இலக்கியத்தில் நோன்பு..
சிங்கை கிருஷ்ணன்..
தமிழர்தம் வாழ்வியலில் தலைசிறந்தது ஒழுக்கம். உலகமென்பது, உயர்ந்தோரை மட்டும் குறிக்கும்… உயர்ந்தோர் என்பவர் ஒழுக்கத்திற்சிறந்தோர்,, என்பது தமிழர் பண்பு.
‘நோன்பு’க்கு அடிப்படை அடையாளம் எனப்படுபவை… ஒழுக்கம், மற்றும் நேர்மை ஆகியவையாம். பிழையானதை, சீரில்லாமல் இருந்ததை நேர்மைப்படுத்தி, ஒழுங்குபடுத்தி, நல்வழியாக்கத்தோன்றியதே, நோன்பு எனலாம். மனிதரை நெறிப்படுத்துவதற்கும், முறைப்படுத்துவதற்கும் தோன்றிய சமயநெறிகளில் ஒன்றே, நோன்பு.
நோன்பு என்பதற்கு.. ‘மன வலிமை கொள்ளுதல்’ எனப் பொருள் கொள்ளலாம். ‘துன்பத்தினைத்தாங்குதல்’ .. என்றும்கூட அர்த்தம் கொள்ளலாம். இது,.. தாமே துன்பத்தினை தாங்கிக்கொண்டு, தங்களை நெறிப்படுத்திக்கொள்ளும் நெறியாகும். ஒழுக்கம் இதனைக் குறிக்கோளாகக்கொண்டு உள்ளடக்கியது. எல்லா நோன்புகளுமே குறிக்கோளைக்கொண்டு கடைப்பிடிக்கப்படுகின்றன என்பதை, இது உறுதிப்படுத்துகிறது. இந்நாளில் நோன்பானது, ‘விரதம்’ என்று பெயர் மாறி நம் வாழ்வில் இடம் பெற்று வருகிறது. அதுவே இக்கால சூழ்நிலையில், சடங்குகளின் தோற்றத்திற்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது எனலாம்.
159 விரதங்களை,.. விபரமாக பட்டியலிட்டுக் காட்டும் அபிதான சிந்தாமணியில்,.. ‘விரத மகாத்மியம்’ என்ற தலைப்பில், சங்ககாலத்தில் தோன்றிய, பலவகை நோன்புகளும் சொல்லப்படுகின்றன. இவை, சங்கப்பாடல்களிலும் காணக்கிடைக்கின்றன. தன்னை ஒறுத்துக்கொள்ளும் நெறி,.. தவசியர்களுக்குரியதாகக் கூறப்படுகிறது.
நோன்புகள் மற்றோரிடத்தும், மற்ற சமயங்களிலும்கூட காணப்படுகின்றன. அவையாவன..
‘உண்ணாது இருத்தல்,
உறங்காது இருத்தல்,
வாய் பேசாதிருத்தல்,
நீராடாமை இருத்தல்’ .. போன்றவையாம்.
‘சேரமான் கணைக்காலிரும்பொறை’ என்னும் அரசன், சிறையில் இருக்கும்போது தாகத்திற்கு தண்ணீர் கேட்டு, அது தாமதமாக வந்ததால் உயிர் துறந்தான்.
‘ குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
ஆளன்று என்று வாளின் தப்பார்
தொடர்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை இன்றி வயிற்றுத் தீத் தணியத்
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்மரோ இவ்வுலகத் தானே?’
என, மானங்காக்க நீர் அருந்தாது இருந்து இறந்தான், என்ற தகவல் இந்த செய்யுளின் மூலம் அறியப்படுகிறது.
திருநாவுக்கரசர் சமண சமயத்திலிருந்து, சைவத்திற்கு மீண்டு வந்தபின்,.. பழையாறையில் உண்ணாநோன்பு இருந்ததாக, வரலாறு கூறுகிறது. பழையாறையில், இறைவன் திருவடிவைக் காண இயலாதவாறு மறைத்திருந்தனர். “வண்ணம் கண்டு நானும்மை வணங்கியன்றிப் போகேன் என்று எண்ணம் முடிக்கும் வாகீர் இருந்தார் அமுது செய்யாதே….” என அப்பரடிகளின் உண்ணாநோன்பினை,.. சேக்கிழார் பாடுகிறார்.
தமிழக வரலாற்றில் சங்ககாலம் பொற்காலம். அவ்விலக்கியகாலத்தில் ‘அன்னிமிஞிலி’ என்னும் பெண் பாவை, தன் தந்தைக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்காக வெகுண்டு,.. கொடுங்கோல் அரசை எதிர்த்து உண்ணாநோன்புமிருக்கிறார். உண்ணாநோன்பு வரலாற்றில் இதுவே பழமையானது என்று கொள்ளப்படுகிறது.
அல்லற்பட்டு ஆற்றாதழுத அப்பெண்ணின் கண்ணீர்,. கோசர் கொடுங்குடியை, வெதும்பி வதைத்தது.. அவ்வரசும் வீழ்ந்தது. ஒரு பெண்ணின் நோன்பும், அறப்போரும் விளைவித்த மாபெரும் மாற்றமிது. தம் மக்கள், தமக்கு மாறுபட ஒழுகியமை பொறுக்காது.. தந்தையாகிய கோப்பெருஞ்சோழன், உண்ணாநோன்பு இருந்து உயிர் நீத்தார். அவனை நாடி வந்த காணாக்கேண்மைக் கவிஞர் பிசிராந்தையார் உண்ணாநோன்பிருந்து.. கோப்பெருஞ்சோழனின் முடிவை, தானும் தொடர்ந்தார்.
புற நானூற்றில், புலன்களை ஒறுத்த.. உயர்ந்த இச்சான்றோரின் வரலாறு உரைக்கப்பெற்றது. தற்போது தன்னை ஒறுத்தல்,… புலன்களைக்கட்டுக்குள் வைத்தல் என்பதாக மாறி வருகிறது. தேசத்தின் நன்மைக்கும், நலனுக்கும் காந்தியடிகள் இருந்த உண்ணாவிரதம், சிறப்பு வாய்ந்தது. அதனால் ஏற்பட்ட பலனையும் தம் சத்திய சோதனையில் கூறுகிறார். ‘’என்னளவில் உடல் சம்பந்தமாகவும், ஒழுக்க சம்பந்தமாகவும்.. நான் அதிக நன்மை அடைகின்றேன். புலனடக்கத்தையே நோக்கமாகக் கொண்டு, பட்டினி விரதமிருந்தால்… மிருக இச்சையை அடக்குவதற்கு அது பயன்படும். உடலோடு சேர்ந்து உள்ளமும் பட்டினி விரதத்தை அனுஷ்டிக்காவிடில்,.. அது நயவஞ்சகத்திலும் முடியும் …”
உடலளவில் பட்டினி கடைப்பிடிக்கப்படுவதில்லை,… என்பதே இன்றைய கசப்பான உண்மை. ஆனாலும், இத்தகைய நோன்புகளும் குறிக்கோள்களை உள்ளடக்கியே இருக்கின்றன என்பதும் உண்மை. மகளிர் சங்ககாலந்தொட்டே பல நோன்புகளைக் கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள். தைந்நீராடல்பற்றி பரிபாடல் பேசுகிறது. இது தவிர பாவைநோன்பு , மகார்நோன்பு ,கைம்மைநோன்பு என பலவகைகளாய் விரிந்து போகின்றது.
பிள்ளைப்பேற்றுக்காக நோன்பு இருத்தல் இப்போது காணப்படுகிறது. மரத்தில் தொட்டில்கட்டி தொங்கவிடுதல், மண்சோறு சாப்பிடுதல் , மடிப்பிச்சை போன்றவை.. மகார்நோன்பாகக் கடைப்பிடிக்கப்படுகின்றன. இவைகள், இங்கு நம்பிக்கையாக, தெய்வநம்பிக்கை அடிப்படையில் அமைகின்றன. இருப்பினும் இந்த நம்பிக்கையில், பற்றில், மனஅமைதி கிடைக்கிறது. எதிர்பார்த்த பலனும் , பயனும் கிடைக்கிறது.. என்பது உளவியல் உண்மை.
மணிமேகலையில் ‘காயசண்டிகை விரதம்’ பேசப்படுகிறது. கணவனை பிரிந்த கண்ணகியை நோக்கி,.. ‘தேவந்தி’ என்பாள், ‘நின் கணவன் பிரிதற்குரிய பிழை இம்மையில் நின்பால் யான் கண்டிலேன். ஆகலின், அவன் பிரிதற்குக் காரணம் நின் பழவினையே!!. எனவே புண்ணிய தீர்த்தங்களில் மூழ்கி, நோன்பிருந்து தெய்வந் தொழு…’ என்கிறாள். மனிதஒழுக்கத்திற்காக உண்டான நோன்புகள், தற்போது.. முழுக்கமுழுக்க குறிக்கோள்களுக்கென ஆகிவிட்டன.
வாரந்தோறும், மாதந்தோறும் என, நோன்புகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. மாங்கல்யம் நிலைக்க, குழந்தைவரம் வேண்டி, தோஷம்நீங்க, திருமணமாக, செல்வம்பெருக என விரதங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. ‘விரதமிருப்பது உடலுக்கு நன்மை அளிப்பது’ என்பது மருத்துவரீதியான உண்மை. ஆண்களைவிட பெண்களே, அதிகம் நோன்பினைக் கடைப்பிடிக்கிறார்கள்.
அம்மனுக்கு விரதம், கார்த்திகைவிரதம், வெள்ளிக்கிழமைவிரதம், சுமங்கலிவிரதம், நாகபஞ்சமிவிரதம், ஏகாதசிவிரதம், புரட்டாசிச்சனி விரதம், ஆடிப்பெருக்குவிரதம் என, பெண்கள் கடைப்பிடிக்கும் விரதங்கள் நீள்கின்றன. எல்லா நோன்புகளிலும் சிறந்த நோன்பு கொல்லாமையே…
‘ நேரா நோன்பு சீராகாது”
‘நோன்பென்பதுவே கொன்று தின்னாமை’.. இதனை வள்ளுவமும், வள்ளலாரும் குறிப்பிடுகிறார்கள். இதனையே, மற்ற சமயங்கள்கூட பேசுகின்றன.
குறிக்கோளுக்காக நோற்கப்படும் நோன்புகளில்.. கொல்லாமை மிக எளிதாக கொள்ளத்தக்கது.
‘கொல்லாமை மேற்கொண் டொழுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று’ [ குறள் ]
*- இது நாம் சிந்திக்கத்தக்கது -*
நோன்புகள் என்பவை, தனிமனித வாழ்வில் ஒழுக்க மேம்பாட்டிற்கென தோன்றியவை. இதன் விரிவாகவே.. இந்நோன்புகளை உள்ளடக்கி, சடங்குகள் அமைகின்றன. பல்வேறு நோன்புகள் இருந்திருப்பதினையும், அதனை பழம்இலக்கியங்கள் பின்பற்றி இருப்பதையும், பல்வேறு குறிப்புகளிலிருந்து நாம் காணமுடிகிறது. இவைகளில் சில, இன்றைய வாழ்க்கையிலும் கடைப்பிடிக்கப்படுகின்றன.. இணைந்தும் காணப்படுகின்றன. இவைகள் நல்லபலனை விளைவிக்கின்றன என்பதை, இன்றைய அறிவியல் விஞ்ஞானம் மெய்ப்பிக்கிறது. எனவே, காலச் சூழ்நிலைக்கு ஏற்ப.. இவைகளைக் கடைப்பிடிப்பதில் தவறில்லை.
நோன்பினால் நோயின்மை, மனக்கட்டுப்பாடு, ஒரு நிலைப்படுத்தலில் ஏற்படும் சக்தி, சீரான ஒழுக்கம் என தனி மனித குணம் மேம்படுகிறது. ‘உண்ணாமல் எப்படி இருப்பது??!!..’ என்று ஒரு அச்சம் பொதுவாக நிலவி வருகிறது. ‘உபவாசம் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும்’ என்று கருதுவோரும் உண்டு. இயற்கை மருத்துவத்தில் நம்பிக்கையிருந்தும், உண்ணாவிரதத்திற்காகவே அதைக் கைக்கொள்ளாதவரும் உண்டு.
‘உண்ணாநோன்பு உங்கள் உயிரைக் காக்கும்… விருந்தென்று ஓயாது நீங்கள் உண்பது, உங்கள் உயிரைப்போக்கும்’. பட்டினி கிடத்தல் என்பது முற்றிலும் வேறு. உபவாசம் அல்லது உண்ணாநோன்பு என்பது வேறு. உடலில் வளமில்லாது மெலிந்து, ஊட்டச்சத்து வேண்டும் என்ற நிலையில் இருக்கும்போது,.. உடலியல் இயக்கங்கள் மாறும், வலிமை குன்றும்,..இறக்கவும் நேரிடும்.. இது பட்டினியின் விளைவுகள்.
ஆனால், உண்ணாநோன்பு விரதத்தின் அடிப்படை இதுவல்ல. நோயாலும், உடலியல் இயக்கத்தாலும் தளர்ச்சியுற்ற உடலுக்கு,.. ஓய்வு தரவேண்டி விருப்பத்தோடு உணவை நீக்கியிருப்பதே உண்ணாவிரதம் அல்லது உபவாசமாகும். இப்படி உணவை மறுத்திருக்கும்போது, தேவைக்கு அதிகமான தசை கரையும்; அதோடு, உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருள்களும் வெளியேறும். ஒருவனின் உடலின் எடையில், 40 சதவீதம் குறையும் வரை உண்ணாவிரதம் இருக்கலாம். அப்படி இருக்கும்போது,.. நச்சுப் பொருள்களும், கழிவுப் பொருள்களும் நீங்கும். எல்லா நஞ்சும் நீங்கிடுவதால்.. இரத்தம் தூய்மை அடைகிறது.
‘தீயள வின்றி தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்’ .. (குறள்)
நமது முன்னோர்கள் ஏற்படுத்திய இது போன்ற செயல்களில், பல அழுத்தமான காரண காரியங்கள், பொருள்பொருந்திய அர்த்தங்கள் நிறைந்து கிடக்கின்றன என்பதை, நாமும் அறிந்து கொள்ள முயல்வோம்.
அன்போடு…
கிருஷ்ணன்,(சிங்கை.)
உண்ணா நோன்பு பற்றிய செய்திகள் படித்தேன். அது பேராற்றல் தான்! சந்தேகம் இல்லை.
எனினும் வள்ளுவர் சொல்லும் ஒரு விஷயத்தையும் ஆராய்வது நல்லது. அவர்
” உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.” என்ற குறளிலும்,
” ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.” என்ற குறளிலும் உண்ணா நோன்பு இருப்பவர்களை
இரண்டாம் இடத்துக்குத் தள்ளி விடுகிறார். அது மட்டுமல்ல
” செவிக்கு உணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்” என்று சொல்லுவதைப் பார்க்கும் போது கேள்விச்
செல்வத்தை அடைய உணவும்(சிறிய அளவில்) ஒரு காரணமாக இருக்கிறது
என்று தெரிகிறது. புத்தர் பல காலம் உண்ணா நோன்பு இருந்தும் கிடைக்காத
ஞானம் உணவு உண்ட பின் தான் கிடைத்தது என்பது வரலாறு. உண்ணா
நோன்பு இருந்த துறவிகளான மணிமேகலையும் வள்ளலாரும் பசிப்பிணியைப்
போக்க எடுத்த முயற்சியை நாடே அறியும். உண்ணா நோன்பு உடலுக்கு நல்லது
என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. வேறு செய்திகளும் உள்ளன என்பதற்காகத்தான்
இந்தக் கடிதம் எழுதப் படுகிறது.
இரா. தீத்தாரப்பன், ராஜபாளையம்.