சங்க இலக்கியங்களில் மலர்ப்பண்பாடு

1

-முனைவர் பா.பொன்னி

 

சங்க கால மக்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வினை நிகழ்த்தினர். அவர்களின் வாழ்க்கைமுறை முழுமையும் இயற்கையின் பின்புலத்தில் அமைந்திருந்தது என்றால் அது மிகையில்லை. தமிழர் வாழ்க்கை முறைமையினை அகம், புறம் என்ற இரு பாகுபாட்டில் அடக்குவர். இவற்றிற்குரிய திணைகளை வகுக்கும்போதும், அகத்திணைகளுக்குரிய முதல் கருப்பொருட்களைச் சுட்டும் போதும் இயற்கைப் பின்னணியிலேயே படைத்துக் காட்டியிருப்பது இதற்குச் சான்றாக அமைகிறது. இவ்வியற்கைப் பின்னணியில் மலர்கள் குறிப்பிடத்தகுந்த இடம் வகிக்கின்றன. அவற்றின் முதன்மையை ஆராயும்போது சங்க காலப் பண்பாட்டினை மலர்ப்பண்பாடு என்று குறிப்பிட இயலுகின்றது. அதனை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

மலர்களின் குணம்

மணம், மென்மை, வண்ணம், தூய்மை, தன்மை, சுவை, ஒளி, எழில், கவர்ச்சி, மங்கலத்தன்மை ஆகியவற்றை மலர்களுக்கு உரிய குணங்களாகக் குறிப்பிடுகின்றனர்.

மலர் தொடர்பான சொற்கள்

ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டும் அல்லாது, சங்க இலக்கியத்தில் மலருக்கும் பருவங்களை வகுத்துள்ளனர். அரும்பு, நனை, முகை, மொக்குள், முகில், மொட்டு, போது, மலர்,  பூ, வீ, பொதும்பர், பொம்மல், செம்மல் போன்ற பதின்மூன்று சொற்களை மலர்களின் பல்வேறு நிலையினைச் சுட்டப் பயன்படுத்தியுள்ளனர். அவற்றுள் அரும்பு, நனை, முகை, மொக்குள், முகிழ், மொட்டு ஆகியவற்றை மலரின் இளமைப்பருவமாகச் சுட்டுகின்றனர். மலர், வீ, செம்மல் இவற்றை மலரின் முதுமைப் பருவமாகக் குறிப்பிடுகின்றனர். அரும்பின் மூன்று நிலைகள்: நனை, முகை, மொக்குள்.

flowersஅரும்பு – அரும்பும் (தோன்றும்) நிலை
நனை – அரும்பு வெளியில் நனையும் நிலை
முகை – நனை முத்தாகும் நிலை
மொக்குள் – நாற்றத்தின் உள்ளடக்க நிலை
முகிழ் – மணத்துடன் முகிழ்த்தல்
மொட்டு – கண்ணுக்குத் தெரியும் மொட்டு
போது – மொட்டு மலரும்பொழுது காணப்படும் புடைநிலை

மலர் – மலரும் பூ
பூ – பூத்த மலர்
வீ – உதிரும் பூ
பொதும்பர் – பூக்கள் பலவாகக் குலுங்கும் நிலை
பொம்மல் – உதிர்ந்து கிடக்கும் புதுப்பூக்கள்
செம்மல் – உதிர்ந்த பூ பழம்பூவாய்ச் செந்நிறம் பெற்று அழுகும் நிலை

சங்க இலக்கியங்களில் மலர்ப் பின்னணி

சங்க கால மக்கள் இயற்கையை உற்றுநோக்குவதில் வல்லவர்கள். மனிதர்களுக்கு அடிப்படைத் தேவைகளில் உணவுத்தேவையை நிறைவேற்றுவதில் இன்றியமையாத இடம் வகித்தவை மரங்கள். அம்மரங்களின் பெருக்கத்திற்குத் துணை செய்வன மலர்கள். ஆகவே, தான் இருக்கும் நிலத்திற்கும் மலர்களின் பெயரையே இடத்தொடங்கினான் மனிதன் எனலாம். சங்க காலத்தில் ஆடவர் பெண்டிர் ஆகிய இருபாலரும் மலர்களையும் தளிர்களையும் மாலையாகக் கட்டி அணிந்துள்ளனர். தலைவன் தலைவிக்குக் கையுறையாக மலர்களை வழங்குவது உண்டு. இன்றும் மலர்க்கொத்துகளைப் பரிசளிப்பதனை நாம் காணமுடிகிறது. மேலும், இன்றும் வீட்டைச்சுற்றித் தோட்டம் அமைப்பதும், இடம்இல்லாத நிலையிலும் மொட்டை மாடித் தோட்டம் அமைப்பதும் நம் அடிமனத்தில் பதிந்துள்ள எண்ணங்களின் எச்சமே எனலாம்.

சங்க இலக்கியங்களில் மலர்பெறுமிடத்தை
அகத்திணை, புறத்திணை என்று இரு திணைகளிலும் தனித்தனியே வகைப்படுத்திக் காணமுடிகிறது.

அகத்திணை

தொல்காப்பியர் ஒவ்வொரு திணைக்கும் உரிய நிலத்தினைக் குறிப்பிடும்பொழுது,

மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே   ( அகத்திணையியல் – 5 )

என்று நிலத்தை மலர்களின் பெயரால் சுட்டிச் செல்கிறார். கருப்பொருளினைக் குறிக்குமிடத்து,

தெய்வம் உணாவே மாமரம் புட்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருவென மொழிப
( அகத்திணையியல் – 20 ) 

என்று கருப்பொருட்களைக் குறிப்பிடுகிறார். இவற்றுள் பண்கள், யாழ்கள் ஆகியவை அவ்வந்நிலத்திற்குரிய பூக்களின் பெயராலேயே அழைக்கப்படுவதனை அறியமுடிகிறது.

சங்க இலக்கிய அகத்திணையில் மலர்களின் பயன்பாட்டினை,

  • களவுக்காலம்
  • கற்புக்காலம்

ஆகிய இருநிலைகளிலும் அறியமுடிகிறது.

களவுக்காலம் 

களவுக்காலத்தில்,

  • களவு வாழ்வின் வெளிப்பாடு
  • வெறியாட்டு
  • மடலூர்தல்

என்ற நிலைகளில் மலா்களின் இன்றியமையாமையை நாம் அறியமுடிகிறது.

களவு வாழ்வின் வெளிப்பாடு 

சங்க கால மகளிர் திருமணத்திற்குமுன் தங்கள் கூந்தலில் மலர் சூட்டுவது இல்லை என்பதனைச் சில சான்றுகளால் குறிப்பிட முடிகிறது. தலைவி, தலைவன் அளித்த மலரைக் கூந்தலில் சூடுகிறாள். அதனை மறந்து அன்னை முன்னர் கூந்தலுக்கு எண்ணை தடவ அமர்கிறாள். உள்ளே இருந்த மலர் கீழே விழுகிறது. நெருப்பைத் தொட்டவா்போல் அன்னை விதிர்விதிர்த்து அவ்விடம் விட்டு வெளியேறுகிறாள்.

புல்லினத்து ஆயர்மகன்சூடி வந்ததோர்
முல்லை ஒருகாழும் கண்ணியும் மெல்லியால்
கூந்தலுள் பெய்து முடித்தேன்மன் தோழியாய்
வெண்ணெய் உரைஇ விரித்த கதுப்போடே
அன்னையும் அத்தனும் இல்லரா யாய்நாண
அன்னைமுன் வீழ்ந்தன்று அப்பூ
அதனை வினவலும் செய்யாள் சினவலும் செய்யாள்
நெருப்புக்கை தொட்டவர் போல விதிர்த்திட்டு
நீங்கிப் புறங்கடைப் போயினாள்  ( கலி 115 4-12)

என்ற பாடல் அடிகள் இதனை விளக்குகின்றன. மணமாகாத மகளிர் கூந்தலில் பூச்சூடுவது இயல்பு என்றால் தாய் அதனைக் கண்டு வேறுவிதமான உணர்வு கொள்தற்கு வாய்ப்பு இல்லை.

மற்றொரு தாய் உடன்போக்கில் ஈடுபட்ட மகளை நினைத்து வருந்துகிறாள். அப்போது அண்டை வீட்டுப் பெண்கள் அலர் தூற்றிய போதும் என் மகளை நான் எதுவும் கேட்கவில்லை. ஆனால் உன் கூந்தல் நறுமணம் வீசுகின்றதே என்று ஒரு நாள் கேட்டுவிட்டேன். அவள் உடன்போக்கில் ஈடுபடுவதற்கு நானே காரணமாக அமைந்து விட்டேனோ? என்று வருந்திக் கூறுகிறாள்.

அம்பல் மூதூா் அலா்வாய்ப் பெண்டிர்
இன்னா இன்னுரை கேட்ட சின்னாள்
அறியேன் போல உயிரேன்
நறிய நாறும்நின் கதுப்பென் றேனே     ( நற் – 143 )

என்ற பாடல்அடிகள் இதனை விளக்குகின்றன. தலைவன் தலைவியின் இயல்பைத் தன்னுடைய நெஞ்சிற்குக் கூறுவதாக குறுந்தொகைப் பாடல் ஒன்று அமைந்துள்ளது. அப்பாடலில் தலைவன் தலைவி தன்னை இரவுக்குறியில் சந்திக்க வரும்போது இரவில் என்னைக் கலந்து மகிழ்ச்சி அளிக்கிறாள். பின்னர், சூடிய மலர்களைக் களைந்து ஆடைகளை சரிசெய்து எதுவும் வேறுபாடு தெரியாதவாறு தன்னுடைய இல்லத்திற்குச் செல்கிறாள். என்று தலைவி தனக்கேற்ற நிலையிலும் அவள் குடும்பத்திற்கு ஏற்ற நிலையிலும் இரண்டு தன்மையிலும் நடந்து கொள்ளும் தன்மையைக் குறிப்பிடுகிறான்.

இரண்டறி கள்வி நங் காதலோளே
முரண்கொள் துப்பிற் செல்வேல் மலையன்
முள்ளூா்க் கானம் நாற வந்து
நள்ளென் கங்குல் நம்மோ ரன்னள்
கூந்தல் வேய்ந்த விரவுமலர் உதிர்த்துச்
சாந்துளா் நறுங்கதுப் பெண்ணெய் நீவி
தமரோ ரன்னள் வைகறை யானே  ( குறுந் – 312 )

என்ற பாடல் அடிகளில் விரவுமலர் உதிர்த்து என்பதால் தலைவி மலரை உதிர்த்து விட்டு வீட்டுக்குச் சென்றமையை அறியமுடிகிறது.

முல்லைக்கலித் தலைவன் ஏற்றினை அடக்கும்போது காளை அவன் தலையில் சூடிய முல்லை மாலையினைத் தன் கொம்பினால் சுழற்றியது. அப்பூ, தலைவியின் கூந்தல்மீது சென்று வீழ்ந்தது. தலைவி அதனை விருப்பத்துடன் சூடிக் கொள்கிறாள். ஆனால் அதன்பின் தாயை எப்படிக் காண்பேன் என்று வருந்துகிறாள்.

பெய்போ தறியாத்தன் கூழையுள் ஏதிலான்
கைபுனை கண்ணி முடித்தாளென்று யாய் கேட்பின்
செய்வதி லாகுமோ மற்று       ( கலி – 107 )

இப்பாடல் அடிகளில் பெய்போதறியாத்தன் கூழை என்பதால் மலர் சூடுவதை அறியாத கூந்தல் என்பதனை அறிய முடிகிறது.

தலைவி தன் நிலத்தில் கிடைக்கும் மலர்களைச் சூடி இருக்க வாய்ப்பு உண்டு எனலாம். வேறுநில மலர்களைச் சூடும் நிலையிலேயே இம்மலர் அவளுக்கு எங்ஙனம் கிடைத்தது? அவளுக்கு ஒரு தலைவனுடன் நட்பு உண்டு என்று ஐயம் கொள்வதாகவும் பொருள் கொள்ளலாம். எவ்வகையிலேனும் தலைவியின் களவை வெளிப்படுத்துவதில் மலர் சிறப்பிடம் பெறுகிறது என்பதனை அறிய இயலுகிறது.

வெறியாட்டு

வெறியாட்டு என்பது தமிழர்களின் தனித்த வழிபாடாகும். வழிபாடு செய்பவர்களின் வாயிலாக இறைவன் வெளிப்படுவான் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இவ்வழிபாடு தோற்றம் பெற்றது எனலாம். மருந்தாலும் பிறவற்றாலும் நீங்காத நோய் வெறியாட்டால் நீங்கும் என்ற நம்பிக்கை கொண்டு வெறி அயர்தல் வெறியாட்டு ஆகும்.

வெறியாடு களத்தில் முருகனுக்குரிய கடம்ப மரத்தினை முருகனாக எண்ணி மாலை அணிவிக்கும் வழக்கமும் இருந்ததனை

…அயலது
அரலை மாலை சூட்டி…   (குறுந்: 214)

என்ற அடிகளால் அறியலாம்.

மடலேறுதல்

ஓர் ஆடவன் ஒரு பெண்ணைக் களவுடனோ அல்லது களவின்றியோ அடைய மேற்கொள்ளும் முறை  மடலேறுதல் ஆகும்.

காமம் மிக்க தலைவன் பனை மடலால் குதிரையைப் போல் ஓர் உருவம் அமைத்து அதன் கழுத்தில் மணி மாலை முதலியவற்றைப் பூட்டித் தன் உருவத்தையும் தலைவியின் உருவத்தையும் ஒரு படத்தில் எழுதிக் கையில்ஏந்தி அதன்மேல் யாவரும் அறிய ஊர்ந்து வருதலை மடலேறுதல் என்பர். அங்ஙனம் அவன் வருதலைக் கண்ட ஊரினர் இன்னவளுக்கும் அவனுக்கும் நட்பு உண்டு என்பதனை அறிந்து அதனை வெளிப்படக் கூறிப் பழிப்பர். அதுகேட்டுத் தமர் மணம் புரிவிப்பர். மடலேறும் தலைவன் எருக்க மாலை, ஆவிரம் பூ மாலை முதலியவற்றை அணிந்து வருதல் வழக்கமென்று உ.வே.சா. அவர்கள் குறிப்பிடுவார்.

மாவென மடலும் ஊர்ப பூவெனக்

குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப
மறுகின் ஆர்க்கவும் படுப
பிறிதும் ஆகுப காமங்காழ் கொளினே ( குறுந் – 17 )

என்ற பாடல் அடிகளில் எருக்கம் பூவினைச் சூடியமையை அறிய முடிகிறது.

பொன்னேர் ஆவிரைப் புதுமலர் மிடைந்த                              பன்னூல் மாலைப் பனைபடு கலிமா                                பூண்மணி கறங்க                         ( குறுந் 173 1-3 )

என்ற பாடல் அடிகளில் ஆவிரைப் பூவினைச் சூடியமையை அறிய முடிகிறது.

பூவல்ல பூளை யுழிஞையோ டியாத்த  ( கலி -139 )

அணியலங் காவிரைப் பூவோ டெருக்கின்            பிணையலங் கண்ணி   ( கலி 138: 8-10 )

மேற்சுட்டிய அடிகளின் வாயிலாக எருக்கம் பூ, ஆவிரைப் பூ, உழிஞைப் பூ, பூளைப் பூ போன்ற பூக்களைச் சூடியமையை அறிய முடிகிறது.

கற்புக்காலம்

  • கற்பின் குறியீடு
  • திருமணத்தில் மலர் சூட்டல்
  • தலைவனோடு இணைந்திருக்கும் போது மலர்சூடல்
  • தலைவனைப் பிரிந்திருக்கையில் மலர்சூடாதிருத்தல்

கற்பின் குறியீடு

சங்ககாலம் இனக்குழுச் சமூக அமைப்பில் இருந்து நிலவுடைமைச் சமூகமாக மாற்றம் பெற்றது. இனக்குழுச் சமூகத்தில் வேட்டையாடிக் கிடைத்த பொருளைப் பகிர்ந்து வாழும் முறைமையே காணப்பட்டது. ஆனால் நிலவுடைமைச் சமூகமாக முல்லை நிலத்தில் வலுப்பெற்ற நிலையில் தன் நிலம் தன்மகனுக்கே செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் கற்புக் கோட்பாடு வலியுறுத்தப்பட்டது. அதனால் பெண்களுக்குச் சில கோட்பாடுகள் வலியுறுத்தப்பட்டன. ஆகவே முல்லை கற்பின் குறியீடானது.

முல்லை சான்ற கற்பின் மெல்லியல் ( சிறுபாண் -30 )

 முல்லை சான்ற கற்பின்
  மெல்லியல் குறுமகள் ( நற் 142   11-12 )

  என்ற அடிகள் கற்பின் முதன்மையை விளக்குகின்றனகற்பதுபயிற்சி என்னும் பொருளில் வழங்கி வந்த இச்சொல் பின்னர் பெண்களின் தனிப்பட்ட கற்பொழுக்கைக் குறிப்பதாக மாறியது.

பார்ப்பன மகனே
எழுதாக் கற்பின் நின் சொலுள்ளும் ( குறு 156 -5 )

என்ற அடிகளில் கற்பு என்னும் சொல்  கற்றல் என்னும் பொருளில் பயன் படுத்தப்பட்டுள்ளது.

ஒளிறுவாள் தானை கொற்றச் செழியன்
 வெளிறு இல் கற்பின் மண்டு அமர் அடுதோறும் ( அகம் 106 -10-11 )

 என்ற அடிகளில் குற்றமில்லாத பயிற்சி என்ற பொருளில் வழங்கப்பட்டுள்ளதுஆயினும் பெரும்பாலான இடங்களில் பெண்களுக்கு உரிய உயர்ந்த பண்பாகவே சுட்டப்பட்டுள்ளது.

வழிபாட்டில் மலர்கள்

பெண்கள் வழிபாட்டின் போது மலர்களைப் பயன்படுத்தியமையை,

நெல்லும் மலரும் தூஉய் கைதொழுது                                மல்லல் ஆவணம் மாலை அயர ( நெடு – 45 )

என்ற அடிகளால் அறிய முடிகிறது.

திருமணத்தில் மலர்கள்

 திருமணத்தின் போது மணமக்களை நெல்லும் மலரும் தூவி வாழ்த்தியுள்ளனர்.

கற்பினின் வாழாஅ நற்பல வுதவிப்
பெற்றோற் பெட்கும் பிணையை ஆகென
நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி
பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நன்மணம் ( அகம் – 86  

இவ்வாறு தூவி வாழ்த்தும் முறை பண்டைய நாகரிகங்களின் பழமையான வழக்கம். மணமக்களை வாழ்த்தும் முறையாக இவற்றைத் தூவி வாழ்த்தும் முறையில் இருவகையான கருத்தேற்றங்களைக் குறிப்பிடுவர். அவை தீய சக்திகளின் பாதிப்பில் இருந்து காப்பதற்கும் மற்றும் நிகழ்த்தும் செயலில் வளமை வேண்டியும் தூவுவர் என்பர்.

 திருமணம் முடிந்த பின்னர் தலைவியின் கூந்தலில் மலர் முடிக்கும் உரிமையைத் தலைவன் பெறுகிறான்.

எரிமருள் வேங்கை யிருந்த தோகை                                இழையணி மடந்தையிற் றோன்று நாட                                இனிது செய் தனையால் நுந்தை வாழியர்                              நன்மனை வதுவை ய்யரவிவள்                                பின்னிருங் கூந்தல் மலரணிந்தோயே   ( ஐங்  -293 )

என்ற பாடல் இதனை விளக்குவதாக அமைகிறது.

தலைவனோடு இணைந்திருக்கும் போது மலர்சூடல்

முல்லையில் வெண்முல்லை, செம்முல்லை முதலிய வகைகள் உண்டு. எனினும் வெண்முல்லைக்கே சிறப்பு அதிமாகும். இம்முல்லையைத் தளவம் என்றும் அழைப்பர். தமிழகத்தில் திணை நோக்கில் முல்லை மலர் காரணமாகவே காடும் காடு சார்ந்த பகுதியும் ‘முல்லை‘ எனப் பெயர் பெற்றது. குலமகளிர் தம் கற்பொழுக்கத்திற்கு அடையாளமாக முல்லை மலர்களைச் சூடுதல் தமிழ் மரபாகும். இதனை,

‘‘முல்லை சான்ற கற்பின்‘‘ (சிறுபாண்., 30-வது வரி)

என்று சிறுபாணாற்றுப்படை குறிப்பிடுகின்றது. தலைவனுடன் இணைந்து இன்பமாக இருக்கும் நிலையில் தலைவி தன்னுடைய கூந்தலைப் பல வகையான மலர்களைச் சூடி அழகு படுத்துகிறாள்.

 பாரைப் பாதிரிக் குறுமயிர் மாமலர்
 நறு மோரோமொடு உடனெறிந்து அடைச்சிய
செப்பு இடந் தன்ன நாற்றந் தொக்குடன்
அணிநிறங் கொண்ட மணிமருளைம்பால் ( நற் 337:  4-7 )

 என்ற அடிகள் தலைவி பலவகையான மலர்களைக் கொண்டு தன் கூந்தலைப் பராமரித்தமையை விளக்குகின்றன. மலர் சூட்டும் உரிமையும் தலைவனுக்கு மட்டுமே வழங்கப் பட்டுள்ளது.

தாதுசூழ் கூந்தல் தனைபெறத் தைஇய
கோதை புனைகோ நினக்கு என்றான் ( கலி111: 12-13 )

என்ற அடிகள் இதனை விளக்கி நிற்கின்றன.

தலைவனைப் பிரிந்திருக்கையில் மலர்சூடாதிருத்தல்:

      தலைவனுடன் இணைந்திருக்கும் நிலையில் தன்னுடைய கூந்தலைப் பராமரிக்கும் தலைவி தலைவன் போரின் போதோ பொருள் ஈட்டுதல் பொருட்டோ பிரியும் நிலையில் கூந்தலைப் பராமரிப்பது இல்லை.

மையீரோதி மாணலந் தொலைவே ( நற் 57   10 )

 போதில் வறுங் கூந்தற் கொள்வதை நினையாம் ( கலி: 80  23 )

என்ற பாடல் அடிகள் இதனை விளக்கி நிற்கின்றன

புறத்திணை

புறத்தில் மலா்களின் பயன்பாட்டினை

  • போருக்குச் செல்லும் முன் போர்ப்பூ வழங்கல்
  • போரின் போது பூச்சூட்டல்
  • மன்னர்க்குரிய அடையாளப் பூ
  • மன்னர்கள் தங்கத்தால் ஆன பூவைப் பரிசாக வழங்குதல்

என்ற நிலைகளில் ஆராயஇயலுகிறது.

மன்னர்க்குரிய அடையாளப் பூ

தொல்காப்பியர் மன்னர்க்குரிய அடையாளங்களைக் குறிப்பிடும்போது.

படையுங் கொடியுங் குடையும் முரசும்
நடைநவில் புரவியும் களிறும் தேரும்
தாரும் முடியும் நேர்வன பிறவும்
தெரிவுகொள் செங்கோல் அரசர்க்குரிய
  (மரபியல் – 72)

 என்று குறிப்பிடுவார்.தார் என்பது மன்னர்களுடைய அடையாள மாலையைக் குறிக்கும். தமிழகத்தை ஆண்ட சேர சோழ பாண்டிய மன்னர்கள் தத்தமக்கு எனஅடையாள மாலையைக் கொண்டிருந்ததற்கான சான்றுகளைக் காணமுடிகிறது.

இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்        கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்
நின்ன கண்ணியும் ஆர்மிடைந்தன்றே   நின்னொடு
பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந்தன்றே
    ( புறம் 45 1-4 )

என்ற அடிகள் வேந்தர்கள் அடையாளப்பூச் சூட்டியமையை விளக்குகின்றன. நெடுநல்வாடையில் ’வேம்பு தலையாத்த நோன்காழ் எஃகம்’ என்ற அடி அவ்விலக்கியத்தை அகத்திணையா? புறத்திணையா? என்ற ஆராய்ச்சிக்கு வித்திட்டமையை அறிய முடிகிறது.

போருக்குச் செல்லும் முன் போர்ப்பூ வழங்கல்

சங்க காலத்தில் போருக்குச் செல்லும் வீரர்கள் தமக்குரிய பூவைச் சூடிக் கொண்டு செல்வது மரபாக இருந்துள்ளது. அப்பூவினைப் பெற்றுக் கொள்ள வருமாறு தண்ணுமையை முழக்கியுள்ளனா்.

நிற்படைக்கு ஒல்கா யானை மேலோன்
குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை  ( புறம் 293  1-2 )                        

கேட்டியோ வாழி – பாண! பாசறைப்
பூக்கோள் இன்று என்று அறையும்
மடிவாய்த் தண்ணுமை இழிசினன் குரலே ( புறம் 289  8-10 )

 என்ற அடிகள் பறை அறைந்து போர்ப்பூ பெற்றுக் கொள்ளுமாறு ஒலிப்பதனைக் குறிப்பிடுகின்றன.

போரின்போது பூச்சூட்டல்

 தொல்காப்பியர் புறத்திணைகளை ஏழாகக் குறிப்பிடுவார். அவை வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் ஆகியவையாகும். ஆநிரைகளைக் கவரச் செல்லும் வீரர்கள் வெட்சிப்பூவினையே சூடுவர். வெற்றி பெறும் மன்னன் மட்டுமே வாகைப் பூவினைச் சூட இயலும். இவ்வாறு புறவாழ்விலும் மலர் இன்றியமையாத இடம் வகிப்பதை அறிந்து கொள்ள இயலுகிறது.

பொற்றாமரை மலர்ப் பரிசு

கலைஞர்களுக்குச் சிறப்புச் செய்யும்போது, பொன்னாலாகிய தாமரை மலர்களைப் பரிசளித்துச் சிறப்பிப்பர். சங்க காலத்தில் தமிழ்ப் புலவர்களையும் கலையில் சிறந்தவர்களையும் சிறப்பிப்பதற்குப் பொன்னாலாகிய தாமரைப் பூக்களைப் புரவலர்கள் வழங்கியுள்ளமை நோக்கத்தக்கது. பொன்னால் தாமரை வடிவில் மலர்களைச் செய்து அவற்றை வெள்ளிநாரால் தொடுத்துப் ‘பொன்னரி மாலை‘ என்ற பெயருடன் அதனைக் கலைஞர்களுக்கு கரிகாற்சோழன் வழங்கியதை,

‘‘எரியகைந் தன்ன வேடில் தாமரை
 சுரியிரும் பித்தை பொலியச் சூட்டி
 நூலின் வலவா நுணங்கரின் மாலை
 வாலொளி முத்தமொடு பாடினி யணிய‘‘
(பொருநர்., 159-162-வது வரிகள்)

எனப் பொருநராற்றுப்படை நவில்கிறது. இதனை,

‘‘ஒள்ளழல் புரிந்த தாமரை
 வெள்ளி நாராற் பூப்பெற் றிசினே“ (புறம், பாடல், 11)

“அழல் புரிந்த வடர்தாமரை
 ஐதடர்ந்த நூற்பெய்து
 புனைவினைப் பொலிந்த பொலிநறுந் தெரியல்
 பாறுமயி ரிருந்தலை பொலியச் சூடிப்
 பாண்முற் றுகநின் நாண்மகி ழிருக்கை“ (புறம்., பாடல், 29)

என்று புறநானூறு எடுத்துரைக்கிறது.

  • கற்பின் அடையாளம்
  • களவை வெளிப்படுத்தும் வாயில்
  • இல்லற இன்பத்தை எடுத்துக்காட்டும் அடையாளம்
  • மன்னர்களுக்கான அடையாளம்
  • வீரர்களுக்கான அடையாளம்

போன்ற பலநிலைகளில் தமிழர் பண்பாட்டில் மலர் பெறும் சிறப்பிடத்தை அறிய முடிகிறது. இத்தகைய சிறப்புப்பெறுகின்ற மலா்களைச் சங்க காலத்தில் போற்றிப் பாதுகாத்து வந்திருப்பர் என்பதில் ஐயமில்லை.

***

முனைவர் பா.பொன்னி
உதவிப்பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
எஸ். எஃப். ஆர். மகளிர் கல்லூரி (தன்னாட்சி)
சிவகாசி.

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “சங்க இலக்கியங்களில் மலர்ப்பண்பாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *