நாஞ்சில் நாடனுடன் ஒரு பயணம் (9 – I)

0

தி. சுபாஷிணி.

“தீதும் நன்றும்” ஆனந்த விகடனில் நாற்பத்திரண்டு வாரங்கள் தொடர்ந்து எழுதிய தொய்வில்லாத தொகுப்புக்கட்டுரைகள் அடங்கிய நூல் இது. விகடன் பிரசுரத்தாரால் 2009-ல் வெளியிடப்பட்டு, இதுவரை மூன்று பதிப்புகளைக் கண்டுவிட்டது. 42 கட்டுரைகள், 291 பக்கங்கள் கொண்டது இந்த நூல். விகடனின் புகைப்படக்குழுவின் எழில்மிகு படங்கள் படைப்பிற்கு மேலும் எழில் கூட்டுகின்றன.

முதல்கட்டுரை, அவருடைய நாஞ்சில் நாட்டைச் சார்ந்த கன்னியாகுமரியைப் பற்றியதாக அமைகிறது.  அப்படித்தானே அமைய வேண்டும். 60 வருடங்களுக்கு முன்பு இருந்த குமரிக் கடலை மீண்டும் ஆசிரியர் நினைவு கூர்கிறார். இப்போதிருக்கும் காந்திமண்டபமோ, விவேகானந்தர் நினைவுச் சின்னமோ, ஐயன் திருவள்ளுவர் சிலையோ இல்லாத காலமது.

கிழக்கில் வட்டக் கோட்டையும், தெற்கில் உபகார மாதா என்றும் அலங்கார மாதா என்றும் அழைக்கப்படும் சர்ச்சும், நீலத்திரைக் கடல் ஓரத்திலே நித்தம் தவம் செய் குமரி அன்னை பகவதியம்மன் கோயிலும், கடலை நீந்திக் கடந்து சுவாமி விவேகானந்தர் அமர்ந்து தவம் செய்த பாறையும், அதற்கு இணையான இன்னொரு பாறையும் பகவதி அம்மன் கோயிலுக்கு கிழக்கே, புண்ணிய தீர்த்தம் சூழ திருவிதாங்கூர் மன்னர் கட்டிய சங்கிலித் துறையும், தொடர்ந்து மேற்கே கால் நடைத் தடமாகக் கோவளம் போகும் பாதையில் ஒரு மைல் நடந்தால் எதிர்ப்படும் மணல் தேரி என்றழைக்கப்பட்ட, கடல் அலைகளைத் தொட்டு எழுப்பிய பெரு மணற்குன்றும் மட்டுமே இருந்தன.

‘மணல் தேரி’ எனில் மணல் குன்று. அதாவது கடல்மட்டத்தில் இருந்து, கடல் அலை அடிக்கும் மணல் வெளியில் இருந்து மலர்ந்து சாய்ந்த கோணத்தில் இரண்டு பனை மர உயரத்தில் இயற்கையாக ஒரு மைல் நீளத்தில் அமைந்த மணல் மலை. சிறு புற் பூண்டுகள் தவிர வேறெதுவும் முளைத்திரா மணற்தேரியின் உச்சியில் மாந்தர் அமரலாம் எனில், தேரியின் காலடியில் கடலலை தழுவிச்செல்லும். சுடும் பொன்னென செம்பொன் துகள்கள் மினுங்கும் கடற்புறத்துப் பூமணலை, கடலலைகள் அன்றி எவர் கொணர்ந்து சேகரித்துச் சேர்த்து, உயர்த்தி வார்த்திருக்க இயலும்’ என்கிறார் நாஞ்சில் நாடன்.

இதைப் படித்ததும் இம் மணல் தேரி என்னை மிகவும் பரவசப்படுத்தியது. இப்போது குமரியை நோக்கிப் பயணப்பட்டு, தேரியில் அமர்ந்து நெய்தலின் பின்னணியில் சங்க இலக்கியம் படிப்பதும் கேட்பதும் உன்னதமன்றோ?  என் உயர் ஆசை அலைகளை அடித்துச் சென்று விட்டது இக்கட்டுரையின் இறுதிப்பகுதி.

கிட்டத்தட்ட 1957 முதல் அறியாச் சிறுவனானவன் பார்வையில் பட்டுக் கொண்டிருந்த மணல் தேரி சில காலமாகக் கரைந்து கரைந்து இன்று காணாமற் போய்விட்டது.  மணற்பரப்பே இல்லாத மெரினாவை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? லாரி லாரியாக வாரிக்கொண்டு போய் தேசத்தின் சின்னப் பிதாக்கள் விற்றும் தீராத குன்று அது.  சன்னஞ் சன்னமாக அலையடித்து அலையடித்து கடல் கொண்டுவந்து சேர்த்த இயற்கைப் பண்டத்தை மறுபடி கடல் கவர்ந்து சென்று விட்டது.

இன்றைய இளம் பிள்ளைகளுக்கு கடல் இருக்கிறது.  சாலை இருக்கிறது.  கடற்காற்று இருக்கிறது.  மணி மண்டபங்கள் உள்ளன. சூரிய அஸ்தமனம் உண்டு.  கணக்கற்ற விருந்தினர் விடுதிகள் காணலாம், கடை கண்ணிகள் ஏராளம்.  ஆனால், மணல் தேரி இல்லை.  இருந்த இடத்தில் கருங்கற் பாளங்கள் கொட்டப்பட்டுவேறேதோ கட்டுமானப் பணிகள் நடக்கின்றன.

அடுத்த கட்டுரை ‘சாக்கடையாகும் நதிகள்’ நீர் நிலைகளை மனிதன் தன் இயற்கை அழைப்பிற்காகப் பயன்படுத்தி அசுத்தப்படுத்துவதைப் பற்றிப் பேசுகிறது.  குமரிக் கடலோரத்தில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளிலிருந்து கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் கன்னியாகுமரிக்கு வரும் ஐயப்பமார்கள் ஈறாக, தங்கள் காலைக்கடன்களை கடலில் கழித்து, கடற்கரையோரம் முழுவதும் கால் பதிக்க இயலாது செய்யும் அவலம் பற்றி நாடன் அங்கலாய்க்கிறார்.

கன்னியாகுமரி என்றில்லை திருச்செந்தூர், பூம்புகார் எங்கும் இதே நிலைதான். மலையாளி சபரிமலை சீஸனில் ‘பம்பா நதி’யில் கால் வைக்கமாட்டான். படித்துறையில் கால் வைத்தால் மலம் பொங்கி வரும் அச்சத்தில். இக்கட்டுரையைப் படித்த எனக்கு, உடனே என்னைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு தலையோங்கி நின்றது.  புத்தகத்தின் இறுதிப்பகுதிக்குச் சென்று விட்டேன்.

“நீரின்றியமையாது உலகு” என்ற கட்டுரையில், பச்சைப் பசேல் என்று பசுமை நிறைந்த பகுதியில், நீர்நிலையினின்று யானையொன்று தன் தும்பிக்கையில் நீர் நிரப்பித் தன்னைக் குளிப்பாட்டிக் கொள்ளும் காட்சிப் புகைப்படம் ஒன்று இருக்கிறது.  அதைப்பார்த்ததும் தான் நானே சுத்தமானது போல் ஓர் உணர்வு பெற்றேன்.

தன் நண்பருடன் வனப்புமிகு ‘தீர்த்தமலை’ சென்றதைப் பற்றி ஈண்டு குறிப்பிடுகிறார்.  மலையடிவாரத்தில் வடிவாம்பிகை வீற்றிருக்க, மலைமேல் அருணகிரிநாதரால் பாடப்பெற்ற தீர்த்த கிரீஸ்வரர் குடியிருக்கிறார்.  அவரை தரிசிக்க மலைமேல் ஏறும் போது இரு மருங்கும் குரங்குகள் உடன் வந்தன.  இவர்களுக்கு முன் செல்லும் விவசாயியிடமிருந்து வாங்கிய அர்ச்சனைப் பையில் பழங்களை மட்டும் எடுத்துக் கொண்டு எஞ்சியவற்றைத் தந்துவிட்டன.  அதைப்பற்றி அவர் கவலைகொள்ளவில்லை.  அவர் திருமூலர் படித்திருப்பார் போலும் இது பரமனை எப்படியும் அடைந்து விடும் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

இதை வியந்து கொண்டே செல்கையில், களைப்பாற ஒருவாய் தண்ணீர் குடித்தார்கள்.  போத்தலை மூடிய போழ்து குரங்குகள் சூழ்ந்து கொண்டன.  குரங்குக் கூட்டத்தில் தாட்டை குரங்கு ஒன்று போத்தலைப் பற்றி இழுக்கவே,  அதை அதனிடம் தந்தனர்.  போத்தலை வாங்கி, மூடியைத் திருகித் திறந்து, தான் குடித்து விட்டு, ஏனைய குரங்குகளுக்கும் கொடுத்தது.  ஒவ்வொன்றும் ஒவ்வொரு வாய் குடித்து, போத்தலை வைத்துவிட்டுச் சென்றன.  மழையற்ற கோடை காலங்களில் விலங்குகள் தாகமுடன் திரிகின்றன.

பொள்ளாச்சி, ஆனைமலை வழியாக ஆனக்கடவு, பரம்பிக்குளம் அணைக்கட்டுகள் பார்த்துவிட்டு யானைகள் பராமரிக்கப்படும் ‘கோழிக் கழுத்தி’ என்னும் பழங்குடி கிராமத்துக்குப் போகும் வழியில், சாலையோரம் காட்டின் சரிவில் சிமெண்ட் தொட்டிகள் கட்டி நீர் நிறைத்து வைத்திருந்தனர். தாகமுடன் இருக்கும் விலங்குகள் வந்து பருகவென. 50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவற்றைப் பகிர்ந்து கொள்கிறார்.  எல்லா வகைகளிலும் வண்டி மாடுகள் குடித்துக் களைப்பாற கல் தொட்டிகளில் தண்ணீர் நிறைத்து வைத்திருப்பார்களாம்.   (இப்பொழுது நாம் தெருவிற்குத்தெரு டாஸ்மாக் தண்ணீர் வைத்திருக்கிறோமே), கோடையில் வழிப்போக்கர்களுக்கு என மோர் மடங்கள், தண்ணீர் பந்தல்கள், கஞ்சிப்புரைகள் இருந்தன.  பதநீர் இறக்கும் பனையேறி மரத்து மூட்டில் வழிப்போக்கர் பருகும் பதநீருக்குக் காசு வாங்கியதில்லை.

நிலமுடையவர்கள் இதற்கென்று வயல்கள் எழுதி வைத்தனர்.  (இப்பொழுது வாரிசுகள் விற்றுக்காசாக்கி விட்டனர்) எந்த வழிப் போக்கனும் எவர் வீட்டு வாசலிலும் நின்று குடிக்கத் தண்ணீர் கேட்டால், இரண்டு ஊற வைத்த நெல்லிக்காயுடன் பழஞ்சோற்றுத் தண்ணீர் அல்லது கருப்பட்டித் துண்டுடன் குளிர்ந்த பானைத் தண்ணீர் தந்தனர் பெண்கள். (இப்பொழுது  கேட்டால் நகரப் பெண்கள் ‘திருடனோ’ எனப் பயந்து கதவைத் திறக்கக்கூட மாட்டார்கள்)

‘இந்த உலகம் மனிதருக்கு மட்டும் சொந்தமானதல்ல. ஊர்வன, பறப்பன,  உயிர் வாழ்வன என சகலருக்கும் உரிமை உடையது. விலங்குகள், பறவைகள் இல்லாத உலகில் மனிதனும் உயிர் தரித்து இருக்க இயலாது.  இயற்கையின் சுழற்சி அதைத்தான் நமக்குள் கற்பிக்கிறது.  எனவே, தாய்மார்களே! நகரவாசிகள் தங்கள் பால்கனியில், மொட்டை மாடியில்,  வரந்தாவில், வாசலோரம் பாத்திரங்களில் தண்ணீர் ஊற்றி வைக்கலாம். குருவிகள் வந்து குடிப்பதை நம் குழந்தைகளுக்குக் காட்டலாம்.  நாசமாகிப் போன நம்மைப் போலன்றி நமது சந்ததிகள் விலங்குகள் மீது, பறவைகள் மீது சற்று அன்பும் கனிவும் கொண்டு வளர வாய்ப்பாகும்’ என்று கேட்டுக் கொள்கிறார் நாஞ்சில் நாடன்.  ‘நீரின்றி அமையாது உலகு!’

எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் இனம், எல்லோரும் ஓர் நிறை, எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்றால் சிரிப்பாணி வரவில்லையா நண்பர்களே! “காலை ட்ரிப் பஸ் வரவில்லை என்றால் அன்று பள்ளிக்குப் போகாத, காக்கித்துணிப்பையில் புத்தகங்கள் சுமந்து, மதியச்சாப்பாட்டிற்கு வேறு வழியற்ற, சிறுவனைப் பற்றி நாம் சிந்திப்பது உண்டா? காலை எட்டுமணிப் பேருந்தைவிட்டால்… காலையில் வெறும் வயிறு, மதியம் சத்துணவு என வாழும் கிராமத்து நலிந்த சிறுவனும், ஊட்ட பானங்கள், ஊட்ட உணவுகள் என்று சுறுசுறுப்பாய்த் திரியும் நகரத்துச் செல்ல மாணவனுக்கும் எமது ஆண்டவரே… நேர்மையான போட்டியா?” என நாஞ்சில் நாடன் கேட்கிறார், பதில் அளிக்க நம்மிடம் பதில் இருக்கிறதா தோழர்களே!

பேருந்துகளில் ‘மகளிர் இருக்கை’ பற்றிய குழப்பங்களைப் பற்றி இந்நூலில் பேசப்படுகிறது.  கோவையில் முன்பகுதி, சென்னையில் இடது பக்கம், வேறு சில ஊர்களில் வலது பக்கம் என இடங்கள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. வேற்றுமொழிக்காரர்கள் மட்டுமின்றி, கோவையிலிருந்து இராஜபாளையம் போனால் எவரும் குழம்பிப் போவர்.”

சுமார் 35 வருடங்களுக்கு முன்பே மும்பையில் நெரிசல் மிகுந்த நேரங்களில்,  பேருந்து நிறுத்தங்களில் வரும் பேருந்துகளை எதிர்பார்த்து நீண்ட வரிசையில் நிற்பார்கள். பெரும்பாலும் இரண்டடுக்குப் பேருந்துகள் வரும்.  கீழே ஒரு நடத்துனர், மேலே ஒரு நடத்துநர்.  ஒருவர் இறங்கினால் ஒருவர் மட்டும் ஏறுவார்.  வரிசையில் நின்று பேருந்து வந்ததும் தள்ளல், மோதல், மிதித்தல், நெரித்தல் என எதுவும் கிடையாது. நோயாளி ஏறலாம், வயோதிகர் ஏறலாம், குழந்தைகள் ஏறலாம், கர்ப்பிணிகள் ஏறலாம்.

எந்தச் சிரமமும் இன்றி, கடைசி ஆள் ஏறியதும் இரு வாசல் கம்பிகளையும் பிடித்துக் கொண்டு நடத்துநர் சற்று நேரம் பாதுகாப்பாக நிற்கவும் செய்வார்.  எதன் காரணமாகவோ வரிசை குலைந்து போனால் இரு கைகளாலும் பாதையை மறித்துக் கொண்டு ஒருவரையும் ஏற விடாமல் நிற்பார். பேருந்து நகர்ந்து விடும்” என்று ‘வரிசை’ என்னும் கட்டுரையில் வரிசைப்படுத்துகிறார்.  (உண்மையாகவா ஆசிரியரே! பேருந்தில் ஏற முடியாது, மூன்று சக்கர வண்டியை அல்லவா நான் நம்பி, பொருளைப் பல மடங்கு செலவழித்துக் கொண்டு இருக்கின்றேன். தமிழ்நாட்டில் வரிசையில் வருவதென்பது… கனவில் தான்)

கேரளத்தில் பள்ளி முடிந்ததும், அழகாக மாணவ, மாணவியரை பேருந்தில் கவனமாக ஏற்றிவிடுவார்கள்.  உடன் ஒரு ஆசிரியர் இருந்து இறுதியில் ஏறுவார். ஒன்றாம் வகுப்பு சிறுமி கூட பத்திரமாக வீடு வந்து சேருவாள்.  ஒழுங்காக நின்றால் நேரம் வீணாகாது, சக்தி வீணாகாது. தண்ணீர் லாரி வந்தால் தண்ணீர் பிடிக்கும் காட்சியைக் கண்ணுக்கு முன் கொணரலாம். (சார்! எப்படி சார் இப்படி சரியாக சொல்கிறீர்கள்!  20 வருடங்களுக்கு முன், மதுரையில் தண்ணீர் கஷ்டம். தண்ணீர் லாரி இரவு இரண்டு மணிக்கு வரும். நாங்கள் அடித்துப் பிடித்து எழுந்து போய் வரிசையில் தான் நிற்போம்.  ஒரு 10 பேர்களுக்குப் பின் தான் இருப்போம்.  நேரம் ஆக ஆக நாங்கள் தாம் கடைசியாகி விடுவோம்.  லாரிக்காரனே பாவம் பார்த்து தண்ணீர் கொடுத்தால்தான் உண்டு. பல சமயம் வெறும் குடங்கள்தாம் வீட்டிற்கு வரும்.)

“தான் தின்னிகள்” என்றொரு பிரயோகம் உண்டு.  இங்கே எல்லாம் தனதே, யானே முதல், பிறன் எப்படியும் நாசமாகிப் போகட்டும் என்னும் மனோபாவம். ”புறநானூற்றில், “இந்திரன் அமிழ்தம் இயைவது ஆயினும் இனிது எனத் தமிழர் உண்டலும் இலரே” என்றும், அவர்களால்தான் உலகம் சிறப்பாக இயங்குகிறது என்றும் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி பாடல் கூறுகிறது.

“ஆனால் நம்மில் அடித்துப் பிடித்து, வரிசை குலைத்து, பெற்றுச் செல்கிறவன் திறமைசாலி.  பொறுமை காத்து நிற்பவன் ‘சோப்ளாங்கி’ தலைமுறை தலைமுறையாக இதுவே சமூக நீதியின் வரிசை, வலிமை, திறமை, பொருள் படைத்தவன் வரிசையில் நின்று கனி கொய்து கனி கொள்கிறான். மெலிதானவன், கெட்டிக்காரத்தனம் இல்லாதவன், ஏழை ஆகியோர் காதடைக்கும் பசியோடு கால் சோர்ந்து திரும்பிப் போகின்றனர். “வரிசை, வரிசை என்று வாய்ச்சொல் அருளலன்றி, வரிசை இருந்ததிலை, கிளியே, எம்மக்கள் ஏதறிவார்” என்று ‘வரிசை’ என்னும் கட்டுரையை நிறைவு செய்கிறார் நாஞ்சில் நாடன்.

ஆசிரியர் பேருந்துப் பயணத்தில் நடந்த நிகழ்வொன்றை ஈண்டு நினைவு கூர்கின்றார்.  இவர் கோவையில் வசிப்பவர் அல்லவா. “காந்திபுரத்திலிருந்து பீளமேடு வழியாக ஒண்டிப் புதூர் செல்லும் பேருந்து அது.   அதிகமாக கட்டிடத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்றது பேருந்து.  அதில் புழுக்கம், நெருக்கடி, காற்றுக் காணாது ஒரு குழந்தை அழுதது, தாய் என்ன செய்வாள் பாவம்! சமாதானம் செய்கிறாள் முதலில். கனிந்த குரல், பின் கனத்து வெளிப்படுகிறது.  அழுகை நிற்கவில்லை அது என்ன செய்யும்! நெருக்கம் தந்த சுணக்கம் இது.  உடனே பக்கத்தில் நின்று கொண்டிருந்த (ஏதோ பெரிய அலுவலகத்தில் வேலை செய்பவர் போல் தோற்றம்) பெண்மணி தன் ஹாண்ட் பேக்கிலிருந்த போத்தலை எடுத்து தண்ணீரை அப்பெண்ணிடம் கொடுக்கிறார்.  அந்தத்தாயும் குழந்தைக்குத் தண்ணீர் கொடுத்து தாகம் தீர்க்கிறாள். குடித்து முடித்ததும் குழந்தை சிரித்தது.

“எளியதோர் சம்பவம் தான். ‘வேதாந்தமாக பிரித்துப் பொருள் கொள்ள’ விழையவில்லை நான்.  எனினும் ஔவையார் பாடல் ஒன்று நினைவுக்கு வந்தது.

‘வான்குருவி யின்கூடு வல்அரக்குத் தொல் கறையான்

தேன் சிலம்பி யாவருக்கும் செய்ய அரிதால் யாம் பெரிதும்

வல்லோமே என்று வலிமை சொல வேண்டாம் காண்

எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது!’

அஃதாவது, தூக்கணாங் குருவியின் கூடு, வலிமை உடைய அரக்கு, பழமையான கறையான், தேன், சிலந்திக் கூடு இவை யாவர்க்கும் செய்ய அரிதானவை, எனவே ‘யாம் பெரிய’ என தற்சிறப்புப் பேச வேண்டாம்.  எல்லோருக்கும் ஒவ்வொரு காரியம் எளிதானது, எப்போதும்.அவற்றைவிடவும் மிக எளிதானது சக மனிதர் மீது அன்பு பராட்டுதல். அன்பே சிவம்! அன்பே கிறிஸ்து! அன்பே அல்லா!

 

படத்துக்கு நன்றி.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.