படக்கவிதைப் போட்டி 49 இன் முடிவுகள்

அன்பினிய நண்பர்களுக்கு,

12576240_949330908454442_569273548_n

photoவணக்கம். சில நாட்கள் தாமதமாக வந்துள்ள படக்கவிதைப் போட்டி 49இன் முடிவு இது. படக்கவிதைப் போட்டியின் நடுவர் திருமதி. மேகலா இராமமூர்த்தி அவர்கள் தவிர்க்க இயலாத காரணத்தினால் திடீரென விடுப்பில் செல்ல வேண்டிய நிலையில் இடைக்கால ஏற்பாடாக பிரபல கவிஞர் மதுமிதா அவர்கள் தம்முடைய கடுமையான பணி நேரத்திலும் நமக்காக போட்டியின் நடுவராக இருப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்கள். அன்புத் தோழி மதுமிதாவிற்கு மனமார்ந்த நன்றி. தொடர்ந்து போட்டி நடைபெறும். நண்பர்கள் உற்சாகமாக கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம். இதோ அவருடைய முடிவுரை:

வணக்கம். எனக்கு குதிரையை மிகவும் பிடிக்கும். இந்தத் தலைப்பிலேயே கவிதையொன்றும் எழுதியிருக்கிறேன். இந்தப் புகைப்படத்தையும், கவிதைகளையும் காண்கையில் உளம் உவகையுற்றேன்.

புகைப்படம் எடுத்தவருக்கும், புகைப்படத்தைத் தேர்வு செய்தவருக்கும் பாராட்டுகள்,

அழகிய புகைப்படம். அதற்கேற்ற விதமான கவிதை வரிகள்.

நம்பிக்கை…

என்னை நம்பி
என்தலையில் பணத்தைக் கட்டி
ஏமாந்துபோகும் மனிதனே,
உன்னை நம்பு
உன் உழைப்பை நம்பு..

உன்னை நம்பி
உழைத்து ஓடாய்த் தேய்ந்து
உன்னை உயர்த்திய
அன்னை தந்தையின்
நம்பிக்கை சிதறிடாமல்
கைகொடு..

என்னையும் கைவிட்டுவிடாதே,
கைப்பிடியாவது புல்கொடு…!

-செண்பக ஜெகதீசன்… 

செண்பக ஜெகதீசனின் இக்கவிதை நீதிக்கவிதை.

எஸ். நித்தியலட்சுமி

நாலு சுவருக்குள்
என்னை அடைத்துவிட்டு
நீ மட்டும் சுதந்திரமாக
இருக்க வேண்டும் என் நினைக்கிறாயோ?
மிருக வதைச் சட்டத்திலிருந்து
என்னை காப்பாற்ற யாராவது வருவார்களா
என்று எதிர்ப்பார்க்கிறதோ என்னவோ!

நித்யலக்‌ஷ்மியின் இந்தக் கவிதை பெண்மனதைக் காட்டுகிறது.

பட வரி   49
கண்களில் கனிவோ!
 
நான்காயிரம்  ஆண்டுகள் கிறிஸ்துவிற்கு முன்னர்
நாளும் பழக்கிப் பாவித்த குதிரையில் 
நாகரிகமாக இன்று ஏறிச் சவாரிக்கும் 
நாரீமணியின் வரவுக்காகக் காத்திருக்கிறானோ பயிற்றுவிப்போன்!
அன்றி,…பொறுத்திரு மனிதா விரைவில்
உன் மாணவி வருவாளென்று இதமாய்
அன்பு மொழி விழியாலே மொழிகிறதோ
தனக்குத் தானே வாழும் குதிரை!
 
தன் நிழல் கண்டு பின் நகரும்
வன்முறையில் நாட்டம் இல்லாக் குதிரை
பண்களில் பேசுமுயர் நட்புடை பரியிது
கண்களில் காட்டுவது பெரும் கனிவோ!
திண்ணெனும் கொம்பின்றி வலிமையானதும், மனிதக்
கண்களிலுமிரு மடங்கு பெரிய கண்களால்
மண்ணிலேதும் எதிர்பார்க்காத வாழ்வு எனது
எண்ணிடு நீயும் என் மாதிரியென்கிறதோ!
 
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.

வேதாவின் கவிதை தேர்ந்த வித்தியாசமான அணுகுமுறை

சரஸ்வதி இராஜேந்திரன்

பந்தயக் குதிரை

பந்தயக் குதிரை

அரேபியாவின் இறக்குமதியே 
அப்பாவி அழகு குதிரையே  நீ
குதித்து ஓடியதால் குதிரையானோயோ
பரிந்து ஓடியதால் பரி ஆனாயோ  ?
உன்னை மனிதன் அடிமை ஆக்கி
தன்  இஷ்டத்திற்கு ஆட்டி வைத்தான்
ஏருழவும்  வண்டி இழுக்கவும் பயன் பட்ட நீ
இன்று அலங்காரத்திற்கும்பந்தயத்திற்குமாய் 
உன்னை நம்பியே இருக்கிறான் ஜாக்கி
உன் வேகத்தை காட்டி வெற்றியை அடையகுதிரை
ஊக்கமருந்து ஊசி போடாதே என்று இரைஞ்சுகிறதா  ?
போட்டால்தான் வெற்றியென பாகன் நினைக்கிறானா?
அரசியல் வாதிகளும் குதிரை சக்தியில்
ஆரம்பித்து விட்டார்கள் ஓட்டத்தை
தேர்தல் நேரம் வந்து விட்டதால் 
இங்கிருந்து அங்கே அங்கிருந்து இங்கேதாவ
குதிரை பயன் பாடு குறைந்தாலும்
குதிரை சக்தி என்ற சொல் மட்டும் இன்றும்
மோட்டார்களிலும் எலக்ட்ரிக் என்ஜின்களிலுமாய்

 

சரஸ்வதி ராஜேந்திரனின் கவிதையின் தலைப்பும் எண்ணவோட்டமும் ஆற்றொழுக்கு போன்றது. வரிசையாக தேர்தல் வரை கொணர்ந்து சேர்த்துவிட்டார்.

கொ.வை.அரங்கநாதன்

 அந்நிய அடிமை

செஸ் விளையாட்டில்தான்
உனக்கும் எனக்குமான
முதல் அறிமுகம்

அந்தக்கால ஆண்மைமிக்கத்
திரை கதாநாயகர்கள்
உன் மீதேறி கம்பீரமாய்
இசைத்த பாடல்கள்மீது
எனக்கு அளவற்ற காதல்

கிண்டி மைதானத்தில்
நீ நொண்டி அடித்து பலரை
 ஓட்டாண்டியாய் ஆக்கியதால்
ஜெமினி பாலம் ஓரமாய்
நீயும் சிலை வடிவானாய்

ஆனாலும் எனக்கொன்று
புரியவில்லை
ஆண்டுக்கு ஒருமுறை மட்டும்
ஓடி விளையாடும்
எங்கள் ஜல்லிகட்டு காளைகள்மீது
எங்களவர் காட்டும் அக்கரை
இராணுவத்திலும் காவல்துறையிலும்
வீரர்களை வேதனையோடு சுமப்பதோடு
விருந்தினர் முன்னே நடனமும் ஆடும்
உன் மீது ஏன் பிறப்பதில்லை
ஓ    நீ
அந்நிய தேசத்திலிருந்து வந்த
அடிமை என்பதாலா

 

அரங்கநாதன் அவர்களின் கவிதையின் தொனி அலாதியானதாக உள்ளது.

முதல் பரிசுக்கு இந்த ஐந்து கவிதைகளில் கோவை அரங்கநாதன் அவர்களின் கவிதையைத் தேர்ந்தெடுக்கிறேன் .

 

விஜயவாடாவில் நடந்த பன்மொழிக் கவிஞர்கள் சந்திப்பில் நான் எழுதி வாசித்த குதிரை கவிதை ஏனோ நினைவுக்கு வந்தது.

அன்புடன்

மதுமிதா

9.02.2016

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “படக்கவிதைப் போட்டி 49 இன் முடிவுகள்

  1. விஜயவாடாவில் நடந்த பன்மொழிக் கவிஞர்கள் சந்திப்பில் நான் எழுதி வாசித்த குதிரை கவிதை ஏனோ நினைவுக்கு வந்தது.//
    அன்பின் மதுமிதா அந்தக் கவிதையைப் போடுங்கள் நாங்களும் வாசிக்கலாமே….
    மிக்க நன்றியும் வாழ்த்துகளும் எல்லோருக்கும்.

Leave a Reply

Your email address will not be published.