்க ஆரம்பித்தேன். கார்த்திக் பேச ஆரம்பித்தான். இம்முறை அவன் நந்தினியிடம் பேசச் சொல்லிக் கட்டாயப் படுத்தினால் என்ன செய்வது என்று தெரியவில்லை.

“நானும் அபிராமியும் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறோம்”

“என்னப்பா அது”

“நீங்களும் அம்மாவும் சேர்ந்து ஆசீர்வாதம் செய்தால்தான் நாங்கள் கல்யாணம் செய்துகொள்வோம்”

“புரிஞ்சிக்க கார்த்திக், ஒன்னாலேயே என்னை அப்பான்னு கூப்பிட முடியல, இத்தனை நாள் கழிச்சு அவள எப்படிப் பார்க்குறது நான்”

“அதெல்லாம் நான் பாத்துக்கிறேன்”

“விடுப்பா, அதெல்லாம் நடக்கிற கதை இல்ல”

“நீங்க இது வரைக்கும் அப்பா என்கிற முறையில் எனக்கு ஒன்றுமே செய்ததில்லை. இது கூட முடியாதா”

சிறிது யோசித்துவிட்டு  சரி என்றேன். ஒரு நாள்தானே.அவன் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை.

“நந்தினி எப்படி இருக்கா”

“உண்மையச் சொல்லணும்னா சந்தோஷமா இல்லப்பா” முதன் முறையாக அப்பா என்று சொல்கிறான்.

“நீங்க இல்லாம அம்மாவும் நானும் நெறைய இழந்துட்டோம்பா.”

“அதான் கல்யாணத்துக்கு வரேன்னு சொல்லிட்டேனே, அழாத.”

“நீங்க ரெண்டு பெரும் சேர்ந்து இருக்கணும்பா”

“அது ரொம்பக் கஷ்டம்பா, ஒங்கம்மாவுக்கு ரொம்ப சங்கடமா இருக்கும்”

“அம்மாவுக்கு இஷ்டம்தாம்பா”

ஒரு முடிவோடு தான் வந்திருக்கிறான் என்பது தெரிந்தது.

“நான் மெட்ராஸ் வர முடியதேப்பா, தவிர, அவங்க அப்பா அம்மாவை விட்டுட்டு அவள் வரமாட்டாளே”

“தாத்தாவும் பாட்டியும் எங்க பொறுப்பு. அம்மாவ பெங்களூர் அனுப்பி வைக்கிறது என் பொறுப்பு”

“எனக்குக் கொஞ்சம் யோசிக்க டைம் குடு”

சிறிது நேரம் கழித்து அபிராமி பேச ஆரம்பித்தாள்.

“மாமா, சொல்றேன்னு தப்பா நெனைக்காதீங்க, நீங்க இல்லாம இவர் நிறையக் கஷ்டப்பட்டிருக்கார். அது அவரோட போகட்டும். ஒங்க பேரப் பிள்ளைங்களுக்கும் அந்த துரதிர்ஷ்டம் தொடர வேண்டாம். இந்த மண்ணில் வரும்போது அவங்களுக்குப் பிரிஞ்சிருக்கிற தாத்தா பாட்டி வேண்டாம். சேர்ந்து இருக்குறவங்கதான் வேணும். ஒங்க குடும்ப வாரிசை சுமக்கப் போறவள் என்கிற உரிமையில் இதைக் கேட்கிறேன். இத என்னோட கல்யாணப் பரிசா நான் கேட்கிறேன். அத்தையும் நீங்களும் சேரனும்”

இடம் பார்த்து அடித்துவிட்டாள். கார்த்திக் குறும்பாக என்னைப் பார்த்துச் சிரித்தான். நான் பதில் ஏதும் சொல்லாமல் இருந்தேன். இவர் எப்பவுமே இப்படித்தான். கிளம்பு அபிராமி போகலாம் என்று அவன் எழுந்தான்.

“ஒங்க அத்தைக்கு போன் போடும்மா, நான் பேசறேன்”

“ஒங்க மனைவிக்குன்னு சொல்லுங்க மாமா” என்று சொல்லிவிட்டு நந்தினியின் போன் நெம்பரை ஒற்ற ஆரம்பித்தாள்.

“ஹலோ”

“இது அபிராமி நம்பர் ஆச்சே, நீங்க யார் பேசறது”

“நான் அவளோட வருங்கால மாமனார் பேசுறேன்”

சில வினாடிகள் அந்த மௌனம் தொடர்ந்தது. ஒரு மெல்லிய அழுகைச் சத்தம்

“நீ அழுது முடி, நான் அப்புறம் பேசறேன்”

“இல்ல இல்ல, எல்லாரும் எங்க இருக்கீங்க”

“லால் பாக்”

“மணி ஆறாகப் போகுது, டிசம்பர் மாசம், பனி பெய்யும், சும்மாவே உங்களுக்கு த்ரோட் இன்பெக்ஷன். லொக்கு லொக்குன்னு இரும ஆரம்பிச்சிடுவீங்க. எல்லாரும் கிளம்பி வீட்டுக்குப் போங்க, அபிராமிட்ட பால்ல  மஞ்சத் தூள் போட்டுக் குடுக்கச் சொல்லிக் குடிங்க”

“சரி, வீட்டுக்குப் போயிட்டுப் பேசறேன்”

“என்ன சொல்றாங்க ஒங்க மனைவி” என்றாள் அபிராமி.

“அவ மாறவே இல்ல” என்று சிரித்தபடியே போனை அபிராமியிடம் கொடுத்தேன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.