சுபாஷிணி திருமலை.

 

அன்று ஆடிப்பெருக்கு, ஆடிக்கிருத்திகை (ஆகஸ்ட் 11, 1993) வீட்டைச் சுற்றிய அம்மன் கோவிலில் எல்லாம் கொண்டாட்டம் களைகட்டிக் கொண்டிருந்தது. பக்தியின் பரவசம் அண்டத்தில் பரவி, பரவசமாக்கிக் கொண்டிருக்கும் நேரம். மஞ்சள் ஆடை அணிந்து கொண்டு பால்குடங்கள் பவனி வந்து கொண்டிருந்த நேரம். குமரன் கோவிலில் காவடிகள் அசைந்து அசைந்து ஆடிக் கொண்டிருந்த நேரம். காற்றில் கலந்து இவ்வொலிகளின் ஸ்பரிசத்தில் மேனியும் மனமும் சிலிர்த்த நேரம்.

குமரனைப் போற்றி, எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம், பாயசம், உருளைக்கிழங்கு வறுவலும், வடாமும் ஆக படைத்து மகிழ்ந்தேன். அன்று காலை எட்டு மணிக்குள், எல்லாம் முடிந்து, அலுவலகம் செல்லும் என் நாத்தனார், மச்சினன் ஆகியோருடைய பெண்கள், கணவன் மற்றும் பள்ளி செல்லும் இரு மகள்கள் என எல்லோருக்கும் மதிய சாப்பாட்டிற்கு கொடுத்தும் அனுப்பியாகி விட்டது. பின் சமையல்கட்டு சுத்தப்படுத்துதல், பாத்திரம் தேய்க்கப் போடுதல், துணி துவைக்க ஏற்பாடு செய்தல் என வேலைகள் இருக்கும்தானே நண்பர்களே! இல்லையா தோழர்களே!

ஒன்று மனதில் கொள்ளுங்கள்! நேரத்திற்கு சமையல் வேலையையும், இடையில் வருவோர்க்கு பதில் கூறுதலும், ஆண்களுக்கு வேண்டியவற்றை எடுத்துத் தருதலும், திடீரென்று வரும் விருந்தாளியை உபசரிப்பதும், நடுவில் வரும் சின்னஞ்சிறு மனஸ்தாபங்களை மத்தியஸ்தம் பண்ணுவதும், சாட்சியாய் நிற்கும் கடவுளைக் கவனிப்பதும், எல்லாம் முடிந்தபின் வரும் வேலைகளும் ஆகிய எல்லாவற்றையும் தாண்டி அவர்களும் அலுவலகம் சென்று….என்ன நண்பர்களே! கேட்கவே உங்களுக்கும் மூச்சு வாங்குதா!

ஆம்! நண்பர்களே ஒவ்வொரு பெண்ணின் ஆற்றலும், பிரமிக்க வைக்கத்தான் செய்கிறது! அதைப்பற்றிச் சிறிதும் அலட்டிக் கொள்ளாது, அவர்கள் இயல்பாக்கிக் கொள்ளும் இயல்பு அதிசயமாகத்தான் இருக்கிறது நண்பர்களே! அதை அவர்கள் சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளும் பண்புதான் வியப்பு. ஒரு வேலைக்கு இரு வேலைகளைக் காலை வேளையில் ஆண்களிடம் கொடுத்துப் பாருங்கள் தோழர்களே! என்னவோ அவர்கள்தான் அன்றைய நாளையே தாங்கிப் பிடித்துக் கொண்டிருப்பதாக உருவாக்கும் அவதானிப்பு இருக்கிறதே, அப்பப்பா! வார்த்தைகளில் வடிக்க இயலாது. பாவம்! அவர்கள் என்ன செய்வார்கள். அவர்களால் அதுதான் இயலும்.

சரி வாருங்கள்! எங்கேயோ சென்று விட்டேனே? அன்றைய வேலைகள் நடந்து கொண்டிருந்த வேளையில் திடீரென்று தொய்வு…. உடலின் ஒவ்வொரு அணுவும் இயங்க மறுத்து வலி.. என் கால் நகக்கண் வரை வலிக்கத் தொடங்கிவிட்டது. அழுத்தி அழுத்தி வைத்திருந்த மனம் மெல்ல மேலே எழும்பி வந்தது. ஏனிந்த தொய்வு! ஆம்! நண்பர்களே! என் தந்தையை, ஜூரம் என்று செயிண்ட் மேரீஸ் சாலையில் இருக்கும் ஹெச்.எம். மருத்துவமனையில் சேர்த்து இருந்தனர். (இப்போது அந்த மருத்துவமனை அடுக்கு வீடுகளாக மாறி விட்டது)

வீட்டு வேலைகளின் நிமித்தம், நான் பார்க்கவே போகவில்லை. அதைப்பற்றிய எண்ணம் எங்கள் வீட்டில் இல்லை. என் தந்தையின் உடல்நலம் சரியில்லை, என்பதைப் பகிர்ந்து கொள்ளக்கூட முடியாத சூழல் அப்போது. திருமணம் ஆகி ஒரு பெண் புகுந்த வீட்டிற்கு வந்துவிட்டால், நண்பர்களே! அவளுடைய பிறந்த வீட்டுப் பாசத்தை, வாசற்படியிலேயே விட்டு விட்டு வந்துவிடல் வேண்டும். அதைப் பெருமையாகக் கூறும் சமுதாயம். இதுவே மாமனார், மாமியார் அல்லது புகுந்த வீட்டு உறவு என்றால் வீடே அவர்களைச் சுற்றி அவர்களது நலன் சுற்றி வட்டமிடும்.

பெண்கள் மொத்தமாய் இவர்களின் நலனில் இருப்பதைப் பற்றி, அவர்களுக்குப் பெருமை வேறு. அதற்குத்தான், கன்னியாதானம் என்று கொடுத்து விடுகிறார்களாம். என்ன செய்வது! அது அந்தக் காலத்தில் 5 வயதில் திருமணம், நாற்றாய் நட்ட காலம். அதைத் தொடர்வதில் ஆண்களுக்கு ஆனந்தம். ம்.ம்…. உடலை, மனதை என்னதென்று சொல்ல முடியாத அளவு உணர்வு…பயமா? கலக்கமா? புரியவில்லை?

ஒன்று தெரிந்தது, இனியும் அப்பாவைப் போய்ப் பார்க்காது இருக்க இயலாது, என்று தோன்றிவிட்டது. படபடவென்று புழுங்கல் அரிசி வறுத்து, மிக்ஸியில் உடைத்து சிறிது பெருங்காயம், சீரகம், மஞ்சள்பொடி போட்டுக் கஞ்சியை செய்து கொண்டேன். அதையெடுத்து பச்சைக் கூடையில் வைத்தேன். பின் அன்று செய்த சித்ரான்னங்களையும் எடுத்து வைத்துக் கொண்டேன். அப்பாவிற்கு என் சமையல் என்றால், மிகவும் பிடிக்கும். எனக்கு எங்கப்பாவைப் பிடிக்கும். மிகவும் அன்பான, அருமையான மனிதர்.

இன்றைய நண்பர்கள் தினத்தில், நிச்சயமாய் அவரை நினைப்பது சந்தோஷமானதே. அவரைப் போல் நண்பர் கிடைக்கமாட்டார்கள். 5 வயது முதல், 100 வயதுடையோருக்கும் அவர் நண்பராய் இருந்தார். நட்பின் மேன்மை உறவின் உன்னதம். இரண்டுக்கும் ஆதாரமான உணர்வுகள்! அதனை மதிக்கும் இயல்பு… நண்பர்களே! அதனை அவரிடம்தான் பெற்றேன். எனக்கு அவர் அளித்த அருமையான சீதனம் அது தோழர்களே! இனியும் பொறுக்க முடியாது, என்று பச்சைக் கூடையை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டேன். அது இல்லாமல் நான் எப்போதும் செல்ல மாட்டேன்.

அப்பாவைப் பார்க்க எப்போது போனாலும், ஏதாவது அதில் எடுத்துச் செல்வேன். ஆனால்,  அப்போது அறியவில்லை நண்பர்களே! அதுதான் நான் எடுத்துச் செல்லும் கடைசி சாப்பாடு என்று! அவசர அவசரமாக வீட்டைப் பூட்டிக் கொண்டு, ஆட்டோவில் கிளம்பி விட்டேன். வழியெல்லாம் நான் நானாக இல்லை. தவிப்பின் வெப்பத்தில் நான் எரிந்து கொண்டிருந்தேன். ஆட்டோ மிகவும் மெதுவாக ஊர்வதாகப் பட்டது எனக்கு. என் மன உளைச்சலின் உஷ்ணம் தாங்காது, அதுவும் வேகமாய்ச் சென்று ஆஸ்பத்திரியின் முன்னே நின்றது. அப்போது மணி நடுப்பகல் பன்னிரண்டு மணி.

பச்சைக் கூடையை மறக்காது எடுத்துக் கொண்டு ஓடுகிறேன். மூன்று மாடிகளை எப்படிக் கடந்தேன் என்று நான் அறியவில்லை. அப்பா இருக்கும் அறைக்குச் செல்கின்றேன். அங்கு என் தோழி பிரேமா, செண்பகவல்லி இருக்கிறார்கள். அத்தை கண்களுக்குத் தெரிந்தார்கள். வேறு சிலரும் இருக்கிறார்கள். ஆனால் எல்லோரையும் தாண்டி அப்பா அருகில் செல்கின்றேன். ‘அண்ணா’ என அழைக்கிறேன். அவரை நாங்கள் வீட்டில் அண்ணா என்றுதான் அழைப்போம்.

அவர்! “அடிச்சக்கை! பேஷ்! வந்துட்டியா?” என சந்தோஷித்து வரவேற்றார். நான் பிரேமாவைப் பார்க்கிறேன்.”ஆம்! சுபா! ஐயா,  நல்லா ஆயிட்டாங்க! அண்ணாமலை சாரும், மோகன்சாரும், சங்கரலிங்க நாடார் உயர்நிலைப் பள்ளிக்கு காந்தியைப் பற்றிப் பேச, இப்போதுதான் கிளம்பினார்கள். ‘அதுதான் முக்கியம். நான் சரியாகி விட்டேன்’ என்று கூறி அனுப்பி வைத்தார்” என்றாள்.அப்பாவிடம் அதை ஆமோதிப்பதாய் சிரிப்பு மலர்ந்து.

“அப்பா! அப்பா! என்று இவ்வளவு பிதற்றிக் கொள்கிறேனே! யார் என்று கேட்கிறீர்களா! ஆம்! நியாயந்தானே நண்பர்களே”! அப்பா! டி.டி.திருமலை, தோத்திரி தெய்வ நாயக அய்யங்காருக்கும் ஜானகி அம்மாளுக்கும் தவமாய் தவமிருந்த பின், பெரியாழ்வாருக்குக் கிடைத்தாற் போல் கோதை கோவிந்தன் வாழும் ஊரான, ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்தவர்.

வளமான குடும்பம். சுற்றமும் நட்பும் கூடிக்களித்திருந்த குடும்பம். வருவோருக்கும் போவோருக்கும் வாரி வாரி வழங்கிய குடும்பம். அங்குள்ள கான்வென்ட் பள்ளிக்கு, நெல் அளந்த குடும்பம். சுதந்திரப் போராட்டம் வேறு, நடந்து கொண்டிருந்த காலம். இவருக்கு சொல்லவா வேண்டும். செல்வங்களை அதற்காக செலவழித்தவர்கள். அப்பாவின் படிப்பு ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து திருநெல்வேலி இந்து கல்லூரியில் தொடங்கியது. அங்கு பி.ஏ. படித்தார். பேரா. அ.சீனிவாச ராகவன் இவருடைய ஆங்கிலப் பேராசிரியர். அவரின் சீதனமாய் அப்பாவிற்கு ஆங்கிலப் புலமை அமைந்தது. நேருவின் பேச்சை அப்படியே அப்பா பேசுவாராம்.

அப்போதுதான் “வெள்ளையனே வெளியேறு” போராட்டம் நடந்து கொண்டிருந்தது. காந்தி, மாணவர்களை நாட்டு விடுதலைக்காக அழைத்தார். அதில் உள்ளம் கவர்ந்து, அப்பா கல்லூரியை விட்டு, நாட்டு விடுதலைக்காக காந்திய இயக்கத்தில் கலந்து கொண்டார். அப்போதிருந்து, காந்தியத்தின் உண்மையான தொண்டனாக இருந்தார். அவர் வாழ்நாள் முழுவதும் அதுதான் அவரது உயிரோட்டம். சத்தியம் எல்லாம். ஆனால் இந்த சத்தியத்தை, உயிரோட்டத்தை அறிந்து கொள்ள, இரசிகமணி டி.கே.சி. உதவியிருக்கிறார் என்றால் நம்மால் நம்ப முடிகிறதா நண்பர்களே! ஒரு இலக்கிய இன்பம் ஒரு பொருளின் சத்தியத்தை, நேருக்கு நேராக அறியும் ஆற்றலை அளித்திருக்கின்றது என்பார் அப்பா.

அப்பாவை டி.கே.சி.யிடம் அறிமுகப்படுத்தியவர் காலஞ்சென்ற நீதிபதி எஸ்.மகராஜன் அவர்கள்தாம். அவரே கூறுவதைக் கேளுங்களேன் நண்பர்களே! “நான் எத்தனையோ பேர்களை டி.கே.சி.யிடம் அறிமுகப்படுத்தியிருக்கிறேன். ஒவ்வொருவருமே தாம் முன் கண்டறியாத ஒரு அழகையோ, உண்மையையோ டி.கே.சி.யிடம் கண்டு விட்டதாக என்னிடம் உணர்ச்சியோடு சொல்லுவார்கள். 1946இல் நான் ஸ்ரீவில்லிப்புத்தூரில் முன்சீப்பாக இருந்த போது ‘உலக இதய ஒலி’ ஆசிரியராக இருக்கும் நண்பர் டி.டி.திருமலையைக் குற்றாலத்துக்கு அழைத்துச் சென்று டி.கே.சி.யிடம் அறிமுகப்படுத்தினேன்.

பத்து நாட்கள் ரசிகமணியோடு தங்கி உறவாடிய பிறகு, நண்பர் திருமலை சத்தியத்தின் தரிசனத்தையே தான் கண்டு கொண்டதாக என்னிடம் பூரிப்போடு சொன்னார்கள். அது முதற்கொண்டே நண்பர் திருமலை டி.கே.சி.யின் அரிய பக்தராக மாறி விட்டார். ‘உலக இதய ஒலி’ என்ற பத்திரிகையை டி.கே.சி.யின் உபதேசங்களை பிரசாரம் செய்வதற்காகவே அவர் தொடங்கினார் என்று சொன்னால் குற்றமில்லை. சென்ற 12 ஆண்டுகளாக வெளிவந்த ‘உலக இதய ஒலி’ மலர்களைப் படித்தவர்கள் நான் சொல்வது உண்மை என்று உணர்வார்கள்”.(எனது வாழ்த்துக்கள் -ஜஸ்டிஸ் எஸ்.மகராஜன். ‘உலக இதயஒலி’ இரசிகமணி நூற்றாண்டு மலர் – 1981)

அப்பாவிற்கு ‘காந்தி, டி.கே.சி., வினோபா’ ஆகிய மூவரும்தான் வழிகாட்டிகள். அப்பா சுதந்திரப் போராட்டத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து கொண்டு பல பணிகளைச் செய்திருக்கிறார். போராட்டத்திற்குரிய நோட்டீஸ்களை அவ்வூர் திருக்குளத்தில் உட்கார்ந்து, இரவு இரண்டு மணிக்குமேல் நண்பர்கள் சூழ எழுதி, அனைவருக்கும் காவலர்கள் அறியாது துண்டு பிரசுரமாய் வினியோகிப்பார்களாம். முதன்மையாக காந்தியக் கொள்கைகளான ‘தீண்டாமை’ பற்றியும், கதர்த்துணி இயக்கத்தினையும் மக்களிடையே பரப்பியிருக்கிறார்கள்.

சுதந்திரத்திற்குப் பின், ஸ்ரீவில்லிப்புத்தூரில் முனிசிபல் சேர்மனாகப் பணிபுரிந்திருக்கிறார். அவ்வூரில் நல்லதொரு “தண்ணீர் திட்டம்” வகுத்து, அதற்கு ஆவன செய்திருப்பதாகவும், அதனால் இன்னும் தண்ணீர் ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு கிடைக்கிறது என்று நீங்கள் அங்கே செல்லும் போது சொல்வார்கள். பின் ‘வினோபாவின் பூதான இயக்கத்தில்’ கலந்து கொண்டு சேவை செய்தார். மகரிஷி வினோபா அவர்கள் ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு வந்திருக்கிறார்.

ஸ்ரீவில்லிப்புத்தூரில் திருமலை என்பதை விட அனைவரும் ‘பட்டு’ என்றே அழைப்பர். அவர் பிறந்தவுடன் பட்டுத்துணியில் ஏந்தினார்களாம். பவுன் காசுகளைக் கொடுத்து தான் விளையாடச் சொல்வார்களாம். வீட்டில் கொலு வைத்தாலும், இவர் உடைத்து விளையாடும் அழகை அப்படி ரசிப்பார்களாம். ஆனால் செல்வம் அளவிலாது கொடுத்தால் குறையும்தானே. கொடுக்கக் கொடுக்கப் பெருக அது ஒன்றும் அறிவு இல்லை இல்லையா?

பிற்காலத்தில் தன் தாயின் மரணத்தின் இறுதி யாத்திரையையே ஊரார் செலவில் நடத்தினார், என்பது மிகவும் வருத்தப்படக்கூடிய ஒன்று. ஆனால் அவரோ அதையும் இயல்பாக ஏற்றுக் கொண்டார். அவரைச் சுற்றி ஆனந்தம் ஆனந்தம்தான். பூதான இயக்கத்திலிருந்து காந்தியத் தத்துவப் பிரசாரகராக ‘மதுரை தமிழ்நாடு காந்திய நினைவு நிதியில்’ தன்னை இணைத்துக் கொண்டார். அதற்குள் அவருக்கு நாங்கள் ஆறு குழந்தைகளாகி விட்டோம்.அவர் காந்தியைக் கவனித்துக் கொண்டார். எங்கள் அம்மா எங்களைக் கவனித்துக் கொண்டார்.

அப்பாவைச்சுற்றி கல்லூரி மாணவர்கள் இருப்பார்கள். அவரது வேலையே, காந்தியத்தைப் பள்ளிக்கும், கல்லூரிக்கும் எடுத்துச் செல்வதுதான். ‘ஸ்டடி சர்க்கிள்’ தொடங்கினார். பட்டிமன்றம், கவியரங்கம் எனத் தடபுடலாக நடக்கும். அதுதான் எங்களுக்குத் தீபாவாளி கொண்டாட்டம் எல்லாம். காந்தியோடு தமிழ் இலக்கியமும் வளர்த்தார்கள். பேராசிரியர் அ.சீனிவாச ராகவன் மதுரை காந்தி மியூசியத்திற்கு வருவார். பின் ஒரே ஆங்கில இலக்கியமும், நம்மாழ்வாரும், கம்பரும் உலா வருவார்கள். நாங்கள் வயதில் சிறியவர்கள். ஆனாலும் அந்தச் சாரலின் சிதறல்களைச் சேகரித்து வைத்துக் கொண்டோம்.

டாக்டர்.இராதாகிருஷ்ணன், இராஜேந்திர பிரசாத், பண்டித நேரு என பல தலைவர்கள் வருவார்கள். பேரா. அ.ஞானசம்பந்தம், சா.கணேசன் என இலக்கிய சான்றோர்களின் சந்திப்பு நடக்கும். மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராய் டாக்டர் தெ.பொ.மீ. அவர்கள் வந்தார்கள். காந்தி மியூஸிய மரத்தடிக்குக் கொண்டாட்டம்தான். காந்தியமும், இலக்கியமும் கூடிக் கும்மாளம் போட்டன. அப்பாவின் வேண்டுதலால் டாக்டர்.தெ.பொ.மீ. அவர்கள் காந்திய சிந்தனைக் கல்லூரியை மதுரைப் பல்கலைக்கழகத்தில் தொடங்கினார். இன்றுவரை அத்துறையில் எம்.ஏ, எம்ஃபில், பி.ஹெச்.டி. வரை சிறப்பாக தொய்வு இல்லாது நடந்து கொண்டிருக்கின்றது.

மதுரையில் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் அனைவரும் அப்பாவிற்குப் பரிச்சயம். அதனால் கிராமத்திலிருந்து வருவோர்க்கு, மருத்துவத்திற்கு இவர்கள் மூலம் அப்பா உதவி செய்வார். இவர்களில் பலருக்கு எங்கள் வீட்டிலிருந்து உணவு எடுத்துச் செல்வார். மதுரையில் உள்ள கல்லூரி முதல்வருக்கும் அப்பாவிற்கும் பழக்கம். அதனால் கிராமத்து மாணவர்களுக்கு கல்லூரியில் சேர உதவுவார்.கிராமத்திலிருந்து வரும் பெண்களுக்கு கல்லூரியில் இடம் வாங்கிக் கொடுத்து, பின் விடுதியில் இடம் கிடைக்கும் வரை எங்கள் வீட்டில் தங்க வைப்பார். இது வருடா வருடம் நடக்கும் நிகழ்வு. இப்படி எங்களுக்கு நிறைய சகோதரிகள் கிடைத்தார்கள்.

இதற்கிடையே ‘உலக இதய ஒலி’ என்னும் காலாண்டு இலக்கிய இதழ் ஒன்றை நடத்தி வந்தார். இலக்கியக் கூட்டங்கள் நடக்கும். காந்திய மகாநாடு நடக்கும். எதற்கும் ஒரு பைசா கையில் வைத்துக் கொண்டு திட்டம் போட்டது கிடையாது. தொடங்கும் போதும் பூஜ்யம்தான். முடிக்கும் போதும் பூஜ்யம்தான். இடையில் அவரவர்கள் வருவார்கள், கொடுப்பார்கள். அதை எதிர்ப்பார்த்தும் இவர் செய்ததில்லை.

இன்னமும் அவருடைய நிறுவனமாகிய “காந்தி கல்வி நிறுவனம்” அப்படித்தான் நடந்து கொண்டிருக்கின்றது. காந்தியத்தைப் பள்ளிக்குக் கொண்டு செல்வதற்காக இதை நிறுவினார். பல பெரிய பெரிய காந்தியவாதிகள் எல்லாம் இருந்திருக்கிறார்கள். அவர்கள் காலத்திற்குப் பின் யாருக்கும் அவர்கள் பெயர் சொல்லக்கூட நிறுவனம் இல்லை. இவர் ஒரு சாதாரண எளிமையான தொண்டனாக தொண்டாற்றியவர். அவர் வாழ்வின் சத்திய தரிசனத்தை எல்லோரிடமும் பகிர்ந்து கொண்டார். இன்று அவர் நிறுவிய நிறுவனம் அவரைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

அப்பா மதுரையிலிருந்து சென்னை வந்த பொழுது, என்னால் அறிமுகப்படுத்தப்பட்டவர் திரு. எஸ். குழந்தைசாமி. இவர் ஒரு கெமிக்கல் இன்ஜினியர். இவரை நான் “வேதாரண்ய உப்புச் சத்தியாகிரக நினைவுப் பாதயாத்திரையில்” சந்தித்தேன். நண்பர்கள் ஆனோம். எனக்கு எந்த நண்பர்கள் கிடைத்தாலும் அப்பாவிடம் அறிமுகப்படுத்துவேன். அப்படி அறிமுகப்படுத்தப்பட்டவர்தான் இவர். அப்பாவின் பால் ஈர்க்கப்பட்டு அவருடன் தொண்டாற்றத் தொடங்கி விட்டார்.

பல ஆண்டுகள் கழித்து தன் வேலையான “காந்தி அமைதி நிறுவன வேலையை” அவரிடம் கொடுத்துவிட்டு, தன் நிறுவன வேலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் இன்ஜினியர் எஸ்.குழந்தைசாமி. காந்தியத் தொண்டையும், காந்தி அமைதி நிறுவனத்தோடு மிகச் சிறந்த முறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். உலக அமைதிக்காகப் பல பிரார்த்தனைக் கூட்டங்கள் நடத்தி வருகிறார்.

“அமைதிக்கான கல்வி” திட்டங்களை மேற்கொண்டு, பயிற்சியும் நடத்தி அது தொடர்பான புத்தகங்களை சிறுவர்களுக்காக எழுதி வருகிறார். இந்து பத்திரிகையில் தொடர்ந்து கட்டுரைகள், பயிற்சிகள் எழுதி வருகிறார். மேலும் சிறப்பான பணி ஒன்று உண்டு அது சென்னையிலுள்ள “கார்ப்பரேஷன் பள்ளி மாணவர்களை” தத்து எடுத்து, பயிற்சிகள், முகாம்கள் நடத்தி வருகிறார்.

அப்பா தொடங்கிய காந்தி கல்வி நிறுவனத்திற்கு தொழில் துறை முன்னாள் மந்திரி ஆர்.வெங்கட்ராமன்,  ஆந்திரப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கே.ஆர்.சீனிவாச அய்யங்கார் அவர்கள் (ஆமாம். பிரேமா நந்தகுமார் அவர்களின் தந்தைதான். நீங்கள் சொல்வது சரிதான் நண்பரே!) போன்று பல சான்றோர்கள் தலைவராய் இருந்து வழிநடத்தினார்கள். எல்லோரும் அப்பாவின் வேலையில், பண்பில் மிகவும் மரியாதையும், நம்பிக்கையும் கொண்டிருந்தனர்.

அப்பாவின் பால் ஈர்ப்பும், காந்தியின்பால் நம்பிக்கையும் கொண்ட திரு.அண்ணாமலை அப்பாவுடன் இணைந்து பணியாற்றினார்.ஒரு பைசாகூட வருமானம் இல்லாத நிறுவனம். அண்ணாமலை அப்போது “காந்திய பொருளாதாரத்தை” ஆய்வு செய்து கொண்டிருந்தார். அவர் விரும்பி இருந்தால் பொருளாதாரப்பிரிவில் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக சேர்ந்திருக்கலாம். ஆனால் தொண்டு செய்ய அங்கு ஓடோடி வந்துவிட்டார்.

இப்பொழுதும் காந்தியைப் பள்ளிக்கும் கல்லூரிக்கும் எடுத்துச் செல்கின்றனர். ஒவ்வொரு புதன்கிழமையும்,  நூல் விமர்சனம் நடக்கிறது. காந்தி தொடர்பான கூட்டங்கள், பயிற்சிகள், ‘அஞ்சல்வழி காந்தி’ எனப் பல திட்டங்களை நடத்தி வருகின்றனர். அதற்கு உறுதுணையாக அவரது மனைவி டாக்டர்.பிரேமா ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார்.

திரு. மோகனைப் பற்றி உங்களுக்கு சொல்லவில்லையே. மோகன் மதுரையில் நாங்கள் குடியிருந்த வீட்டில், கீழ்வீட்டுக்குப் புதுக் குடித்தனமாக வந்தார். பள்ளிப்படிப்பை ஸ்ரீரங்கத்தில் முடித்துவிட்டு, கல்லூரிப்படிப்பை மதுரையில் தொடங்கினார். எம்.எஸ்.சி. கெமிஸ்ட்ரி வரை படித்து விட்டு, சென்னையில் குஜராத்தி பள்ளியில் கெமிஸ்ட்ரி ஆசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருக்கிறார். அடுத்த வருடம் வேலையிலிருந்து ஓய்வு பெறப்போகிறார். இவரும் எனக்கு நண்பன். அப்பாவிடம் அறிமுகப்படுத்தினேன். பின் அப்பாவும் அவரும் பிரியவே இல்லை. காந்தியை இன்று எடுத்துச் சொல்லக்கூடிய ஆட்களில் அவரும் ஒருவர். காந்தியை உணர்ந்தவர் அவர்.

சரி, இப்போது சொல்லுங்கள். இப்படிப்பட்ட அப்பா உங்களுக்கு இருந்தால் பெருமைப்படுவீர்களா? மாட்டீர்களா? நண்பர்களே!அப்படிப்பட்ட அப்பா, அருமையானவர், அன்பானவர், ஆனந்த மயமானவர். இன்று ஆஸ்பத்திரிப் படுக்கையில். ஒன்று தெரியுமா உங்களுக்கு! அவரிருக்கும் இடம் எப்போதும் ஆனந்தம்தான். ஆஸ்பத்திரியாகவே இல்லை நான் வரும் போதும். அவர் ஏதோ சொல்ல எல்லோரும் சிரித்துக் கொண்டிருந்தார்கள். பத்து நிமிடம் இருக்கும். அந்த ஆனந்த அலை பொங்கி வழிந்து கொண்டிருந்தது. அந்த அறையும் அதில் குலுங்கிக் கொண்டுதான் இருந்தது. நான் அதில் எல்லாவற்றையும் மறந்து இருந்தேன்.

சில நிமிடங்கள்தான் அந்த அலைகள் இருந்தன. அதில் திடீரென்று ஒரு சலனம். அப்பா! யாரோ அழைப்பது போலவும், அவருக்காகத் தன் கையைக் கொடுப்பது போலவும் இருந்தன. சில வினாடிகள் காற்றில் அலை பாய்ந்தார். தலையை ஆட்டி சம்மதம் தெரிவிப்பது போல் இருந்தது. மாற்றங்களை உணர்ந்த நாங்கள், எங்கள் நிலைக்கு வர சில நொடிகள்…. மருத்துவரை அழைத்தோம்… “அண்ணா”! என்று நானும் ‘அப்பா’ என பிறரும் கூப்பிட்டு அவர் உணரவில்லை. அவரை அழைத்தவரை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார். டாக்டர்கள் வந்து பார்த்துவிட்டு எங்களை வெளியில் போகச் சொல்லி விட்டார்கள். பத்து நிமிடத்தில் வெளியில் வந்தனர். “மாஸிவ் ஹார்ட் அட்டாக்” என்று சொல்லி விட்டனர்.

அப்பா இல்லை. அவரை அழைத்தவரிடம் சென்று விட்டார். அண்ணாமலையையும், மோகனையும் காந்தியத்தைச் சொல்ல அனுப்பிய திருப்தியில் அவர் சென்று விட்டார்! யார் அழைத்திருப்பார்?  காந்தியா? வினோபாவா? இல்லை டி.கே.சி.யா? எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. நம்ப முடியவில்லை. நல்லவேளை இன்றாவது அப்பாவை பார்க்க வந்தேனே! வராவிட்டாலும் அவர் கவலைப்பட மாட்டார். “வந்தால் சரி வராவிட்டால் அதை விட சரி” என்பார்.

ஏனென்றால் பிறரை தனக்காக வருத்திக்கொள்ள விட மாட்டார். நான் பிரேமாவைப் பார்க்கிறேன். பிரேமா என்னைப் பார்க்கிறாள். சங்கரலிங்க நாடார் பள்ளிக்குத் தகவல் போகிறது. அதற்குள் அவர்கள் கூட்டமும் முடிந்து விடுகிறது. எதற்கும் இடையூறாக இருக்க மாட்டார்.எங்கள் அப்பாவும் அவர் தங்கை திருமதி மைதிலியும் மிகவும் பாசமலர்கள். “அண்ணா” என்று உயிராய் இருப்பார்கள் எங்கள் அத்தை. அவர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டார்கள். நான் அந்தப் பச்சைக் கூடைக்கு இனி வேலையில்லை என்று, அங்கேயே விட்டுவிட்டு அங்கிருந்து நழுவுகின்றேன். எனக்கு எங்கப்பா எல்லாவற்றையும் விட எங்கள் வீட்டு வேலைதான முக்கியம். என்ன செய்வது நண்பர்களே! பெண்ணின் நிலை அப்படித்தான்!

மறுநாள்….ஆகஸ்ட் 12ஆம் தேதி, ஜே .. ஜே எனக்கூட்டம். ஏதோ திருவிழா மாதிரி இருக்கிறது. ஒரு சாவு வீடு மாதிரியே இல்லை. பகவத்கீதை மற்றும் பஜனை, சர்வசமய பிரார்த்தனை என முழங்கிக்கொண்டிருந்தது. அவர் அளித்த ஆனந்த அலைகள்தான் பரவி இருந்தன. அதுதான் எல்லா மனங்களிலும் படர்ந்து அப்பிக் கொண்டிருந்தது. அதில் அவரவர் அவரவர்களுக்குத் தெரிந்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருந்தனர்.

ஏறக்குறைய ஆயிரம் பேர்கள் இருந்திருப்பார்கள். இது மதுரையாய் இருந்தால் இன்னும் பெரிய கூட்டமாகி இருக்கும்.பிறப்பில் வைஷ்ணவனாய்ப் பிறந்து, காந்தியை, டி.கே.சி.யின் கவியை, வினோபாவின் ஞானத்தைப் பெற்று, உண்மையைத் தரிசித்து, அதன்படி வாழ்ந்து, உண்மையான வைஷ்ணவனாய் வாழ்ந்து, வைஷ்ணவனாய்ப் புறப்பட்டுப் போனார்கள்.

ஆகஸ்ட் 13. அன்று அப்பா அலுவலகத்தில் கூடினோம். ‘கேக்’ மேஜையில் தயாராக வைக்கப்பட்டிருந்தது. அன்று என் பிறந்த நாள். அதை அப்படியொரு ஆனந்தமாய், நான் அதுவரை கொண்டாடியதே இல்லை. அவர் முன் கொண்டாடியது போல் இருந்தது. அவரை நாங்கள் அனுப்பியதாகவே நினைக்கவில்லை. அப்படியொரு ஆனந்தம் ஆனந்தம் குடி கொண்டிருந்தது. அப்படியொரு சிரிப்பு சிரிக்கிறார் அண்ணாமலை. மோகன் ஜோக் அடிக்கிறான். நானும் பிரேமாவும் குலுங்கிக் குலுங்கி சிரிக்கின்றோம்.

எங்களைவிட்டு ‘அய்யா’ செல்லவில்லை என்று உணர்த்தி விட்டார் அப்பா. எனக்கு எங்கப்பாவை மிகவும் பிடிக்கும் என்று எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பதை நீங்களும் ஒத்துக் கொள்கிறீர்கள் தானே நண்பர்களே! நல்ல பெற்றோர்கள் அமைவது ஆண்டவர் அளிக்கும் வரமே. அந்த வகையில் நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். என் தந்தை ஆத்ம ஞானி என்றால் என் தாய் ஒரு கர்மயோகி. அப்பா, தன் குரு டி.கே.சி. அவர்களின் நூற்றாண்டில், நூற்றாண்டு விழா மலர் ஒன்று வெளியிட்டார். அதில் அவர் எழுதிய கட்டுரையை உங்களுடன் பகிர்ந்து கொண்டால், என் தந்தையை நீங்கள் மேலும் புரிந்து கொள்ள இயலும் என்று நினைக்கிறேன். அதில் நான் பெருமிதம் கொள்கின்றேன்.எத்தனை கோடி இன்பம் வைத்தாய்? எங்கள் இறைவா? இறைவா? இறைவா? என்று பாடினாரே பாரதி.

 

கர்ம யோகி!

 

‘சொர்க்கம்’ என்றும் ‘மோட்சம்’ என்றும் ஒன்று இருக்கிறது. அதை அடைவதற்கு பூவுலக வாழ்க்கையை ஒரு கருவியாக அல்லது சாதனமாகப் பயன்படுத்த வேண்டுமென்ற கருத்து நிலவிவருகிறது. எங்கேயோ இருக்கிறது சொர்க்கம்; என்றைக்கோ ஒருநாள் கிடைப்பது மோட்சம் என்பது அபத்தமான காரியம். இவ்வுலகிலேயே, இன்றைக்கே, மனிதனுக்கு அது கிடைக்கும். அதோடு மட்டுமல்ல. ஒவ்வொருவரும் இவ்வாழ்க்கையில் முழுமைபெற்று மோட்சம் அடைவது தான் லட்சியம் என்பதும் கிடையாது.

தனி ஒருவரின் விமோசனம், மனித வர்க்கத்தின் விமோசனத்துடன் இணைந்தது. ஒருவித தியான மார்க்கம் மூலமாக ஆனந்த உணர்வுக் காட்சிகளை மனிதன் பெறமுடியும். அந்த ஞானம் மூலமாகக் கிடைத்த ஆற்றலினால் மனித வர்க்கத்தையே அவ்வழிக்கு இழுக்கலாம். பிறகு, நம்மிடையே உள்ள சிறுமைகளும் பொய்மைகளும் மாயமாய் மறைந்துவிடுகின்றன. சொர்க்கலோக ஆனந்தம் கிட்டுவது நம் கையில் இருக்கிறது என்று திரு.அரவிந்த கோஷ் அவர்கள் கூறுகிறார்.

அவர் கண்டுபிடித்துள்ள ‘ஒருங்கிணைந்த யோகம்’ என்ற தியான மார்க்கம் இதை, இந்நிலையை உருவாக்கும். ‘வாழ்க்கையின் அடிப்படை ஆனந்தம்தான்’ என்பதை நம்நாட்டு மாமுனிகள் தெளிந்து கூறினார்கள். வாழ்க்கை ஒரு போராட்டம், துக்க சாகரம் அல்லது துன்பக்கடல், என்பதெல்லாம் நம் காதில் அடிக்கடி விழுந்து கொண்டிருக்கும் சொற்கள், இச்சொற்களெல்லாம் வீணாகக் கூறப்படுபவையா?

வாழ்க்கையின் அடிப்படை ஆனந்தம் என்றால், மனிதவர்க்கம் ஆட்படும் சொல்லொணாத் துயரங்களுக்கு என்ன விளக்கம் கூறுவது? வறுமையால் வாடி வதங்கும் கோடிக்கணக்கான மக்கள் கூடி வாழும்போதும் தொழிற்கூடங்களிலோ, வயல்களிலோ, மற்ற துறைகளிலோ உழைக்கும் போதும் ஏற்படுகின்ற சிக்கல்களும், மனவேதனைகளும் கணக்கிலடங்காதவை.

இத்தனை வேதனைகள் நிறைந்த உலக வாழ்க்கையின் அடிப்படை, ஆனந்தம் என்று கூறினர் என்றால் இதை யார் ஒத்துக்கொள்வது? மாமுனிவர் கூற்றுக்கும், நாம் காண்கிற காட்சிக்கும் உள்ள முரண்பாட்டை விளக்குவதா அல்லது உண்மையிலேயே இந்த முரண்பாடு பொருளற்றதா? என்பதெல்லாம் ஓயாத சர்ச்சையாக இருக்கிறது. கூடி வாழும் இயல்புடையவன் மனிதன், மானுட சமுதாயத்தின் வரலாறு இதற்குச் சான்றாகும்.

கூட்டு வாழ்க்கை மூலமே மனித வர்க்கம் இன்றைய வளத்தையும் நாகரீகத்தையும் சிறப்புகளையும் அடைந்திருக்கிறது. கூட்டு வாழ்க்கையின் பலன் இதுவானாலும், இன்னல்களில் சிக்குண்டு தவிக்கும் மானுட வர்க்கத்தைக் கண்டு வேதனையடைகிறோம். எனக்குக் கிடைக்கும் வாய்ப்பும் வசதியும் மற்றவர்கள் தான் தருகிறார்கள். அவர்களுக்கு நானும் ஒன்றைத் தருகிறேன். இன்றும் இப்பொழுதும் இது நடைபெறத்தான் செய்கிறது. ஆனால் இதன் அடிப்படை, கூட்டு வாழ்க்கையின் அடிப்படை உண்மைக்கு மாறாக இருக்கிறது.

அந்த அடிப்படை என்னவென்றால் நான் மற்றவனோடு இணைந்து செயல்பட வேண்டும்; இதற்கு வேண்டியது பரஸ்பர நம்பிக்கையாகும்;  ஆனால் ஒருவரை முழுவதும் நம்பினால் அவர் நம்மை ஏமாற்றி விடுகிறார், பிறர் ஒத்துழைப்பு இல்லாமல் நம் காரியம் நடப்பதில்லை. இதைத் தவிர்க்க முடியாது என்று உணர்ந்த நாம், அவர் நம்மை ஏமாற்றாமல் சாமர்த்தியமாக நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது. வாணிபம், அரசியல், பல அலுவல்கள் எல்லாமே, ஒருவருக்கொருவர் கெட்டிக்காரத்தனமாக நடந்துகொள்ளும் ஆற்றலைச் சார்ந்திருக்கிறது. மோசம் போய்விடுவோமோ என்ற பயத்தால், பாதுகாப்பான திறமைகளையும், ஆற்றலையும் வளர்த்துக் கொண்டிருக்கிறோம். கூட்டு அமைப்புத்தான் நடக்கிறது.

சென்னைவாசிக்கு டில்லிவாசியும், கல்கத்தாவாசியும் உதவுகிறான். பூனாவிலிருந்து ஒரு சாமான் தமிழ்நாட்டிலுள்ள புதுப்பட்டிக்குக் கிடைக்கிறது. புதுப்பட்டியிலுள்ள ஒன்று பூனாவுக்குச் செல்கிறது. இவையெல்லாம் அடிப்படையில் கோளாறான முறையில் உறவு கொண்டிருக்கிறது. ஒருவரிடம் ஒரு காரியம் ஆகவேண்டுமென்றால், ஒன்று அவரை அதட்டுகிறோம் அல்லது பணிந்து தால்சாப் பண்ணி அதைச் சாதித்துக் கொள்கிறோம். எனவே நிலவும் கூட்டுச் செயல், போட்டா போட்டி உறவாக நிலைத்து விட்டது.

இதன் பலனாக வாழ்க்கை ஒரு போராட்டமாக இருக்கிறது. இதில் வெற்றி பெற்றவரும், தோல்வி அடைந்தவருமாக நிலவி வருவதாக ஒரு காட்சி நமக்குத் தெரிகிறது. வெற்றிபெற்றவர் ஒரு நாள் களைத்துப் போய் ஓய்வும், சுகமும் நாடுகிறார். தோல்வியுற்றவர் சோர்ந்து போய் உள்ள நிலமையுடன் சமரசம் செய்துகொள்கிறார். இல்லையென்றால் போதைப் பொருள்களில் தன்னைப் பறிகொடுத்துக் கொள்கிறார்; அல்லது தற்கொலையில் விடுதலை பெறுகிறார்.

ஆனால் பயத்தின் மேலீட்டால் தன்னம்பிக்கை இழந்து, இயற்கையன்னை கொடுத்த சுதந்திரத்தை நாம் ஒருவரை ஒருவர் சுரண்டுவதற்குப் பயன்படுத்திவிட்டோம். எனவே வாழ்க்கை போராட்டமாகவும் துன்பக் கடலாகவும் ஆகிவிட்டது. இதை உணர்ந்த நம் முன்னோரான மகரிஷிகள் கோடி கோடி இன்பங்களை நம் முன்னே இயற்கையன்னை பரிமாறியிருக்கிறார், இதையறியாது தவிக்கிறோம் என்று கண்டார்கள். இவர்கள் ‘மைனாரிட்டி’ தானே. எனவே தம் தம் வாழ்க்கையில் இவ்வானந்தத்தைப் பருகினார்கள். அதன் ரகசியத்தை மக்களுக்கு உபதேசம் செய்து பார்த்தார்கள். ‘மக்களினம் அறியமாட்டேன் என்று தவிக்கிறதே’ என்ற ஏக்கத்தில் பாரதி போல் கதறினார்கள். மகரிஷிகள் வழிவந்த ரசிகமணியின் பேச்சிலும் எழுத்திலும் இதைக் காணலாம்.

அலுத்துச் சலித்த மனித வர்க்கம் அன்றே அப்பொழுதே அழியும் சுகங்களில் மாட்டிக் கொள்கிறது. அல்லது எரிச்சலும் கோபமும் பட்டு கலவரம் செய்யத் தொடங்கி விடுகிறார்கள். அச்சமின்றி பரஸ்பர நம்பிக்கையுடன் வாழத் தெரிந்தால் இயற்கை வாரி வழங்கும் இன்பத்தைச் சுவைத்து, அமர நிலையில் உற்சாகமாகவே வாழலாமே என்று ரசிகமணி வாழ்ந்து காட்டினார், வழியும் காட்டினார். நம்மேல் இரக்கப்பட்டு ஆற்றமைப்பட்டார். வெகு எளிதான மார்க்கத்தைத் தம் வாழ்நாள் முழுதும் பரப்பி வந்தார். தமிழனுக்கு வரப்பிரசாதமாகக் கிடைத்த தமிழும் தமிழ்ப்பாட்டும் கலைகளும், அவனை ஆனந்த சாகரத்தில் மிதக்க வழி வகுக்கும் என்பதை உணர்த்தினார்.

கவியைக் கடவுள் அவதாரம் என்று வைணவம் கூறியிருக்கிறது. இக்கவியை பக்தியுடன் அணுகினால் நம் வாழ்க்கையில் பொய்மறைந்து, உண்மை நிலவும், இருள் அகன்று ஒளி பிறக்கும், அநித்தியம் மாய்ந்து நித்தியம் ஆட்கொள்ளும் என்பதை ரசிகமணி கவிகளை எடுத்துச் சொல்லியும், சத்திய வாழ்க்கை வாழ்ந்தும், அன்பைச் சொரிந்தும், நமக்குத் தொண்டாற்றினார். அவர் சொன்ன ‘ரசனை’, வாழ்க்கையை விட்டுத் தப்புவது அல்ல. வாழ்க்கை என்னும் குதிரையின் பிடரியைப் பிடித்து அடக்கி சவாரி செய்ய உதவும் எளிய இனிய திறவுகோல்.

அவர் பரப்பிய உண்மைத் துகள்கள் நம் தமிழ்நாடு முழுவதும் சுற்றிச் சுற்றிப் பறந்துகொண்டு இருக்கிறது. நம்மைக் காப்பாற்றும் அதற்குச் சிரம் தாழ்த்தி கைகூப்பி வணங்குவோமாக! ‘‘எனக்கு ஒரு வரம் தரவேணும். 40 ஆண்டுகளாக பல கூட்டங்களில் பேசியிருக்கிறேன். பலருக்குப் பாட்டுச் சொல்லிக் காட்டியிருக்கிறேன். ஏதோ ஐந்தாறுபேர்கள் என்னுடன் கூட பாட்டை அனுபவித்தார்கள் என்று சொல்லலாம். அவர்களும் முழுதும் உணர்ந்தார்கள் என்று சொல்லமாட்டேன் ஆகையாலே, ‘டி.கே.சி. என்று ஒருவன் இருந்தான், தமிழ் உலகத்திலேயே சிறந்த பாஷை, தமிழ்க் கவியைப்போல உயர்ந்த கவி உலகிலே இல்லை என்ற சொல்லிக்கொண்டே இருந்தான்’  என்பதை நீங்கள் எடுத்துச் சொல்லி வர வேண்டும் அப்படி செய்துவந்தீர்களானால் 500 ஆண்டுகளுக்குப் பிறகு உலகம் இதை ஒப்புக் கொள்ளும்” என்று தாம் மறையும் முன்பு ஜஸ்டிஸ் மகராஜன் அவர்களிடம் கடைசி வார்த்தையாக ரசிகமணி வேண்டுகோள் விடுத்தார்கள்.

அவருடன் நாற்பது ஆண்டுகளாக நெருங்கிப் பழகியிருக்கிறேன். தாம் கண்ட உண்மையை பறைசாற்றும் ஆற்றலுடையவர். அதன்படி வாழும் உரம் படைத்தவர். அன்புக்கும் நாணயத்துக்கும் தலைவணங்குபவர். அன்று முதல் இன்றுவரை டி.கே.சி. அவருக்குக் காட்டிய உண்மைகளை எடுத்துக் கூறி வருகிறார். அன்று எத்தனையோ எதிர்ப்புக்கு இடையே சலியாது செய்து வந்த தொண்டு, பத்தாண்டுகளுக்கு முன் ரசிகமணி டி.கே.சி.யின் வட்டத்தொட்டி என்ற சத்சங்கத்தை உருவாக்கியது.

இதன் பலனாக சென்னை மாநகரினுள் தமிழன்பர்களையும், மற்றவர்களையும், ஏன், அவர் ஆங்கில நூல்கள், வெளிநாட்டுப் பயணங்கள்மூலம் அறிமுகமாகிய வெளிநாட்டவர்களையும் கூட ரசிகமணி தந்த ஞானத்தைப் பருகச் செய்துவிட்டார்கள். இதன் பலனாக இன்று தமிழக அரசு முழுமூச்சாக டி.கே.சி. நூற்றாண்டு விழாவைக் கோலாகலமாகக் குற்றாலத்தில் நடத்துகிறது. சென்னையிலும் நடத்தப் போகிறது.

“தாத்தாவுக்கு ஏதாவது நினைவுச்சின்னத்தை நிறுவ ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று டி.கே.சி.யின் பேரன் திரு.தீப.நடராஜன் கேட்டுக் கொண்ட போது, ராஜாஜி இரண்டு மூன்று நிமிடங்கள் மௌனமாக ஆழ்ந்த சிந்தனையில் இருந்துவிட்டு “பத்து பேரைக் கூட்டி வைத்து வித்வான் ல.சண்முகசுந்தரத்தைக் கம்பர் பாட்டையும், தமிழ்ப்பாடல்களையும் சொல்லவைக்க வேண்டியது. இதுதான் தாத்தாவுக்குச் சிறந்த நினைவுச் சின்னம்” என்றாராம்.

1948-ல், திரு.ல.ச. அவர்களை சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரியில் விரிவுரையாளராக நியமித்து உத்தரவு வந்தது. அதை அவர் ரசிகமணியிடம் காட்டினார். “என்னை சண்முகசுந்தரத்திடமிருந்து பிரிக்கப் பார்க்கிறீர்களா? அவர் வேலையில் சேர மாட்டார்?” என்று கல்லூரி முதல்வருக்குத் தந்தி கொடுத்து விட்டார் டி.கே.சி. அன்று உள்ளத்தில் பாய்ந்த சந்தோஷம் இன்றுவரை முகமலர்ச்சியோடு வாழவைத்து வருகிறது திரு.சண்முகசுந்தரம் அவர்களை.

ஜஸ்டிஸ் மகராஜன் அவர்கள் என்னை 1946-இல் டி.கே.சி.யிடம் ஞான ஸ்நானம் செய்து வைத்தார். இவ்வாறு கிடைத்த அருள் என்னுடன் திரு.ல.ச.வையும் சேர்த்து வைத்திருக்கிறது. டி.கே.சி.க்குத் தொண்டாற்றுவதில் எனக்கு வழிகாட்டியாக இருக்கும் அவர் இம்மலரை உருவாக்கித் தந்ததில் கிடைக்கும் பரம சந்தோஷத்தை எப்படி வாயாலும் வார்த்தையாலும் கொட்டுவேன்!

ரசிகமணியுடன் பழகிய, அவர் புகழ் கேட்டு ஆனந்த பரவசமடைந்த பல அன்பர்கள் மலரில் எழுதியிருக்கிறார்கள். அவருடைய உற்றார் உறவினர்களும் எழுதியிருக்கிறார்கள். அவருடன் உறவாடிய பெரியவர்களும் எழுதியிருக்கிறார்கள். எல்லோரும் சேர்ந்து டி.கே.சி. என்ற அமர காவியத்தை உருவாக்கி விட்டார்கள். அவர்களை வணங்கி நன்றி கூறுகிறேன்.

சிறப்பாகவும் அழகாகவும் விமரிசையாகவும் அட்டையை அமைத்துத் தந்த ஓவியர், கவிஞர்.. அவர்களை என்றைக்கும் மறக்க மாட்டேன். சமய சஞ்சீவியாக அட்டைக்கு ஏற்றவாறு புகைப்படம் கொடுத்து உதவிய, குற்றாலம் திரு.தீக்ஷிதர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.தென்காசி திரு.டாக்டர் சே.பா.செண்பகராமன், ராஜபாளையம் திரு.ஜயபால், மத்தளம் காறை திரு. டி.கே. தீத்தாரப்ப முதலியார், திரு.தீப.நடராஜன், திரு.தீப. குற்றாலிங்கம், திரு. தீப.குமாரசாமி முதலியோர், மலருக்கு நன்கொடை அளித்து ஊக்குவித்தார்கள். அவர்களுக்கு எனது உளமார்ந்த நன்றி.

மதுரையிலிருந்து சென்னைக்கு வந்தது முதல், எல்லாச் செயலிலும் எனக்குத் துணையாக இருந்துவரும் சென்னை சர்வோதய சங்கத் தலைவர் திரு. என்.டி. ராதாகிருஷ்ணன் அவர்கள் விளம்பரங்களை சேகரித்துத் தந்தார்கள். அவர்களின் அன்புக்கும், ஆர்வத்திற்கும் எனது வணக்கம்.மகாத்மா காந்தி, மகரிஷி விநோபா, ரசிகமணி இவர்கள் ஆசியால் உற்ற நண்பர்களும் அரிய வாய்ப்புகளும் கிடைக்கும் பேறு பெற்றவன் நான். எட்டு ஆண்டுகளாக என்னுடன் தொண்டாற்றி வரும் இளைஞர் திரு. குழந்தைசாமி மக்களின் சேவைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டதில் இன்பம் கண்டவர். உற்சாகமாக இராப்பகலாக ஓடியாடி, உட்கார்ந்து,  அச்சக ஊழியர்களுக்கு ஆர்வமூட்டி இம்மலரை உருவாக்கியிருக்கிறார்கள். அவருக்கு என் உளமார்ந்த வாழ்த்துக்கள்.

அச்சகத்திலேயே இருந்து அச்சுப் பிழைகளை சரிபார்த்தும் மற்ற சிறுசிறு வேலைகளையும் ஆர்வத்துடனும், பக்தியுடனும் ஆற்றிய செல்வி லலிதா, செல்வி சுதா இருவருக்கும் என் வாழ்த்துக்கள்.மலர் தயாரிக்க குறைந்த நாட்களே இருந்த போதிலும், மனமுவந்து முழுமுயற்சியுடன் மலரை சிறப்பான முறையில் அச்சிட்டுக் கொடுத்த ஸ்ரீ லஷ்மி அச்சகத்தாருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஏதோ ஆர்வத்தால் இம்முயற்சியில் ஈடுபட்டேன். ‘பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பது’ என்று சொல்வார்கள். பல படங்களுடனும் இன்னும் பல எழுத்தோவியங்களுடனும், மலர் உருவாக வேண்டும் என்று ஆசை. எளியேனால் இயன்றதைச் செய்திருக்கிறேன். டி.கே.சி. அன்பர்களும், மற்றவர்களும் பிழைகளைப் பொறுத்து, முயற்சியைப் பாராட்டி ஆசிர்வதிக்க வேண்டுகிறேன்.

ரசிகமணி டி.கே.சி. நாமம் வாழ்க.

அவர் பாதம் பணிந்து இம்மலரைச் சமர்ப்பிக்கிறேன்.

டி.டி. திருமலை (உலக இதயஒலி, ரசிகமணி டி.கே.சி. நூற்றாண்டு விழா மலர்).

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “மரணம் மதுரம்..

 1. ரசிகமணி நூற்றாண்டு விழா மலர் பற்றிய செய்திகள் மன நிறைவைத்
  தந்தது. டி கே சி என்றால் யார் என்றால் கம்பன் பாடல்களைத் திருத்தியவர்
  என்றும் பல பாடல்களையும் படலங்களையும் இது கம்பன் பாட்டல்ல
  என்று தள்ளியவர் என்றும் தமிழ் அறிஞர் உலகம் முன்னிறுத்திய உருவத்தை
  மாற்றி அவர் ஒரு ஆனந்தத் தத்துவம் என்றும் சத்திய தரிசனம் அவர் வாயிலாகவே
  கிடைக்கும் என்றும் நூற்றாண்டு விழா மலரில் நிறுவியவர் T D திருமலை அவர்களே.
  அந்த மலரில் உள்ள கட்டுரைகள் டி கே சி அவர்களின் பன்முகத் தன்மையைக் காட்டும்.
  காவ்யா பதிப்பகத்தில் “ரசிகமணி ரசனைத் தடம்” என்று ஒரு கட்டுரைத் தொகுதி
  புத்தகமாக வந்துள்ளது. அதில் கிட்டத்தட்ட 75 சதவீதக் கட்டுரைகள் ரசிகமணி
  நூற்றாண்டு விழா மலரில் வந்த கட்டுரைகளே. கோபல்லகிராம எழுத்தாளர்
  கி. ராஜநாராயணன் அவர்கள், “பனை மரத்து விதை நாற்பது ஆண்டுகள் கழித்தும்
  முளைக்கும் என்பார்கள். ரசிகமணியின் வார்த்தைகளும் அது போலத்தான்” என்று
  சொல்லுவது முற்றிலும் உண்மை என்பது இப்போதுள்ள இளைஞர்களை டி கே சி
  எழுத்து ஈர்ப்பதிலிருந்து புரிகிறது.
  இரா. தீத்தாரப்பன், ராஜபாளையம்.

 2. டி.டி.திருமலை, டி.கே.சி., ஜஸ்டிஸ் மகராஜன், ல.சண்முகசுந்தரம், அண்ணாமலை… அனைவரும் ஓர் அலைவரிசையில் இணைந்த சங்கீத ஸ்வரங்கள்; காந்தியச் சுடர்கள்.

  கட்டுரையின் சில பகுதிகள், கண்ணீரை வரவழைத்தன. இப்படியும் மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என நினைவுறுத்திக்கொண்டே இருப்பது, மானுடத்திற்கு நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.