வல்லமை – சிந்தனை, செயல், முன்னேற்றம் – தலையங்கம்

1

பவள சங்கரி

சமதர்மக் கல்வி!

 

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவ, மாணவிகளுக்கு சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் மெட்ரிகுலேஷன், மாநில கல்வி வாரிய பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் மற்றும் ஓரியண்டல் பள்ளிகளில் தனித்தனியாக இருந்த பாடத்திட்டதை ஒரே பாடத்திட்டமாக ’சமச்சீர் கல்வியாக’ மாற்ற கடந்த திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டது.

முதல் கட்டமாக 1 மற்றும் 6 வகுப்புகளுக்கு அனைத்து வகையான பள்ளிகளுக்கும் பொதுவாக சமச்சீர் கல்வி கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தன. இந் நிலையில் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் சமச்சீர் பாடப் புத்தகங்கள் தரமாக இல்லை என்று கூறி அதை ரத்து செய்தது. இதையடுத்து சட்டப் போராட்டம் நடந்தது. இதனால் கடந்த 2 மாதமாக குழந்தைகள் புத்தகங்களே இல்லாமலும், பெற்றோர்களின் பெரும் குழப்பத்துடனுமே பள்ளிக்குச் சென்று வந்து கொண்டிருந்தனர். இந் நிலையில் உடனடியாக சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து சமச்சீர் கல்வி உடனடியாக அமல்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து சேமிப்புக் கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ள சமச்சீர் கல்விப் பாடப் புத்தகங்களை கல்விக் கூடங்களுக்கு வினியோகிக்கும் பணி கடந்த 9ம் தேதி தொடங்கியது. கடந்த ஒரு வாரத்தில் மொத்தம் 5 கோடி புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன. சுமார் 45,000 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் சுமார் 11,000 மெட்ரிகுலேஷன் பள்ளிகள், 25 ஓரியண்டல் பள்ளிகள், 50 ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் என அனைத்தும் ஒரே பாடத்திட்ட முறைமைக்கு மாறி விடுவதால், பயிற்று மொழியின் வாயிலாக “தமிழ் வழிப் பள்ளிகள்’, “தனியார் ஆங்கில வழிப் பள்ளிகள்’ என்ற இரு வகையாக மட்டுமே அவற்றை வகைப்ப்படுத்த முடியும். அது மட்டுமல்லாமல் பயிற்று மொழி மட்டுமே வேறு, பாடத் திட்டம் ஒன்றுதான் என்பதால், கல்விக் கட்டணம் கூட அதற்கேற்றாற் போல் தமிழ் வழிப் பள்ளிகளுக்கானவை, ஆங்கில வழிப் பள்ளிகளுக்கானவை என்று இரு விதமாக அமைக்கப்படத் தகுந்த நிலையே உருவாகியுள்ளது.

இதனால் சுமாராக 15% தனியார் பள்ளிகள் சி.பி.எஸ்.இ. பள்ளிகளாக மாறியுள்ளது. புதிதாக இன்டர்நேஷனல் பள்ளிகள் பெருகவும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

அதிக கட்டணம் வசூலிக்கும்,தனியார் பள்ளிகளில் பயிலும் வசதி படைத்தவர்களின் குழந்தைகளுக்குச் சமமாக வசதியற்ற ஏழைக் குழந்தைகளும் அதே உயர் தரமான நல்ல கல்வி பெற வேண்டியது அவசியம்தான் என்றாலும், கற்பிக்கும் முறைமையிலும் பல மாற்றங்கள் அவசியமாகிறது என்பதும் கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது. ஆசிரியர்களுக்குத் தகுந்த உயர் நிலை பயிற்சிகளும் தேவையாகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி என்ற அரசாணை காரணமாக குழந்தைகள் எளிதாக எந்த விதக் கட்டுப்பாடும் இல்லாமலே தேர்ச்சி பெற்று பத்தாம் வகுப்பு வரை வந்து விடுகிறார்கள். இதை சில ஆசிரியர்கள் தங்கள் சொந்த ஆதாயங்களுக்காகவும் பயன்படுத்திக் கொள்ள முடிகிறது.

தரம் என்று பார்த்தால் சமச்சீர் கல்வி மிக உயர்ந்த தரத்திலேயே அமைந்துள்ளதாகவே கோவையின் மிகப் பிரபலமான ஒரு கல்வி நிறுவனத்தின் மேலாளர் கூறுகிறார். குழந்தைகள் மனப்பாடம் செய்து, தேர்வு எழுதி தேறி, கல்லூரியில் சென்று முட்டி மோதி செயல்படுவதை விட பள்ளியிலேயே அதற்கேற்ற பொது அறிவுடன் கூடிய கல்வி முறையில் கற்றுத் தெளிந்து வருவதால் மிகவும் பயனடையக் கூடும் என்கிறார். இக்கல்வி முறை பொது அறிவையும் வளர்க்கக் கூடியதாக இருப்பதாகவே கல்வியாளர்களும் கருதுவதாகவே அவர் கூறுகிறார். உதாரணமாக, கணிதப் பாடம் எடுத்துக் கொண்டால், அல்ஜீப்ரா,வரை கட்டம் (கிராஃப்) போன்றவற்றின் விளக்க முறைகளை கற்கும் போதே, அதனைக் கண்டு பிடித்த விஞ்ஞானியின் பெயர் மற்றும் அந்தக் கண்டுபிடிப்பின் வரலாற்றுப் பின்னனியும் கொடுக்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் பொது அறிவும் வளர்வதற்கு ஏதுவாக அமைந்திருப்பதாகவே கருதுகின்றனர்.

அந்த வகையில் ஒரு நல்ல கல்வித் திட்டத்தை அரசியல் நோக்குடன் பாராமல் குழந்தைகளின் எதிர்கால வளமான வாழ்க்கையை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுவது நல்லுள்ளம் கொண்ட ஒவ்வொருவரின் கடமையாகவும் உள்ளது. கல்விக் கட்டண நிர்ணயம் குறித்து அவர் பேசும் போது, கல்விக் கூடங்களின் தரங்களை வைத்தே கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்கிறார். ஒரு புதிய திரைப்படம் வெளியாகும் போது கிராமத்து கொட்டகை திரையரங்கிற்கு ஒரு கட்டணமும், சிறிய நகரங்களுக்கு ஒரு கட்டணமும், பெரிய நகரங்களுக்கு ஒரு கட்டணமும் வசூலிக்கப்படுவது போல்தானே இதுவும். கல்வி முறை ஒன்றாக இருந்தாலும் அவர்கள் கற்பிக்கப்படும் முறையில் மிக வித்தியாசங்கள் உண்டு என்கிறார். உட்காரும் இருக்கைகளிலிருந்து, பயன்படுத்தும் கழிவறைகள் வரை பல வேறுபாடுகள் உண்டு என்பதும் அனைவரும் அறிந்ததே என்கிறார். அது மட்டுமன்றி விஞ்ஞானக் கூடங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் அனைத்தும் வேறுபடுகின்றன என்கிறார்.

நம் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் ஓரளவிற்காவது இது போன்று அடிப்படை வசதிகள் அமையப் பெற்றால் மட்டுமே நம் ஜனநாயக நாட்டின் சமத்துவம் நிலைபெறும் அல்லவா? சமச்சீர் கல்வி தரம் அதனை கற்பிக்கும் ஆசிரியரின் தரம் கொண்டே நிர்ணயிக்கப்படும் என்பதும் நிதர்சனம். ஆகவே அரசு இந்த கருத்தையும் கவனம் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “வல்லமை – சிந்தனை, செயல், முன்னேற்றம் – தலையங்கம்

 1. சமதர்மக் கல்வி தலையங்கம் பல நல்ல அம்சங்களைக் கொண்டுள்ளது.
  எல்லோருக்கும் கல்வி அளிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை நம் நாட்டில்
  ஆங்கிலேயர்கள் காலத்திலிருந்தே வைக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது.
  சுதந்திரம் கிடைத்த பின்னும் நம்மவர்களால் அதை நிறைவேற்ற முடியவில்லை.
  அதற்குப் பெரும் பாடு பட்டவர் காமராஜர் ஒருவரே. அரசுப் பள்ளிகளிலும், அரசு
  உதவி பெரும் பள்ளிகளிலும் விஞ்ஞானக் கூடத்தையும் கழிப்பறைகளையும்
  சீராக வைப்பது அவ்வளவு கடின காரியமா என்ன? அங்கு பணிபுரியும்
  ஆசிரியர்கள் மிகத்திறமையானவர்களே! இல்லாவிடில் மெட்ரிக்பள்ளி
  மாணவர்கள் காலையிலும் மாலையிலும் டியூஷன் படிக்க இவர்கள்
  வீட்டிற்குப் படை எடுப்பார்களா? அப்துல்கலாம் அவர்கள் தன்னுடைய
  ஆசிரியர் அய்யாதுரை சாலமன் பற்றி அக்னிச் சிறகுகள் புத்தகத்தில்
  எழுதியது மட்டுமல்ல, மதுரைப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம்
  கொடுத்த போது விழா மேடையில் தனது ஆசிரியர் அய்யாதுரை சாலமன்
  அவர்களையும் மேடையேற்றி வாழ்த்துப் பெற்றுள்ளார் என்பதை ஆசிரியர்கள்
  உணரவேண்டும்.
  இரா. தீத்தாரப்பன், ராஜபாளையம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *