அறியப்படாத தமிழ்த்தாய் வாழ்த்து – மெய்யுணர்வும் தமிழுணர்வும்
பேராசிரியர்.முனைவர்.கிருஷ்ணன் நல்லபெருமாள், ம.சு.பல்கலைக்கழகம்
நாற்பத்து இரண்டே ஆண்டுகள் வாழ்ந்தாலும் தமிழுக்கும், தமிழ் நாடகவியலுக்கும் மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை அளித்த கொடை அளப்பரியது. அவர் ஒரு தமிழ்ப் பேராசிரியரல்லர். தத்துவத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியவர். மலையாள மண்ணின் மைந்தனாகப் பிறந்திருந்தாலும், அவரின் தமிழ்ப் பற்றுக்கு நிகர் அவரே. மனோன்மணியம் நூலுக்கு அவர் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையே தமிழ்த்தாய் வாழ்த்தாகத் தமிழக அரசு ஏற்றுக் கொண்டது. ஆனால், அன்றைய தமிழக அரசின் சார்பாக தமிழ்த்தாய் வாழ்த்தை உருவாக்கியவர்கள், சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலின் இரண்டாம் பத்தியின் அனைத்து வரிகளையும் மிகக் கவனமாக நீக்கிவிட்டு கடைசி வரியை மட்டும் வெட்டியெடுத்து, முதல் பத்தியோடு ஒட்ட வைத்துப் புதிய தமிழ்த்தாய் வாழ்த்தை உருவாக்கினர். இப்போது அந்த இரு பத்திகளையும் காண்போம்:
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெருந் தமிழணங்கே.
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமுந்துளுவும்
உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடுனும்
ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாஉன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே.
(தமிழக அரசால் நீக்கப்பட்ட வரிகள் சிவப்புவண்ணத்தில் தரப்பட்டுள்ளன.)
தமிழ்த்தாய் வாழ்த்திலிருந்து நீக்கப்பட்ட அவ்வரிகள் சுந்தரம் பிள்ளையவர்களின் தமிழுணர்வையும், மெய்யுணர்வையும் பறைசாற்றுபவை.
“பல்லுயிரும் பலவுலகும் படைத்து அளித்துத் துடைக்கினும் ஓர்
எல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பது போல்”
என்ற இரண்டு வரிகள் தரும் பொருள்: அனைத்து உயிர்களையும், அனைத்து உலகங்களையும் படைத்து, காத்து, முடிவில் அவைகளைத் தன்னுள் ஒடுக்கும் ஓர் எல்லையற்ற பரம்பொருளாம் இறைவன் எந்த மாற்றத்திற்கும் உட்படாமல் எப்போதும் இருந்தபடி நிலைப்பேறாக இருப்பதைப் போல, என் தமிழ்த்தாய் என்றும் மாறாத சீரிய இளைமையோடு நிலைத்திருப்பாள் என்பதாகும்.
இந்த இரண்டு வரிகள் சொல்லும் செய்திகள் மிகமுக்கியமானவைகள்; ஒன்று, சுந்தரம் பிள்ளையவர்கள் இறைக்கொள்கை உடையவர் என்பது; இரண்டு, தமிழ்மொழியும் இறைவனைப் போல் என்றும் மாறாத இளமையுடன் இருக்கின்றது என்பது.
தமிழன்னையின் பெருமை சாற்றும் இந்த இரண்டு வரிகளை ஏன் நீக்கவேண்டும்?
இந்த வரிகளில் ‘உயர்வு நவிற்சி’யாக தமிழன்னை என்றுமுள்ள பரம்பொருளுக்கு இணையாக உயர்த்திப் புகழப்பட்டாள்; இவை பெருமைக்குரியவை அல்லவா? எந்தமதத்தையும் குறிக்காமல் பொதுவாகப் ‘பரம்பொருள்” என்று குறித்திருப்பது ‘மதச்சார்பின்மைக்கும்’(secular) ஒத்துவருகிறதே! பின் ஏன் நீக்கினார்கள்? உங்களுக்குக் குழப்பமாக இருக்கிறதா? குழம்பத் தேவையில்லை! நீக்காவிட்டால், கடவுள் மறுப்பு இயக்கத்தைச் சார்ந்தவர்களால் நடத்தப்படும் தமிழக அரசு, பரம்பொருளாம் ‘இறைவனின்’ இருப்பை ஏற்றுக் கொண்டதாக ஆகிவிடும் என்று நினைத்தார்களோ என்னவோ? தமிழக சூழலில் secular என்றால் ‘இறைமறுப்பு’ என்பதாகவே தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது.
கவியுள்ளத்தைப் புறம்தள்ளி வசதிக்காக வரிகளை நீக்கியது அறமற்ற செயல்
தமிழ்த்தாய் வாழ்த்து நாம் அரசு விழாக்களில் பாடுவோம் என்று மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை பாடவில்லை. அவரின் ஒப்பற்ற காவியத்தில் தமிழைப் போற்றித் தொடங்கவே பாடினார். அவரின் பாடலின் கருத்துப் பிடிக்கவில்லையா? விட்டுவிட வேண்டியதுதானே! அதை விடுத்துக் கவியுள்ளத்துக்குப் புறம்பாக வெட்டி-ஒட்டுவது அறச்செயலுக்கு மாறானது. அக்காலச் சொல் வழக்குகள், நம்பிக்கைகள், வரலாறு போன்ற உணர்வுகளை உள்ளடக்கிப் பாடியுள்ள கவிஞரின் கருத்துக்கு மாறாக, போற்றுகிறேன் பேர்வழி என்று கிளம்பிக் கவிதையைச் சிதைப்பது எவ்விதத்தில் அறமாகும்?
திராவிடக் கொள்கைகளுக்கு வலுவூட்டும் பின்னுள்ள மூன்று வரிகளை ஏன் நீக்கவேண்டும்?
திராவிடம் திராவிடம் என்று ஒட்டுமொத்த தமிழர்களுமே திராவிடக் கருத்தியலை தங்கள் பண்பாடு என்று ஏற்கும்படிக்கு மூளைச்சலவை செய்தவர்களுக்கு, “தமிழ்த் தாயே, நீ நான்கு திராவிட மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு ஆகிய நான்கு குழந்தைகளை உன் வயிற்றிலே சுமந்து பெற்ற பின்பும் என்றும் நீங்காத இளமையுடன் திகழ்கின்றாயே! உன்னை எங்ஙனம் வாழ்த்துவேன்?” என்னும் பொருள்படும்
“கன்னடமும், களி தெலுங்கும், கவின் மலையாளமும், துளுவும்
உன் உதரத்து உதித்து எழுந்தே ஒன்று பல ஆயிடுனும்”
என்ற வரிகள் தேனினைப் போல அல்லவா இனித்திருக்க வேண்டும்? பின் என் நீக்கினார்கள்? தமிழின் பெயராலும், அடுக்கு மொழிச் சொற்களாலும் ஆட்சிக்கட்டிலைப் பிடித்தோர்களில் பெரும்பான்மையினர் தமிழரல்லர் என்பதால் அவர்களுக்கு இவ்வரிகளால் தமிழுக்குப் பெருமை சேர்வதை ஏற்றுக் கொள்ள இயலவில்லையோ என்ற ஐயம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.
“ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து”
தமிழன்னையே! பேச்சு வழக்கு ஒழிந்தமையால் உலக வழக்கு அழிந்து ஒழிந்த வடமொழியான ஆரியம் போல் அல்லாது நீ சீரிய இளமையோடு விளங்குகின்றாயே! என்ற வரி தமிழுக்குப் பெரும் பெருமை சேர்க்கும் விடயமல்லவா? பின் ஏன் நீக்கினார்கள்? தமிழரல்லாத அவர்களின் உள்ளீடான ஆரியப்பற்று இவ்வரி சொல்லும் செய்தியின் உண்மையைப் பொறுத்துக் கொள்ள விடவில்லையோ என்ற ஐயம் எழுவதையும் தவிர்க்க இயலவில்லை..
பேசாப் பொருளைப் பேச . . .
முழுமையான தமிழ்த்தாய் வாழ்த்தில் இடம்பெற்ற அணி அமைப்புகள், உட்பொருள்கள், நயங்கள், செம்மைகள் அனைவரையும் வியப்படையச் செய்பவை. இதுவரை முழுவதுமாக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை உள்வாங்கிச் சுவைக்க வாய்ப்புக் கிட்டாத தமிழன்பர்களுக்காகவும், தமிழ்த்தாய் வாழ்த்தின் ‘கண்’ பற்றியும் ‘காது’ பற்றியும் மட்டும் சிந்தித்துவிட்டு, சுந்தரனார் ‘உணர்த்த விழைந்த’ செய்தியைப் பேசாமல் போவது முழுமையான பார்வையாகாது என்பதாலும், தமிழன்னையை வணங்கி இதுவரை யாரும் பேசாப் பொருளைப் பேசத் துணிகின்றேன்.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில், இவ்விரண்டு பத்திகளுக்குப் பின்வருபவை எல்லாம், தமிழ்த்தாயின் பெருமையை, இரண்டு அடிகளில் ஒருபொருள் குறித்து பாடப்பட்ட பன்னிரண்டு பாடல்களாகப் பாடப்பட்டுள்ளன.
கடலும் தமிழ்த்தாய்க்கு ஒப்பாகாது
கடல் குடித்த குடமுனி உன் கரை காணக் குருநாடில்
தொடுகடலை உனக்கு உவமை சொல்லுவதும் புகழாமே!
“முன்னர் ஒரு காலம் பெருங்கடலையே குடித்துத் தன் வயிற்றில் அடக்கிய குறுமுனி அகத்தியர் தமிழ்மொழியின் கரை காண்பதற்காக இறைவனையே குருவாக நாடினார் என்பதால், என் தாயே! தமிழே!! தொடுகடலை உவமையாகச் சொல்லுவதுவும் உனக்குப் புகழ் ஆகாது!!!” என்று பாடிப் பரவசமடைகின்றார் கவிஞர். என்னே சுந்தரனாரின் தமிழ்ப் பெருமை! வியந்தல்லாவா போகிறோம் நாம்?
தமிழ் இலக்கணம் எம் இறைவனுக்கே எட்டாதது!
ஒரு பிழைக்கா அரனார் முன் உரையிழந்து விழிப்பாரேல்
அரியது உனது இலக்கணம் என்று அறைவதும் அற்புதமாமே.
பாண்டிய மன்னனின் ஐயத்தைத் தீர்க்குமாறும், வறுமையில் வாடும் தருமிக்குப் பொற்கிழி பெற்றுத் தருவதற்காகவும் இறையனாரே பாடல் இயற்றிக் கொடுக்க, அப்பாடலில் ஒரு பொருட்பிழை நேர்ந்தது. அப்பிழையை தமிழ்ச்சங்கத் தலைமைப் புலவன் நக்கீரன் சுட்டிக்காட்ட இறைவன் பேச்சற்றுத் விழித்தார் (சிலேடையாக-தன் நெற்றிக்கண்ணை விழித்து நின்றதாக) என்று கூறப்படும் புராணக் கதையை உயர்வு நவிற்சிகொண்டு உவமித்து, தமிழின் இலக்கணத்தின் அருமை பெருமையைப் பறைசாற்றுகின்றார் சுந்தரனார்.
தமிழ்மொழி உலகின்மொழி! தோற்ற–நாசம் அற்ற முதுமொழி!!
சதுமறையா ரியம்வருமுன் சகமுழுது நினதாயின்
முதுமொழிநீ அநாதியென மொழிகுவதும் வியப்பாமே.
நம் இந்தியத் துணைக் கண்டத்துள் ஆரிய நான்மறை சாற்றும் வடமொழி ஆரியம் நுழைவதற்கு முன்பு வரை தமிழே பேச்சு மொழியாக எங்கும் இருந்தமையால், தொன்மொழியாகிய தமிழைத் ‘தோற்ற-நாசம்’ அற்றது என்று சொல்வது ஒன்றும் வியப்புக்குரியதல்ல என்கின்றார் சுந்தரனார். வடமொழியாம் ஆரியம் இங்கு வந்தேறிய மொழி என்ற கருத்தும் இப்பாடலில் உள்ளுறையாக உள்ளது.
காலத்தை வென்றவள் எம்தமிழன்னை! வைகைநதி வெள்ளத்தை எதிர்த்து நீந்திக் கடந்த தமிழேடு சொல்லும் செய்தி காலநதியால் தமிழுக்கு ஒரு அழிவும் நேராது என்பதே!!
வேகவதிக் கெதிரேற விட்டதொரு சிற்றேடு
காலநதி நினைக்கரவாக் காரணத்தி னறிகுறியே.
தமிழ்ஞானசம்பந்தப் பெருமானைப் ‘புனல்வாதம்’ என்னும் போருக்கு அழைத்த ‘வடமொழி விற்பன்னர்’களாம் சமணர்களின் “अश्थि नाश्थि – அஸ்தி நாஸ்தி” என்று எழுதப்பட்ட வடமொழி ஓலைச்சுவடி வைகைநதி வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது;
அஸ்தி என்றால் உண்டு என்று பொருள். கடவுள் உண்டு என்று சொல்பவர்களை ஆஸ்திகர் என்று சொல்லும் வழக்கம் இங்கிருந்தே வந்தது. நாஸ்தி என்றால் இல்லை என்று பொருள். கடவுள் இல்லை என்று சொல்பவர்களை நாஸ்திகர் என்று சொல்லும் வழக்கம் இங்கிருந்தே வந்தது.
இந்த அத்தி நாத்தி எழுதிய ஏட்டைத்தான் சமணர்கள் மதுரையில் சம்பந்தருடன் செய்த புனல் வாதத்தில் வைகை ஆற்றில் விட்டார்கள். சமணர்களின் ‘அத்தி நாத்தி’ ஏடு வைகை ஆற்றின் போக்குடன் அடித்துச் செல்லப்பட்டது.
சம்பந்தர் ” வாழ்க அந்தணர்” என்று தொடங்கும் பதிகம் எழுதிய ஏட்டை ஆற்றில் விட்டார். சம்பந்தர் இட்ட ஏடு ஆற்றில் எதிரேறி கரையையும் அடைந்தது. இவ்வாறு ஏடு எதிரேறிக் கரையை அடைந்த தலமே சோழவந்தான் அருகேயுள்ள திருவேடகம் ஆகும்.
சம்பந்தப் பெருமானால் எழுதப்பட்ட இறைவனைப்புகழும் ஏடு – திருஏடு வைகையாற்று வெள்ளத்தை எதிர்த்து நீந்திக்கரையேறி அடைந்த அகம் என்ற காரணப்பெயரால் திருவேடகம் எனப்பட்டது. இது மதுரையில் இருந்து ஒரு சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
இந்த ” வாழ்க அந்தணர்” என்ற திருப்பாசுரத்துக்கு பல தனிச்சிறப்புகள் உள்ளன.
- இது ஒன்றே பன்னிரண்டு பாடல்களை உடையது. மற்றைய பதிகங்கள் எல்லாம் பதினொரு பாடல்கள் கொண்டவை.
- இந்தப் பாசுரத்தை சம்பந்தர் தன் கையாலேயே எழுதினார். சம்பந்தரின் மற்றைய பாடல்களை ஏட்டில் எழுதி வந்தவர் அவருடைய தாய்மாமன் சம்பந்த சரணாலயர்.
- சைவத்தின் கொள்கை விளக்கம் செய்த பாடலும், சைவ சமயத்தை மெய்ச்சமயம் என்று நிறுவிய பதிகமும் இதுவே.
- இவ்வொரு பதிகத்துக்கு மட்டுமே சேக்கிழார் 22 பாடல்களில் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
- முதல் ஒன்பது பாடல்களின் யாப்பு வேறு; கடைசி மூன்று பாடல்களின் யாப்பு வேறு.
அஸ்தி நாஸ்தி அல்லது அத்தி நாத்தி என்பது சமண மதக்கொள்கை. அருகனை முதல்வனாக ஏற்ற சமணரின் ஆருகத மத மந்திரம் ” அத்தி நாத்தி”. ஒரே முடிவு என்றில்லாது பல முடிவாகக் கூறுதல். உண்டாம்-இல்லையாம், உண்டு-இல்லையாம், உண்டாம்-ஆயின் சொல்ல இயலாதாம், இல்லை-ஆயின் சொல்ல இயலாதாம், உண்டும்-இல்லையுமாம் ஆயின் சொல்ல இயலாதாம் என்பது போன்ற ஏழு பகுதிகள் உள்ளன. அதனால் இதை ஸப்த பங்கி வாதம் என்பர். ஸப்த என்றால் ஏழு. இது சமற்கிருதமொழி அல்ல; அர்த்த மகத மொழி என்னும் வடமொழி. மகதம் என்பது இன்றைய இந்தியாவின் பீகார் மாநிலம். சமணமும் வடமொழியும் இங்கிருந்துதான் வந்தது. பல திராவிடவாதிகள் சமணம் திராவிட மதம் என்றும், திருவள்ளுவர் சமணர் என்றும், சமணம்தான் தமிழை வளர்த்தது என்று எண்ணியும், எழுதியும், பேசியும் வருவது வேறு கதை.
மெய்யுணர்வினும் ஓங்கிநிற்கும் தமிழுணர்வு!
ஆனால், தமிழ்ஞானசம்பந்தப் பெருமானால் தமிழில் எழுதப்பட்ட ஓலைச்சுவடி வைகை நதியின் வெள்ளத்தை எதிர்த்து நீந்திக் கரை சேர்ந்தது என்பது பெரியபுராணம் என்னும் திருத்தொண்டர் புராணத்தில் வரும் தொன்மம். அத் தொன்மத்தையே சான்று காட்டி, காலமாகிய நதியின் ஓட்டம் தமிழுக்கு ஒருக்காலும் ஊறு விளைவிக்க இயலாது என்பதற்கான அறிகுறியே அந்நிகழ்வு என்கின்றார் சுந்தரனார். இதுவல்லவா மனோன்மணியம் சுந்தரனாரின் மெய்யுணர்வினும் ஓங்கி நிற்கும் தமிழுணர்வு! வார்த்தை வணிகர்களுக்குப் புரியாத நுண்நுண்ணுணர்வு!
இறைவனே தன் கைப்படத் தமிழன்னையின் திருவாசகத்தின் படி எடுத்து எழுதிவாங்கிக் கொண்டது இறைவனின் கடையூழிக் காலத் தனிமையைக் கழிப்பதற்கே! எம் மொழிக்கும் கிட்டாத மேன்மை! ஆயின், தமிழன்றோ இறைமொழி?
கடையூழி வருந்தனிமை கழிக்கவன்றோ அம்பலத்துள்
உடையார் உன் வாசகத்தில் ஒரு பிரதி கருதினதே.
‘திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்பது தமிழ்ப் பழமொழி. நம்மை யெல்லாம் உருக்கும் திருவாசகம், அன்புருவாம் இறைவனை உருக்காதிருக்குமா? திருவாசகத்தில் உருகிய இறைவன் அவ் வாசகத்தைத் தன் திருக்கரங்களால் படி-எடுக்க விரும்பினான்; ஒரு வயோதிக அடியவரின் உருவில் தோன்றி, மணிவாசகரிடம் திருவாசகத்தை மீண்டும் சொல்லுமாறு வேண்டித் தன் கைப்படவே படியெடுத்துக் கொண்டான் சிற்றம்பலமுடையான்.
‘மாணிக்கவாசகன் சொல்ல, அழகிய சிற்றம்பலம் உடையான் கைப்பட எழுதியது’ என்ற அழகிய சிற்றம்பலம் உடையானின் திருவாசகப் பிரதியைச் சிற்றம்பலப் படியில் கண்ட தில்லைவாழ் அந்தணர்கள், மாணிக்கவாசகரிடம் சென்று, திருவாசகத்தின் பொருள் கூறுமாறு விண்ணப்பித்தனர்; ‘திருவாசகத்தின் பொருள் அம்பலக்கூத்தனே’ என்று கூறிவிட்டு, மணிவாசகர் இறைவனுடன் கலந்தார் என்பது தொன்மம்.
இங்கும் மெய்யுணர்வினும் ஓங்கியது தமிழுணர்வல்லவா?
இத்தொன்மத்தின் அடியாகப் பிறந்தது இவ்விரண்டு வாழ்த்து வரிகள்; என்ன அற்புதமான உயர்வு நவிற்சி! கடையூழிக் காலத்தில் அனைத்தும் ஒடுங்க, இறைவன் மட்டுமே தனித்திருப்பான்; அவன் மீளவும் இப் பிரபஞ்சத்தைப் படைக்கும் முன்பு, ஒரு சிறிய இடைவேளை, ‘Small Break” வருமல்லவா? அப்போது, எம் தமிழன்னையின் திருவாசகத்தின் துணைகொண்டே அத் தனிமையை இறைவன் போக்கிக் கொள்வான்; அத்துணை பெருமை கொண்டது எம்தமிழ் என்று இறுமாக்கின்றார் சுந்தரனார்; இவ் வுணர்வெல்லாம் மெய்யுணர்வினும் ஓங்கிய தமிழுணர்வல்லவா?
சங்கப் பலகை – தமிழின் உண்மை வரலாற்றுக்குச் சான்று
தக்கவழி விரிந்திலகுஞ் சங்கத்தார் சிறுபலகை
மிக்கநலஞ் சிறந்தவுன்றன் மெய்ச்சரித வியஞ்சனமே.
தகுதியுடைய நூலுக்கே மதுரைச் தமிழ்ச்சங்கப் பலகை விரிந்து இடம் கொடுக்கும் என்பது மிகுந்த பெருமை கொண்ட உன் உண்மை வரலாற்றிற்கு ஒரு அடையாளம் என்று தமிழ் மொழியின் மெய்ச் சரிதத்தை வியந்து போற்றுகின்றார் கவிஞர். இங்கு “வியஞ்சனம்” என்ற சொல் “குறிப்பால் உணர்த்தி நிற்கும் அடையாளம்” என்ற பொருளாகும்.
வடமொழி உயர்வென்றும் தமிழ் மொழி அன்றென்றும் கூறுவோர் மதியிலாரே
வடமொழிதென் மொழியெனவே வந்தவிரு விழியவற்றுள்
கொடுவழக்குத் தொடர்பவரே கிழக்கொடுமேற் குணராரே.
வீறுடைய கலைமகட்கு விழியிரண்டு மொழியானால்
கூறுவட மொழிவலமாக் கொள்வர்குண திசையறியார்.
கலைமகடன் பூர்வதிசை காணுங்கா லவள் விழியுள்
வலதுவிழி தென்மொழியா மதியாரோ மதியுடையார்.
பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ
எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணமில் கற்பனையே.
ஆரியமொழியே உயர்வென்ற, மனோன்மணியம் சுந்தரனாரின் காலத்திலிருந்த மக்களின் மனநிலையை மேற்கண்ட பாடல்கள் பதிவிட்டிருக்கின்றது. தமிழ்மொழியின் மேன்மை அறியாதவரே நிறைந்திருந்த காலம் என்பதை உணர்த்தும் பாடல்கள் இவை. சுந்தரம் பிள்ளையவர்களின் பின் கா.சு.பிள்ளை, மறைமலையடிகள், பரிதிமாற்கலைஞர், மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் போன்றோரின் அரும்பணிகளால் தமிழன்னையின் பெருமை மீட்டெடுக்கப் பட்டது எனினும், இன்னும் அச்சப்பாடுகள் முற்றிலும் நீங்கிவிடவில்லை.
பிறப்பொக்கும் எல்லாஉயிர்க்கும் – ஒருகுலத்துக்கு ஒரு நீதி : குறள் நீதியும் மநுநீதியும்
வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மநுவாதி யொருகுலத்துக் கொருநீதி
அனைத்து உயிர்களும் பிறப்பினால் ஒருவரே! அவரவர் செய்யும் தொழில் காரணமாகவே சிறப்புகள் வேறு வேராகக் காணப்படுகின்றன என்னும் குறள் கூறும் அறநெறியையும், நீதியையும் உணர்ந்தோர்கள் குலப் பிறப்பின் காரணமாகவே அந்தணர், அரசர், வணிகர், சூத்திரர் என்று மனிதகுலத்திற்குள் வேற்றுமை பாராட்டும் மநுநீதியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தமிழ்நீதியாம் குறள்நீதியின் மேன்மையையும், வடமொழி நீதிநூலாம் மநுநீதியின் மானுடத்திற்குப் புறம்பான தீமையையும் தமிழர்களுக்கு இனம் காட்டுகின்றார் பேராசிரியர் சுந்தரம் பிள்ளையவர்கள்.
திருவாசகத்தில் கரைந்தோர்கள் பிறவொன்றையும் கருதார்
மனங்கரைத்து மலங்கெடுக்கும் வாசகத்தில் மாண்டோர்கள்
கனஞ்சடையென் றுருவேற்றிக் கண்மூடிக் கதறுவரோ.
‘திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்று பழமொழி கண்டவர் தமிழர். மனித மனங்களைக் கரைத்து, மனமாசுகளை நீக்கும் திருவாசகத்தில் கரைந்துபோனவர்கள் வேறு எந்த மந்திர உருவேற்றும் கண்மூடிக் கதறும் வழிபாடுகளை இயற்றமாட்டார்கள் என்று உறுதிபடக் கூறுகின்றார். திருவாசகத்தில் கரைந்துபோன அனுபவத்தையல்லவோ மேலை ஆரியரும் உணரும் வண்ணம் அருட்தந்தை ஜி.யூ.போப் அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு உணர்த்துகின்றது. தமிழ்த் திருவாசகம் போலன்றி, ஆரியமொழி ஆரவார மந்திரங்கள் சடங்குகளே அன்றி உள்ளம் ஒன்றி வழிபாடியற்ற துணைபுரியா என்பது இங்கு தமிழின் மேன்மை குறித்து வலியுறுத்தப் பெறுகின்றது.
இறுதியாக,
மலையாள மண்ணில் ஆலப்புழை என்ற ஊரில் பிறந்த மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையவர்கள் தமிழ் மொழியையே தாயாகப் பாவித்து வந்தவர்; அவரல்லவோ உண்மையான தமிழர்? இச்செய்தியைப் பறைசாற்றும் அவர்தம் தமிழ்த்தாய் வாழ்த்தின் நிறைவுப் பகுதி இதோ:
நிற்புகழ்ந்து ஏத்துநின் நெடுந்தகை மைந்தர்
பற்பலர் நின் பெரும் பழம்பணி புதுக்கியும்
பொற்புடை நாற்கவிப் புதுப்பணி குயிற்றியும்
நிற்பவர் நிற்க நீபெறும் புதல்வரில்
அடியேன் கடையேன் அறியாச் சிறியேன்
கொடுமலையாளக் குடியிருப்பு உடையேன்
ஆயினும் நீயே தாய் எனும் தன்மையின்
மேய பேராசை என் மீக்கொள ஓர்வழி
உழைத்தலே தகுதி என்று இழைத்த இந் நாடகம்
வெள்ளியது எனினும் விளங்கு நின் கணைக்காற்கு
ஒள்ளிய சிறு விரல் அணியாக்
கொள் மதியன்பே குறியெனக் குறித்தே.
-மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை
நிறைவாக,
யாம் பெற்ற இன்பமாம் இவ்வுணர்வரிய தமிழ்த்தாய் வாழ்த்தின்பத்தை தமிழர் அனைவரும் பெற்று, எம் ஊன் பற்றி நின்ற தமிழ் உணர்வது ஓங்கி, அன்பால் அனைவரும் இன்புறப் பணிசெய்து, நிலமிசை தமிழால் இசைபட வாழ்ந்து, மறைத்தமிழ் கொண்டு வான் பற்றி நின்ற மறைப்பொருளோடு இரண்டறக் கலந்து இன்புற்று வாழ்க. (இந்நிறைவுரை, திருமூலதேவ நாயனாரின் திருமந்திரத்தில் உள்ள
‘யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்
வான் பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன் பற்றி நின்ற உணர்வு மந்திரம்
தான் பற்றப் பற்றத் தலைப்படும்தானே.’ என்ற ஊன் கலந்த பாடலால் நிறைந்தவை)
பெறர்க்கரிய இத் தமிழ்த்தாய் வாழ்த்தை தமிழராம் யாம் அனைவரும் பெற்றின்பமுறத் தந்த மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையவர்களுக்கு நன்றி கூற இவ்வொரு பிறவி போதுமா? நும் தமிழ் நுகர, நும் தமிழ் வாழ்த்த, யாம் பல்லாயிரம் மனித்தபிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே! தமிழ்த்தாய்க்கும், நுமக்கும் யாம் கூறுதும் பல்லாண்டு!!
தமிழால் இணைவோம்! தமிழாய் வாழ்வோம்!!
திராவிட இயக்கத்தின் Primitive outlook on languages க்கு சுந்தரம் பிள்ளையை தூக்கிப்பிடிப்பது ஒரு காரணம்.
தமிழுக்குப் பெரும் பெருமை சேர்க்கும் என்ற முகமூடியில் சு.பி. பல அறிவியலாக ஏற்கமுடியாத கருத்துகளை பிரச்சாரம் செய்கிறார். மற்ற திராவிட மொழிகளை தமிழில் இருந்து பிறந்தவை என சொல்வது ஏற்க்கத்தக்கவை அல்ல. தமிழ்நாட்டுக்கு வெளியே , தமிழ்வெறி வட்டத்துக்கு வெளியே இதை யாரும் ஏற்கமட்டார்கள். தற்கால தமிழ் தொல்தமிழ் அல்லது 10ம் நூஊற்றாண்டு தமிழுக்கு சமம் அல்ல. தற்காலத்தமிழ் சென்றகாலத்தமிழின் வாரிசு. தற்காலத்தமிழிலும் பேச்சுத்தமிழ் எழுதுதமிழில் இருந்து மற்றொரு மொழி , அவை இரண்டும் சகோதர மொழிகள் எனலாம். தற்காலத்தமிழ்லும் பல வகை தமிழ்கள் உள்ளன. உதாரணமாக கணிசமானவர்களுக்கு தமில்தான் தாய்மொழி, அதாவது அவர்கள் தாய்மொழியில் ழ் இல்லை. அதில் தவறு ஒன்றும் இல்லை. இன்னும் பல வித தமிழ்களை சொல்லலாம்.
திருப்பி திருப்பி சமஸ்கிருதம் வழக்கிழந்த மொழி என்றால் அது உண்மையாகி விடாது – சு.பி. சொன்னாலும். ஒவ்வொருநாளும் சமஸ்கிருதத்தை பல இடங்களில் கேட்கிறோம். திராவிட இயக்கத்தின் சமஸ்கிருத வெறுப்பே , சமஸ்கிருதத்தின் தற்கால வீரியத்தை காட்டுகிறது.
சுருக்காக சொன்னால் சுந்தரம் பிள்ளை, முக்கியமாக அவருடைய மொழி பற்றிய எண்ணங்கள் , பிற்கால சந்ததிகளை , அதாவது தற்காலத்தை , பெரும் குழப்பத்தில் முழுக்கி விட்டன., அதனால்தான் தமிழை விட்டு மக்கள் ஓடுகின்றனர்.
வ.கொ.விஜயராகவன்
சங்ககாலம் தொட்டுத் தமிழில் பேச்சுத் தமிழும், இலக்கியத்தமிழும் மாறுபட்டுத்தான் இருந்து வந்துள்ளன. தமிழ் மொழியின்
உயிர்ப்புக்கும் இத்தன்மையே காரணம். தற்காலத் தமிழில் புதிய சொற்கள் உருவாக்கம் என்பது மொழியின் வளர்ச்சியைக்
குறிக்குமே அல்லாது வேறொன்றும் இல்லை. இன்னும் சங்ககாலத்தமிழ் சொல்லாடல்கள் பலவும் உயிர்ப்புடன் தமிழகத்தில்
புழங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆகவே, தொடர்ச்சியாக வளர்ந்துவரும் ஒரு மொழி (கணணி, இணையதளம் போன்ற
சொற்களை உருவாக்கி) வளர்ந்து வருவதாலேயே வேற்று உருவம் கொண்டு சகோதர மொழி ஆகிவிடாது.
இத்தகைய பார்வையே மொழியியல் தத்துவத்திற்கு முரணானது. ஒவ்வொரு வட்டார மொழி வழக்குகளும் மொழியின்
வளத்தைக் குறிக்குமேயன்றி அவை வேற்று மொழி ஆகாது. தென்தமிழகத்தில் இன்னும் தொண்ணூறு சதவீத பழந்தமிழ்
சொற்கள் உயிர்ப்புடன் உள்ளன.
உண்மை நிலைகள் எப்போதுமே மற்றவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா என்பதைப் பொறுத்து மாறுபடாது. பெருவாரி மக்களின்
கருத்து என்பது வாக்குச் சீட்டுகள் பெற்று ஆட்சி அமைப்பதற்குப் பொருந்துமே அல்லாது உண்மையா அல்லவா என்பதைத்
தீர்மானிக்க அன்று. உண்மை எப்போதுமே வேண்டுதல் வேண்டாமை இல்லாதது. ஒருவர் நான் ‘புவி ஈர்ப்பு விசை”க்
கோட்பாட்டை ஏற்கவில்லை என்று அறிவித்துவிட்டதாலேயே ‘புவி ஈர்ப்பு விசை” அவரை விட்டு நீங்கி விடாது.
மற்ற திராவிட மொழி பேசுவோர் ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், திராவிடமொழிக் குடும்பத்தின் தாய்
தமிழே என்ற உண்மை ஒன்றும் மாறிவிடப்போவதில்லை.
அறுபத்து ஏழுமொழிகளை நன்கு அறிந்த ஆங்கிலேய மொழியியலார் அருட்தந்தை கால்டுவெல் அவர்களால் 1856ம் ஆண்டு
இது குறித்து விரிவானதொரு நூல் ஆங்கிலத்தில் “A Comparative Grammar of the Dravidian Languages-Rev.Fr.R.Caldwell,
LONDON ; HARRISON, 59, PALL MALL” எழுதியுள்ளார். இந்நூலை “Cornell University Library, USA” ஒளிநகல் செய்து
http://www.archive.org/details/cu31924023009966 இணையதளத்தில் பதிவிட்டுள்ளது. இந்நூலின் சீரிய தமிழாக்கம் “கால்டுவெல்
ஒப்பிலக்கணம் கிரீயர்ஸன் மொழியாராய்ச்சிக் குறிப்புக்களுடன்” என்ற பெயரில் திருவாளர்கள் காழி.சிவ.கண்ணுசாமி பிள்ளை,
பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரைப் பிள்ளை ஆகியோரால் எழுதப்பட்டு திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த
நூற்பதிப்புக் கழகத்தாரால் 1941ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து எழுபத்து மூன்று மொழிகளில்
தேர்ச்சிபெற்ற மொழியியல் ஆய்வர் தமிழ்க்கடல் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள் பல ஆய்வுநூல்களை
வெளியிட்டுள்ளார்கள். இந்த நூலும் http://www.archive.org இணையதளத்தில் உள்ளது.
தமிழ் திராவிடமொழிகளின் தாய் அல்ல என்பவர்கள் தத்தம் மொழிப்பற்றின் காரணமாக அவ்வாறு விரும்புவது அவர்களின்
சுயவிருப்பமே அன்றி, உண்மை மாறப்போவதில்லை. இதைச் சொல்வது மொழிவெறி ஆகாது. மலையாளியான சுந்தரம்
பிள்ளை ஒரு மொழியியல் வல்லுநர்; அவரின் தாய்மொழி மலையாளத்தின் தாயான தமிழுக்கு (பாட்டி மொழிக்கு) “தமிழ்த்தாய்
வாழ்த்து” எழுதியதே உண்மையின் சாட்சியாகும். (“மலையாளக் குடியிருப்புடையேன்; ஆயினும் நீயே தாயெனும் தன்மையில்”
என்ற சுந்தரம் பிள்ளையின் அகச்சான்று தமிழ்த்தாய் வாழ்த்தில் உள்ளது)
அவர் கூறிய வழக்கொழிந்த ஆரிய மொழி ‘வேதமொழி’யே அன்றி ‘சமற்கிருதம்’ அன்று. சமற்கிருதம் எக்காலத்திலும் பேச்சு
மொழியாக இருந்தது கிடையாது. தற்காலத்தில் நாம் கணணிகாக செயற்கையாக உருவாக்கிய C, JAVA மொழிகளைப் போன்றே
தத்துவங்களைப் பல்வேறு மொழிபேசும் மக்களிடையே பரிமாறிக் கொள்ள உருவாக்கப்பட்ட அரைச் செயற்கை இலக்கிய
நடைமொழி (Literary dialect) மொழியே சமற்கிருதமாகும். பேச்சு மொழியாக சமஸ்கிருதம் இருந்ததற்கான எந்தத் ஆதாரமும்
இதுவரை இல்லை. ஆனால் இதற்கு மாறான தகவலையே சமஸ்கிருத விற்பன்னர் என்றும், மகாப்பெரியவர் என்று
எல்லோராலும் மதிக்கத் தக்கவர் என்றும் கூறப்படும் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார், சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்
கூறியதாவது:
‘எந்தத் தேசத்திலும், எந்தக் காலத்திலும் சமஸ்கிருதம் தேசபாஷையாகப் பேசப்படவில்லை என்று தெரிகிறது.’ – ‘சமஸ்கிருத
பாஷா பிரயோசனம்’ 29-10-1932, – சங்கராச்சாரிய சுவாமிகள் அருளிய நன்மொழிகள்; 2-ம் பாகம். – ‘சங்கர விஜயம்’ மதராஸ்
லா ஜர்னல் ஆபீஸ், மயிலை, 1933 – பக்கம் – 4.
யாராலும் எந்தக் காலத்திலும் பேசப்படாத ஒரு மொழியே சமற்கிருதம் என்பதை நாம் நன்றாக நினைவில்
இருத்தவேண்டும். இங்கு, மனோன்மணியம் சுந்தரனார் கூறிய ‘ஆரியம்போல் உலகவழக்கு அழிந்து ஒழிந்து சிதையா உன்
சீரிளமைத் திறம் வியந்து, செயல் மறந்து வாழ்த்துதுமே’ என்பதில் வரும் ‘ஆரியம்’ சமற்கிருதம் அன்று; அது வேத
வடமொழியைக் குறிக்கும்.
‘ழ’ வராதது பிழையின் பொருட்டே அன்றி, அதன் காரணமாக தனி மொழி என்று கூறுவது வேதனைக்குரியது. எதிர்வினைக்
கேள்விகளுக்கு நன்றி.
அன்புடன் ந.கிருஷ்ணன்.
வட்டார வழக்குகள் தனி மொழி ஆகாது என்ற கருத்து சரியே. ஆனால், திராவிட மொழிகளின் மூலம் தமிழ் என்பதற்கு இன்னும் வலுவான, மறுக்க இயலாத சான்றுகள் தேவை.
ஆறு கிராமங்களில் இன்றும் சமஸ்கிருதம் பேச்சு மொழியாக இருக்கிறது என்கிறது இந்தச் சுட்டி (மறுமொழியில் உள்ள தகவலையும் சேர்த்து)
http://globalvarnasramamission.blogspot.in/2012/01/five-indian-villages-where-sanskrit-is.html
அசாம் சட்டப் பேரவைக்குத் தேர்வுபெற்ற பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் நடிகை அங்கூர்லதா தேகா, அசோக் சர்மா, விமல் போரா ஆகியோர், 2016 சூன் 1ஆம் தேதி, சமஸ்கிருதத்தில் உறுதிமொழியை வாசித்துப் பதவியேற்றுக் கொண்டார்கள்.
http://indianexpress.com/article/india/india-news-india/from-sanskrit-to-nepali-to-english-assam-mlas-take-multilingual-oath-2829709/
இந்தியாவிலும் இந்தியாவிற்கு வெளியிலும் சமஸ்கிருதத்தைப் பல்லாயிரம் பேர், கல்விக் கூடங்களில் கற்று வருகிறார்கள். சமஸ்கிருதத்தில் எதுவும் பேசாமல் பாடம் நடத்தலாம், கற்கலாம் என்பது சாத்தியமா?
மேலும், இந்தியாவின் ஆன்மீகத் தலங்களிலும் ஆலயங்களிலும் யாகங்களிலும் ஹோமங்களிலும் சடங்குகளிலும் இன்றளவும் சமஸ்கிருத மந்திரங்கள் ஓதப்பட்டு வருகின்றன. சமஸ்கிருத இலக்கியங்கள் படிக்கப்பட்டு வருகின்றன. ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.
நிலைமை இப்படி இருக்க, சமஸ்கிருதம் பேச்சு வழக்கில் இல்லை, உலக வழக்கில் இல்லை என்பது எப்படி உண்மையாக இருக்க முடியும்? இவை மட்டுமின்றி, தமிழ் உள்பட ஏராளமான மொழிகளில் சமஸ்கிருதம் ஊடுருவி, ஒன்றிக் கலந்திருக்கிறது. அந்த மொழிகளுக்குள்ளும் சமஸ்கிருதம் வாழ்கிறது. பிறகு எப்படி, 60 ஆண்டுகளாக நாம் ஒரே கருத்தினை மீண்டும் மீண்டும் கூறி, அதுவே சரியென வாதிடுகிறோம்.
தமிழும் வடமொழியும் எப்போது தோன்றியது என அறிய இயலாத, இணையான செவ்வியல் மொழிகள். இரண்டிலும் அரிய வளங்கள் உள்ளன. இவற்றை மதித்துப் போற்றுவதே, உரிய வகையில் பயன்படுத்துவதே நல்லது.
அண்ணாக்கண்ணன்: “திராவிட மொழிகளின் மூலம் தமிழ் என்பதற்கு இன்னும் வலுவான, மறுக்க இயலாத சான்றுகள் தேவை.”
19ம் நூற்றாண்டில் உலக மொழிகளை மொழிக்குடும்பங்களாக தொகுக்கும்போது , தமிழ், தென் இந்திய மொழிகள், இன்னும் சில மொழிகள் இவற்றை சில பொது குணாதிசியங்களால் ஒரு “மொழிக்குடும்பம்” என ஒரு logical grouping செய்யப்பட்டது. மேலும் அந்த logical grouping க்கு கால்டுவெல்லால் “திராவிட குடும்பம்” என நாமகரணம் செய்யப்பட்டது ; இந்த நாமகரணத்தில் கால்டுவெல் குளறுபடி செய்துவிட்டார்; அது என்ன குளறுபடி என அப்புரம் பார்க்கலாம். ஆனால் பெயர் நிலைத்துவிட்டது. மொழிக்கு சமூக நிஜத்துவம் உண்டு, மொழிக்கும்பத்திற்க்கு சமூக நிஜத்துவம் இல்லை. அதாவது, மக்கள் பேசுவது மொழி, யாரும் எந்த மொழிக்குடும்பத்தையும் பேசுவதில்லை, ஏனெனில் அது logical concept.
‘திராவிட’ என்பது மொழியியலில் ஒரு குழு – தமிழைத் தாங்கிய குழு – தானே தவிர, அதை யாரும் தமிழுக்கு சமம் எனச் சொல்லவில்லை . கால்டுவெல்லும் தமிழ் = திராவிட என்ற சமன்பாடு செய்யவில்லை.
அதனால் , இந்த தர்க்கக் குழப்பத்தினால், அண்ணாக்கண்ணன் நினைப்பது போல் ஒரு சான்றும் கிடைக்கப்போவதில்லை;
தமிழ்வைணவத்தில் தமிழை திராவிடமொழி என ஆயிரம் வருஷங்களாக அழைக்கின்றனர் ; ஆனால் கடந்த 200 வருஷ மேற்க்கத்திய மொழியியல் பார்வை வேறு, அதன் சொல்லாடல்கள், தர்க்கங்கள், பரிபாஷைகள், வார்த்தை வரையருப்புகள் வேறு.
வ.கொ.விஜயராகவன்
“வட்டார வழக்குகள் தனி மொழி ஆகாது என்ற கருத்து சரியே”.
சில வட்டார மொழிகள் “தாய் மொழி”யிலிருந்து பல குணாதிசியங்களில் மாறுபட்டு தனி மொழியாக சென்றுவிடுகிறது.
ஒரு மொழி என்ற உணர்வில் பொது உயிர், மெய், உயிர் மெய் எழுத்துகள், இலக்கணம், சொல்லாடல் ஆகியவை ஒன்றாக உணரப்படுகிரது. , சிலர் தாய்மொழில் ஐ , ஔ உயிரெழுத்துகள் இல்லை, சிலரது தாய்மொழில் ழ மெய்யெழுத்து இல்லை, அல்லது ற இல்லை., ந இல்லை, ன, ண குழப்பம் மிகப்பரவல். சிலர் தாய்மொழியில் ஸ, ஷ போன்ற மெய்கள் இல்லை என்றால், அவை பெரிய அளவில் மாறுபடுகின்றன. அதற்கு மேல் பேச்சு மொழி , எழுத்து மொழி இடைவெளி இணையமுடியாதது . அதனால் அபப்டிப்பட்ட உபமொழிகள் தனி மொழியாக கருத வாய்ப்பு உண்டு. தமிழ் என்பது மொழிக்குடும்பம், மொழி அல்ல. தமிழ் என்ற போர்வையில் இருக்கும் மொழிகள் நடுவில் உள்ள வேற்றுமை, டேனிஷ், ஸ்காந்திநேவியன், என்ற தனியாக அறியப்படும் மொழிகள் நடுவில் உள்ள வேற்றுமையை விட அதிகம்.
கடந்த 120 ஆண்டுகளாக வளர்க்கப்பட்டுள்ள “தமிழ் உணர்வு” மிகச் செயற்யானது, அரசியல் நோக்கு கொண்டது, தன்பின் கூட்டத்தை எழுப்பும் நோக்கில் கோஷங்களால் வளர்க்க்கப்பட்டது. தொற்கால “இழந்த பொற்காலத்தை” பிடிக்கும் நோக்கில் எழுப்பப்பட்டது அதனால்தான் தமிழ் கடந்த 60 ஆண்டுகளாக பின்வாங்குகிறது, இன்னும் பின்வாங்கப்போகிறது
வ.கொ.விஜயராகவன்
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் தீட்டிய டாக்டர் கால்டுவெல் கருத்தை உலகமே ஏற்று தமிழின் சேய்மொழிகளாக தெலுங்கையும் கன்னடத்தையும் மலையாளத்தையும் துளுவையும் கூறி வருகிறது.
இந்தியாவில் இன்றைய தமிழ்நாட் டிலும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியிலும் முதன்மையான பேச்சுமொழி தமிழ்மொழியே இந்தப் பகுதிகளிலிருந்து தென்ஆப்பிரிக்கா, கிழக்கு ஆப்பிரிக்கா, பர்மா, மலாயா, சிங்கப்பூர் மற்றும் தொலை கிழக்கு நாடுகளுக்குச் சென்று குடியேறிவர்கள் பேசுவதும் தமிழே. திராவிட மொழிகளின் குடும்பத்தில் தமிழ்தான் மிகப் பழைமையானது என்பது உறுதி. தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மூன்றும் இக்குடும்பத்தின் பிற உறுப்பினர்கள்.
இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த சிறு மொழிகளில் துளு, கொடகு, தோடா, கோடா ஆகியவை தென்இந்தியாவிலும் கோண்டி, ஓரான், மால்டி, ராஜ்மகால், கூயி, குருக் ஆகி யவை மத்திய இந்தியாவிலும் ஒரிசா விலும் புழங்குகின்றன. தொலைவி லுள்ள பலுசிஸ்தானத்தில் பேசப்படும் (பிரஹுயி) பிரகூயி மொழியும் இக் குடும்பத்தைச் சேர்ந்ததே போற்றற்குரிய ஹோராஸ் என்பவரின் ஊகம் உண்மையாக இருக்குமாயின், திராவிட மொழிகளின் குடும்பம் மொகேஞ்ச தாரோ நகாரிகத்துடன் பண்டைக் காலத்திலேயே தொடர்புகள் கொண் டதாக இருந்திருக்க வேண்டும் என்று தெ. போ. மீனாட்சிசுந்தரனார் கருதுகிறார்.
திராவிட மொழிகளின் மூலம் தமிழ் என்பதற்கு இன்னும் வலுவான, மறுக்க இயலாத சான்றுகள் என்சைக்ளோபீடியா பிரித்தானிக்காவிலிருந்து (http://ccat.sas.upenn.edu/~haroldfs/sars238/shortencybrit.html) இதோ:
Dravidian languages
Outline, based on Encyclopædia Britannica Article
Of the Dravidian languages, Tamil has the oldest literature, paralleled in India only by that of Sanskrit. Its phonological and grammatical systems correspond in many points to the ancestral parent language, called Proto-Dravidian.
As an independent family, the Dravidian languages were first recognized in 1816 by Francis W. Ellis, a British civil servant.
The actual term Dravidian was first employed by Robert A. Caldwell, who introduced the Sanskrit word dravida (which, in a 7th-century text, obviously meant Tamil) into his epoch-making A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages (1856).
மூவாயிரம் ஆண்டுகளுக்குமுன் எழுதப்பட்ட தொல்காப்பியம் என்ற நூல்தான் தமிழ் மொழியில் முதல் நூலாகும். சமணம், பவுத்தம் (பௌத்தம்) ஆகிய நெறிகளைப் பற்றிய குறிப்புகள் அந்தநூலில் அறவே இல்லை. பிற்காலத்தில் பெயர்பெற்று விளங்கிய எந்த வைதிக (Orthodox) சமயங்களைப் பற்றியும் அது பேசுவதில்லை.
தென் இந்தியாவில் மற்ற திராவிடமொழி இலக்கியங்கள் கி.பி. எட்டாம் நூற்றாண்டுக்குப் பின் தோன்றியவை யாகும். தமிழில் மிகப் பழைய பாடல்களின் தொகுப்புகளாக உள்ள சங்க இலக்கியத்தில் (கி.மு. 500_கி.பி.200) கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளைப் பற்றிய குறிப்புகள் இல்லை. வடுகர் என்ற சொல் திருப்பதி, மலைக்கு வடக்கே உள்ளவர்களைப்பற்றி வழங்கியது. மேற்குக் கடற்கரைப் பகுதியாகிய கேரளத்தில் வழங்கும் மலையாள மொழியைப் பற்றிய குறிப்பும் இல்லை.
திராவிடம் என்ற சொல் தமிழ் என்பதற்கு வடமொழியார் (குமாரில பட்டர்) தந்த வடிவம் என்று கொள்ளப்பட்டமையால் திராவிடம் என்ற சொல் அந்தக் காலத்துத் தமிழ் இலக்கியத்தில் ஆளப்படவில்லை. திருநாவுக்கரசர் ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் என்றே பாடியுள்ளார்.
வரலாற்றை மறப்பதோ, மறைப்பதோ, மறுப்பதோ ஒரு இனத்தின் மொழி, நாகரிகம், பண்பாடு, மறுமலர்ச்சி, வளர்ச்சி ஆகியவைகளைத் தடுப்பதற்கும் கெடுப்பதற்கும் வழி வகுத்துவிடும். அதைத் தமிழர்களாகிய நாம் தவிர்ப்போம். வரலாறு குறித்துப் பெருமை கொள்வது ‘மொழிவெறி’ அன்று. அது நம் தன்னம்பிக்கையை மேம்படுத்தும், அவ்வளவே!
சமற்கிருதத்தின் மீது தமிழருக்கு எந்த வெறுப்பும் இருந்ததில்லை. மிகவும் அதிகமாக சமற்கிருதத்தில் தங்கள் படைப்புகளைச் செய்தவர்கள் இராமானுசர் உள்ளிட்ட தமிழர்களே என்பதையும் அறிவோம். ஆயினும், தமிழின் தூய்மையைப் போற்றுவதற்கு அது எவ்விதத்திலும் தடையாக இருந்ததில்லை என்பது தமிழ்ப் பாசுரங்கள் வழிபாட்டில் பெற்ற முதன்மையிலிருந்து காணக் கிடைக்கின்றது.
காஞ்சி மகாப் பெரியவர் சங்கராச்சாரியார், சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் காலத்தில் அவர்களால் ‘எந்தத் தேசத்திலும், எந்தக் காலத்திலும் சமஸ்கிருதம் தேசபாஷையாகப் பேசப்படவில்லை என்று தெரிகிறது.’ என்று 29-10-1932ம் நாளில் ‘சமஸ்கிருத பாஷா பிரயோசனம்’ , – சங்கராச்சாரிய சுவாமிகள் அருளிய நன்மொழிகள்; 2-ம் பாகத்தில் குறிப்பிட்டுள்ள குறையைச் சரிசெய்யும் விதத்தில் முனைவர்.அண்ணாகண்ணன் அவர்களால் இணைக்கப்பட்டுள்ள ஆறு கிராமங்களில் சமஸ்கிருதம் பேச்சு மொழியாக இருக்கிறது என்கிற புதிய முயற்சியைக் குறித்த தகவல் வரவேற்கத்தக்கது. அதிலேயே ” He does not consider it remarkable that he speaks what is considered a dying language (or that his oxen respond to it)” என்ற வரி காஞ்சி மகாப் பெரியவரின் 29-10-1932ம் நாளில் குறிப்பிட்ட வாக்கின் உண்மையையும் தெளிவுபடுத்துகிறது. சமற்கிருதம் பேச்சு மொழியாக வருவதை வரவேற்போம். நம் தமிழ் மொழியின் தொன்மையையும் போற்றிப் பாதுகாப்போம்.
முனைவர்.அண்ணாகண்ணன் அவர்களின் கருத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றி.
அன்புடன்
ந.கிருஷ்ணன்.
ஐயா விஜயராகவன் மிகச்சரியாகச் சொன்னார்கள் தமிழ்வைணவத்தில் தமிழை திராவிடமொழி என ஆயிரம் ஆண்டுகளாக அழைக்கின்றனர் என்று. ஆம், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் வைணவர்களால் திராவிடவேதம் என்றே ஆயிரத்துக்கும் மேலான ஆண்டுகளாக அழைக்கப்பட்டு வருகின்றது. தெள்ளிய தமிழில் திருமாலிடம் ஆழங்கால்பட்ட ஆழ்வார்களின் பைந்தமிழ்ப் பாசுரங்களுக்கு மணிப்பிரவாளமென்னும் தமிழும் சமற்கிருதமும் கலந்த நடையில் உரையெழுதிய பிற்காலத்தார், தமிழ்ப் பாசுரங்களின் மெய்யுணர்வுப் பலன்கள் அடித்தட்டு மக்களுக்குச் சென்றடையா வண்ணம் தடுத்து விட்டனர்.
சைவத்தில் இது இன்னும் பிற்போக்கானது. சைவத் திருமுறைகள் பன்னிரண்டு என்பது நமக்கெல்லாம் தெரியும். திருமுறைகளுக்கு உரை எழுதுவது பாவம் என்ற கருத்தால், அவற்றுக்கு உரை வகுக்க யாரும் முற்படவில்லை. திருமுறைகளுக்கு உரை எழுதுவது பாவம் என்ற நம்பிக்கையை ஆழமாக ஊன்றிவிட்டுச் சென்றுவிட்டார்கள். திருமுறைத் திருப்பாட்டுக்கள் தமிழ் அறிஞர்களுக்கு மட்டுமே விளங்கும் என்ற நிலையை சமயநம்பிக்கையின் பெயரால் ஏற்படுத்தினார்கள்.
திருமுறைகளை அறிஞர்களின் பிடியிலிருந்து விடுதலை செய்ய ஒரு கிறித்துவ அருட்தந்தை ஜி.யூ. போப் சைவத்துக்குக் கிடைத்தார். அவருக்குப் பின்பே சைவத் திருமுறைகளுக்கு தமிழில் உரை எழுத சிலர் முன்வந்தனர். தலைசிறந்த தமிழறிஞர்கள் வாழ்ந்த காலத்தில், இந்நம்பிக்கையும் உடன் வாழ்ந்ததால் திருமுறைகளில் சொல்லிய பாட்டுக்களின் பொருள் உணர்ந்து சொல்லும் செல்வர்கள், தாங்கள் மட்டும் பெற்ற இன்பத்தை நமக்குப் பெறுமாறு தாராது சென்றுவிட்டனர்.
விளைவு, தமிழரின் தொன் சமயங்களான சைவமும், வைணவமும் திராவிட இயக்கக் கடவுள் மறுப்பு இயக்கத்தின் தடையறாத் தாக்குதலுக்கு ஈடுகொடுக்கும் வலிவு இழந்து அவலநிலையை அடைந்தது. திராவிடக் கடவுள் மறுப்பு இயக்கம் நீர்த்துப் போய்விட்ட தற்காலம், ஆங்கிலேயக் காலனி ஆதிக்கத்தின் கருத்தியல் பிள்ளையாம் செயற்கை இந்துமதம் என்னும் போலி அடையாளத்தில் அவர்தம் தொன்சமய அடையாளங்களைத் தொலைத்துவிட்டு நிற்கின்றனர்.
உங்கள் முழுமுதற்கடவுள் யார்? உங்கள் இறைக்கொள்கை என்ன? கிறித்தவர்களுக்கு ‘பைபிள்’ போல உங்கள் சமயநூல் எது? என்ற கேள்வியை யாரிடம் வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள் – ஒன்று திகைப்பார்கள், அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பதில்களைத் தருவார்கள், அல்லது, இந்துமதம் என்பது ஒரு வாழ்வியல் நெறி என்று மழுப்பலாகப் பொத்தாம் பொதுவாகக் கூறிவிட்டு ஓடிவிடுவார்கள்.
தமிழர்கள் இன்று நாத்திகவாதிகளும் அல்லர்; ஆத்திகவாதிகளும் அல்லர்; இரண்டும் கெட்டான் நிலையில் ‘agnost’ ஆக இருக்கிறார்கள். வாழ்வில் இன்னல்களைச் சந்திக்கும்போது, எத்தைத் தின்றால் பித்தம் தீரும் என்று கோவில் கோவிலாகச் செல்கின்றார்கள். போலி மத குருக்களும், போலிச் சாமியார்களும், போலி யோகா குருக்களும் இன்று பெரும்வணிகர்களாகக் கொழுத்துத் திரிகின்றனர் என்பதே இதற்குச் சான்று.
தத்துவ உள்ளீடற்ற புதிய வழிபாடுகள் எதையும் உள்வாங்கும் அரசியல் திறனுடன் இந்துமதம் இருப்பதால், போலிச் சாமியார்கள், அடித்தட்டு மக்களை ஏமாற்றுவதிலிருந்து யாரும் தடுக்க இயலவில்லை. இந்துமதம் என்பது அரசியல் அங்கீகாரமும் சட்ட அங்கீகாரமும் பெற்றதே அன்றி எந்த இந்தியத் தத்துவமும் எந்த ஆரிய வேதமும், எந்தத் தமிழ் வேதமும் ‘இந்து தர்மம்’ என்ற சொல்லைக் கொண்டிருக்கவில்லை. சாதி அடிப்படையில் கோவில்களில் ஒடுக்கப்பட்டோர் நுழையமுடியாததற்கு அந்தணர்கள் அல்லாத பிற ‘சாதி இந்துக்கள்’ என்பவர்களே பெரிதும் காரணமாக இருக்கிறார்கள்.
அறக்கல்வி பள்ளி, கல்லூரிகளிலிருந்து ஐம்பது ஆண்டுகளாக விடைபெற்றுச் சென்று, உலகநூல் கல்வியாம் மருத்துவம், அறிவியல், பொறியியல், வணிகம் என்பவை மட்டுமே கற்பிக்கப்படுகின்றது. ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என்ற சிலப்பதிகாரம், ‘உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன் பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல்’ என்னும் திருக்குறள், “இறைவனின் பாதகமலங்களைத் தொழார் எனில் கற்றதனால் ஆய பயன்தான் என்ன” என்று இடித்துரைத்த வள்ளுவம் என்று அனைத்தையும் தொலைத்துவிட்டு, தமிழ்ச் சமூகமே ஒட்டுக்குக் காசு வேண்டிக் கையேந்திப் பிச்சை கேட்கிறது அரசியல்வாதிகளிடம். இவ்வளவு அவலங்களும் நம் அடையாளங்களையும், வரலாற்றையும் கற்பிக்க, நினைவுறுத்த நாம் மறந்ததுதான் என்றவகையில், நான் ஒரு தோல்வியுற்ற ஆசிரியன் என்று உணர்கின்றேன். என்னை எழுதத் தூண்டியதும் இந்த உணர்வுதான்.
சிந்திக்க வைத்த கேள்விக்கு என் நன்றி நண்பர் வ.கொ.விஜயராகவனுக்கு!
அன்புடன்
ந.கிருஷ்ணன்