2011 இல் இங்கிலாந்து ……………………(இறுதிப்பாகம்)

சக்தி சக்திதாசன்

 

2011 இல் இங்கிலாந்து என்னும் தலைப்பில் இதுவரை மூன்று பகுதிகளை எழுதிய நான் இறுதிப்பாகத்தை எழுத உட்கார்ந்த வேளை லண்டன் தெருக்களிலே கட்டுக்கடங்காத கலவரம் தலைவிரித்தாடத் தொடங்கியதால் இன்றைய இங்கிலாந்தின் இறுதிப்பாகத்தை நிறைவு செய்வதற்கு இந்தச் செயல்களை உன்னிப்பாக அலசுவதை விட வேறெதுவும் தகுதியாக இருக்காது என்னும் கருத்தில் கடந்த இரண்டு மூன்று தினங்களாக எமது வீதிகளில் இடம்பெறும் சட்டவிரோத, சமுதாய விரோதச் செயல்களை கொஞ்சம் அலசுகிறேன்.

கடந்த சனிக்கிழமை 6ம் திகதி லண்டன் லூசியம் (Lewisham) பகுதியில் மிகவும் அமைதியான , அழகான முறையில் ஆடிவேல் ரத பவனி நடந்தேறியது. அன்று எனக்குப் பணி ஆகையினால் எனது மனைவி, மைந்தன் மற்றும் குடும்ப நண்பர் இவ்விழாவிற்கு சென்று வந்தனர். ஆனால் அன்று தொடங்க இருந்த லண்டன் வன்முறை அக்கினி விழாவைப் பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை.

இந்த லண்டன் வன்முறைக் களியாட்டத்தின் ஆரம்பம் எங்கே என்று சற்றுப் பார்த்தால் அது எம்மை கடந்த வியாழக்கிழமை ஆகஸ்ட் மாதம் 4ம் திகதிக்கு அழைத்துச் செல்கிறது. ஆம் அன்றுதான் லண்டன் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள டொட்டென்காம் (Tottenham) எனும் பகுதியில் போலீசார் ஆயுதம் தரித்த இளம் வாலிபர் ஒருவரைக் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டார்கள். ஒரு வாடகைக் காரில் பயணம் செய்து கொண்டிருந்த ஆப்பிரிக்க இனப் பின்னனியைக் கொண்டிருந்த அவ்வாலிபர் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியானர்.

இங்கிலாந்து நாட்டுச் சட்டத்தின் படி போலீசார் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய நேர்ந்தால் அச்சம்பவத்தை போலீசாரைக் கண்காணிக்கும் குழு விசாரணை செய்வது வழக்கம். அதன்படி இச்சம்பவமும் அவர்களின் விசாரணக்குட்படுத்தப்பட்டது.

அவ்விசாரணை இன்னும் முடியவில்லை ஆனால் அதற்குள்ளாக பலவிதமான உறுதியற்ற செய்திகளை ஊடகங்கள் வெளியிட ஆத்திரமடைந்த அவ்விளைஞனின் உறவினர்களும், நண்பர்களும் ஒரு அமைதி முறையிலான போராட்டத்தை கடந்த சனிக்கிழமை ஒழுங்கு செய்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தின் முன்பாக நடத்தினார்கள்.

என்ன காரணம் என்று இதுவரையும் அறிய முடியாத வகையில் அவ்வமைதிப் போராட்டம் சொற்ப வன்முறையாளர்களினால் வழிமாற்றமடைந்து அப்பகுதியில் வன்முறைச் சம்பவங்கள் வெடித்தன. பல கடைகள் வாலிப, யுவதிகளினால் உடைத்து நொறுக்கப்பட்டு உள்ளேயிருந்த பொருட்கள் சூறையாடப்பட்டன.

ஒன்றுமட்டும் அன்று உறுதியானது அதாவது இக்கொள்ளை, வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களுக்கும் கொலை செய்யப்பட்ட இளைஞனின் ஆதரவாளர்களுக்கும் எந்த விதமான தொடர்புமில்லையென்பதே அது.

இவ்வன்முறையில் ஈடுபட்ட பெரும்பான்மையினர், ஆப்பிரிக்க இனப் பின்னனியைக் கொண்டவர்கள் என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விடயம். இருப்பினும் இவ்வன்முறையாளர்களில் அனைத்து இனத்தவரும் சம்பந்தப்பட்டிருந்தார்கள் என்பதும் மறுக்கப்பட முடியாத உண்மை.

சனிக்கிழமை இரவு நடந்த அசம்பாவிதத்தைத் தொடர்ந்து ஞாயிறு மாலை லண்டனில் வேறு பகுதிகளில் ஆங்காங்கே கடையுடைப்புகளும், கொலைச் சம்பவங்களும் ந‌டைபெற்றது.

இக்கலவரத்திலேயே மிகவும் மோசமான இரவு திங்கட்கிழமை இரவாகும்(08.08.2011). மாலை 5 மணியளவில் பணிமனையிலிருந்து வீடு திரும்பிய எனக்கு என் நண்பனிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.

“இன்|று இரவு குறைடன்(Croydon) பக்கம் போகிறாயா?” என்றான்.

“ஆமாம் போவதாகத்தான் இருக்கிறேன்” என்றேன்

“போக வேண்டாம் இன்று இரவு அப்பகுதியில் அசம்பாவிதங்கள் இடம் பெறக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதால் அப்பகுதியில் வியாபாரத் தலங்கள் எல்லாம் சீக்கிரமாகவே அடைக்கிறார்கள். இது போலீசாரின் அறிவுறுத்தலின் படியே நடைபெறுகிறது” என்றான்.

அவனுடைய அறிவுறுத்தலின் படி நான் எங்கும் செல்லாமல் விட்டிலேயே இருந்தேன் அப்போதுதான் அடுக்கடுக்காக தொலைக்காட்சியில் முக்கிய செய்திகளாக படிப்படியாக ஆரம்பித்த பல வன்முறைச் சம்பவங்களின் செய்திகள் காண்பிக்கப்பட்டது.

எதுவித சமுதாயச் சிந்தனை எதுவுமின்றி தாம் வாழும் தமது சமூகத்தின் நலனைப் பாதிக்கும் வகையில் அப்பகுதியை இம்மூளையற்ற வீணர்கள் சீரழித்துக் கொண்டிருக்கும் காட்சிகளைப் பார்த்து மனம் வருந்தத்தான் முடிந்தது.
 
நாம் எமது முதலாவது இல்லத்திற்காக வாங்கிய முதலாவது சோபா செட் வாங்கிய கடையை அக்கினி விழுங்கிக் கொண்டிருக்கும் காட்சி மனதை அதிர வைத்தது. நூறு வருடங்களுக்கு மேலாக ஜந்து தலைமுறைகளைக் கண்ட அவ்வியாபாரத் தலம் அக்கினிக்கு இரையாகிக் கொண்டிருந்தது. அக்கினிச் சுவாலைகள் வானை முட்டும் அளவிற்கு எகிறிக் கொண்டிருந்தன.

பதினொரு வயதுச் சிறுவர்கள் தமது முகத்தை மறைத்த வண்ணம் உடைத்து திறக்கப்பட்ட கடைகளில் இருந்த பொருட்களை தமது இஷ்டம் போலச் சூறையாடிக் கொண்டிருந்தார்கள்.

குறைடன் (Croydon) எனப்படும் இடத்திலுள்ள லண்டன் ரோட் எனும் மிகவும் பிரபலமான வீதியில் பல தமிழர்களுக்குச் சொந்தமான வியாபாரத் தலங்கள் இருந்தன. அவையனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டுச் சூறையாடப்பட்டன. தமது சொந்தத் தாய் மண்ணில் ஏற்பட்ட இக்கட்டுக்களிலிருந்து தப்பி வந்து தமது கடின உழைப்பால் தமக்கென ஒரு வாழ்வை ஏற்படுத்தி வாழ்ந்து கொண்டிருந்தவர்களுடைய வாழ்க்கை புலம் பெயர்ந்த மண்ணிலும் நாசமாக்கப்பட்ட காட்சி இதயத்தைப் பிழிந்தது.

இச்சூறையாடல் சம்பவங்கள் சிலவற்றில் எமது இனத்து இளைஞர்கள் சிலரும் ஈடுபட்டதாக நான் கேள்விப்பட்ட செய்தி எனது மனதை மிகவும் வாட்டியது.

அடைத்து விடப்பட்டுத் திறந்து விட்ட மிருகங்களின் முன்னே இரைகளைப் பரப்பி விட்டால் அவை எவ்வாறு அவற்றை எகிறிக் குதறிச் சின்னை பின்னப்படுத்தி உண்ணுமோ அதைப் போல இவ்விளம் தலைமுறையினரில் சில மூளையற்றோர் நடந்து கொள்ளும் முறையைத் திரும்பத் திரும்ப தொலைக்காட்சிகள் திரையிட்டுக் கொண்டிருந்தன.

போலீசார் வன்முறைச் சம்பவங்களை அடக்கும் உடைகளை அணிந்த வண்ணம் பாதுகாப்புக் கவசங்களுக்குள் தம்மை முடக்கிக் கொண்டு வன்முறையாளர்களை மேல் நோக்கி முன்னேற விடாமல் தடுத்து ஒரு நேர்க் கோட்டில் நின்று கொண்டிருந்தார்கள்.

ஆனால் வன்முறையாளர்களைக் கைது செய்யும் வகையில் அவர்களை நோக்கிச் செல்லாமலிருந்தார்கள். இதற்குக் காரணம் அவர்களது எண்ணிக்கை குறைவே அன்றி அவர்களுக்கு மேலிடத்து உத்தரவு கிடைக்காத காரணமா என்பது இன்றுவரை புரியாமல் இருக்கிறது.

போலீசாரின் கண்களின் முன்னால் கடைகளை உடைத்து பொருட்களை அள்ளிச் செல்லும் காட்சி மக்களின் மனதை உலுக்கி விட்டது.

இதன் காரணமாக பல பொதுமக்களின் ஆத்திரம் வன்முறையாளர்கள் மீது மட்டுமல்லாமல் அரசாங்கத்தின் மீதும், போலீஸ் தலைமைப் பீடத்தின் மீதும் திரும்பியது.

பல சிறிய கடைகளின் சொந்தக்காரர்கள் தொலைக்காட்சியில் தாம் போலீசாருக்கு தமது கடை கொள்ளையடிக்கப்படுகிறது என்று சொன்ன போது அதைவிட முக்கியமான பாதுகாப்புப் பணிகளில் தாம் ஈடுபட்டிருப்பதால் அவர்களைப் பாதுகாக்க தம்மிடம் போதுமான போலீசார் இல்லை என்று பதிலளித்தார்கள் என்று மிகவும் மனமுடைந்து போய்க் கூறினார்கள்.

இவ் வன்முறையின் ஆறாம் நாளான 6ந் திகதி, விடுமுறையில் இத்தாலியில் இருந்த இங்கிலாந்துப் பிரதமர் தான் தொடர்ந்து தனது மந்திரி சபையுடன் தொடர்பிலிருப்பதால் தான் அவசரமாக நாடு திரும்பத் தேவையில்லை என்று கூறியிருந்தார். ஆனால் 8ந் திகதி இரவு ஏற்பட்ட பயங்கரச் சம்பவங்களையடுத்து பிரதமர் தமது விடுமுறையை அவசரமாக முடித்துக் கொண்டு செவ்வாய்க்கிழமை காலை நாடு திரும்பினார்.

நாட்டின் பயங்கரங்க நிலமைகளைச் சமாளிக்கக் கூடும் முக்கியக் குழுவின் கூட்டத்தை அன்று காலையே கூட்டினார். கோடை விடுமுறையில் இருந்த பாராளுமன்றத்தை 11ம் திகதி கூட்ட ஏற்பாடு செய்தார்.

விடுமுறையில் வட அமெரிக்காவில் இருந்த லண்டன் மேயர் உடனடியாக நாடு திரும்பினார்.

விடுமுறையில் இருந்த எதிர் கட்சித் தலைவரும் நாடு திரும்பினார். கட்சி பேதமின்றி அனைவரும் ஒட்டு மொத்தமாக இவ்வன்முறைகளைக் கடுமையாக விமர்சித்தார்கள்.
 
பிரதமரோ ” இவ்வன்முறையில் ஈடுபட்டவர்கள் எத்தனை சிறிய வயதுடையவர்களாக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது ” என்று ஆணித்தரமாக கூறியுள்ளார்.

9ம் திகதி இரவு 600 போலீசாரிலிருந்து அவர்களின் எண்ணிக்கையை லண்டனில் மட்டும் 16000 ஆக உயர்த்தினார்கள். லண்டன் தெருக்களிலே உள்ள போலீசாருக்கு தடியடிப் பிரயோகத்திற்கான அனுமதியும், அவசியம் ஏற்படின் பிளாஸ்டிக் சன்னங்கள் உபயோகிக்கும் துப்பாக்கிப் பிரயோகத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டது.

செவ்வாயன்று இரவு லண்டன் முந்தைய மூன்று இரவுகளுடன் ஒப்பிடுகையில் அமைதி நிலையைப் பேணியது ஆனால் லண்டனுக்கு வெளியே பேர்மிங்காம் (Birmingham), மான்செஸ்டர் (Manchester), பிரிஸ்டல் (Bristol) ஆகிய பகுதிகளில் வன்முறை அதிக அளவில் இடம்பெற்றது.

10ம் திகதி காலை பேசிய பிரதமர் வன்முறையாளர்களுக்கு எதிரான எமது போராட்டம் ஆரம்பித்து விட்டது. வெற்றியடைவது நிச்சயம் என்று சூளுரைத்துள்ளார்.

இவ்வன்முறைகளின் காரணம் என்ன?

இங்கிலாந்தின் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அரசாங்கம் எடுத்த அதீத பொருளாதார கட்டுப்பாட்டின் விளைவுகள? வேலையில்லாமல் அலையும் இளம் தலைமுறையினர் தமது விரக்தியைத் தெரிவிக்கும் ஒரு வகையா? இங்கிலாந்தின் சிறுபான்மையினரின் பகுதியான ஆப்பிரிக்க மக்கள் தமது சமூகத்தின் பின்னடைவை எதிர்க்கும் முகமாக அவர்களது இளம் தலைமுறையினர் காட்டும் எதிர்ப்போடு மற்றும் சில சமூகத்தின் இளையோர் தம்மை இணைத்துக் கொண்டனரா?

 

இதற்கு சமூக, அரசியல் கொள்கைகளின் தோல்வி காரணமா? எனப் பல கேள்விகள் பல திசைகளில் இருந்து எழுகின்றன.

எது எப்படி இருப்பினும் ஒரு சமுதாயத்தில் தமது மனக் குறையை வெளிக் காட்டும் வகை தாம் சார்ந்திருக்கும் சமூக கட்டமைப்புக்களை உடைத்து நொறுக்குவதல்ல எனப்து மட்டும் உண்மை.

நாளைய இங்கிலாந்தின் தூண்களாக விளங்க வேண்டிய இளம் தலைமுறை சட்டத்தை மீறிக் கட்டுப்பாடின்றி காடைத்தனம் புரிவது அந்நாட்டின் வளர்ச்சிக்கோ, அச்சமூகத்தின் வளர்ச்சிக்கோ எவ்வகையிலும் உதவப் போவதில்லை.

ஆனால் இவ்வன்முறைகளின் மூலம் உதித்த ஒரு உண்மை என்னவென்றால், இத்தகைய வன்முறைகளை எதிர்த்து தமது சமுதாயத்தைப் பேணும் வகை பல மக்கள் இன,மத,நிற வேறுபாடுகளைக் களைந்து ஒன்றாக இணைந்திருப்பதுவே.

இவ்வன்முறைகளினால் அசுத்தமாக்கப்பட்ட தமது நகர வீதிகளை சுத்தமாக்கும் பணியில் பலர் இணைந்து கொண்டுள்ளார்கள். ட்வீட்டர், பேஸ்புக் என்னும் இணையக் குழுமங்களின் மூலம் ஆதரவைத் திரட்டி தமது நகர்ப்புறங்களை சுத்தமாக்கும் பணியில் இவர்கள் வேறுபாடுகளைக் களைந்து ஈடுபடுவது இங்கிலாந்தின் பல கலாச்சார ஒருங்கிணைந்த வாழ்விற்கு மேலும் பலம் சேர்ப்பதாக அமைந்துள்ளது.

இவ்வன்முறைகள் முற்றாக ஓய்ந்து விட்டனவா இல்லையா என்பது இன்னும் நிச்சயமாகவில்லை, ஆனால் 2011இல் இங்கிலாந்து என்னும் எனது இந்தத் தொடரை பூர்த்தியாக்கும் பகுதி இதுவாக இருக்கும் என்பதை நான் எதிர்பார்த்திருக்கவில்லை.

இதன் பின்பு நடைபெறும் நிகழ்வுகளை, அதன் பின் விளைவுகளை மற்றுமொரு கட்டுரையில் வரைகிறேன்.

மீண்டும் சந்திக்கும்வரை

சக்தி சக்திதாசன்
லண்டன்
10.08.2011
  
http://www.thamilpoonga.com

 

படங்களுக்கு நன்றி.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “2011 இல் இங்கிலாந்து ……………………(இறுதிப்பாகம்)

  1. கல்வி, தொழில்நுட்பம், பண்பு, தனி மனிதச் சுதந்திரம் ஆகியவற்றில் மேன்மை நிலை அடைந்த மேற்கத்திய நகரம் ஒன்றில் இந்த வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என்பது, வியப்பளிக்கின்றது; இவற்றால், அந்த மேன்மை நிலையைப் பற்றிச் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.

    இவை ஒரு புறம் இருக்க, தாங்கள் அங்கே நலமுடன் இருப்பது, எமக்கு நிம்மதி அளிக்கிறது. களத்திலிருந்து வடித்த கட்டுரைக்கு நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *