பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

12884590_979195432134656_1686634621_n

95494202@N04_lபுதுவை சரவணன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (26.03.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

5 thoughts on “படக்கவிதைப் போட்டி … (56)

 1. தவறை உணர்ந்த தலைமுறை…

  அப்பன் செய்த செயலதுதான்
       அங்கே மரத்தை வெட்டிவிட்டான்,
  தப்பென தந்தையர் அறியவில்லை
       தாவரம் அழிப்பதைக் குறைக்கவில்லை,
  இப்படிப் போனால் சிலகாலம்
       இப்பார் முழுதும் பாலையாகும்,
  தப்பெனத் தெரிந்த தனையரெல்லாம்
       தாமே வந்தார் மரம்நடவே…!

  -செண்பக ஜெகதீசன்…

 2. நம்பிக்கையோடு நீர் ஊற்று..
  மரம் மனிதனைப் போல் அல்ல..
  உன்னிடம் உதவி பெற்ற பிறகு
  உன்னை உதறி விட்டு போய் விட..
  நீ நட்ட அதே இடத்தில் விருட்சமாய்
  வளர்ந்து ஊருக்கே நிழல் தரும்..

  உனக்கு தெரியுமா நீ இன்று நடும் இந்த செடி
  உன்னை விட உயரமாய் வளரும் என்று..
  அதை நீ நிமிர்ந்து பார்க்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

 3.  படம் 56.
  மரமின்றி அமையாதுலகு.
   
  நேற்றைய சமுதாய உயிர்ப்பில் நாங்கள்.
  நாளைய சமுதாய உயிர்ப்பிற்காய் இவர்கள்.
  பூமிக்குப் பசுமை போர்த்தும் செயல்.
  பூமியென்ற உடலை மரத். திற்குத் தருதல்.
  மரம் நடுகையை சிறு மனதிலே
  வரமாய்க் கொடுத்தால் மழை வருமே!
  மரமின்றி அமையாது உலகு அறிவோம்.
  மரமே இயற்கையின் ஆயுள் ரேகை.
   
  காற்றின் மூலக் கூறுகள், சூரியக் 
  கதிரினொளிக் கூறுகள் மரத்தின் அணுக்கள்.
  ஆற்றலுடை வேர் முனைகள் போர்வீரர்களாகி
  ஆற்றும் செயலாம் மரம் வாழ்கைவேர்.
  பெருமனதான மூதாதையர் விட்டுச் சென்றவை
  தெருவோரம், ஏரி, ஆற்றுக்கரை நிழல்கள்.
  இயற்கையின் பரிசாம் மரங்களை இவர்கள்
  செயற்கையில் நடுவதால் நீர் பெறுவோம்.
   
  பா ஆக்கம் பா வானதி 
  வேதா. இலங்காதிலகம்.
  டென்மார்க்.
  26-3-2016
   

 4. iஇனியொரு விதி செய்வோம்

  செத்த பின்
  சிந்து பாடும்
  செந்தமிழ் நாட்டின்
  வாரிசுகள் நாம்
  காடுகளை
  அழித்துவிட்டு
  மழைக்குத் தவம்
  இருக்கும்
  மண்ணின் மைந்தர்கள் நாம்

  வேரிலே
  வென்னீர் ஊற்றிவிட்டு
  இலையிலே
  பசுமைதேடும்
  பகுத்தறிவாதிகள் நாம்

  அவசியங்களை
  அலட்சியப்படுத்திவிட்டு
  அவதிப்படும்
  அறிவிலிகள் நாம்
  போதும் போதும்
  இனியொரு விதி செய்வோம்
  இந்த ஜெகத்தினை
  வளமாக்குவோம்
  வா நண்பா வா
  காக்கின்ற இயற்கையை காப்போம்
  கேடுசெய்யும் மாசுகளை தவிர்ப்போம்
  மழை தரும் மரம் நிறைய வளர்ப்போம்
  முன்னோர் செய்த தவறுதவிர்ப்போம்
  அப்துல் கலாம் தோன்றிய நாடு
  அவர் வகுத்த பாதையில் மரம் நடு

 5. இனி வரும் சமுதாயம் 
  இணையத்தில் 
  இறக்குமதி செய்து சாப்பிடும் 
  இழிவான நிலைக்கு வரலாம் 
  இளமைலேயே சந்ததிகளுக்கு 
  இயற்கை பயிரிடல் பற்றிச் சொல்லத்தர 
  இல்லை எனில் விவசாயம் 
  இனிக்காது போகும் நிலை 
  இயல்பாக விருந்தாளியாக வரும் 
  இது தொடர்ந்தால் சர்வாதிகாரியாய் 
  இருமுடியை வைத்தது போல ஆட்சியில் 
  இதயம் கமற அனைவருக்கும் உணவு 
  இல்லை என்ற நிலை வரலாம் 
  இளைய சமுதாயத்திற்குச் சொல்லிக் கொடுப்போம் 
  இயற்கையின் பரிமாணத்தை மண்ணையும் மரத்தையும் 
  இப்பொண்ணையும் பயிரையும் மரம் நடுதலையும் 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க