வெங்கட் சாமிநாதன்

 

நினைவுகளின் சுவட்டில் (பாகம் – II பகுதி – 25)


மிருணால்தான்  எனக்கு ஆத்மார்த்தமாக மிகவும்  நெருங்கிய நண்பன். இப்படியெல்லாம் இப்போது சுமார் 60 வருடங்களுக்குப்  பிறகு சொல்கிறேனே, ஆனால் அவனோடு பழகிய காலத்தில், ஒரு சமயம், நானும் அவனும் மிகுந்த பாசத்தோடு குலாவுவதும்,  பின் எதிர்பாராது அடுத்த எந்த நிமடத்திலும் ஏதோ ஒரு உப்புப் பெறாத விஷயத்துக்கு கோபங் கொண்டு ஒருவரை ஒருவர் வருத்துவதுமாகவே பழகினோம். பின் எந்த நிமிடமும் அடுத்த நாள் எதுவுமே நடக்காதது போல குலாவிக் கொள்வோம். இந்த ஊடலும் கூடலும் பக்கத்திலிருக்கும் எவருக்கும் தெரிய வராது

இப்போது அதையெல்லாம்  நினைத்துப் பார்த்தால் சிறு பிள்ளைத் தனம் என்று தான் சொல்ல வேண்டும். அனேகமாக இந்த மாதிரி அடிக்கடி நிகழும் ஊடலுக்குக் காரணம் நானாகத் தான் இருந்திருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. ஏனெனில் எந்த ஒரு கோபத்துக்கும் காரணமாக  அவன் என்ன செய்தான் என்று யோசித்துப் பார்த்தால் ஒன்றும் நினைவுக்கு வருவதில்லை. ஒரு காட்சி நினைவுக்கு வருகிறது. நாங்கள் இருவரும் ஏதோ காரணத்துக்காக பிரிந்து விட்டோம். பின் பார்த்தால் அவன் என் வீட்டு வாசலில் நின்று கொண்டிருக்கிறான். வீட்டுக்குள் கூடியிருந்த என் நண்பர்களில் யாரோ எனக்கு, சக்கரவர்த்தி வெளியே நின்று கொண்டிருக்கிறான் என்று சொல்ல, எனக்கு எப்படி இதை எதிர் கொள்வது என்று தெரியாது, வெளியே வந்து “ என்ன விஷயம்? என்ன வேண்டும்?” என்று ஏதோ அன்னியனை விசாரித்தது போல் அவனைக் கேட்டது மனத் திரையில் ஓடுகிறது. நானாக இருந்தால், முதலில் அப்படி கோபித்துக் கொண்டவன் வீட்டுக்குப் போய் நின்றிருக்க மாட்டேன். மற்றதெல்லாம் பின் வருவது தானே. பின் எப்படி சமாதானம் ஆகி நாங்கள் பேச ஆரம்பித்தோம் என்பது நினவில் இல்லை. எந்தனையோ நூறு பிரிதல்களில் பின் ஒன்று சேர்தலில் இது ஒன்று. பத்து வயதுப் பையன்களிடம் இருக்கும் உணர்ச்சி வேகம், அசாதாரண பாசம் கோபம் எல்லாம் எங்களுக்கு என் இருபது வயதிலும் நீடித்திருந்தது தான் கோளாறாகிப் போனது.

எனக்கு அவனிடம்  அசாதாரண ஒட்டுதல் தான் இதற்கெல்லாம் காரணமோ என்னவோ. எப்போதும் என்னை அண்டி சமாதானமாகப் போவது மிருணால் தான்.

நிறைய பேசுவோம். இலக்கியம், சினிமா என்று. நாடகம் பற்றிப் பேச ஏதும் உருப்படியான அனுபவம் எங்களுக்கு அங்கு கிடைத்திருக்கவில்லை. புர்லாவில் எங்கள் அலுவலகம் முடிந்ததும் வெளியேறினால், கடைத் தெருவுக்குப் போகும் வழியில் ஒரு சினிமா கொட்டகை வந்து விட்டது. ஒரு பஞ்சாபி கொட்டகை போட்டிருந்தான். அதுவும் என்ன அனுபவம் எங்களுக்கு. பஞ்சாபி, ஹிந்தி ஹாலிவுட் சண்டைப் படங்கள். முதலில் வந்தன. நான் அங்கு பார்த்த பஞ்சாபி படங்கள் எல்லாம் பம்பாயிலிருந்து வந்தனவா இல்லை, பழைய லாகூர் தயாரிப்பிலான பாகிஸ்தானைச் சேர்ந்த பஞ்சாபி படங்களா என்று எனக்கு இப்போது நினைவில் இல்லை. அந்தப் படங்களில் வரும் டான்ஸும் பாட்டுக்களும் எனக்கு ரொம்ப பிடித்தவையாக இருக்கும். பெரும்பாலும் நாட்டுப் புறப் பாடல்கள். கிராமீய காதலைச் சொல்ல வந்தவை. ஒரு மாதிரியான வேகமும், கட்டுக் கடங்காத சந்தோசத்தைச் சொல்வதாகவும், கொஞ்சம் நளினமற்றதாகவும் இருக்கும். அது ஒரு வகை. எனக்குப் பிடிததன. கொஞ்சம் அதன் வாசனை நுகர வேண்டுமானால், ராஜ் கபூரின் படம் ஒன்று, ஒரு அடுக்கு மாளிகைக் கட்டிடத்தில் ஒர் இரவு நடக்கும் சம்பவங்களைக் கோர்த்த ஒரு படம், ஷம்பு மித்ரா வின் இயக்கத்தில் வந்த ஜாக்தே ரஹோ படத்தில் பாடிக் கொண்டே ஆடும் ஆட்டம் ஒன்று காட்சியாக வரும் .

 

http://www.raaga.com/player4/?id=218247&mode=100&rand=0.9541948633268476


“கீ மைம் ஜூட் போலியா, கி மைம் ஜஹர் ………….கோய்னா… கோய்னா…….”வை நினைவுக்குக் கொண்டு வந்து கொள்ளலாம். நான் புர்லாவில் பார்த்த பஞ்சாபி படங்களில் இந்த ஒரு நளினமற்ற முரட்டு கிராமீயம் அதில் அதிகம் இருக்கும். மிருணாலுக்கு இதெல்லாம் சுத்தமாகப் பிடிக்காது. அவன் ரவீந்திர சங்கீதத்திலும், ரவிஷங்கரின் சிதாரிலும் வளர்ந்தவன். அப்போது இரண்டு வருடங்களுக்கு முன் வந்து பிரபலமாகியிருந்த மஹல் படத்தில் வரும் ”ஆயேகா ஆயேகா ஆனே வாலா” என்ற பாட்டு எல்லோரையும் சொக்க வைத்த பாட்டு, முதன் முதலாகக் கேட்ட லதாவின் குரல் இப்போதும் கிட்டத் தட்ட அறுபது வருஷங்களுக்குப் பிறகும் அது என்னைச் சொக்க வைக்கும் குரல் தான் பாட்டுத் தான். அது படமாக்கப் பட்டிருக்கும் சூழலே இன்னமும் அது மனத்தை எங்கேயோ இட்டுச் செல்லும். ஆனால் அவன் அதை கொச்சையாகப் பாடி கேலி செய்வான். அப்போது அவனிடம் நான் கோபமாகப் பேசியதுண்டு. “அதைத் தாழ்த்திப் பேச நீ கொச்சைப் படுத்த வேண்டியிருக்கில்லையா மிருணால்? என்று கேட்பேன். சிரித்துக் கொள்வான்.

ஆனால் எனக்கு நல்ல சினிமாவைப் பார்க்கும் வாய்ப்பை அடிக்கடி தந்தது அந்த பஞ்சாபி  நடத்தும் கொட்டகை தான்.எனக்கு மார்லன் ப்ராண்டோவையும் எலியா கஸானையும் முதன் முதலாக அறிமுகப் படுத்திய On the Water Front படத்தை நான் பார்த்தது அந்த கொட்டகையில் தான். காலி பானர்ஜி, சைகல், சத்யஜித் ரே, ரித்விக் காடக் போன்ற சினிமா உலக மேதைகளை அங்கு தான் அந்த கொட்டகை தான் எனக்கு அறியக் கொடுத்தது. நினைத்துப் பார்க்க ஆச்சரியமாக இருக்கும். பதேர் பஞ்சலி, மேக் டேகே தாரா, தேவ் தாஸ் (பழைய பெங்காலி, ஹிந்தி பதிவுகள் மாத்திரமல்ல புதிய தமிழ் தேவ் தாஸும் தான் நாகேஸ்வர ராவ் தேவ் தாஸ்)

நான் பதேர் பஞ்சலியை புர்லாவில் பார்ப்பதற்கு சில மாதங்கள் முன்னதாக கல்கத்தா போயிருந்த மிருணால் அதைப் பார்த்து  விட்டு பரவசத்தில் ஆகாயத்தில் தான் மிதந்து கொண்டிருந்தான். “இதைப் போல ஒரு படம் இந்தியாவில் இது வரைக்கும் வந்ததே இல்லை” என்று. திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான். ”இது வரைக்கும் இந்தியாவில் 30000 படங்கள் பதினெட்டு மொழியில் வந்திருக்கிறது. நீ அதிகம் போனால் பெங்காலியிலியே 100 படங்கள் பார்த்திருக்கலாம். ”ரொம்பவும் அலட்டிக்காதே. பெங்காலிகளுக்கே தற்பெருமை அதிகம்” என்று அவனோடு சண்டை. போடுவேன் “பார்த்தால் நீயும் புரிந்து கொள்வாய்” என்பான். பார்க்கறதுக்கு முன்னாலேயே இப்பவே சொல்கிறேன். ”இந்தியாவிலேயே” என்றெல்லாம் சொல்வது அபத்தம்.” என்பேன். சில மாதங்களுக்குப் பிறகு புர்லாவில் அந்தக் கொட்டகையில் பார்த்தேன் தான். 30,000 படங்கள் பார்த்து ஒப்பிடாமலேயே, அவன் சொன்னது சரிதான் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒரு நாள் திடீரென்று ஆபீஸுக்கு வந்ததும் ஆல்பெர்ட் ஸ்வைட்ஸரின் ஆப்பிரிக்க அனுபவங்களைச் சொல்லும் சுய சரிதப் புத்தகம் ஒன்று கொடுப்பான் இன்று இரவிற்குள் படித்து விட்டு நாளைக்குக் கட்டாயம் திருப்பிக் கொடுத்து விடு” என்பான். அன்று என் ஆபீஸ் வேலையும் நடக்காது. ராத்திரி தூக்கமும் கெடும். ஒரு நாள் கலைமகள் பத்திரிகையில் தேசிக வினாயகம் பிள்ளை பற்றி ஒரு கட்டுரை. விநாயகம் பிள்ளையின் படம் பிரசுரமாகியிருந்தது. அது அக்கால பாணியை ஒட்டி ஒரு ஸ்டுடியோ நாற்காலியில் அவர் உட்கார்ந்திருக்க அவர் மனைவி பக்கத்தில் நின்று கொண்டிருக்கிறார். இருவரும் வயதானவர்கள் அதுதான் தெரியுமே. அம்மையாரும் சில இடங்களில் வழங்கும் அக்கால வழக்கப்படி ரவிக்கை அணிந்திருக்க வில்லை இரண்டு காதுகளும் துளைத்து இரண்டு பாம்படங்கள் கனத்துத் தொங்கு கின்றன. அக்கால கிராமியத் தோற்றம்.

யார் இது? என்று  மிருணால் கேட்டான். நானும் பெயரைச் சொல்லி இவர் ஒரு  கவிஞர். மிக அழகாக கவிதைகள் எழுதுவார். எட்வின் அர்னால்டின் லைட் ஆஃப் ஏசியா, தவிர உமர் கய்யாமின் ருபாயத் தையும் மிக அழகாக மொழி பெயர்த்திருக்கிறார். .. என்று சொல்லிக் கொண்டே வந்தேன். “ருபாயத்,,,,? இவர்? அழகாக கவிதை?… என்று ஒவ்வொரு சொல்லையும் நிறுத்தி சத்தம் போட்டுச் சொல்லி கண்களை விரித்து…..”அடடா என்ன இன்ஸ்பைரேஷன் என்ன இன்ஸ்பைரேஷன்? என்று கட கடவென்று சிரிக்கத் தொடங்கினான். அவன் விரல் பக்கத்தில் ரவிக்கை அணியாது பாம்படத்தோடு நிற்கும் உருவத்தைச் சுட்டியது. “நாமெல்லாரும் வயசானா இப்படித் தான் ஆவோம். சின்ன வயசில் இன்ஸ்பைரேஷனாக இருந்திருப்பாங்க அவங்க” என்றேன். ஆனால் அவனுக்கு அந்த உடையும் தொள்ளைக் காதில் தொங்கும் பாம்படமும் பழக்கமில்லாத புதுப் பொருட்களாக வெகு நேரம் சிரிப்பை அடக்க முடியாது தவித்துக் கொண்டிருந்தான். நினைத்து நினைத்துச் சிரிப்பான்.

இதைப் பற்றி  முன்னால் சொல்லியிருக்கிறேனோ என்னவோ நினைவில் இல்லை. டாக்டர் ராதாகிருஷ்ணன் சம்பல்பூருக்கு வருவதாகச் செய்தி கிடைத்தது. அப்போது அவர் உப ராஷ்டிரபதி என்று நினைக்கிறேன். அவர் வரவிருந்தது அரசியல் காரணங்களுக்காக அல்ல. அவர் சம்பல்பூரில் இருந்த கங்காதர் மெஹர் காலேஜுக்கு வருவார் அந்த காலேஜுக்கு முன்னிருந்த பெரும் வெளியிடத்தில் பேசுவார் என்று செய்தி. 1951-ல் நேரு முதல் பொதுத் தேர்தலின் சந்தர்ப்பத்தில் சம்பல்பூர் வரை வந்திருந்தார். அப்போதும் நான் நேருவைக் கேட்கப் போனேன். அது தான் முதல் தடவையாக நேருவைப் பார்ப்பதும், கேட்பதும். முன்னால் ஒருதடவை சென்னை வந்திருந்த போது கும்பகோணத்தில் என் ஹிந்தி வகுப்பில் கூட இருந்த வீரராகவன் நேருவைப் பார்க்க என்றே பட்டணத்துக்குப் போய் வந்ததும் அந்தக் கதை சொன்னதும் எனக்கு அதிகம் ஆச்சரியமும் அதில் கொஞ்சம் பொறாமையும் கலந்திருந்தது. இப்போது ஹிராகுட்டிலிருந்து பத்து மைல் தூரத்தில் பேருந்தில் எட்டணா செலவில் அது கிட்ட விருந்தது என்றால்….. அது ஒரு காலம். பாதுகாப்பா, கருப்புப் பூனையா, மெட்டல் டிடெக்டரா, போலீஸ் படைகளா.? எதுவும் இல்லாது, தற்செயலாக நேரு வந்து இறங்கிய கார் நான் நின்ற இடத்திலிருந்து இரண்டடி தூரத்தில் நின்று, நேரு தானே கதவைத் திறந்து இறங்கினார் என்றால்….. அது ஒரு மிகவும் வித்தியாசப்பட்ட காலம் தான். நேருவின் ஹிந்தி பேச்சையும் கேட்டேன். இது இரண்டு வருடங்கள் கழித்து டாக்டர் ராதா கிருஷ்ணன். மாஸ்கோவில் நம் தூதுவராக இருந்தவ்ர்.

நானும் மிருணாலும் போனோம். அதிகம் 20 நிமிஷம் பேசியிருப்பாரே என்னவோ. என்ன தடங்கல் இல்லாத, ஆற்றில் பெருகி வரும் வெள்ளம் போல வார்த்தைகள் பெருக்கெடுக்க ஏதோ யோசித்து எழுதி பின் மனனம் செய்து கொண்டு வந்து ஒப்பிப்பது போல சிக்கனமாக வார்த்தைகளை எந்த சேதமும் இல்லாது, அனாவசிய வார்த்தைகள் எதுவுமற்று மிக அடர்த்தியான சிந்தனைகளை உள்ளடக்கிப் பொழிந்த பேச்சு அது. எனக்கு நினைவில் இருப்பது, அது பொது மேடைப் பேச்சு அல்ல. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து வரும் தத்துவ விகாசமும் அது தொடர்ந்து வாழ்க்கையில் பேணப்படுவதும் அன்றாட வாழ்க்கையே தத்துவங்களின் விளக்கமாகத் தொடர்வதும் நம் சிறப்பு என்றும் இதே உணர்வுடன் எதிர் காலத்தையும் நாம் எதிர்நோக்குவதாகவும், சொல்லிக்கொண்டே போனார். அவருடைய சொல்வன்மையும், பேச்சுத் திறனும், கருத்து வளமும்… எப்படி ஒரு மனிதனுக்கு சித்தித்துள்ளது என்று வியப்பாக இருந்தது. அடுத்த இரு வருடங்களில் அவருடைய Hindu View of Life, Indian Philosophy எல்லாம் பாதிமூலம் வாங்கிப் படிக்க முடிந்தது. மிருணால், “அப்படி ஒன்றும் புதிதாக அவர் ஏதும் சொல்லிவிடவில்லை. தாஸ் குப்தாவும் எழுதியிருக்கிறார்” என்று சொன்னதாக நினைவு.

எங்களோடு வேலை செய்து வந்த பட்நாயக்குக்கு மாற்றல் ஆகியது. எனக்கு நினைவில் இல்லை, சிப்ளிமாவுக்கா, அல்லது பர்கருக்கா என்று. ஹிராகுட் அணையிலிருந்து தண்ணீர் எடுத்துச் செல்ல இரண்டு பெரிய கால்வாய்கள் கட்டப்பட்டு வந்தன. அந்த கால்வாய் கட்டும் பணியிலிருந்த அலுவலகங்கள் பல சிறிய கிராமங்கள் பலவற்றில் இருந்தன். அவற்றில் சில தான் சிப்ளிமா, பர்கர் எல்லாம் அதிக தூரம் இல்லை. 20 அல்லது 30 மைல் தூரத்தில் உள்ளவை. அதில் ஒன்றில் தான் நான் முன்னர் சொன்ன ஸ்ரீனிவாசனும் வேலை செய்து கொண்டிருந்தார். இதற்காகவெல்லாம் நான் பட்நாயக்கின் மாற்றலைப் பற்றி இங்கு பிரஸ்தாபிக்கவில்லை பின்னர் பல விசயங்களுக்கு இது என்னை இட்டுச் செல்வதாக………. நீண்ட பாதிப்புகளை ஏற்படுத்தவிருந்த விசயங்களுக்காக ……….. இதைச் சொல்ல வேண்டும்.!

தொடரும்.

நன்றி – http://www.raaga.com/channels/punjabi/album/PM000070.html

பதேர் பாஞ்சாலி – நன்றி

 

படத்திற்கு நன்றி

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “ஊடலும்……….கூடலும்!

  1. 1.”ஆயேகா ஆயேகா ஆனே வாலா” சொக்கவைக்கும் பாட்டுத் தான். லில்டிங்க் மெலடி;
    2.’…30,000 படங்கள் பார்த்து ஒப்பிடாமலேயே, அவன் சொன்னது சரிதான் என்றுதான் சொல்ல வேண்டும்….’ ததாஸ்து.
    3.’..நேரு தானே கதவைத் திறந்து இறங்கினார் என்றால்…..’ ~ அஸன்சால் ஜங்க்ஷன்லெ நிக்கறேன். ரயில் நிக்கும்போதே, கதவை திறந்து வைத்துக்கோண்டு, நேரு சிரிக்கிறார்! அது தான் நேரு.
    4.’..மிருணால், “அப்படி ஒன்றும் புதிதாக அவர் ஏதும் சொல்லிவிடவில்லை. தாஸ் குப்தாவும் எழுதியிருக்கிறார்” என்று சொன்னதாக நினைவு….’ வாஸ்தவம் தான். பீ.டீ.ராஜூ ஒரு படி மேலே.
    ரசித்துப் படித்தேன், சார்.
    இன்னம்பூரான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.