திருக்குறளுக்குப் புது விளக்கம் – 30
– புலவர் இரா. இராமமூர்த்தி.
திருக்குறளில் சொல்லாட்சி தனித்த சிறப்புப் பெற்றது! தக்க சொல்லைத் தக்க பொருளுணர்ச்சியுடன் தக்க இடத்தில் அமைப்பதே கவிதை என்று இலக்கியத் திறனாய்வாளர்கள் கூறுவர். அவ்வகையில், தாய் என்ற சொல்லைத் திருவள்ளுவர் “ஈன்றாள்” என்றே இரண்டிடங்களில் கூறுகிறார்! அவ்வாறு பயன்படுத்தும் இடங்களில் ஒன்றை,
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை! (656)
என்ற குறட்பாவில் காணலாம்.
இக்குறட்பாவில் திருவள்ளுவர் தாயை “ஈன்றாள்” என்ற பெயரில் குறிக்கிறார்! தாய், அம்மா, அன்னை, மாதா, பெற்றோள் என்றெல்லாம் குறிக்காமல் “ஈன்றாள்”, என்ற சொல்லில் குறிப்பதற்கு முறையான காரணம் ஒன்றுண்டு! ஈன்றாள் என்றாலே மகவைப் பத்துத் திங்கள் சுமந்த வயிற்றை உடையவளைக் குறிப்பிடும்! அன்னை குழந்தையைக் காணும் போதெல்லாம் அதனைத் தாங்கிய வயிற்றையே பெருமிதத்துடன் நோக்கி மகிழ்வாள்! அதனைக் குறிக்கவே, பழைய பரிபாடலில், சேரன் செங்குட்டுவனைப் புகழ்ந்து பாடிய குமட்டூர்க் கண்ணனார் “வயிறு மாசிலீஇயர் அவன் ஈன்ற தாயே!” என்று ஈன்றாளின் வயிற்றைத் தொடர்பு படுத்திப் பாடுகிறார்!
அதனைப் போலவே தன் மகன் எங்கே? என்று கேட்ட ஒருவனிடம்,
“புலிசேர்ந்து போகிய கல்லளை போல
ஈன்ற வயிறோ இதுவே
தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே”
என்று புறநானூற்றில் ஒரு தாய் அந்த மகனைத் தாங்கிப் பெற்ற வயிற்றைக் காட்டி மகிழ்கிறாள்! தாய் தன் மகனை நினைக்கும் போதெல்லாம் அவனைப் பெற்ற வயிற்றைப் பெருமையுடன் எண்ணுவது வழக்கம் என்பதைப் பிற்காலத்தில் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில்,
“மன்னு புகழ்க் கோசலை தன் ‘மணிவயிறு’ வாய்த்தவனே!” என்று பெரியாழ்வாரும்,
“தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோ தரனை” என்று ஆண்டாள் நாச்சியாரும்
போற்றிப் புகழ்கின்றனர்.
கம்பரும், கோசலையைக் குறிப்பிடும்போது,
“உலகு யாவையும்
மன்வயிற்றில் அடக்கிய மாயனைத்
தன்வயிற்றில் அடக்கும் தவத்தினாள் “
என்று பாடுகின்றார்! இவ்வாறு ,”சிறந்த மகனைப் பெற்ற வயிறு” என்று புகழ்ந்து கொள்வது ஈன்ற தாயாரின் சிறப்பு! இவ்வாறு தன்னைப் பத்துத் திங்கள் தாங்கிப் பெற தாயைப் பட்டினத்தார், பிரிந்த போது,
“ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்துபெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் – செய்யஇரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி!” என்றும்,
“முந்தித் தவங்கிடந்து முந்நூறு நாள்அளவும்
அந்திபக லாய்ச்சிவனை ஆதரித்துத் – தொந்தி
சரியச் சுமந்துபெற்ற தாயார் தமக்கோ
எரியச் சிதைமூட்டு வேன்?” என்றும்,
உளமுருகிப் பாடினார்! இவ்வாறு, மகனைப் பெற்ற மணிவயிற்றை எண்ணியே “ஈன்றாள்” என்ற சொல்லைத் தேர்ந்தெடுத்து வள்ளுவர் இட்டார்! அத்தகைய வயிற்றைப் பசித்துன்பம் வாட்டும் சூழ்நிலையில், எந்த மகனும் பதற்றம் அடைவது இயற்கை! பெற்ற தாயின் வயிறு, பசியால் வாடும்போது எவ்வாறேனும், அதாவது, அறத்துக்கு மாறான வழியிலேனும் – தாயின் பசியைப் போக்கப் பாடுபடுவது மகனின் இயற்கை! இதனை மைந்தர்கள் எல்லாரும் செய்யலாம்; ஆனால், அந்த மைந்தர், நாட்டின் அமைச்சராக இருந்தால், எவ்வாறேனும் தாயின் பசியைப் போக்கல் கூடாது! அமைச்சர் பொறுப்பில் இருக்கும் பொழுது, அவர் தம் ஆட்சி அதிகாரத்தை முறையற்ற வகையில் பயன் படுத்தியோ, மக்களிடம் தவறான வழியில் பொருளைப் பெற்றோ தாயின் பசியை நீக்க முயலக் கூடாது! அமைச்சர், அரசரின் பெருமையைக் குறைக்காத வகையில் நேர்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்! ஏனெனில் இந்தக்குறள் அமைச்சியலைச் சார்ந்ததாகும்!
பரிமேலழகர், வடமொழியில், “இறந்த மூப்பினராய இரு முது குரவரும், கற்புடை மனைவியும், குழந்தையும் பசியான் வருந்தும் எல்லைக்கண், தீயன பலவும்செய்தாயினும் காப்பாற்றுக!”, என்ற அறநூற்பொதுவிதி, பொருள்நூல் மற்றும் அரசியல் வழிகளில் முறையாகச் செயல்பட்டு, மக்களிடம் நல்ல மதிப்பும் பெற்று வாழும் அமைச்சர்களுக்குப் பொருந்தாது ,என்கிறார்! ஆகவே அரசாங்கத்தில் அமைச்சராகப் பொறுப்பேற்றுச் செயல் படுவோர், பெற்றோர், மற்றும் உறவினர்களுக்காக எந்தப் பொருளையும் அரசாங்கத்திடமிருந்து எடுத்துக் கொள்ளவோ, மக்களிடமிருந்து கையூட்டு போன்ற வழிகளில் பொருளீட்டவோ கூடாது! என்கிறார்! ஆகவே அமைச்சராகப் பணி புரிபவர், அரசியலில்,குடும்பத்தை இணைத்துக் கொள்ளக்கூடாது!
அரசியல் வாதிகள், குடும்ப அரசியல் நடத்தும் இந்தக் காலத்திற்கு மிகவும் தேவையான புதிய கருத்தினை இந்தத் திருக்குறள் புலப்படுத்துகிறது! அமைச்சுப் பணியில் இருப்போர் குடும்பம் வறுமை அடைந்தாலும் அதனைக் கருதாத வாழ்க்கையை அமைச்சர்கள் நடத்தலாம்! அப்போதும், தவறான வழியில் அமைச்சர் பொருளீட்டல் கூடாது! என்ற இக்காலத்துக்கும் ஏற்றக் கருத்தினை அக்காலத்திலேயே, திருக்குறள் வலியுறுத்திக் கூறியுள்ளது! இக்காலத்துக்கேற்ற புதிய விளக்கத்தை இங்கே நாம் புரிந்து கொள்கிறோம்! இனி இந்தப் பொருளுணர்வுடன், நாம் இத்திருக்குறளைப் பயில்வோம்!
“ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை!(656)