இலக்கியம்கவிதைகள்மரபுக் கவிதைகள்

ஸ்ரீ ஆதிசங்கரர்

மீ.விசுவநாதன்

816f9e7b-db00-4f76-8371-538cdd34eefe

சிவகுரு ஆர்யாம்பாள் சீர்மிகுச் செல்வன்
சிவனுரு வென்றே இருந்தார் – உவமை
எதுவு மிலாத எளியதோர் ஞானி
இதுவரை இல்லை இயம்பு. (1)

இயம்பிய எல்லாமும் என்று மிருக்கும்
சுயம்புவாம் தெய்வத்தைப் பற்றும் – பயம்வேண்டாம்
பக்தியினால் உன்மனத்தைப் பக்குவம் செய்தாலே
இத்தரையில் முக்தி எளிது. (2)

எளிதல்ல அத்வைத ஏற்பென்று சொன்ன
ஒளியற்ற வாதங்கள் ஓயப் பளிச்சென
சங்கரர் வைத்த சபைவாதம் வென்றது !
எங்குண் டவற்கே இணை. (3)

இணையிலா கீதை பிரும்மசூத்ரம் மற்றும்
அணையா உபநிடத பாஷ்யம் அனைத்துமே
கற்றோர்கள் மெச்சிடக் கச்சிதமாய்ச் செய்தவரின்
பொற்பாத மென்றும் புகழ். (4)

புகழுக்காய் இல்லாமல் பூமியில் வாழ்வோர்
அகழுக்கைப் போக்கியே ஆன்ம முகவொளியைக்
காட்டிடவே வந்தவர்தான் காலடி சங்கரர் !
சூட்டிடுவோம் நம்நன்றிப் பூ. (5)

பூவைக்கும் போதிலே பொன்மழை கொட்டியே
பூவைக்கு பேரனாக்கிப் போனவர்தான் – தேவை
எதுவும் தனக்கிலா இன்பத் துறவால்
பொதுவாகி நின்றார் பொலிந்து. (6)

பொலிகின்ற ஞானத்தால் பொல்லா மதத்தை
பலிசெய்த சன்யாசி ; பாபக் கலிதீர
பாரத தேசத்தில் பக்திப் பயிறோங்கக்
காரண சங்கரர் கார். (7)

கார்மேகங் கூடக் கலைந்துடன் போகலாம் !
சேர்நட்பும் பாய்ந்துநமைச் சீறலாம் – யார்செய்த
புண்ணியமோ சங்கரர் பூமியிலே வந்திட்டார் !
திண்ணிய முண்டு திரு. (8)

திருவும் அறிவில் திடமாய் பலமும்
அருவாம் அகத்திலே ஆன்மப் பெருக்கும்
உருவாய் அமைந்த ஒளிசங் கரரை
குருவாய்ப் பணியும் குலம். (9)

குலம்பார்க்க வேண்டாம் ; குருபக்தி வைத்தால்
நலம்கோடி சேருமாம் நம்பு – நிலம்வாழ்
மலம்நீங்கிப் போகும் ; வருந்தாதே உள்ளே
சிலம்ப லடங்க சிவம். (10)

(ஸ்ரீ ஆதிசங்கர ஜயந்தி தினம் – 11.05.2016)

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க