செண்பக ஜெகதீசன்

அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு. (திருக்குறள்-135: ஒழுக்கமுடைமை) 

புதுக் கவிதையில்…

பொறாமை உள்ளவனிடம்
பொருள் சேராது… 

நல்லொழுக்கம்
இல்லாதவன் வாழ்வில்
என்றும் வராது
ஏற்றம்…! 

குறும்பாவில்…

பொறாமை உள்ளவனிடம் பொருளும்,
ஒழுக்கமில்லாதவனிடம் உயர்வும்
ஒருநாளும் சென்று சேர்வதில்லை…! 

 மரபுக் கவிதையில்…

மண்ணில் மனித வாழ்க்கையிலே
  –மற்றவர் மீது பொறாமைகொண்டால்,
திண்ணமாய் நல்லது நடவாதே
–திரண்ட பொருளும் சேராதே,
எண்ணிடு இதுபோல் நல்லொழுக்கம்
   –இல்லா மனிதன் வாழ்வினிலே
வண்ண மயமாய் உயர்வினுக்கு
  –வழியே யில்லை மறவாதே…! 

லிமரைக்கூ…

செல்வம் என்றுமே சேராது
பொறாமை கொண்டவனிடம் என்பதுபோல்,
ஒழுக்கமில்லாதவனுக்கு உயர்வு வாராது…! 

கிராமிய பாணியில்…

சேராதுசேராது செல்வஞ்சேராது
சேத்துவச்சாலும் செல்வம்நிக்காது,
சொந்தமனுசன் சோந்துபோவ
சொத்தப்போல பொறாமப்பட்டா… 

அதுபோல
வராதுவராது ஒயர்வுவராது
வாழ்க்கயில ஒயர்வுவராது,
ஒழுக்கமில்லாம நடந்துக்கிட்டா
ஒருநாளும் ஒயர்வுவராது… 

அதால
வேணும்வேணும் ஒழுக்கம்வேணும்
வாழ்க்கயில
ஒயரணுண்ணா ஒழுக்கம்வேணும்!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *