இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . ( 196 )

0

அன்பினியவர்களே!

அன்பான வணக்கங்களுடன் மீண்டும் அடுத்தொரு மடலில் இணைவதில் பெருமகிழ்வடைகிறேன். காலத்தின் சுழற்சி கனவேகத்தில் நிகழ்கிறது. காலமாற்றத்தின் நிகழ்வோடு சார்ந்து நிகழும் பலமாற்றங்களில் அரசியல் மாற்றம் என்பது மிக முக்கிய நிகழ்வாகிறது.

இங்கிலாந்தைப் பொறுத்தவரையில் அரசியல்களம் இப்போது மிகுந்த வித்தியாசமான ஒரு கோலத்தை எடுத்துள்ளது. அன்றாடம் ஊடகங்களில் உலவிடும் பல செய்திகளில் சில உள்ளத்தைச் சிலிர்ப்படையச் செய்ய வல்லவை. அடுத்தமாதம் 23ஆம் திகதி நடைபெறவிருக்கும் “ஜரோப்பிய ஒன்றியத்தில் நிலைத்திருப்பதா? விலகுவதா? எனும் பொதுஜன வாக்கெடுப்பு இப்போது ஊடகங்களை முழுவதுமாகப் பாதித்திருக்கிறது.

நிலைத்திருக்க வேண்டும் எனும் அணிக்கு தலைமைத்துவத்தை எமது பிரதமர் கமரன் எடுத்திருப்பதைப் போலத் தென்படுகிறது. அதேநேரம் விலகுவது எனும் அணியைப் பிரதமரின் கட்சியைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினரும் கடந்தவாரம் வரை லண்டன் நகரபிதா (மேயர்) வாகப் பதவி வகித்த பொரிஸ் ஜான்சன் அவர்களும் எடுத்திருக்கிறார்.

இவ்விரு அணிகளுக்கிடையில் ஏற்படும் விவாதங்களினால் கன்சர்வேடிவ் கட்சிக்குள் நிரந்தரமான மனக்கசப்புகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். இந்த ஒரு நிலையில்தான் கடந்தவாரம் லண்டன் நகரபிதாவுக்கான (மேயருக்கான) தேர்தல் இடம்பெற்றது. பல கட்சியைச் சார்ந்த வேட்பாளர்கள் அந்தத் தேர்தலில் நின்றிருந்தாலும் அனைத்துப்பேரின் கவனமும் இருவரின் மீதே இருந்தன.

அவர்களில் ஒருவர் கன்சர்வேடிவ் வேட்பாளர் சாக் கோல்ட்சிமித் (Zac Goldsmith), மற்றவர் லேபர் கட்சி வேட்பாளர் சாடிக் கான் ( Sadiq Khan ). இங்கே முக்கியமான விடயம் என்னவெனில் சாடிக் கான், ஒரு இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த பிரித்தானிய ஆசியப் பிரஜை ஆவார்.

யார் இந்த சாடிக் கான்?

Sadiq_Khanபாகிஸ்தானிலிருந்து இங்கிலாந்துக்கு புலம்பெயர்ந்த ஒரு குடும்பத்தின் எட்டுக் குழந்தைகளில் ஜந்தாவது குழந்தை சாதிக் கான். இவரது தந்தை ஒரு சாதாரண பஸ் சாரதி. நகரசபை மூலம் வசதி குறைந்தவர்களுக்காகக் குறைந்த வாடகையில் கொடுக்கப்படும் இல்லத்தில் வாழந்தவர் இவர்.

இங்கிலாந்தின் வடலண்டன் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் பட்டம் பெற்ற இவர் மத உரிமைச் சட்டப் பிரிவில் தேர்ச்சி பெற்றார். லேபர் கட்சியில் இணைந்து அரசியலில் குதிக்கும் வரை மனித உரிமை வழக்கறிஞராகப் பணியாற்றினார். பின்பு லேபர் கட்சியில் இணைந்து தான் வாழ்ந்த பகுதியான டூட்டிங் பகுதியின் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். முன்னாள் பிரதமர் கோர்டன் பிறவுண் அவர்களின் அமைச்சரவையில் சமூகப்பணித்துறை அமைச்சராகப் பணியாற்றினார். பின்னர் லேபர் கட்சி எதிர்க்கட்சியானதும் எதிர்க்கட்சித் தலைவர் எட் மில்லிபாண்ட் அவர்களின் நிழல் அமைச்சரவையில் நிழல் சட்ட அமைச்சராகப் பணிபுரிந்தார்.

இன்று மேற்குலக நாடுகளின் தலைநகரங்கள் ஒன்றில் மேயராகத் தெரிவு செய்யப்பட்ட முதலாவது ஆசிய இஸ்லாமியர் எனும் பெருமை பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி இதுவரை நடந்த மேயர் தேர்தல்களில் என்றுமில்லாத அளவில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று லன்டன் நகரின் மேயராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சரித்திரப் பிரசித்தி பெற்ற நிகழ்வை மாசுபடுத்துவது என்ன? இந்தத் தேர்தலின் முன்னர் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் அரசியல் நாகரிகச் சீரழிவே! ஆமாம் சாடிக் கான் அவர்களின் வெற்றி நிச்சயம் என்று கருத்துக் கணிப்புகள் கூறிய வேளையில் அவருக்கு எதிராகப் போட்டியிட்ட கன்சர்வேடிவ் கட்சியைச் சார்ந்த சக் கோல்ட்சிமித் அவர்களின் சார்பாக நடைபெற்ற பிரசார வழிமுறைகள் பலரின் வெறுப்புக்கு அவரை ஆளாக்கி விட்டது.

ஆமாம்! சாதிக் கான் இஸ்லாமியர் எனும் காரணத்தால் சமீபத்திய மேற்குலக பயங்கரவாதத் தாக்குதல்களினால் ஏற்பட்ட ஒருவிதமான பீதியுடன் அவரைச் சம்பந்தப்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகள் இப்பிரசார யுக்திகளை கேள்விக்குறியாக்கியது.

பலமுனைகளில் இருந்து கன்சர்வேடிவ் கட்சியின் மீதும், அதன் சார்பாகப் போட்டியிட்ட வேட்பாளர் மீதும் காரசாரமான விமர்சனங்கள் விழுந்தன. கன்சர்வேடிவ் கட்சியைச் சார்ந்தவர்களே இத்தகைய பிரசாரங்கள் அரசியல் நாகரிகத்திற்கு முரணானது என்று விமர்சித்தார்கள்.

சாக் கோல்ட்சிமித் அவர்களின் சகோதரி இத்தகைய பிரசார யுக்தியைத் தனது சகோதரரா கையாளுகிறார் என்று பகிரங்கமாகவே ஆச்சரியப்பட்டார்.  என்னுடைய சகோதரர் இத்தகைய வழிகளைக் கையாளும் சுபாவம் படைத்தவரல்ல என்று விசனப்பட்டார்.

அதுதவிர சாதிக் கானுடன் ஒன்றாக மேடையில் தோன்றிய ஒரு இஸ்லாமிய மதகுரு பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஸ் உடன் தொடர்புடையவர் என்று பிரதமர்  கமரன் அவர்களே பாராளுமன்றத்தில் கூறியது மாபெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அவர்கள் குறிப்பிட்ட அம்மதகுருவுடன் கன்சர்வேடிவ் கட்சிக்குத் தொடர்பிருக்கிறது என்பதோடு அவர் எந்த வகையிலும் குறிப்பிட்ட பயங்கரவாத அமைப்புடன் எந்த சம்பந்தமும் இல்லாதவர் என்பதும் நிரூபணமாகியது.

இப்போது அம்மதகுரு பிரதமரிடமிருந்தும், பாதுகாப்பு அமைச்சரிடமிருந்தும் பகிரங்க மன்னிப்பைக் கோரியுள்ளார். சாதிக் கான் வெளியிட்ட கொள்கைப் பிரகடனங்களுக்காகவும், அவரது திறமையான தேர்தல் பிரசாரத்தினாலுமே அவர் வெற்றியீட்டினார்; அதற்குரிய கெளரவத்தை அளிக்காமல் அவரின் மதத்தைத் சுட்டிக்காட்டிச் சிறுமைப்படுத்த விளைவது எவ்வகையில் நியாயமாகும் எனும் கேள்வி பலமுனைகளில் இருந்து கிளம்புகிறது.

எதுவித ஆதாரமுமில்லாமல் அவர் இஸ்லாமியர் எனும் ஒரே காரணத்திற்காக அவரின் மீதான விமர்சனங்களை முன்வைப்பது என்பது நிறத்தூவேஷத்தின் அடிப்படையில் எழுந்ததா? எனும் கேள்விகூட நியாயமானதே!

லண்டன் ஒரு பல்லினக்கலாசார தலைநகரம். இங்கு பல்லின மக்கள், வெவ்வேறு மதங்களைப் பின்பற்றுவோர் வாழ்கிறார்கள். இத்தகைய ஒரு நகரின் மேயராக ஒரு சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர் தெரிவு செய்யப்படுவது இந்நகரின் அரசியல் நாகரிகத்தின் முதிர்ச்சியைக் காட்டுகிறது. இந்நாட்டு மக்களுக்கும், எனக்கும் இத்தகைய சந்தர்ப்பத்தை அளித்த மக்களுக்கும் உண்மையுள்ளவனாகச் சேவையாற்றுவேன் என்று சூளுரைக்கிறார் சாதிக் கான்.

மதத்தின் அடிப்படையில் ஒருவரின் திறமையை மதிப்பிடுவது என்றுமே அறத்துடனான அரசியலுக்கு வழிவகுக்காது. புலம்பெயர்ந்து இந்நாட்டில் வாழும் எம் அனைவருக்கும் இவரது வெற்றி ஒரு மனத்துணிவையளிக்கிறது. அதேபோல் அவரும் மிகவும் திறமையாக மக்களுக்குச் சேவையாற்றி எம் அனைவருக்கும் அவர் மேலுள்ள அபிப்பிராயங்களையும் உயர்த்தி வைப்பார் எனும் நம்பிக்கையோடு அவருக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்.

மீண்டும் அடுத்த மடலில்…

அன்புடன்
சக்தி சக்திதாசன்

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *