images

 

மீ.விசுவநாதன்

வில்வ விதைநட்டு வைத்திருந்தால் – சிவ
விருட்ச மெனவே வளர்ந்திருக்கும்
செல்வ விதைமட்டும் நட்டதனால் -மனம்
சிவனை மறந்து திரிகிறதே !

நாவுக் கரசரைநா நன்கறிந்தால் – மனம்
நச்சு கலவா திருந்திருக்கும்
நாவு ருசிதேடி ஓடுவதால் – சிவ
நாமம் உணர மறுக்கிறதே !

ஓதும் கவிதைக்குள் போனாலே – சிவ
உணர்வு சிறிது கிடைத்திருக்கும்
சூதும் பகையையும் கொண்டதனால் – மனம்
சுத்த அறிவை மறக்கிறதே !

“அத்வை த”சிவமெனக் கண்டாலே -மனம்
அடங்கி அமைதி யுடனிருக்கும்
புத்தி தெளிவின்றிப் போனதினால் – அது
போன வழியில் தவிக்கிறதே !

சுடலை அரசன்தாள் எண்ணினாலே- கரு
சுற்றி வருதல் முடிந்திருக்கும்
உடலை வளர்க்கின்ற ஆசையினால் – சிவ
உயிரை வளர்க்க மறந்தேனே !

(பிரதோஷ தினம் : 19.05.2016)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *