சிற்பத்தின்பிழை சிற்பியின் பிழையன்று

 

 

திவாகர்

Tnayak-edited

மீன்விழியாள் அருள்நல்கும் நல்

மாநகர்மதுரையே விழாக்கோலத்தில்

மன்னனுக்கு திருமணமாம் கோயிலிலே

பொன்னனைய புதுமனையாள் கைபிடித்தான்

கன்னல்மொழிபேசும் காரிகையோ கண்பார்த்தாள்

கணவனவள் கண்மொழியை அறிந்தான்போலும்

என்னவளே என்னவேண்டும் கேளென்றான்

புன்னகையாய் ஒருவரத்தைக் கேட்டாள்

 

ஐயனே என் மன்னவனே மீனாளின்

கோயிலிலே என்னைக் கரம்கொண்டவரே

ஆலயத்தில் சிலைகளெல்லாம் கண்டீரோ

காலத்தால் சிதையாத கற்சிலைகளாம்

அதுபோல அடியாளுக்கும் ஓர்சிலை

ஏதோ ஓர்மூலையில் வைப்பீரா?

மீனாளின் காலடியை எந்நாளும்நான்

வணங்கி ஏங்குவதுபோல வடிப்பீரா

 

மன்னனவன் மனம்மகிழ்ந்தான் அருகே

அன்புமிகுமந்திரியார் நீலகண்ட தீட்சிதர்

மன்னனவன்முகம் பார்த்து மனமறிந்தார்

மன்னன்மனைவிபோல் அச்சிலைசெய்ய

பொறுப்போடு பணி ஏற்றார்பின்னர்

சிறப்பான சிற்பிகளை அழைத்தார்

அழகானவள் அன்பானவளான அரசியாரின்

பிழையில்லா சிலைவடிக்க ஆணையிட்டார்

 

நாளும்பொழுதும் நன்றாகவே கழிந்தது

நாளொருமேனி பொழுதொருவண்ணமாய்

அரசியின் கற்சிலையும் உருப்பெற்றாலும்

அறிவே உருவாம்நீலகண்டரும் நித்தமும்

வருவார் குற்றம்குறை களையச்செய்வார்

பெருமையாய் சிற்பியும் சிலைவடித்தார் 

ஆனாலும் ஓர்குற்றம் ஓரிடத்தில்வந்ததே

ஏனென்றுதெரியாமல் சிற்பியும் கலங்கி

மீனாளின் அடிப்பொடியாம் நீலகண்டரிடம்

தான்கண்ட குற்றத்தைக் காண்பித்தான்

 

ஏதுசெய்வேன் சொல்வீரோ ஐயன்மீர்

மாதரசி தொடையின் மேற்பகுதியில்

உளிகொண்டு செக்கினாலும் ஆங்கோர்

துளியிடத்தில் எத்தனைதான் செய்தாலும்

புள்ளியாய் அவ்விடத்தில் நின்றுவிடுகிறதே

எள்ளிநகையாட இடம்கொடுக்குமே

காரணம்நான் அறியேன் மன்னர்வந்து

பார்க்குமுன்னே சரிசெய்யவேண்டுமே

 

தினம்சக்தியை உபாசிக்கும் நீலகண்டர்

மனம் அதேசக்தியை நாடிக்கேட்டதுவே

கண்களைமூடி தியானித்தவர் முன்மனக்

கண்ணின்முன் காட்சிகிடைத்ததுவே

சிற்பியாரே கவலையை விடுமின்

கற்சிலையில்குற்றமில்லை மன்னன்

மனைவியாரின் மேற்கால்பகுதியில்

தினையளவுமச்சம் ஒன்றுண்டு அறிந்தேன்

அங்கயற்கண்ணியின் அரியபக்தை அவள்

ஆங்கதனால் அவள்சிலையும் இப்படியானதே

 

கூடயிருந்த வீரனொருவன் இவர்சொல்கேட்க

ஏடாகூடமாய் மன்னன்காதில் போட்டுவைக்க

மன்னன் மனம்தள்ளாடி தடுமாறிப்போனதுவே

என்னஇது எப்படியிது தான்மட்டுமே

பார்த்ததாய் தான்நினைத்தால் தன்னைமீறி

பார்முழுதும் பார்த்ததுபோல பறைகின்றார்

யார்கொடுத்தார் இத்தனை தைரியமிந்த

மூர்க்கதீட்சிதருக்கு..இனிவேண்டாம் இந்தமந்திரி

நிற்காதே போவீரனே ஆணையிடுகிறேன்நான்

கற்சிலையைப் பார்த்துப் பித்தாகிக்கிடக்கும்

நீலகண்டன் கண்களிரண்டையும் உடனே

காலம்தாழ்த்தாமல் தோண்டிப் பிடுங்கிவிடு

 

பறந்தார்வீரர்கள் இருவர் கட்டளையை

நிறைவேற்றவே நீலகண்டர் இல்லத்தில்

அம்மையின்முன்னே கண்மூடிக்கிடந்தவர்

அம்மையினருளால் நடந்ததை அறிந்தார்

சிறியோன் இந்தமன்னன் என்னை

அறிந்தோன் அல்லன் அறிந்தால்

அழகிய அவன்மனைவி என்னில்லத்தில்

குழந்தையாய் வளர்ந்ததை அறிந்திருப்பானே

கோபம் அறிவையும் மறைக்கும்

பாபம் செய்யவும் வைக்கும் ஐயோபாவம்,

மன்னனுக்கு ஏனிந்தவருத்தம் தரும்செயல்

மன்னராட்கள் வரும்வரை காத்திருப்பானேன்

சிற்பியின் குற்றமல்ல சிற்பத்தின்குறை

சிறப்பாய்காண்பித்தாளே இன்று அன்னைமீனாள்

மன்னனின்குற்றமல்ல விதிசெய்தவினையே

மன்னரை மன்னித்தருள்வாயே மதுரைமீனாளே

வேண்டினார் கையிலே எரிகற்பூரம்ஏந்தினார்

கொண்டுதழலைத்தம் கண்களிலே அப்பிக்கொண்டாரே

 

மன்னனுக்குவிஷயம் போனது ஓடிவந்தான்

மன்னித்துவிடுங்கள் என்றுதாள்பணிந்தான்

அடியேன்சிறியேன் சிறியேன் என்றான்

அடிபற்றிக்கொண்டே அழுதுபுரண்டான்

தன்கண்போனாலும் தவறாக தண்டித்தவனை

மன்னிக்கும்மாண்பு உடைய தீட்சிதரே

பெரியோனே உம்மையினிப் பிரியேனென்றான்

பெரியவள்மீனாளை மீண்டும்கண்வழங்க

பெரியமனம் செய்து பாடவேண்டுமென்றான்

பெரியவரும் மனம்கனிந்தார் மீனாளுக்கு

ஆனந்தசாகரஸ்தவம் நூற்றெட்டு பாடினார்

ஆனந்தமாய் அவர்பார்வை திரும்பியதுவே

 

திவாகர்

 

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தார் (திருக்குறள் -26)

 

செய்வதற்கு அருமையானவற்றை செய்பவரே பெரியோர்; செய்வதற்கு அரிய செயல்களை செய்ய மாட்டாதவர் சிறியர்,

appayya-dikshithar-and-nilakantha-dikshithar

(திருமலைநாயக்கரின் மந்திரியும் வேதாந்தியுமான அப்பய்யதீட்சிதரின் சகோதரி பேரன் நீலகண்டதீட்சிதர், அவர் வாழ்வில் நடந்த உண்மை நிகழ்ச்சி)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.