க. பாலசுப்பிரமனியன்

மூளையும் உடற்பயிற்சியும்

 education

மூளையின் வளர்ச்சியைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் சில விஞ்ஞானிகள் (Developmental  Biologists) மூளை வளர்ச்சியின் போது அதில் அடிப்படியாக இருந்த உணர்வு பயம் என்று. வாதிடுகின்றனர்.  தட்ப வெட்ப சூழ்நிலைகளிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள முயன்ற போது பிறந்த ஒரு உணர்வே பயம். “சர்வைவல் இன்ஸ்டிங்கட்” என்று சொல்லப்படும் இந்த பாதுகாப்புப் போராட்டம் ஒவ்வொரு நிலையிலும் அதன் வளர்ச்சியை முன்நிறுத்திக்கொண்டு கொண்டு பயத்திற்கு இரையானது.

மூளையின் வளர்ச்சிப் பாதையில் நடந்த ஒரு முக்கியமான திருப்பம் .. நான்கு கால்களால் நடப்பதை விட்டு உயிரினங்கள் (மனித இனம்) இரண்டு கால்களால் மட்டும் நடக்கத் துவங்கியது. இந்த நிகழ்ச்சியினால் மனித இனத்திற்கு இரண்டு கைகள் மற்ற வேலைகளுக்காக விடுபட்டதுமட்டுமன்றி நடக்கும் செயலுக்கு தேவையான சக்தியின் தேவையும் குறைந்தது. இதனால் மூளைக்கு தேவையான அதிக சக்தி கிடைக்கும் வாய்ப்பும் ஏற்பட்டது.

ஜான் மெடீனா என்ற ஆராய்ச்சியாளர் கூறுகின்றார் -” ஓர் சராசரி மனிதனின் உடல் எடையில் 2 விழுக்காடே உள்ள மூளை அவன் உட்கொள்ளும் சக்தியின் 20 விழுக்காடுகளை பெற்றுக்கொள்ளுகிறது”

தற்போதைய நிலையில் இருக்கின்ற மனித மூளை உருவாவதற்கு இயற்கையின் வளர்சிக்காலக் கோட்டில் பல லட்சம் ஆண்டுகள் கடந்திருக்கின்றன. ஆகவே, இதை மனித இனம் மூளையை  இயற்கையிலிருந்து தங்களுக்குக் கிடைத்த ஒரு மிகப் பெரிய பரிசாகக் கொள்ளவேண்டும்.

மூளை நமக்கு கொடுக்கும் தகவல் தான் என்ன? அதை நாம் அறிந்தால் மிக ஆச்சரியத்தில் ஆழ்ந்து விடுவோம்.

“என்னை உபயோகப் படுத்து அல்லது இழந்து விடு” என்பதுதான். (Use it or lose it). எவ்வளவுக்கு எவ்வளவு இந்த மூளையை நாம் உபயோகப் படுத்துகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு அது அதிகம்  வேகமாகவும் திறமையுடனும் வேலை செய்கின்றது.  “கத்தியை தீட்டாதே, உந்தன் புத்தியைத் தீட்டு.” என்று கவிஞர் சொன்னது உண்மைதானே?”

ஆராய்ச்சியில் அறியப்பட்ட மற்றொரு உண்மை – “முற்காலத்தில் மனிதன் தேவைகளுக்காக காடு மேடுகளில் தேடி அலைந்தான். இந்தத் தேடுதலில் சராசரியாக ஒரு மனிதன் ஒரு நாளுக்கு 12 மைல் தூரம் நடந்தான். அவன் அதிகம் நடக்க நடக்க அவனுடைய மூளைக்குத் தேவையான இரத்தப் ஓட்டமும்  சக்தியும் கிடைத்தன. அதனால் அதன் வளர்ச்சியின் முன்னேற்றம் நன்கு பெருகியது.” . இது உடலுக்கும் மூளைக்கும் இருக்கின்ற நெருங்கிய உறவை வெளிப்படுத்துகின்றது. ஆகவே நடை, உடல் பயிற்சி, மற்றும் உடல் உழைப்பு மூளையின் நலனைப் பாதுகாப்பதில்  மிக்க பயனுள்ளதாகும்.

சிறு வயது முதல் கொண்டு குழந்தைகளை விளையாட்டிலும் உடல் பயிற்சியிலும் ஈடுபடுத்துதல் மிகவும் அவசியம்.  மாலையிலே சற்று நேரம்  சிறுவர்கள் விளையாடுவதால் அவர்களுடைய படிப்பின் தரம் குறையும் என்றோ அல்லது அதனால் நேரம் வீணாகிறது என்றோ பெற்றோர்கள் நினைத்தால் மிகப் பெரிய தவறு. மாறாக உடல் பயிற்ச்சியும் விளையாட்டுக்களும் அவர்களுடைய கற்கும் திறனை வேகப்படுத்துகிறது மற்றும் அதிகரிக்கிறது என்பது ஆராய்ச்சி கண்ட உண்மை.

உடல் பயிற்ச்சியிலும் உடல் உழைப்பிலும் ஈடுபடாதவர்களுடைய கற்கும் திறனையும் அதில் ஈடுபடுபவர்களுடைய கற்கும் திறனையும் சோதித்துப் பார்த்ததில் மிக அதிகமான அளவில் உடல் பயிற்சி செய்வோரின் கற்கும் திறன் அதிகமாக இருந்தது. அது மட்டுமல்ல, உடல் பயிற்சி செய்வோரின் சிந்தனைத் திறனின் பல வடிவங்கள் சிறப்பாக இருந்தன. உதாரணமாக அவர்கள் ஒரு விஷயத்தை அணுகும் முறை, (approach) அதை ஆராய்ந்து  அறியும் திறன், (analytical skills) கவனம் (attention), மற்றும் முடிவு எடுக்கும் திறன் (decision making  skills)  ஆகியவை மற்றவர்களைக் காட்டிலும் மிகச் சிறப்பாக இருக்கின்றன.

“ஓடி விளையாடு பாப்பா, நீ ஒரு பொழுதும் ஒய்ந்திருக்கலாகத்து பாப்பா” என்ற பாரதியின் பாட்டில் எத்தனை உண்மை உள்ளது? நாமும் நம் குழந்தைகளை கொஞ்சம் விளையாட விடுவோமே !

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கற்றல் – ஒரு ஆற்றல் (4)

  1. ஆறறிவு உள்ளவன் மனிதன். முதல் அறிவு – உணர்ச்சி-தோல் – இரணடாவது அறிவு – சுவை – நாக்கு – மூன்றாவது அறிவு – மணம் -மூக்கு- நான்காவது அறிவு – ஒளி – கண் – ஐந்தாவது அறிவு – ஒலி – காது – ஆறாவது அறிவு – மனம். . மனிதனின் மனத்தில் மூளை என்ற பொருள் உள்ளது. எனவே, உடலுக்கும், மூளைக்கும் தொடர்பு உள்ளது என்பது நூற்றுக்கு நூறு சரியே. கற்றல் ஒரு ஆற்றல் கட்டுரை படைத்தற்கு பாராட்டுக்கள் எனது மனமார்ந்த நன்றி வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *