அம்மாவின் கண்கள் ;ஒரு பார்வை

0

முல்லை அமுதன்

342fd350-bbce-4174-bd96-58e46a2514bc

தமிழின்  வரப்பிரசாதம்  தமிழர்  வாழும்  பரப்பெல்லை  விரிவுபட்டுள்ளது.  இன முரண்பாடு உள்ளக  வெளியக இடப்பெயர்வுகளை  அதிகமான  மக்களை பெயர்த்திருக்கிறது  அல்லது வேரோடு  பிடுங்கி  எறிந்திருக்கிறது. ஆதலினால் மக்களின்  பரப்பளவின்  அதிகமும் அதிகமாக  அவர்களுக்கிடையேயான  மொழி வளம் ஆளுமை கற்றுக்கொள்ளும் வல்லமை கல்வியின்  மேலோங்கிய  பயிற்சி கைகளுக்குள்  உலகையே  கொண்டு வரும்  கணினியியல் நெறிகளின்  கற்கைகள் ஒவ்வொரு வரும்  தங்களின்  திறமைகளை  வெளிக்கொணரும் துணிச்சலையும் கொண்டு வந்துள்ளமை கண்கூடு.

இங்கு  பன்முக  ஆளுமை மிக்க  படைப்பாளிகளும்  அபரிமிதமாகத்  தங்களை  இனங்காட்டியே வந்துமுள்ளனர்.

இப்போது நமக்குப் புதிதாய் அறிமுகமாகிறார் திருமதி.வத்சலா ரமேஷ்.

சொல்வதை சுவை படச் சொல்வதில் தன் கவிதை மூலம் சாத்தியமாக்கியிருக்கிறார்.

ஒவ்வொரு வார்த்தையையும் ரசித்தபடி எழுதியிருக்கிறார்.வாசகனிடம் அழைத்துச் செல்லும் கவிதைகளுக்குள் நாமும் மூழ்கிப்போவது அதிசயம்தான்.தமிழ் மீதான அளப்பரிய பிரியம் தமிழை அழகாகாவும் எழுத முடிந்திருக்கிறது.

வாழ்க்கை மீதான நம்பிக்கைகள், விருப்புகள், கனவுகள், தன் மீதான கழிவிரக்கம், தன்னையே உரசிப்பார்க்கும் சமூகவெளி தருகின்ற அனுபவம், தாயின் ஸ்பரிசம், கற்பனை வெளியில் தானே துள்ளி ஓடுகின்ற ஆட்டுக்குட்டி போலவும், பதுமையாய் ஒதுங்கிப்போகிற பெண்ணாய், உறவை, உலகை உற்றுப்பார்க்கிற அனுபவஸ்தியாக படைப்பைத் தந்திருக்கிற வத்சலா அவர்களின் கவிதைகள் ஒரு விசாலமான உலகைத் தரிசிக்க முனைந்து நிற்கின்றன.

“ஏகாந்த காற்றில்

பறக்கும்

பால்யத்தின் நினைவுகள்

றெக்கை முளைத்த சருகுகளாய்.”

ஒரு சோறே பதம்பார்க்க உதவுகிறது.

“ஒரு கோப்பைத் தேநீரை

என் இதழ் கேட்கும் சூட்டோடு

சினேகிதமாய் பருகிக் கொண்ருந்தேன்.

வெளியில் பொழிகிறது மழை

என் தேநீர்க் கோப்பையை

நிறைக்கும் வரை”

உதட்டுக்கும் கோப்பைத் தேநீருக்குமான உறவில்

தன்னையும் இணைத்துக் கொள்ளும் மழை…சூழலை தன் வயப்படுத்தும் லாவகம் கவிதைக்கும் வலுச் சேர்க்கிறது.

மனதில் பட்டதை சொல்வதற்கும்,எழுத நினைப்பவற்றை அழகுறச் சொல்வதற்கும் கவிதை கைகொடுக்கும். இங்கும் கவிக்குரல் வத்சலா அவர்களின் கவிதைகள் தெளிவாக வந்து விழுந்திருக்கின்றன.

அவரின்  குணம்  மென்மையானதுவோ.  கவிதைகளும்   அப்படியே.  ஆக்ரோசம்   எங்கும்  இல்லை.

ஆனால்   கனவுகள்  நிறையவே  தூவப்பட்டுள்ளன  பூக்களாய்.

ஒரு படைப்பாளிக்கும் வாசகனுக்குமான இடைவெளி நெருங்கும் போதே படைப்பின் மீதான விருப்பம் மேலிடும். படைப்பாளியை நெருங்கும் தொழில்நுட்பம் எப்போதும் படைப்பாளிக்குத் தெரிந்திருக்கவேண்டும். அதற்காக கைகளுக்கு விலங்கிட்டுக்கொள்வதல்ல.

முதலில்  வாசகனாக  உணர்ந்து பார்க்க வேண்டும். அவ்வளவே!

சிலருக்கு அவர்களின் கல்வி கைகொடுக்கும். இன்னும் சிலருக்கு அனுபவம் எழுதுவதற்கு கைலாகு கொடுக்கும். திருமதி.வத்சலாவிற்கு இரண்டுமே துணைபுரிந்திருக்கின்றன.

‘என்னைப் பார்த்துப்

பேசாத

அவள் இதழ்கள்

மௌனமாய்!

அவளின்

விரிந்த விழிகள்

பேசின காதலாய்!’

உணர்வுகள் எழுத்தில் சிறப்பிடம் பெறுகிறது

‘’காற்றில் மிதக்கும் இறகு

பறவையாய்ப் பறக்கும்

மனசு’

‘மெல்ல மெல்ல

பாதம் பதித்து

அவள் நடந்தாள்.

அவள் கொலுசு

சிணுங்கி இசையெழுப்பியது.

சத்தமில்லாமல்

அவள்

பின்னே சென்றது

என் மனது’

…..நான் குடைக்குள்

நனையாமல் இருக்கிறேன்.

என்னை

நனைத்துவிட்டுச் செல்கிறது.

காதல் மழையாய்

உன் நினைவுகள்’.

ஓவியா பதிக்க வெளியீடாக வந்துள்ளதில் மகிழ்ச்சியே.

அழகியப் பதிப்பு.. கவனமெடுத்து ஒழுங்கமக்கப்பட்டுள்ளன.

96 பக்கங்களில் எல்லாவற்றையும் சொல்லிவிடத் துடிக்கும் ஆதங்கம் கவிஞனின் ஆரம்ப முயற்சி என்பதின் அளவுகோல்.

இன்னும் முயன்றிருக்கலாமே என்கிற எதிர்பார்ப்பும் இல்லாமல் இல்லை.

கவிதைகளுக்கு காதல் துணைபுரிந்திருக்கிறதோ? முதலில் எழுதவரும் அனைவருமே காதலையே கவிவரிகளுக்குள் அடக்கிப்பார்க்கிறார்கள். காதலும் அடங்கிப்போகிறது.

சப்தமின்றி வார்த்தைகளை கோர்வையாக்கி  வரிகளாக்கி நமக்கு கவிதையாக்கியிருக்கின்றார். வாசிக்கையில் உள்ளுக்குள் வயதையும் மீறி ரசிக்கின்ற அனுபவம் அலாதியானது.

கவிதை எழுதுதல் என்பது இலகுவானதாகிவிட்டதா என்கிற எண்ணம் எனக்கு உண்டு. முன்பெல்லாம் நமக்குக் கிடைத்த மு.மேத்தா, கண்னதாசன், வாலி என்று விரிவுபட்டு பலரைத் தேடி வாசிக்கும் காலம் ஒன்றிருந்ததே. இப்போது கணினிவயப்பட்ட உலகில் எதுவும் சாத்தியமாகும் என்பது போல கவிதைகளும், கவிதை நூல்களும் வந்துகொண்டிருக்க, பதிப்பகங்களும் பெருக்கமுற்றபடியே வருகின்றமையும் கண்கூடு.

சிலர் சொல்லலாம் ஆரோக்கியமான சூழல் கவிதையில் காணப்படவில்லை என.. முன்னரும் போஸ்ட்கார்ட் கவிதைகள் வந்த காலமும் உண்டு.பின்னர் ஆரோக்கியான சூழலில் கவிதைகளும்,கவிஞர்களும் உருவாகவில்லையா?

ஆயிரம் பூக்கள் மலரட்டுமே.

வெண்பஞ்சு மேகத்தின் வெண்ணெயை..

உனது உடலெங்கும் பூசி

நீலவான் கடலின் அலையில்

அசைந்தும்,மிதந்தும்,குளித்து

விண்மீன்களில் அத்தனை

ஒளிவெள்ளத்திலும், மிளிர்வுடன் உருவாகிய

வெண் தாரகைப் பெண்ணும் நீதானோ?..’

கொஞ்சம் குளிரை

அனுப்பிவிடு என்னுயிரே!

வெய்யில் கேட்கிறது

வேண்டுமென்று..’

‘…

 வலியும் வேதனையுமெனக்கு

ஓலமிட்டழும் மரம் அறியும்

மரணத்தை மட்டும்..’ 

எவை காலம் தொட்டு நிற்கும் என்பதை நிர்ணயிக்கும் என்பதை உணர்ந்து வரவேற்கவும்,வழிவிடவும் வேண்டுமே தவிர புதுவரவுகளுக்கு தடபோடுதல் ஆகாது.

வத்சலாவின் கவிதைகளும் -எதிர்கால நிஜங்களை கைகளுக்குள் அடைத்துவிடும் தார்ப்பரியத்துடன் தொடரும் என்கிறதே நம்பிக்கை.

தன் முன்னால் நடப்பவற்றை, சூழலை சாதாரணன் உள்வாங்குகின்ற முறைக்கும் அதையே கவிஞனின் மனதில் ஏற்படுத்திச் செல்கின்ற சலனங்களுக்கும், தாக்கங்களுக்கும்  நிறையவே வித்தியாசம் உண்டு. அதை எழுகின்ற ஒரு படைப்பாளி உள்வாங்கி எழுதுகின்ற உணர்வுக்கும் அதையே வாசிக்கினற வாசகனுக்குமான இடைவெளி அதிகமாகிவிடக்கூடாத எச்சரிக்கை அல்லது பக்குவம்  தேவை. அதனைச் சரிவரச் செய்கிற போது வாசகனை சென்றடையும், சலனத்தை, தாகத்தை ஏற்படுத்தியே தீரும்.

சிலவற்றை தெரிவு செய்கையில் ஒன்றுக்கொன்று தொடர்பறுந்து நீர்த்துப்போகின்ற அபாயமும் உண்டு.

வத்சலா ஓரளவு புரிந்துகொண்டுள்ளார். அவரின் கவிதைக்கான பயிற்சி, வாசிப்பு ஆற்றல் இன்னும் விசாலமாகும் பட்சத்தில்

அம்மாவின் கண்கள் போன்று பல கவிதைகளை தருகின்ற வல்லமையும் பெறுவார்.

இன்னொன்றையும் கவனமெடுக்கவேண்டும்.

கவிதைகளில் குற்றம் கண்டுபித்துச் சொல்கின்ற நக்கீரர்கள் அதிகம் வலம் வருகின்ற களத்தில் கவனமாக எதை செவிசாய்க்கவேண்டும், எதை நிராகரிக்கவேண்டும் என்கிற நிதானத்துடன் நகரும் பட்சத்தில் எதிர்காலம் கம்பீரமாக இருக்கும்.

வாழ்த்துக்களுடன்,

முல்லைஅமுதன்

20/06/2016

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *