“ஆறு படை அழகன்” — (6)
க.பாலசுப்பிரமணியன்
தாளிரண்டும் தாராயோ தணிகை மலை நாதா
தோளிரண்டில் தாங்கிடுவேன், தங்க மயில் வேலா !!
சொல்லிரண்டில் உன்னை வைத்து
சுமைகள் பல தூக்கி விட்டேன் – வாழ்க்கையில்
சுவையில்லா உணர்வுகளையும்
உன் அருட்சுவையில் மறந்து விட்டேன் !!
சிலையாக நீயிருந்தும் குறையனைத்தும்
சளைக்காமல் கேட்டு நின்றாய் !!
மலையான துயரத்தையும்
மயில் தோகைகொண்டே விரட்டிட்டாய் !!
மூவிரண்டு முகத்தினிலே ஒளி மின்னும்
ஆறிரண்டு கண்களிலே அருள் வெள்ளம்
ஓரிரண்டு மணித்துளிகள் உன்னை நினைக்க
உன்னிரண்டு பாதங்கள் என் பக்கம்.
அஞ்சுகின்ற நெஞ்சொன்று இங்கிருக்க
ஆறுபடை வீடும் உனக்கெதற்கு ?
கொஞ்சு தமிழ்மொழியிலே பாட்டிசைப்பேன்,
கெஞ்சுகின்றேன் நீ வந்து நெஞ்சிலுருப்பாய் !
நூறுமுறை உனைப் பார்த்தாலும்
நூறு கலை நூதனமாய் தெரியுதய்யா !!
ஆறுமுகம் நீயிருக்க வேறுமுகம் எனக்கெதற்கு?
ஆனைமுகன் அருகிருக்க ஆதரவாய் இருந்திடய்யா !!
தாளிரண்டும் தாராயோ தணிகை மலை நாதா
தோளிரண்டில் தாங்கிடுவேன், தங்க மயில் வேலா !!