சிவாகமங்களும் திருமுறைகளும் புலப்படுத்தும் வாழ்வியல் – பகுதி 1
எம்.ஜெயராமசர்மா B.A (Hons) Dip. in Edu , Dip. in Soc , M.Phil Edu ,SLEAS ( முன்னாள் கல்வி இயக்குனர் … மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா )
தமிழரது வாழ்வியலானது கோவிலை மையப்படுத்தி வந்திருக்கிறது என்பது பெருமைக்குரிய விஷயமாகும்.கோவில் இல்லை யென்றால் வாழ்வே இல்லை என்னும் அளவுக்குக் கோவில்கள் வாழ்வோடு பின்னிப் பிணைந்து இருந்திருக்கின்றன.இன்பம், அமைதி, ஆனந்தம், அத்தனையும் கோவிலே தரும் என்னும் அசையாத நம்பிக்கை அடிநாதமாக இருந்தமையால் கோவிலை விட்ட வாழ்க்கையைத் தமிழர் விரும்பவேயில்லை.துன்பத்தை துடைக்கக் கோவிலே துணை ! துயரப்படுதலை தவிர்க்கக் கோவிலே துணை ! என்னும் எண்ணம் யாவரிடத்தும் மேலோங்கி இருந்தமையால் கோவில் என்பது வாழ்வியலாக அமைந்துவிட்டது.
” கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் “
” ஆலயம் தொழுவது சாலவும் நன்று “
” கோபுர தரிசனம் கோடி புண்ணியம் ” என்றெல்லாம் சொல்லப் பட்டமைகூட வாழ்வியலோடு கோவிலும் இணைந்து கொண்டுவிட்டதையே காட்டுகிறது அல்லவா?
ஆகமங்கள் வாழ்வியலுடன்
இப்படி வாழ்வியலாக மாறிவிட்ட கோவில்பற்றி சிவாகமங்களும் திருமுறைகளும் தம்மளவில் எவற்றைப் புலப்படுத்தி நிற்கின்றன என்பதை ஆராய்வது யாவருக்கும் பயனுடையதாக இருக்குமல்லவா?
சிவபெருமானால் சொல்லப்பட்டு உமையால் கேட்கப்பட்டு சிவ பக்தர்களால் கடைப்பிடிக்கப் பட்டுவருவது சிவாகமங்கள் ஆகும்.வேதம் பொது நூல்.ஆகமம் சிறப்பு நூல்.சைவநெறியில் ஆகமங்களே முதன்மை பெறுகின் றன.இறைவனே ‘ஆகம’ வடிவமானவன் என்பது சைவர்களது நம்பிக்கையாகும்.
* ஆகமம் விளக்கம்
” ஆகமம்” என்பதற்கு – தோற்றம், வருகை, ஈட்டம், பொருட்பேறு, சாஸ்திரம், ஆப்தவாக்கியம், என்றும் பொருள் கொள்ளப்படுகின்றது.” தொன்றுதொட்டு வரும் அறிவு ” என்ற நிலையிலும் பொருள் சொல்லப்படுகிறது. “ஆ க ம ” என்று கொண்டு – பதி, பசு, பாசம் , என்ற தன்மையிலும் பொருள் கொண்டு நிற்பதையும் காணலாம்.” ஆகமம்” எனும் சொல்லானது -” இறைவனிடம் இருந்து வருவது ” எனும் நிலையிலும் கொள்ளப்படுகின்றது.
* ஆகமங்களும் கோவில்களும்
ஆகமங்கள் ஆலயவழிபாட்டுக்கு முதன்மை அளிக்கின்றன.காமிகம் தொடக்கம் வாதுளம் வரை இருபத்தெட்டு ஆகமங்கள் முக்கியமானவை. ஆகமங்கள் வழிகாட்டுதலின் படியேதான் கோவிலும் அங்கு நடைபெறும் கிரியைகளும் அமைந்திருக்கின்றன என்பது முக்கிய அம்சமாகும்.
பெரும்பாலான கோவில்களில் பூசைகள் காமிகம் அல்லது காரண ஆகம முறைப்படியே செய்யப்படுகின்றன.சில கோவில்களில் மகுடாகம முறைகள் வழக்கத்தில் உள்ளன.தில்லைச் சிதம்பரம் கோவிலில் நிகழ்த்தப்படும் பூஜை முறையானது பதஞ்சலி பூஜாவிதானம் – மகுடாகமத்தையே ஒத்திருக்கிறது. மற்றும் சில கோவில்களில் வாதுளாகமமும், பாரமேச்வரமும் பின்பற்றப் படுகின்றன.
வாழ்வியலோடு கோவில்கள் இணைந்து நிற்கின்றன என்பதற்குச் சிவ ஆகமங்களும் சான்றாகி நிற்கின்றன.கட்டிடக்கலை, கற்சிற்பக்கலை, உலோக சிற்பக்கலை, ஓவியம், இசை, நாட்டியம், மனித ஒழுக்கம், நடைமுறை வாழ்க்கை, போன்ற வாழ்வியலோடு சார்ந்த அனைத்துத் துறைகளும் வேறு எந்த நூல்களிலும் காணமுடியாத வகையில் ஒருங்கே கூறுவதுதான் சிவாக
மத்தின் தனிச் சிறப்பு எனலாம்.
இசை, நடனம், சிற்பம், ஓவியம், அழகுணர்வு அத்தனையும் வாழ்வியலோடு இணைந்தே இருக்கின்றன. இவை யாவும் கோவிலுடனும் இணைக்கப்பட்டே இருக்கின்றன. இதனால் கோவில் என்னும் அமைப்பானது வாழ்விய லின் முக்கிய அம்சமாகிவிட்டது. அப்படிப்பட்ட கோவில் பற்றிய அத்தனை விஷயங்களையும் சிவாகமங்களும் விளக்கி இருக்கின்றன என்றால் சிவாக மங்களும் வாழ்விலுடன் இணைந்துதானே இருக்கிறது.
கோவில்களின் முக்கியத்துவம்
தமிழரான சைவரது வாழ்விலே கோவில்கள் என்ற நிலை மிகவும் இன்றி அமையாத நிலையிலேயே இருந்து வந்திருக்கிறது.கோவிலை மையமாகக் கொண்டே சமூகத்தின் அத்தனை செயற்பாடுகளும் நடை பெற்று வந்திருக்கி ன்றன என்பதை வரலாற்று அடிப்படையில் கண்டுகொள்ள முடிகிறதல்லவா?
காலந்தோறும் மிகப் பலம் பொருந்திய அரசுகளும் அரசர்களும் இருந்த நிலையை வரலாறு காட்டுகிறது.அவர்களின் மாடமாளிகைகளை விட அவர்க ளால் கட்டப்பட்ட மாபெரும் கோவில்கள் மட்டுமே இன்றளவும் கண்முன்னே நிமிர்ந்து நிற்கின்றது என்றால் —- கோவில்களின் முக்கியத்துவமும், கோவில் களின் வாழ்வியல் தத்துவமும் உயர்ந்து நிற்கிறது என உணர்த்துகிறதல்லவா? இப்படியான கோவில்களை எப்படி அமைப்பது? எப்படி அங்கு பூஜைகளைச் செய்வது ? எப்படி கோவில்களில் வழிபாடு ஆற்றுவது ? எப்படியான நிலை யில் பூஜைகளுக்கான பொருட்களைத் தேர்ந்தெடுப்பது ? கோவில்களின் விக்கிரகங்களை எப்படி அமைப்பது ? கோவிலில் விழாக்களை எப்படி நடத்துவது ? அதற்கான விளக்கங்கள் தான் எவ்வகையானது ? இவற்றை எல்லாம் ஒழுங்காக எடுத்துச் சொன்ன பெருமையும் முக்கியத்துவமும் சிவ ஆகமங்களுக்கே உரியதாகும்.
இத்தகைய ஆகமங்களின் வழி வந்த கோவில்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையிலே பிரிக்க முடியாததாகி விட்டது. நீதிக்கூடமாயும், நிதிக்கூட மாயும், பல்கலை நிலையமாகவும்,கலைக் கூடமாகவும், கற்றவர் சபையாகவும் மருத்துவ நிலையமாகவும், பசிப்பிணி போக்கும் இடமாகவும், அனைவருக்குமே ஆறுதல் அளிக்கும் சாந்தி நிலையமாகவும் — கோவில்கள் விளங்கி இருக்கின்றன.
சோழப் பேரரசு காலத்தில் கோவில்களின் அமைப்பும் கோவில்களின் பெருக்கும் கோவில்களின் சமூகமயமாக்கலும் உயர்ந்தோங்கி இருந்ததை வரலாற்றின் மூலம் கண்டுகொள்கின்றோம்.இது பெரும் உச்சம் என்றே எண்ணமுடிகிறது.
கோவில்களை அண்டியே பல கலைகள் உயிர்ப்புப் பெற்றன. கோவிலால்தான் கட்டிடம் வளர்ந்தது.கோவிலால்தான் சிற்பம் ,ஓவியம் , செப்புக்கலை வளர்ந்தது. மரங்களின் மூலம் பல்வேறுவிதமான கலைப் பொருட்கள் உருவாவதற்கும், பலவகையான ஆபரணங்கள் வடிவமைக்கப்படுவதற்கும் கூட கோவில்கள் நிலைக்களனாக இருந்திருக்கின்றன.
இசைக்கருவிகளை வாசிப்பதற்கும், தாளவாத்தியங்களை இசைப்பதற்கும் நடனங்களை ஆடுவதற்கும், நாட்டிய நாடகங்களை நடத்துவதற்கும், சங்கீதம் வளர்வதற்கும் என பல கலைகள் வளர்வதற்குக் கோவில்கள்தாம் நிலைக் களனாக விளங்கியிருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
இவையாவும் மக்கள் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்தே இருக்கின்றன. இதனால்த்தான் இவற்றை வளர்த்த கோவில்களும் வாழ்வியலோடு இணைந் -தே- விட்டது.இவை யாவற்றுக்கும் அடிப்படை சைவ ஆகமங்கள் என்பதும் இங்கு மனங்கொள்ளத் தக்கதாகும்.
யோகஜ ஆகமம் பற்றி நோக்கினால் – இது மற்ற ஆகமங்களில் காணப்ப டாததும் , மிகப் பழமையானதாக இருக்குமோ என எண்ணத்தக்க சில கிரியை கள் பற்றி விளக்குவதாகக் காணப்படுகிறது.சிவலிங்கப் பிரதிஷ்டை, ஏனைய மூர்த்திகள் பிரதிஷ்டை, என்பனவற்றை விரிவாக விளக்கி நிற்பதோடு – நித்திய கர்மானுஷ்டானங்கள் செய்யும் முறைபற்றியும், சிவபெருமானுக்கு ஆடல் பாடல்களால் வழிபாடாற்றுதல், தேவதாசிகள் மற்றும் இசை வாணர் கள் பற்றியும் , அவர்களுக்கான தீட்சை பற்றியும் , தினமும் புஷ்பாஞ்சலியின் பொழுது இசைக்க வேண்டிய பலவித இராகங்கள், ஆடவேண்டிய நாட்டிய வகைகள் பற்றியும் விளக்கி நிற்கிறது.
கோவில்களிலே இடம்பெறும் திருவிழாக்கள் வாழ்வியலோடு மிகவும் நெருக்கமானவை.திருவிழா நடைபெறும் பொழுது அங்கு சமூகத்தின் பல வகைப் பட்டாரும் ஏதோ ஒருவிதத்தில் அங்கு தமது பங்கை ஆற்றும் நிலை இருப்பதைக் கண்கூடாகக் கண்டுகொள்ளலாம். அலங்காரம் செய்வோர், இசை வாணர்கள், நாட்டிய நடனத்துறையினர், பல கலைநுட்பத்துறை சார்ந்தவர்கள்
பல வேலைகள் செய்யும் மாந்தர்கள், என சமூகம் சார்ந்த அத்தனை மக்களும் திருவிழாவின் மூலம் கோவிலுடன் இணைக்கப் படுகின்றார்கள்.இதனால் திரு விழா என்று சொன்னால் அது மக்களின் வாழ்வியலின் ஒரு முக்கிய அம்சமாக விளங்குகின்றது என்பது புலனாகிறதல்லவா ?
இத்தகைய திருவிழாக்கள் பற்றிய விளக்கங்களை ஆகமங்கள் பல விரி வாக எடுத்துச் சொல்லுகின்றன.
காமிக ஆகமப் படியே அநேகமான கோவில்களில் பூஜைகளும் விழாக்களும் நடைபெறுகின்றன. ” காமிகம் ” என்றால் ” இஷ்டசித்தி ‘ என்பது பொருளாகும்.அதாவது விரும்பியதைப் பெறுதல்.தம்மை வழிபடுவோர் விரும் பியதைப் பெறும் பொருட்டு சிவபெருமான் முதலில் காமிக ஆகமத்தை அருளி னார் என்றும் சொல்லுவர்.
காமிகாகமத்தில்- பூர்வ காமிகாகமம், உத்தர காமிகாகமம் என்று இரு பிரிவுகள் இருக்கின்றன.உத்தர காமிகாகமத்திலேதான் நாள் மற்றும் விழா வழிபாட்டு முறைகள், ,மகாகணபதி, நடராஜர், சோமாஸ்கந்தர், தட்சணா மூர்த்தி, லிங்கோத்பவர், சந்திரசேகர், முதலாக பரிவார தெய்வங்களை எழுந்து அருளச் செய்யும் முறைகள் சொல்லப் பட்டிருக்கின்றன.
விழாக்கள் தினமும் நடத்தப்படும் நித்தியோத்ஸவம், பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் பட்ஸோத்தவம், மாதமொருமுறை நடத்தப்படும் மாதோற்ஸவம், ஆண்டுக்கொருமுறை நடத்தப்படும் மஹோ ற்ஸவம் எனப் பலவகையில் உற்சவங்கள் அமைகின்றன என்ற செய்திகளை ஆகம வாயிலாக அறிகின்றோம்.
அம்சுதா ஆகமம், யோகஜா ஆகமம், சிந்த்யா ஆகமம், ஸ்வாயம்பு ஆகமம்
விஜய ஆகமம், விஜயோத்தரா ஆகமம், ஸ்ஹஸ்ரா ஆகமம் ஆகிய ஆகமங்கள்
திருவிழாக்கள் பற்றிய பல செய்திகளைத் தந்து நிற்கின்றன.
ஸ்வாயம்பு ஆகமத்தில் நெய் ,தயிர், நறுமணம் ஊட்டிய நீர், அன்னாத்தால் அபிஷேகம், பற்றிச் சொல்லப்படுகிறது.ஒவ்வொரு மாதத்துக்குமான நடனம், தாளம், ராகம், பற்றியும் சொல்லப்படுகின்றது.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனம் ஊர்வலம் பற்றியும் ” ப்ரஸன்னயஜனம் ” என்னும் சிறப்புப் பூஜை பற்றியும் இந்த ஆகமம் குறிப்பிடுகின்றது.பெரியம்மை முதலிய கொடுமையான நோய்களிலிருந்து மக்களைக் காப்பாற்றவும், அரசன் முதலானோர்க்கு நன்மை பயக்கவும் , பொதுவாக கிராம மக்களின் நலனுக்காகவும் இந்தச் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டதாக இந்த ஆகமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
விஜயோத்தரா ஆகமம் உத்ஸவம் என்பதற்கு ” அஞ்ஞான மென்னும் மலத்தில் மூழ்கி உழன்று கொண்டிருக்கும் உயிர்களுக்கு ஞானத்தை உண்டாக்குவதே உத்ஸவம் எனப்படும் ” என்ற முக்கிய செய்தியைத் தந்து நிற்கிறது.
ஆகமங்கள் கோவில் சம்பந்தமான செய்திகளுடன் நின்றுவிடாமல் வாழ்வியலின் ஒழுக்கம் சார்ந்த விடயங்களையும் வலியுறுத்தி நிற்கிறது. கோவிலுடன் ஒழுக்கம், ஆசாரம் இணைந்தே இருப்பதால் ஆகமங்கள் கொல்லாமை, விபசாரம புரியாமை, பொய்யாமை, என்பவற்றைக் கடைப் பிடிக்க வேண்டும் எனவும் அறிவுறித்தி நிற்கின்றன.
ஆகமங்கள் சரியை, கிரியை, யோகம், ஞானம் பற்றியும் எடுத்து விளக்கி நிற்கின்றன. இந்த நான்கு படிமுறைகளும் கூட வாழ்வியலோடு சமபந்தமாகி கோவிலுடன் இணைவதையும் கண்டுகொள்ளமுடிகிறது.
சிவாகமங்கள் வாழ்வியலின் அம்சமாகத் திகழும் கோவில் பற்றிய விஷயங்களை கூறிய விதத்தைப் பார்த்த நாம் திருமுறைகள் இது பற்றி எதைச் சொல்ல முனைகின்றன எனப் பார்ப்பதும் உகந்ததல்லவா ?
தொடரும்