ஐயாண்டுத் தேர்தல் நையாண்டிகள்

தமிழ்த்தேனீ

 1. விரலிலே மையிட்டு அழகு பார்க்கிறார் பதவி

வந்தவுடன் த்ரோணர் போல  விரலைக் கேட்கிறார்

 1. வாக்காளர் யார் பக்கம் என்று கருத்துக் கணிப்பு நடத்துபவர்களே யார் மக்கள் பக்கம் என்று கருத்துக் கணிப்பு எடுத்து விடையைச் சொன்னால் தேர்தலில் வாக்களிக்க உதவியாய் இருக்குமே

 1. தேர்தல் விழிப்புணர்வு ன்னு மேடையிலே

பேசிக்கிறாங்களே அப்பிடீன்னா என்னாப்பா அது

அது ஒண்ணும் இல்லேடா கண்ணா அந்தப் பொதுக் கூட்டத்துக்கு போனா ரூபா குடுப்பாங்க சாப்பாடு குடுப்பாங்க அப்பிடிப் போகலைன்னா அதுவும் கிடைக்காது அதுதான் தேர்தல் விழிப்புணர்வு

 1. கோடி கோடியாய் பணம் சேர்த்து வைத்திருப்போர் கோடி கோடியாய் சொத்துக்கள் சேர்த்திருப்போர்

வேட்பாளர்களாய்

கோடி கோடியாய் வாக்காளர்கள் ஏழைகளாய்

5,       நாட்டிலுள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் வேட்பாளர்களுக்கும் தெரிகிறது அவர்களுக்கு எந்த ஊர் எந்த மாவட்டம் எந்த தொகுதி என்று

ஆனால் இந்த ரூபாய் நோட்டுக் கட்டுக்களுக்கு மட்டும் தெரியவில்லை எந்த ஊர் எந்த மாவட்டம் எந்த தொகுதி என்று. பாவம் அல்லாடிக் கொண்டிரு க்கிறது  போக்கிடம் இல்லாத நோட்டுக்கட்டுகள் போவதெங்கே

 1. அசோகர் சாலை இரு மருங்கிலும் மரங்களை நட்டார்  ஆறுகள் குளங்கள் வெட்டினார்

ஆட்சியாளர்கள்  சாலை இரு மருங்கிலும்   மக்களை  நடுகிறார்கள்

ஆறுகளை   வெட்டுகிறார்கள்    வெட்டி  வெட்டி  மணலை எடுத்து விற்கிறார்கள்   ஏரிகள்  குளங்களையெல்லாம் வெட்டி வெட்டி  சதுரமாக்கி  நீள் சதுரமாக்கி    பொதுமக்களுக்கு   சேவை செய்ய  நிலங்கள் அளித்து   வீடுகட்ட   மணல் அளித்து   பணம் ஈட்டுகிறார்கள்

 1. முதுகு வலி தாங்க முடியாமல் வாலினி தெளிப்பான் அடித்துக் கொண்டேன். எரிச்சல் முதுகைப் பிளந்தது.சற்று நேரம் பொறுத்துக் கொள்ளுங்கள் வலி போய்விடும் என்றார்கள். சற்று நேரம் போனதும் எரிச்சல் பழகிவிட்டது.

இன்னும் சற்று நேரம் போனதும் எரிச்சல் அடங்கியது மீண்டும் முதுகு வலிக்க ஆரம்பித்தது.

வாழ்க்கையில் எல்லாமே அப்படித்தான் தேர்தலும் ஆட்சி மாற்றமும் கூட என்று புரிந்தது

 1. இதுவரை நானே உங்களை ஆண்டேன் இனியும் நான்தான் ஆளுவேன் . நான் ஆளுகின்ற காலத்திலே உங்களுக்கு என்ன செய்தேன் என்பது முக்கியமல்ல

இனி ஆளப்போகும் காலங்களில் நான் என்ன செய்யப் போகிறேன் என்பதும் முக்கியமல்ல

என்னைத் தவிர யார் கேட்டாலும் ஆளும் பொறுப்பைத் தராதீர்கள் . ஏனென்றால் நாட்டை ஆண்டு ஆண்டே பழக்கப்பட்டுவிட்டேன் என்னால் இந்த நாட்டை ஆளாமல் இருக்க முடியாது என்பதுதான் முக்கியம்

அது மட்டுமல்ல பொதுமக்களே ஒரு ரகசியத்தையும் சொல்கிறேன் எனக்கு நாட்டை ஆள்வதைத் தவிர வேறு தொழில்களே எதுவும் தெரியாது . ஆகவே நான் உயிரோடு இருக்கும் வரையில் தயவு செய்து எனக்கே ஆளும் பொறுப்பினைத் தாருங்கள்

நீங்கள் யார் பேச்சையும் கேட்டு ஏமாறும் முட்டாள்களல்ல யாராலும் உங்களை ஏமாற்ற முடியாது என்பதை நான் அறிவேன் . ஆகவே இந்த நாட்டை ஆளும் பொறுப்பை எனக்குத்தான் தரவேண்டும் நிச்சயம் தருவீர்கள் நிச்சயம் தந்தே ஆகவேண்டும் என்று உங்களை அன்போடு மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்

 1. அடங்காமலிருப்பது என்னும் கொள்கை எல்லா இடத்துக்கும் சரிப்படாது அடங்கி நடப்பது நல்லது என்பதை அறியாத சில எதிர்க் கட்சிக்காரர்கள்  கேட்கிறார்கள்  ஏன் காலில் விழுகிறீர்கள்  என்று அவர்கள்  ஒதைப்பேன் என்று கைகாட்டினாலும்  பதிலுக்கு  கைகூப்பினால்  அதுக்கு தனி மரியாதை கிடைக்கும் என்று புரியாத எதிர்க்கட்சிக்காரர்கள்

 1. . சுதந்திரத்துக்காக போராடிய நாம் பணம் செய்யும் தந்திரத்துக்காக போராடுகிறோம் என்கிறார்கள்  அதைப் பாதுகாப்பது எவ்வளவு கடினம்  சுதந்திரத்தை போராடி மீண்டும் பெறலாம் ஆனால் பணத்தை இழந்தால் அதைமீண்டும் பெறவே முடியாது என்பது என்னைப் போன்ற அரசியல்வாதிகளுக்குத்தான் தெரியும்.
 2. இந்த நாட்டின் நிதி மந்திரியாகிய நான் நம் நாட்டின் நிதி நிலமை இவ்வளவு சீரழிந்து போய்விடும் என்று  கனவுகூடக் காணவில்லை-

என் ஆட்சியில் மக்கள் இவ்வளவு கஷ்டப் படுகிறார்களா?  அதற்கு என் ஆட்சிதான் காரணமா?  நான் நினைக்கவே இல்லை   முதன் மந்திரி

 1. . கற்பனையைச் சொன்னேன் கரகோஷம் விண்ணைப் பிளந்தது உண்மையைச் சொன்னேன் கரங்கள் என்னைப் பிளந்தன

.

 1. கோயிலில் இருக்கும்  தெய்வத்தின் தரிசனம் காணக் கூட வேண்டுமாம் மந்திரியிடம் சிபாரிசுக் கடிதம்

.14..      ஒரு ரூபாய் தர்மம் கொடுத்தேன் வாயாரத்  திட்டினான் பிச்சைக்காரன்

ஒரே ஒரு ஓட்டு போட்டேன் நாட்டையே  வீடாக்கிக் கொண்டார் அரசியல்வாதி

 1. மீன் விலையும் அதிகரிக்கிறது மின் விலையும் அதிகரிக்கிறது ஆனால் தேர்தல் ப்ரசார அலைகள் மட்டும் இரண்டையுமே தயாரிக்காமல் வெட்டியாய் ஓயாமல் வந்து வந்து போய்க் கொண்டிருக்கிறது ஆனால் கடலிலே கொந்தளிப்பே காணவில்லை அமைதியாய் இருக்கிறது

 1. யார்  ஜெயிப்பார் இந்த தேர்தலில்  நமக்கு நிச்சயமாகத் தெரியும்  கதாநாயகன்தான் ஜெயிப்பான் என்று

மக்கள் கண்ணுக்கு  எல்லோருமே  வில்லனாகத் தெரிகிறார்கள்.யார் ஜெயித்தாலும்   அவர்களே   வில்லன்  அவர்களே கதாநாயகன்   என்னும் முடிவுக்கு  மக்கள் தங்களை தயார்படுத்திக் கொண்டுவிட்டார்கள்

 1. மதுப்பாட்டில்களிலும் சிகரெட் அட்டையின் மீதும்   அது ஆபத்தானது உயிரைக் குடிக்கும் புற்று நோய் வரும் சற்று நாட்களில்  விஷம்  உயிரைக்  குடிக்கும் என்று எழுதி விற்கிறார்கள்    இதைப் போல     எச்சரிக்கை  வாசகத்தை   மேலே எழுதிவிட்டு  விஷத்தையும்  விற்பார்களா வாங்குவோர்   அதை  வாங்கி  உபயோகப்படுத்தினால்  நடவடிக்கை  எடுப்பாமல்  இருப்பார்களா

 1. மேலிடத்திலே இருந்து வரும் தலைவர்கள் தமிழ் நாட்டிலே தமிழர்களிடம் இந்தி மொழியிலே பேசுகிறார்கள் தமிழ் மக்களுக்கு எப்படி புரியும் என்பது விவாதிக்கப்படுகிறது

எனக்கு ஒரு சந்தேகம் தமிழ் நாட்டிலே தமிழர்களிடம் தமிழிலே பேசுகிறார்கள் பல தலைவர்கள் அதெல்லாம் மட்டும் மக்களுக்கு புரிகிறதா என்ன ? என்று

 1. அனைத்துக் கட்சித் தலைவர்களும்  வேட்பாளர்களும்     தங்களின்     கடந்த  காலத்தில் நடந்த  நடத்தப்பட்ட  தவறுகளை   அலசி  ஆராய்ந்து தங்களையே  ஆராய்ச்சி செய்து கொண்டு   தமக்குத் தாமே திருத்தி்க் கொள்ள  அமைந்த    ஒரு  அருமையான  நேரம் இந்தத் தேர்தல் களம் .  யார்  திருத்திக் கொள்கிறார்கள்   யார்   தங்கள்  தவறுகளை நியாயப் படுத்துவதி்லேயே  குறியாக இருக்கிறார்கள்  என்று கூர்மையாக  கவனியுங்கள்  வாக்காளர்களே .

 1. விலை உயர்ந்த நான்கு சக்கர  வாகனத்தையும்  தங்களோடு புதைக்கச்  செய்யலாமா என்று யோசிக்கிறார்கள் செல்வந்தர்கள்   ஆனால்  போகுமிடத்தில் பெட்ரோல் அல்லது  டீசல் கிடைக்குமா   தெரியவில்லை
 2. கப்பலை நிலை நிறுத்தப் பயன்படும்  நங்கூரமும்  கப்பலிலேயே  பயணிக்கிறது   வாகனங்களை நிறுத்த பயன் படும்  ஓட்டத் தடை  எனப்படும்   Break   வாகனத்தோடே  பயணிக்கிறது ஊழலைத் தடுக்க  மட்டும்  எதாலும் முடிவதில்லை

 1. ஹரிகேன் என்றால் புயல்    புயல் அடித்தாலும் அணையாத  விளக்கு  என்று சொல்வார்கள் . அந்த  விளக்கின்  வடிவம் அப்படி  அது போல் புயலடித்தாலும் இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்டாலும் அவை மக்களைப் பாதிக்காத வண்ணம்  சுற்றுச் சூழலை ஏற்படுத்தி  மக்களைப் பாதுகாப்பதே  ஆளுவோர் செய்ய வேண்டிய  கடமைகளில் முக்கியமான ஒன்று
 2. நான் சிறுவனாக இருந்த போது இவ்வளவு மக்கள் தொகை பெருகாத  அந்தக் காலத்திலேயே  1960  ஆண்டு  சென்னை வால்டாக்ஸ் சாலையில்  சாக்கடை வடிகால் குழாய்கள் ஆளுயரத்துக்கு  வட்ட வடிவமாக இருக்கும்  அதிலே இறங்கி  மாநகராட்சி துப்புறவுப் பணியாளர்கள்  சுத்தம் செய்வார்கள். எட்டிப் பார்த்து  அந்தக் குழாய்களின் ஆழத்தை நினைத்து பயந்தி்ருக்கிறேன். ஆனால் இவ்வளவு மக்கள் தொகைப் பெருக்கத்துக்குப் பின்

ஒப்பந்ததாரர்களை பணக்காரர்களாக்க  இரண்டடி விட்டமுள்ள  சிறு குழாய்களையே பதிக்கிறார்கள்.  அதையும்   நகரின் பல பாகங்களில் இன்னமும் பதிக்காமல்   சாலையிலேயே சாக்கடைகளை ஓடவிடுகிறார்கள்.  சாலைகளா  சாக்கடைகளா  என்றே தெரியாமல்  மக்கள் அல்லாடுகிறார்கள்

 1. வேட்பாளரை மாற்றக் கோரி நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் ஒரு பக்கம் மக்களின் விழிப்புணர்வைக் காட்டினாலும் அறிவித்த வேட்பாளரின் எதிர்ப்பாளர்கள் செய்கின்ற ஆர்ப்பாட்டமோ எனும் சந்தேகமும் வருகிறதுப் பாவம் வாக்காளர்கள் அவர்களுக்கு எப்போதும் குழப்பமே
 1. தேர்தல் அதிகாரிகள் இயன்றவரை சிறப்பாக செயல்பட்டு நேர்மையான முறையை தேர்தலை நடத்துகிறார்கள் . அவர்களுக்குத்தான் தெரியும் அவர்களின் கஷ்டங்கள்.

தேர்தல் முடிந்தவுடன் வேட்பாளர்கள் பதவி பெறுகிறார்கள்

வாக்காளர்கள் எந்தப் புதுமையும் இன்றி பழைய வாழ்க்கைக்கு திரும்புகிறார்கள் .

அவ்வளவு மாதங்கள் உழைத்த தேர்தல் அதிகாரிகளை

இனி வரும் தேர்தல் நேரத்தில் நினைவுகொண்டால் போதும் என்று மக்களும் அதிகாரிகளும் அவரவர் வேலையைத் திறம்படச் செய்கிறார்கள்

 1. உழைப்பவர் உழைக்கட்டும் திறமையாக உழைப்பவருக்கு உழைப்பை அளியுங்கள் தகறாரு செய்பவருக்கு பதவி உயர்வு அளியுங்கள் எனும் கொள்கை தீவிரமாக கடைப் பிடிக்கப்படுகிறது
 1. நங்கூரத்தின் அளவைக் கொண்டு கப்பலின் அளவை ஓரளவு  அறிய முடியும்  உறைக்கேற்ற கத்தி  அல்லது கத்திக்கேற்ற  உறை போல் விரலுக்கேற்ற வீக்கம் என்பது போல் கப்பலுக்கேற்ற  நங்கூரம் அது போல் மக்களுக்கேற்ற  மன்னன்தான் அமைகிறான்

 1. வெட்கமாகத்தான் இருக்கிறது !

அவரவர் கடமையை அவரவரர் செய்வதற்கு பணம் கொடுப்பது தான் நியாயமான செயல்

ஆனால் அவரவர் கடமையை அவரவர் வேலையைச் செய்யாமலிருக்க சாலைகளை விரிவாக்கம் செய்யாமலிருக்க ஏரிகளை ஆக்ரமிக்க நிலங்களை அபகரிக்க பணம் கொடுப்பது அநியாயமான செயல்

அதைத்தான் நாம் செய்து கொண்டிருக்கிறோம்

சாலைகளை விரிவாக்கம் செய்யாமலிருக்க சாலையோரக் கடைகள் நடத்துவோர் பெரும் தொகை கொடுக்கத் தயாராய் இருக்கிறார்கள். அப்போதுதான் அவர்கள் கடைகள் இடிக்கப்படாமல் இருக்கும்.

ஏரிகளை ஆக்ரமித்தால்தான் அந்த நிலங்களை பட்டா போட்டு விற்க முடியும் அதனால் பலர் ஏரிகளை ஆக்ரமிக்க பெருந்தொகை கொடுக்கத் தயாராய் இருக்கிறார்கள்

அரசு அதிகாரிகள் அவர்கள் கடமைகளை செய்யாமல் இருக்க பெருந்தொகை அளிக்க பலர் தயாராய் இருக்கிறார்கள் அப்போதுதான் சட்டவிரோதமாக பலர் சம்பாதிக்க முடியும்  இப்படிச் செய்வோரெல்லாம் பொதுமக்களாகிய நம்முடனேயே கலந்திருக்கிறார்கள் .

நிலமை இப்படி இருக்க அரசையோ அரசியல்வாதிகளையோ குறை சொல்ல நமக்கு என்ன தகுதி இருக்கிறது என்று யோசித்தேன். வெட்கமாகத்தான் இருக்கிறது.

 1. உற்பத்தி விளைச்சல் அதிகமானால் பொருட்களின் விலை குறைகிறது

விலை குறைந்தால் வியாபாரிகளுக்கு  லாபம் குறைகிறது

உற்பத்தி  குறைந்தால் தேவை  அதிகமாகிறது  தேவை அதிகமானால் விலை உயர்கிறது

விலை உயர்ந்தால் உற்பத்தியாளர்களுக்கும்  வியாபாரிகளுக்கும் லாபம் அதிகமாகிறது

 1. நாங்கள் ஆட்சிக்கு வந்தால்

நலத் திட்டங்களை செயல் படுத்துவோம்

என்று வாக்குறுதி அளிப்போரே ஏற்கெனவே ஆட்சியில் இருந்த போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டீகளா? இன்னும் இல்லையா !

ஓ ! அவைகளையும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால்தான் நிறைவேற்றுவீர்களா இப்போதுதான் புரிகிறது

 1. வேண்டுகோள் :

வில்லிவாக்கம் வழியாக பாடி அம்பத்தூர் தொழில் நகரம் போன்றவைகள் இருக்கும் திருவள்ளூர் நெடுஞ்சாலையை இணைக்கும் ஒரே பாலம் டீ ஐ சைக்கிள் அருகே இருக்கும் பாலம்தான். . அந்தப் பாலத்தை அகலப்படுத்தி உறுதிப்படுத்தினால் அம்பத்தூர் ஆவடி பட்டாபிராம் திருவள்ளூர் முதல் திருப்பதி வரை வாகனங்களில் செல்வோருக்கு உதவியாக இருக்கும்.

அந்த ஒற்றைப் பாலம் உறுதியாக இருக்கிறதா? அதை முதலில் கவனியுங்கள் ஆட்சியாளர்களே

பாலம் இடிந்து மக்கள் ஒடிந்து போனபின் ஆறுதல் சொல்வதை விட, ஈட்டுத் தொகை வழங்குவதற்கு செல்வழிக்கும் தொகையைக் காட்டிலும் குறைவாகவே செலவாகும் . மக்களும் காப்பாற்றப்டுவார்கள்

 1. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்று எல்லோருமே பேசுகிறார்கள்.

ஆக மொத்தம் யாருக்குமே நம்பிக்கை இல்லை ஆட்சிக்கு வருவோம் என்று

 1. ஒவ்வொரு முறை தேர்தல் வரும் போதும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியிலிருந்து புறவிலைப்படி வரையில் உயர்த்திக் கொடுக்கிறீர்களே பாராட்டுக்கள்

ஆமாம் அரசு ஊழியர் அல்லாத மற்ற ஊழியர்கள் யாரும் இந்த நாட்டு மக்கள் இல்லையா என்று ஒரு சந்தேகம் எழுகிறது.

பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச சைக்கிள் இலவச கணிணி எல்லாம் கொடுக்கிறீர்களே.

படிக்க இயலாத பிள்ளைகளுக்கு இலவச படிப்பைக் கொடுப்பீர்களா

 1. ஆங்கிலேயர் காலத்திலே மதுவைக் கொடுத்து அடிமையாக வைத்திருக்கும் நுணுக்கத்தை கற்றுக் கொடுத்தார்கள் நம்மவர் எப்போதுமே கற்றுக் கொண்ட நுணுக்கங்களை

மறக்க மாட்டார்கள்

அதனால்தான் இன்னமும் அதே நுணுக்கத்தைப் பயன்படுத்துகிறோம். நன்றி மறவாதவர்கள் நாம்

 1. ஊழலை ஒழிப்போம் ஊழலை ஒழிப்போம் என்கிறார்களே

குழந்தைகள் மேல் பாசமே இல்லாதவர்கள்.

பெற்ற தாயே குழந்தையைக் கொல்லலாமா

பெற்றவர்களே இப்படிச் செய்தால் அந்த ஊழல் குழந்தை

பாவம் எங்குதான் போகும்

குழந்தையை அனாதையாக விடலாமா?

 1. நல்லவர்கள் அரசியலுக்கு வர மாட்டார்கள் ஏனென்றால் அவர்களுக்கு அரசியல் செய்யத் தெரியாது. அப்படி அரசியல் செய்யக் கற்றுக்கொண்டு விட்டால் அவர்களால் நல்லவர்களாக இருக்க முடியாது

 1. நாட்டிலே அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அதிகமாகிவிட்டனர் எங்கு குற்றம் நடந்தாலும் அடையாளம் தெரியாத சிலரால் நடத்தப்பட்டது என்கிறார்கள்.. ஒரு வேளை வேற்றுக் கிரகவாசிகளாக இருப்பரோ.

இந்த நாட்டில் உள்ளோரையே அடையாளம் தெரியவில்லை என்றால் வேற்று கிரக வாசிகளை எவ்வாறு அடையாளம் கண்டு கொள்ள முடியும்

அதனால் வேற்று கிரக வாசிகளைக் கண்டு பிடித்து முதலில் அவர்களுக்காவது அடையாள அட்டை கொடுக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஏனென்றால் தேர்தல் வாக்குறுதிகளில் மக்களுக்காக மக்கள் நலன் கருதி அடையாளம் தெரியாத மர்ம நபர்களைக் கண்டு பிடித்து நிச்சயமாக அடையாள அட்டைகள் வழங்கும் திட்டத்தை ஏற்படுத்துவோம் என்பது உறுதி ஆகவே எங்களுக்கே வாக்களியுங்கள் என்று மேடையிலே முழங்கும் அபாயம் ஏற்படும்

 1. ஆங்கில வழித் தனியார் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்த்து கல்வி கற்க வைத்து இந்த நாட்டிலே வாழவைக்க பள்ளியின் வாசலிலே இரவெல்லாம் நடைபாதையில் காத்திருக்கின்றனர்தமிழ்ப் பெற்றோர்கள். எப்போது கதவு திறக்கும் ?

நான் பள்ளிக் கதவைப் பற்றி கேட்கவில்லை.

கல்விக் கதவைப் பற்றிக் கேட்கிறேன்

தமிழ்மொழிக் கதவைப் பற்றிக் கேட்கிறேன்

 1. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்று வாக்களிக்கும் தலைவர்களை

அப்படி நிறைவேற்றாவிட்டால் உங்களை என்ன செய்யலாம் என்று வாக்காளர்கள் யாரும் கேட்டுவிடாதீர்கள்

எங்களை அடுத்த முறை தேர்ந்தெடுக்காதீர்கள் என்று எந்தத் தலைவராலும் சொல்லவும் முடியாது, சொல்லவும் மாட்டார்கள்..

அதையும் தவிர இந்தக் கேள்விக்கு இன்னமும் யாருக்குமே பதில் தெரியாது .

 1. இன்று 2016 ஏப்ரல் 25 ஆம் தேதி

பாச மழை பொழிகிறது கோடைக்கால மழையென்றால் அதிலே ஒரு தனிக் கவர்ச்சி இருக்கிறது. கொளுத்தும் வெய்யிலில் குளிர்விக்கும் பாச மழை நேச மழை வாக்கு மழை இப்போது சுகமாய்த்தான் இருக்கிறது ஆனால் அடுத்து வரப்போவது அக்னி நக்‌ஷத்திர வெய்யில் அப்போது தெரியும் தேர்தல் முடிவுகள். அப்போது பார்க்கலாம் பாசமழை குளிர்விக்கிறதா அல்லது இன்னும் அனலைக் கிளப்பப் போகிறதா என்று

 1. நிருபர் :

நீங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன நலத்திட்டங்கள் செய்வீங்கன்னு கேட்டா இப்பிடி கொஞ்சம்கூட பொறுப்பே இல்லாம நாங்க ஆட்சிக்கு வரமாட்டோம் . எதுவும் செய்ய மாட்டோம்னு பதில் சொல்றீங்களே எந்த நம்பிக்கையிலே இப்பிடி சொல்றீங்க

ஒருவர் :  நாங்கதான் தேர்தல்லேயே நிக்கலையே அந்த நம்பிக்கைலேதான் சொல்றோம்

 1. கொய்யாக் கனிகளாக இருந்தாலும் கொய்யா கனியாக இருந்தால் கல்லடி படும்

கோடி கோடியாய்ப் பணமிருந்தாலும்  முறையாக செலவழிக்காவிட்டால்  கொள்ளையர்களுக்குத்தான் பயன்படும்.

 1. வாக்காளர் யார் பக்கம் என்று கருத்துக் கணிப்பு நடத்துபவர்களே
  யார் மக்கள் பக்கம் என்று கருத்துக் கணிப்பு எடுத்து விடையைச் சொன்னால் தேர்தலில் வாக்களிக்க உதவியாய் இருக்குமே

 1. நுகர்வோர்பயன் படுத்தும்  மின்சாரக்  கட்டணத்தைக் குறைக்க எளிதான பல வழிகள் உள்ளன . அவற்றில் சிறந்த வழி மின்சாரம் அளிப்பதைக் குறைப்பது ஒன்று

அப்போது மின் கட்டணம் அதிகமாகக் கட்டவேண்டிய அவசியம் இராது.

 1. இலவசங்களை அள்ளிக் கொடுத்து அதுவும் நம் பணத்திலே அவர்கள் கொடுப்பது போல் கொடுத்து அவர்களை ஆளுவோர்களாக அடையாளம் காட்ட வைக்கிறார்கள் அதுதான் ஆள் காட்டி விரல் . அந்த ஆள்காட்டி விரலில் மை போட்டு நம்மை மயங்க வைத்து

அதை உணராமல் மந்திரச் சாவியைியும் கொடுத்துவிட்டு பொக்கிஷப் பெட்டியை திறக்க அவர்களை அனுமதியும் கொடுத்துவிட்டு மீண்டும் அவர்களை நோக்கி கையேந்துகிறோம்

சிந்தியுங்கள் வாக்காளர்களே

நம்மை ஆள்காட்டிகளாக ஆக்கு்வோரோ் அவர்கள்தான்

நாம் ஆள் காட்ட வேண்டாம் தகுதியானவரை ஆளுவோராக அனுமதிக்க வேண்டும் . நம்மை திறம்பட ஆள, நாட்டை முன்னேற்ற நமக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுக்க அவர்களை நாம்தான் தேர்ந்தெடுக்கிறோம். ஆகவே நம் மனமே மந்திரச் சாவி

புரிந்து கொள்ளுங்கள்

 1. டீ வீ மிக்ஸீ க்ரைண்டர் போன்ற எதுவானாலும் இயன்றவரை பணம் செல்வழித்து சரிபார்த்துவிட்டு இனியும் ஓடாது என்று தெரிந்தாலே தூக்கி வீசுகிறோம்

ஆனால் பெற்றோர்களை இதெல்லாம் செய்யாமல் உடனடியாக தூக்கி வெளியே வீசுகிறோமே பெற்றோர்களுக்கு வாரண்டியும் இல்லை கியாரண்டியும் இல்லை

 1. அதிர்ஷ்டசாலிகளுக்கு திறமை தேவையில்லை திறமை சாலிகளுக்கு அதிர்ஷ்டம் வருவதில்லை

உழைப்பாளிகளுக்கு ஊதியம் கிடைப்பதில்லை ஊதியம் கிடைப்போர் உழைப்பதில்லை

 1. ஏமாற்றுவோருக்கு ஏமாளிகள் கிடைக்கிறார்கள் ஏமாறுவோருக்கு ஏமாற்றுகிறவர்களே அமைகிறார்கள்

ஆக மொத்தத்தில் திறமையாக ஏமாற்றுவோரே வெற்றி பெறுகிறார்கள். ஏமாற்றுவோரெல்லாமே திறமைசாலிகள் என்று அவர்களே நினைத்துக் கொள்கிறார்கள்

ஏமாளிகள் என்றுமே ஏமாந்துகொண்டே இருக்கிறார்கள்

 1. மனைவி :ஏங்க நீங்க நியாயமா செய்ய வேண்டிய வேலைக்கு எதுக்காக இப்பிடி லஞ்சப் பணம் வாங்கறீங்க

புருஷன் : நம்ம பிள்ளையை பள்ளிக் கூடத்திலே சேக்க அவங்களுக்கு பணம் குடுக்கணும்,

எந்த வேலை நடக்கணும்னாலும் பணம் குடுத்தாதான் நடக்கும் ,

தேர்தல்லே நிக்கணும்னா பணம் வேணும். வாக்காளர்களுக்கு பணம் குடுக்கணும், விளம்பரம் செய்யணுன்னா பணம் வேணும்.

எல்லாரும் வாங்கறாங்க நானும் வாங்கினாத்தானே குடுக்க முடியும்

இப்பிடி வாங்கினாத்தான் கேக்கறவங்களுக்கு குடுத்து எல்லாத்தையும் செய்ய முடியும்

உனக்கு அப்பப்போ தங்க நகை வாங்கணும் காஞ்சீவரம் போயி பட்டுப் புடவை வாங்கணும் .

பொண்ணுக்கு கல்யாணம் செய்ய மாப்பிள்ளை வீட்டாருக்கு வரதக்‌ஷணை குடுக்கணும். கார் வாங்கிக் குடுக்கணும் மாப்பிள்ளைக்கு , வீடு வாங்கிக் குடுக்கணும்

இதுக்கெல்லாம் நான் இப்பிடி வாங்கினாத்தான் குடுக்க முடியும் அப்பிடியே நாம வாங்காம இருந்தா பயித்தியக் காரன்னு திட்றாங்க

நான் வாங்கித்தான் ஆகணும் வேற வழியில்லே

இதுக்கெல்லாம் பணம் உங்க அப்பனா குடுப்பான் வாயை மூடிக்கிட்டுப் போவியா?

வேட்பாளர் :எங்களுக்கேஉங்க ஓட்டைப் போடுங்க

வாக்காளர் : சாக்கடைத் தண்ணியிலே குண்டும் குழியுமா கல்லும் முள்ளுமா இருட்டா இருக்கற எங்க சாலையிலே நடந்து வந்து ஓட்டுக் கேக்கறீங்களே உங்களைப் பாத்தா நல்லவராத் தெரியுது அதுனாலே உங்களுக்கே எங்கள் ஓட்டு

 1. மகிழ்ச்சியின் உச்சத்தில் இருப்போரே அது ஆணவத்தின்  உச்சமாக மாறும்   அபாயம் இருக்கிறது   .கீழே விழாமல்  இருக்க கொஞ்சம் மட்டுப் படுத்திக் கொள்ளுங்கள்   நிரந்தரமான மகிழ்ச்சிக்கு  அதுவே  வழி

விரக்தியின் உச்சத்தில் இருப்போரே  மீண்டும் வாழத் தலைப்படுங்கள்  அதுதான் ஒரு  முடிவின் ஆரம்பம்

 1. ஊழல் நாடுகள் பட்டியலில் எழுவத்தி ஆறாவது இடத்தில் இந்தியா உள்ளது.

டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்னும் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளின் ஊழல் நிலவரம் குறித்து தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. 2015 ஆம் ஆண்டு தரவரிசைப் பட்டியல் கணக்கீட்டுக்காக 168 நாடுகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.

ஓ அதிலும் முதல் இடம் இல்லையா வருத்தமாகத்தான் இருக்கிறது இன்னும் முன்னேறினால்தான் முதல் இடத்தைப் பிடிக்க முடியும்

 1. வேட்பாளர் : ட்ரைவர் எல்லாத்தையும் வேன்லே ஏத்திட்டியா பத்திரமா கொண்டு போயி வாக்காளர்கிட்டே சேக்க வேண்டியது உன் பொறுப்பு . அப்போதான்யா நமக்கு ஓட்டு கிடைக்கும்

ட்ரைவர் : நான் பாத்துக்கறேங்க நீங்க கவலைப்படாம இருங்க

வேட்பாளர் : அதுக்கில்லே போற வழியிலே ஏதாவது ப்ரச்சனைன்னா எப்பிடி சமாளிப்பே

ட்ரைவர் : நான் பாத்துக்கறேங்க நீங்க டென்ஷனாகாதீங்க

வேட்பாளர்: எதுக்கும் நம்ம ஆளுங்களை உஷாரா இருக்கச் சொல்லு

ட்ரைவர் : ஏங்க தேர்தல் வாக்குறுதி அச்சிட்டு எல்லாருக்கும் குடுக்கறீங்க அதுக்கு ஏன் இவ்ளோ பதட்டப் படறீங்க. வர வர நாட்டிலே ஒண்ணுமே புரியமாட்டேங்குது

 1. ஓட்டுப் போட பணம் தருகிறோம் என்று யார் வந்தாலும் அவர்களிடம் பணம் வாங்காமல் அவர்களை விரட்டி அடியுங்கள் என்றார் ஒரு நண்பர்

இன்னொரு நண்பர் ஏய்யா தேர்தலுக்கு தேர்தல் நமக்குன்னு கிடைக்கறதே அது ஒண்ணுதான் வேற எதுவும் கிடைக்காது அதையும் வாங்காதே அப்பிடீன்னா எப்பிடி ?

 1. தேங்காய்க்கு மேல் கடினமான ஓடு அதன் மேல் தென்னை நாறால் ஒரு கவசம், அதன் மேல் காய்ந்த தேங்காய் நாறின் கடினமான மேல் பகுதி இத்தனையையும் வைத்து இளநீரையும் தேங்காயையும் பாதுகாத்து அளிக்கிறான் இறைவன் ஆனால் கடினமான அவைகளை நீக்கி தேங்காயையும் இளநீரையும் நம்மால் அடைய முடிகிறது

ஆனால் லஞ்சம் ஊழல் பொய்கள் ஏமாற்று போன்ற கவசங்களை வைத்திருக்கும் அரசியல்வாதிகளிடமிருந்து அவைகளை நீக்கி நேர்மையான நாணயமான மனிதரை அடைய வழி ஏதும் வைக்கவில்லை அதே இறைவன்

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “ஐயாண்டுத் தேர்தல் நையாண்டிகள்

 1. “இதெல்லாம் நாங்க மாத்திக்காட்டுகிறோம்” அப்படின்னு ஒரு வார்த்தையை அங்கங்கே போட்டீங்கன்னா, இத நல்ல விலைக்கு விற்கலாம் “அம்பத்தைந்து பாயிண்ட்லஅருமையான தேர்தல் அறிக்கை” னு சொல்லி.

   அருமையான தேர்தல் சிந்தனை

Leave a Reply

Your email address will not be published.