செண்பக ஜெகதீசன்

நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின்.   (திருக்குறள் -881: உட்பகை) 

புதுக் கவிதையில்…

சுகந்தரும் நிழலும்
சுவைதரும் நீரும்
நோய்தந்தால் தீயவையே… 

உறவாய் வந்து
உட்பகையால் இன்னல்தரும்
உறவினரும் தீயவரே…! 

குறும்பாவில்…

நீரும் நிழலும் நோய்தந்தால்
தீதாதல்போல் தீயவராவர்,
உட்பகையால் இன்னல்தரும் உறவும்…! 

மரபுக் கவிதையில்…

நின்றால் சுகந்தரும் நிழலதுவும்
  நிறைந்த சுவைதரும் தண்ணீரும்,
துன்பம் பெருகிட நோய்தந்தால்
  தீதென வெறுக்க வைப்பதுபோல்,
இன்பம் தந்திடும் உறவினரும்
  இன்னல் விளைத்தால் உட்பகையில்,
என்றும் உதவாத் தீயரென
  எட்டித் தள்ள நேருமன்றோ…! 

லிமரைக்கூ…

தண்ணீரும் நிழலும் நோய்தந்தால் தீதே,
தீயரெனும் பழிதான் வரும்
உட்பகையால் ஊறுசெயும் உறவின் மீதே…! 

கிராமிய பாணியில்…

தண்ணிதண்ணி நல்லதண்ணி
நாக்குக்கு ருசியா நல்லதண்ணி,
நெழலுநெழலு மரநெழலு
நல்லசொகந்தரும் மரநெழலு,
ரெண்டுமே நல்லதுதான்
நோவந்தா கெட்டதாவும்… 

அதுபோல
ஒறவெல்லாம் நல்லதுதான்
ஒண்ணாயிருந்தா சந்தோசந்தான்,
உள்ளபகவச்சி கெடுதல்செஞ்சா
ஒறவெல்லாங் கெட்டதுதான்… 

வேண்டியது இதுதான்-
தண்ணிதண்ணி நல்லதண்ணி
நல்லசொகந்தரும் மரநெழலு
ஒறவுஒறவு நல்லொறவு…!

 

 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க