இலங்கையில் தமிழர்கள் மீதான பாலியல் வன்முறைகளைத் தடுக்க வேண்டும் – சீமான் அறிக்கை – செய்திகள்
இலங்கையில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள பாலியல் வன்முறைகள் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை:
”இலங்கையின் கிழக்கு மாவட்டங்களில் இலங்கை இராணுவத்தினரும், காவல் துறையினரும் தமிழ்ப் பெண்களை முகாம்களுக்குக் கடத்திச் சென்று அவர்களின் மார்பகங்களை அறுத்துவிட்டு, பிறகு கொன்றுவிடுவதாக அங்குள்ள தமிழர்கள் என்னைத் தொடர்பு கொண்டு அச்சத்துடன் கூறுகின்றனர். இலங்கையின் கிழக்கு மாவட்டமான மட்டக்களப்பில் உள்ள கல்லடி, காந்திபுரம், ஊரணி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து இப்படி பெண்கள் இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்படுகின்றனர் என்றும், இரவு நேரங்களில் வீட்டிற்குள் புகுந்து இவ்வாறு பிடித்துச் செல்வது கடந்த ஒரு மாத காலமாக நடந்து வருகிறது என்றும் கூறும் தமிழர்கள், அவ்வாறு பிடித்துச் செல்லப்படும் தமிழ்ப் பெண்களின் மார்பகங்கள் அறுக்கப்பட்டுக் கொல்லப்பட்ட சில சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இதுவரை 20க்கும் மேற்பட்ட பெண்கள் இவ்வாறு பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர் என்றும், அவர்களில் ஒருவரும் வீடு திரும்பவில்லையென்றும் கூறுகின்றனர்.
பிடித்துச் செல்லப்படும் பெண்களின் மார்பகங்கள் அறுக்கப்பட்டு, அவைகள் ஒரு யாகசாலைக்கு அனுப்பப்பட்டு, அங்கு யாக குண்டத்தில் வீசப்படுகிறது என்றும், இந்த யாகம் இலங்கை அதிபர் ராஜபக்சே நீண்ட காலம் வாழ மேற்கொள்ளப்படுவதாகவும் தங்களுக்கு தெரியவந்துள்ளதென அம்மக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து காவல் நிலையங்களுக்குச் சென்று புகார் கூறினால் அதனை அவர்கள் ஏற்க மறுக்கிறார்கள் என்றும் கூறுகின்றனர்.
இலங்கையின் கிழக்கு மாவட்டங்களான திருகோணமலை, மட்டக்களப்பு ஆகியவற்றில், பல இடங்களில் கிரீஸ் தடவிய மனிதர்களை ஏவிவிட்டு பெண்கள் மீது பாலியல் வன்முறை தொடுக்கப்பட்ட சம்பவங்களினால் அங்கு காவல் துறையினருக்கு எதிராக தமிழர்கள் போராடி வருகின்றனர். அவர்களின் போராட்டத்திறகு இதுவும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. கிரீஸ் மனிதன் அச்சுறுத்தலினால், இரவில் பெண்கள் எவரும் தங்கள் இல்லங்களில் தூங்காமல், ஒரு இடத்தில் எல்லோரும் கூடி ஒன்றாகவே துயில் கொண்டு வருகின்றனர். இச்செய்தியை அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே என்னிடம் பேசி உறுதி செய்துள்ளார்.
தமிழர்கள் மீது நேரடியாக போர் தொடுத்து பல இலட்சக்கணக்கானவர்களை அழித்தொழித்த இலங்கை அரசு, இப்போது தமிழினத்தை அழிக்க இப்படிப்பட்ட பாலியல் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது என்று ஈழத் தமிழர்கள் கூறுகின்றனர். அவர்கள் கூறும் நிகழ்வுகளை கேட்டால் நெஞ்சம் பதறுகிறது. தமிழர்கள் பெரும்பாலும் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்பட்டு, வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடப்பதாக அவர்கள் கூறுகின்றனர். இது மனித உரிமைப் பிரச்சனையாகும். இலங்கையில் அரச படைகளே இப்படிப்பட்ட வன்முறையின் பின்னணியில் இருந்து செயல்படுகின்றன. எவ்வித பாதுகாப்பும் இன்று தமிழர்கள் வாழ்வு ஒவ்வொரு நாளும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. “இலங்கையிலுள்ள தமிழர்கள் எங்கள் நாட்டு மக்கள், அவர்கள் பற்றி தமிழ்நாட்டின் முதல்வர் பேசத் தேவையில்லை” என்று கூறும் கோத்தபய ராஜபக்சே கும்பல் நடத்தும் ஆட்சியின் யோக்கியதைக்கு இது ஒரு அத்தாட்சியாகும். கோத்தபய ராஜபக்சேதான் இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது கட்டுப்பாட்டிலுள்ள இராணுவம்தான் தமிழர்களுக்கு எதிரான இப்படிப்பட்ட மறைமுக வன்முறைகளை ஏவிவிட்டு வேடிக்கை பார்க்கிறது.
ஈழத் தமிழர்கள் மீது ஈடிணையற்ற அன்பும், அக்கறையும் காட்டிவரும் மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அவர்கள், இப்பிரச்சனையிலும் கவனம் செலுத்தி, ஐ.நா.விற்கும், பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கூறி வன்முறைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இந்திய மத்திய அரசு, இலங்கை அரசுக்கு ஆதரவாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே, இப்பிரச்சனையை மனித உரிமை அமைப்புக்களிடம் மாண்புமிகு தமிழக முதல்வர் நேரிடையாகவே கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.”
நெஞ்சம் பதை பதைக்கும் செய்தி. இந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் மனிதாபிமானமுள்ள ஒவ்வொரு தமிழரும் வெட்கித் தலை குனிய வேண்டியதோடு, ஒரு பெண்ணை மானபங்கப் படுத்தி கொலை செய்யும் அளவிற்குத் துணிந்த செயல் வன்மையாகக் கண்டிக்கத் தக்கதாகும். ஒரு பெண்ணாக அதன் வலி உணரக் கூடிய நம் தமிழக முதல்வர் கட்டாயம் இப்பிரச்சனையில் தலையிட்டு அந்த அப்பாவிப் பெண்களைக் காக்கும் முயற்சியில் தாமதமின்றி செயல்படுவார் என்று நம்புவோமாக!
புத்தரைப் போற்றிக்கொண்டு, புத்தமதக் கொள்கைகளைக்
குழி தோண்டி புதைத்து விட்டு, புத்தரின் பெயராலேயே
ஆட்சி நடத்துகிறோம் என்பது கேலிக்குரியதாகும்.
அது போலத்தான் காந்தியக்கொள்கைகளைக் குழி தோண்டிப்
புதைத்து விட்டு காங்கிரஸ்காரர்கள் நடத்தும் ஆட்சியும்!
இனத் துவேஷத்தை எதிர்த்து தென்னாப்ரிக்காவில் ஒரு
பெரிய போராட்டத்தை ஆரம்பித்தவர் மகாத்மா காந்தி.
ஆனால் தமிழ் இனத்தையே அழித்து ஒழிக்க நினைக்கும்
சிங்கள ஆட்சிக்கு ஆதரவு அளிக்கும் நம் நாட்டு அரசியல்வாதிகளை
நாம் மன்னித்தாலும் காந்தியின் ஆத்மா மன்னிக்கவே மன்னிக்காது.
போர்க்குற்றவாளியாக ராஜபக்சேவை நிறுத்துவதோடு மட்டுமல்லாது
பெண் குலத்திற்கு எதிரான குற்றங்களைப் புரிந்ததற்காகவும் குற்றவாளிக்
கூண்டில் ஏற்றவேண்டும். ஹிட்லரின் நாஜிக் கொடுமைகளைப் பற்றிக்
கேள்விப்பட்டிருக்கிறோம். அதை மீண்டும் அரங்கேற்றியவன் ராஜபக்சே.
சர்வாதிகாரிகள் சரிந்ததாக சரித்திரம் உண்டு, வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை!
இரா. தீத்தாரப்பன், ராஜபாளையம்.