க.பாலசுப்பிரமணியன்

 

காட்டிலே இருக்க இடமின்றி

வீட்டுக்கு வந்தது  விருந்து !

கருநாகம்  கண்ணியமின்றி

கொஞ்சம்  கதவினைத் தள்ளி !

 

பதறின நெஞ்சங்கள் பயத்தில்

அலறினர் வீட்டில் அபயம் தேடி !

அமைதியாய் அமர்ந்தது விருந்து

ஆடவர் பெண்டிர் நிலைகண்டு !

 

கூடினர் தெருவில் மக்கள்

குரல்கள் எழுந்தன

கோஷங்கள் பிறந்தன

கூடா மக்கள் கூடிய நேரம் !

 

“ அடித்திடு கொன்றிடு

அழிந்திட நாகம்”

அடங்கா மனிதனின்

குரலில் வேகம்…!!

” கூப்பிடு அரசை, இதுவோ நாடு?”

குமுறியதோர் நெஞ்சம் !

 

“கொதிக்கும் எண்ணையை

கொட்டுங்கள் தலையில் “

கூற்றுவன் மொழியில்

குறைத்தார் ஒருவர் !

 

” குடும்பம் இதற்கு

எங்கே இருக்கு?”

முதியவர் வாக்கு

உதிர்ந்தது  பயத்தில்.

 

” முடிந்து வையுங்கள்

மூன்று ரூபாய் முருகனுக்கு “

மூதாட்டி சொல்லில்

முந்திய அனுபவம் !

 

சோர்ந்த மனிதர்களின்

சோகம் அறியா ..

சுதந்திர நாகம்

சுகமாய் சென்றது

வேறிடம் தேடி…

 

காட்டினை அழித்து

வீட்டினைக் கட்டிய

வீரர்கள் நடுவில்

வாதங்கள் தவிர்த்து

வாழ்க்கையைத் தொடர்ந்தது

விரைவினில் நாகம்..

 

“ பல்லில் விடமா

உடலினில் விடமா

உடனே சொல்லு ..”

சொடுக்கினான் விடுகதை

சோம்பேறி மனிதன்…

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.