விவிலிய விழுமங்களை வாழ்ந்து காட்டிய அன்னை!

0

பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, பிரான்சு

ஆண்டுதோறும், திசம்பர்த்  திங்கள் வந்தால் போதும், கிறிஸ்துவைப் பிறக்க வைக்கிறோம்!

மார்ச், ஏப்பிரல் வந்தால் கிறிஸ்துவைச்  சாகடிக்கிறோம். இவை இரண்டுக்கும் நடுவில் எப்போதாவது, எங்காவது கிறிஸ்துவை வாழ வைக்கிறோமா? கிறிஸ்துவாக வாழ்ந்து இருக்கிறோமா?

ஆனால், கிறிஸ்துவை வாழ வைத்திருக்கிறார், கிறிஸ்துவாக வாழ்ந்து காட்டி இருக்கிறார் பெண்  ஒருவர்!
அவர் –  அன்னை தெரேசா!

கூன் விழுந்த முதுகு  ; குழி விழுந்த கண்கள் ; சுருங்கிப் போன சாத்துகுடியாய் முகம் ;சாதாரண புடவைகள் மூன்றும் ஐந்து ரூபாய் பணமும் தவிர வேறு  சொத்து சுகம் ஏதும் கிடையாது !

ஐந்து அடிக்கும் குறைவான உயரம். இவ்வளவு ‘அழகான’ பெண்ணுக்கு உலகத் தலைவர்களுக்குச் சமமான –
ஏன், அதற்கும் மேலான- மதிப்பு மரியாதை! உலகம் நெடுக இருந்து பலப்பல விருதுகள்! பட்டங்கள், பரிசுகள்…
ஏன்… ஏன்? ஏன் !…

ஏனென்றால் அவர் நம் கண் முன்னே வாழ்ந்து காட்டிய வாழ்க்கை விவிலிய மதிப்பீடுகளின் வெளிப்பாடாக அமைந்ததுதான்.

கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.  (திருக்குறள்    819 ) என்பார் திருவள்ளுவர்.

‘Our dees do not match our words’ என்று நம் இந்தியத்  தத்துவ ஞானி Dr இராதாகிருஷ்ணன் எழுதுவார்.
இப்படிச் சொல் வேறு செயல் வேறு என்று வாழ்ந்து காட்டிக் கொண்டிருந்த  பரிசேய  நரிக் கூட்டத்தைக்  கண்டிக்கும் எம்பெருமான் ஏசு பிரான்,

‘ தம்மைத்தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப் பெறுவர். தம்மைத்தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப் பெறுவர்”

(மத் 23 :13 ) என்கிறார். தன்னேரில்லா இறைவனுக்கு முன்பாகவும் தன்னயலவர்க்கு முன்பாகவும் தன்னை வியந்து தருக்காமல், தாழ்வின்றிக் கொன்னே வெகுளி பெருக்காமல் தாழ்ச்சியுடன் பன்னெடுங்  காலம் பணி புரிந்தவர் அன்னை தெரேசா! இந்த விவிலிய வாக்குப்படியே அன்னை தெரேசா உயர்த்தப்பட்டார்! இதில் வியப்பு ஒன்றும் இல்லை.

கவிஞர் கண்ணதாசனைத்  தமிழ் உலகம் நன்கு அறியும். அவர் கூறுகிறார்   : ” என்னைப்போல வாழாதீர்கள். நான் எழுதியுள்ளதைப் போல வாழுங்கள் …” என்று .
ஆனால் அன்னை தெரேசாவோ இயேசு கிறிஸ்து சொன்னதைப் போல வாழ்ந்தவர் ; அவர் செய்ததைச் செய்து வாழ்ந்தவர்! கிறிஸ்துவாகவே  வாழ்ந்தவர்!  எனவே அன்னையே உண்மையான  கிறிஸ்துவர்!  இப்படி அவர் வாழ்ந்து காட்டிய விவிலிய விழுமங்களை, மதிப்பீடுகளைக் காண்போம்.

1946 -ஆம் ஆண்டு செப்டம்பர் 10 -ஆம் தேதி,  இந்தியாவின் டார்ஜீலிங் நகருக்கு ரயில் பயணம் மேற்கொண்டிருந்த போது ‘சேரிகளுக்குச் செல், சேவைகளைச் செய்” என்ற இறைவனின் குரல் இதயத்தைத் தட்டுவதை உணர்ந்தார்.  இந்த இடத்தில் விவிலிய விழுமங்கள் இரண்டை நினவு கூறுதல் வேண்டும்.  விவிலிய விழுமங்களில் தலையாக விளங்குவது கீழ்ப் படிதல்.

இறைவனின் திருச் சித்தத்துக்குக் கீழ்ப்படியாததால்  விளைந்த தீ விளைவுகளை விவிலியம் விளக்குகிறது. (யூதா 1 :6 ). வான தூதர்களாய் மாட்சியுடன் விளங்க வேண்டியவர்கள் ‘மாபெரும் தீர்ப்பு நாளுக்காகக் காரிருளில் ‘ வைக்கப்பட்டனர் (யூதா 1 :6 ).

அவ்வண்ணமே, கீழ்ப்படியாமையால் தம் மேல் நிலையை இழந்த ஆதாம் ஏவாள் கதையை நாம் நன்கு  அறிவோம். மாறாக,  ‘இதோ ஆண்டவரின் அடிமை ‘ என்று சொல்லிக் கீழ்ப்படிந்ததனால் மரியன்னை பெற்ற மாண்புகளையும் நாம் அறிவோம். “வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்…தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.” என அன்னை மரியாள் அன்று உரைத்தது அன்னை தெரெசாவுக்கு அப்படியே பொருந்துகிறது. தன் உள்ளத்தில் விழுந்த இறை வார்த்தைகளை ஏற்று இறைவன் திருச் சித்தத்தை நிறைவேற்ற முனையும் அன்னை தெரெசாவில் பிதாப் பிதாவான ஆபிரகாமைக் காணுகிறோம்.

1.ஆண்டவர் ஆபிராமை நோக்கி, ″ உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல்.

2.உன்னை நான் பெரிய இனமாக்குவேன்: உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்: நீயே ஆசியாக விளங்குவாய்.

3 உனக்கு ஆசி கூறுவோர்க்கு நான் ஆசி வழங்குவேன்: உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்″ என்றார். (தொடக்கநூல் (ஆதியாகமம் 12 :4).

இந்தத் திருவாக்கும் அருட் சகோதரி தெரெசாவுக்குப் பெரிதும் பொருந்துகிறது. இதனை அவரே உறுதிப்படுத்தி    உள்ளார் : “ஆபிரகாமுக்குக் கட்டளை கொடுத்த கடவுள் எனக்கும் அதே கட்டளையைக் கொடுத்தார்”  என்று. (நவீன் சௌலா எழுதிய ‘அன்னை தெரெசா’ நூல் : தமிழில் அருட் தந்தை ஞா யாகோபு – பக்கம் 56 .) அது மட்டும் அல்ல, “நான் ஏழையாக இருக்க வேண்டும் என்றும் ஏழைகளின் வடிவில் இருக்கும் அவருக்கு அன்பு செய்ய  வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார் ” என்றும் அன்னை உரைக்கிறார். “ஏழையரின் உள்ளத்தோர் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது” (மத் 5 :3) எனக் கிறிஸ்து உரைத்த விழுமத்தின் விளைவுதான் அன்னையின் கூற்றில் புலப்படுகிறது. ஆகவே அன்னை தெரேசா பணி வாழ்வின் தொடக்கமே விவிலிய விழுமங்களின் அடித்தளத்தில் அமைகின்றது!

இறை மகன் இயேசு விளக்கிய விழுமங்களில் மிக முக்கியமானவை இரண்டு : இறை அன்பும் பிறர் அன்பும் தாம் அவை.  ” உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனதோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. உன்மீது நீ அன்பு கூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக ”.  (லூக் 10 :27 )


திருச் சட்டம் வலியுறுத்தும் பொன் விதிகள் இவற்றையே இயேசுவும் வலியுறுத்துகிறார்.  இவை இரண்டையும் தம் கண்களாகப் பாவித்தவர் அன்னை தெரெசா! தன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் தன் கடவுளாகிய இயேசு கிறிஸ்துவை நேசித்தவர் அவர். இந்த விவிலிய மதிப்பீட்டைத்தான், “ தேவ நற்கருணையில் அப்பத்தில் இயேசுவை அடையாளம் கண்டு பிடிக்கிறேன்.” என்று அன்னை கூறுகிறார்.  (நவீன் சௌலா எழுதிய ‘அன்னை தெரெசா’ நூல் : தமிழில் அருட் தந்தை ஞா யாகோபு – பக்கம் 330 .)  அடுத்து,  “குடிசைகளில் ஏழைகளின் வடிவில் அதே ஏசுவைப் பார்க்கிறேன்” என்ற அவர் கூற்றில்  திருச்சட்ட   மதிப்பீடான,  “உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக ” என்பது எதிரொலிக்கிறது.

இறைவன் மீது வைக்கும் அன்பினைப் பக்தி என்பர் ; அயலவர் மீது செலுத்தும் அன்பினை மனித நேயம் எனவும் அழைக்கலாம். விவிலியம் வலியுறுத்தும் மாண்புகளில்  இந்த இறை பக்தி ஒனறு மனித நேயம் மற்றது.  இறை மகன் இயேசுவின் நோக்கில் இந்த இரண்டுமே  முதலிடம்  பெறுகின்றன. ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. இதனால்தான் “எல்லா நோயாளர்களையும் அவர் குணமாக்கினர்.17 இவ்வாறு, ‘ அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார் ‘ என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது நிறைவேறியது” என மத்தேயு  8  ஆம்  அதிகாரம்  16 ஆம் வசனத்தில் குறிப்பிடுகிறார்.

கண்ணால்  காணும் அயலாரை நேசியாதவன் கடவுளை நேசிக்க முடியாது”. அன்னையின் அடிப்படைக்  கருத்து இதுவே. “என் கடன் பணி செய்து கிடப்பதே ‘ என்று ஏழை பாழைகளுக்குத் தொண்டு செய்யத் தன் வாழ்வை அன்னை அர்ப்பணித்ததற்குக் காரணம் இயேசு கிறிஸ்து எடுத்துக் கூறும் விழுமியமே! “பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்;36 நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள் …மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன் ‘  (மத் 25 :35 -40). அன்னையின் தோளில் தொங்கிய பாடுபட்ட சுருபத்தில்  உள்ள கிறிஸ்துவும் காளி காட்டில் உயிர் பிரியும் நிலையில் உள்ளவரில் இருக்கும் கிறிஸ்துவும் ஒருவரே என்பது  அன்னையின் தத்துவம்.

இயேசு பெருமான்  காலத்தில் இருந்து இன்று வரை தொழு நோயாளிகளின் நிலை பரிதாபமாகவே, கேவலமாகவே இருந்து வந்துள்ளது. அதனால்தான் அவர் அவர்கள் மேல் பரிவு இரக்கம் காட்டி அவர்களைக் குணப் படுத்தி அனுப்புகிறார்.  அவரைப் போலவே செயல் பட்டவர் அன்னை தெரெசா. சொந்தங்களாலும்  பந்தங்களாலும் துரத்தப்பட்டு சபிக்கப்பட்டவர்கள் என வெறுக்கப்பட்டுப் புழுதியிலே புரளும் தொழு நோயாளிகளை அருவேறுக்காமல் தொட்டுத் தழுவிக் காயங்களைக் கழுவிக்  கட்டிட்டு  மனப் புண்ணுக்கும் நல்ல வார்த்தைகளால்  மருந்திட்டு மனித நேயத்தைக் காட்டியவர் அன்னை தெரெசா. எப்படி இது சாத்தியம்? தொழு நோயாளிகளைத் தொடுவது அருவெறுப்பாக இல்லையா ? என்று அன்னையிடம் கேட்கிறார்கள். “சிதைந்து போன உடல்களில் குழந்தைகளில் ம்ரிப்பவர்களில் … இயேசுவை அடையலாம் புரிந்துகொள்வதால் இப்பணி சாத்தியம் ஆகிறது” என்று சிரித்துக்கொண்டே அன்னை பதில் கூறினாராம்.

மேலும், இயேசு, “என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது ‘ என்கிறார்.    இயேசுவுக்காக, இயேசுவுக்கே பணி செய்கிறோம்  என்பதை ஊட்டும்   விவிலிய மதிப்பீடுகள் இல்லாமல் இது சாத்தியம் ஆகாது என்பதை  அன்னையின் பதில் உணர்த்துகிறது .

விவிலிய விழுமியங்களை அன்னை உணர்ந்தே இருந்தார். இதற்கு எடுத்துக்காட்டாக இதோ ஒரு நிகழ்ச்சி. பிச்சைகாரர் ஒருவர் அன்னையைச் சந்திக்க வேண்டும் என்று அடம் பிடித்து நின்றாராம். அன்னை வந்ததும், தன் தட்டில் இருந்த அன்றைய வரும்படியான சில்லறைகளைத்  திரட்டி (ஏறக்குறைய ஒரு ரூபாய் அளவு )அவர் கையில் கொடுத்து அவர் திருக்கரங்களை முத்திசெய்து விட்டுத் திரும்பிப் போனாராம். அப்போது அன்னை அருகில் இருந்தவரிடம், “அவர் தன்னிடம் உள்ள எல்லாவற்றையும் எனக்குக் கொடுத்தார். நோபல் பரிசு மற்றும் எனக்கு அளிக்கப் பட்ட இதர பரிசுகளை விட அதிக உயர்வாக மதித்துப் போற்றுகிறேன் “என்றாராம்.

இங்கே லூகா நற்செய்தி 21 ஆம் அதிகாரம் முதல் வசனம் குறிப்பதை ஒப்பிட்டுப் பார்த்தல் நலம்: ” இயேசு நிமிர்ந்து பார்த்த போது செல்வர்கள் தங்கள் காணிக்கைகளைக் காணிக்கைப் பெட்டிக்குள் போடுவதைக் கண்டார்.

2 வறுமையில் வாடிய ஒரு கைம்பெண்ணும் இரண்டு காசுகளை அதில் போடுவதைக் கண்டார்.

3 அவர் ‘ இந்த ஏழைக் கைம்பெண் எல்லாரையும்விட மிகுதியான காணிக்கை போட்டிருக்கிறார் என உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன்.

4 ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து காணிக்கைப் போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டு விட்டார் ‘ என்றார்.  கிறிஸ்து பெருமான் சொன்ன வார்ததைகள் அன்னை பதிலில் எதிரொலிக்கிறது.

அண்ணல்  இயேசு சொன்ன படியே அன்னை தெரெசா  உலகின்  ஒளியாக  விளங்குகிறார்கள். ” இவ்வாறே உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்.” (மத் 5 :16 ).

விவிவிலியம் உரைக்கும் இந்த விழுமியத்தையும் வாழ்ந்து காட்டிய அன்னை தெரெசா மெழுகு வர்த்தி எனலாம். தன்னைத் தானே அழித்துக் கொண்டு பிறருக்கு ஓளி  ஊட்டிய அந்த வத்தி தன்னைப் போலவே பல நூறு வத்திகளை உருவாக்கி இறையோடு ஒளியாக ஒன்றிப் போனது.

இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் எனபது விவிலிய மதிப்பீடுகளில்  ஒன்று. இதனைப் பவுலடிகள் அழகாகச் சொல்லுவார் :
“எப்பொழுதும், மகிழ்ச்சியாக இருங்கள்.17 இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள்.18 எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள்” என்று. இந்த விவிலிய விழுமத்தைக் கடைசி  வரை அன்னை கடைப் பிடித்தார்.  “அன்னையின் வார்ததைகள் கொஞ்சம் தான். “கடவுளுக்கு நன்றி ” என்று பலமுறை சொன்னார்”  என்று பதிவு செய்கிறார் இவர் வரலாறை வடித்த IAS அதிகாரி நவீன் சாவ்லா ((நவீன் சௌலா எழுதிய ‘அன்னை தெரெசா’ நூல் : தமிழில் அருட் தந்தை ஞா யாகோபு – பக்கம் 11 .)

இவ்வண்ணம்   தம்  வாழ்வில் விவிலிய  மதிப்பீடுகளை உணர்ந்து கடைப்பிடித்துக் கிறிஸ்துவை  வாழ வைத்த, கிரிஸ்துவாகவே வாழ்ந்து வந்த அன்னை    தெரெசாவுக்கு இன்னொரு சிறப்பு உண்டு. புனித சவேரியாரும் புனித குழந்தை தெரேசம்மாளும் பல இலட்சக் கணக்கான ஆத்மாக்களைக் கடவுளிடம் கொண்டு வந்து சேர்த்தனர். அதற்கு மாறாக அன்னை தெரேசாவோ, இயேசுவைப் பல இலட்சம் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்திருக்கிறார்.
‘கதை கட்ட ஒருவன் பிறந்து  விட்டால் கண்ணகி வாழ்விலும் களங்கம் உண்டு ‘ என்று கண்ணதாசன் எழுதியதைப் போல்,

மக்களை மனம மாற்றவே மாதர் தெரெசா சேவைகள் செய்தார் என அநியாயமாகப் பழி சுமத்துபவர்களும் உண்டு. ஆனால், எவரையும் மதம் மாற்ற அன்னை முயன்றதே இல்லை. மாறாக, தன் நற்செயல்கள் மூலமாகவே நற்செய்தியைப் பரப்பியவர் இவர் எனபதில் ஐயம் இல்லை.

, “எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்… நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படிக்  கற்பியுங்கள்” என்று
எம்பெருமான் இயேசு பிரான் கூறியபடியே நடந்து கொண்டவர் நம் நெஞ்சில் என்றும் நின்று வாழும் அன்னை தெரெசா அவர்கள்!

 

படங்களுக்கு நன்றி

 

இயேசு கிறிஸ்து

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.