பவள சங்கரி

அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம் – மதுரை

am1

அன்னை மீனாட்சியின் ஆட்சியின் அருமைப் பெருமைகள் அனைத்தும் தெள்ளத் தெளிவாகக்காட்டும் அற்புத ஆலயம் இது.

am
இமைகளற்ற மீன் தன் முட்டைகளை கண் பார்வையின் சக்தி கொண்டே பொரிக்கச்செய்து காத்து வருவதைப்போன்று மீன் போன்று அழகிய வடிவுடை நயனங்களைப் பெற்ற அன்னை மீனாட்சி இப்புவி மக்களை கண்ணிமைக்காது காத்து வருகின்றாள். இதன் காரணமாகவே அன்னை மீனாட்சி என்ற திருநாமமும் கொண்டாள்! அன்னை எழுந்தருளியிருக்கும் புனிதத் தலம் மதுரை மாநகர். பாண்டிய மன்னன் குலசேகரப் பாண்டியனின் கனவில் சிவபெருமான் தோன்றியதால் கடம்பவனம் என்ற வனத்தை அழித்து மதுரை மாநகரையும் இந்த சிவசக்தி தலத்தையும் அமைத்ததாகக் கருதப்படுகிறது. மீனாட்சி அம்மன் கோவிலைச்சுற்றி நான்கு மாடங்கள் அமைந்துள்ளதால் நான்மாடக்கூடல் என்ற அழகிய பெயரும் மதுரைக்கு உண்டு.

am5

45 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் 14 கோபுரங்களும், 5 வாயில்களும் கொண்ட மீப்பெரும் தலம் இது. சுந்தரேசுவரர் ஆலயம் இரண்டு விமானங்களைக் கொண்டது. 32 சிம்மங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகின்றன என்பது சிறப்பு.

மதுரையில் சிவபெருமானின் முதல் திருவிளையாடலாக இந்திரனுக்கு சாபவிமோசனம் தந்த நிகழ்வு அமைந்தது. சுந்தரேசுவரரின் மேலமைந்த விமானம் இந்திரன் தம் பாவத்தைப் போக்கிக்கொள்ள சுயம்புவாகத் தோன்றிய சுந்தரேசுவரரை வழிபட்டு, தம் பாவம் நீங்கப்பெற்று இவ்விமானத்தை அமைத்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. இத்திருவிளையாடல் சித்ரா பௌர்ணமியின்போது நடைபெறுகிறது. இதன் காரணமாக இதே நாளில் உச்சிக்காலத்தில் சிவன் சன்னதி எதிரில், இந்திரன் சிலையை வைத்து சிவனுக்கு தீபாராதனை செய்கின்றனர். இந்த பூசையை இந்திரனே செய்வதாக ஐதீகம்.

am3

தாமரை மொட்டு மலர்ந்தது போன்று ஐந்து புறங்களும் இதழ் விரித்த நிலையில், மத்தியில் மொட்டாக ஆலயமும் சுற்றிலும் இதழ்களாகச் சாலைகளுமாக அழகிய வடிவில் விரிந்து கிடக்கும் பல நூற்றாண்டுக்கால பழமையான ஆலயம், மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம்.

am2

பூவுலகக் கயிலை என்று போற்றப்படும், விலைமதிப்பற்ற பச்சை மரகதத் திருமேனி கொண்ட அன்னை எழுந்தருளியிருக்கும் இவ்வாலயம் 45 ஏக்கர் (180,000 சதுர மீட்டர்கள்) பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. 254 மீட்டர் நீளமும் 237 மீட்டர் அகலமும் கொண்டுள்ள இவ்வாலயம் வரலாற்றுத் தொன்மையும் பிரமிக்கவைக்கும் அற்புதமான சிற்பக்கலை நுணுக்கமும் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆலயத்தின் உட்பகுதியில் ஒரு ஏக்கர் பரப்பளவில் அழகாக மலர்ந்திருக்கும் பொற்றாமரைக் குளமும், தல விருட்சமான கடம்ப மரமும் ஆலயத்திற்கு அழகு சேர்ப்பவை. குளத்தைச் சுற்றி சிவபெருமானின் அறுபத்து நான்கு திருவிளையாடல்களும் அழகுச் சித்திரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கருவறை எழுப்பிய பாண்டிய மன்னனின் உருவம் இக்குளத்தின் வடகரையில் உள்ள தூணில் பொறிக்கப்பட்டுள்ளதோடு இப்படித்துறை “பாண்டியன் படித்துறை’ என்றும் அழைக்கப்படுகிறது. குளத்தின் தென்கிழக்கு மூலையிலிருந்து சுவாமி மற்றும் அம்மன் சன்னதிகளின் தங்க கோபுரங்களை வழிபடலாம்.

மீனாட்சிஅம்மன் கோயில் தோன்றிய காலத்தில் இத்தலம் கடம்ப மரங்கள் நிறைந்த வனமாக இருந்ததாக திருவிளையாடற் புராணம் கூறுகிறது. தனஞ்செயன் எனும் வணிகன் கடம்பமரத்தின் அடியில் சொக்கநாதரை தரிசித்ததாக தல வரலாறு கூறுகின்றது. இதற்கு ஆதாரமாக இன்றளவிலும் சுவாமி சன்னதியில் உட்பிரகாரத்தில் துர்க்கை அம்மன் சன்னதியின் எதிரில் காய்ந்து போன நிலையில் மிகப்பழமையான கடம்ப மரம் ஒன்று இருப்பதைக் காணமுடிகிறது.

600 வருடங்களுக்கும் மேலான கட்டுமானத் திட்டத்தின் மூலம் உருவாகிய இவ்வாலயத்தில் நம்மை அதிசயிக்கவைக்கும் எண்ணற்ற கலையம்சம் மிக்க வேலைப்பாடுகள் நிறைந்த கிட்டத்தட்ட 3 கோடி சிற்பங்கள் உள்ளன. தற்போது நவீன வர்ணப்பூச்சுகளால் இக்கோவில் அலங்கரிக்கப்பட்டிருந்தாலும் பழமையின் சுவடுகள் மாறாமல் மலையென நிமிர்ந்து நிற்பது கண்கொள்ளாக் காட்சி!

தமிழகத்தின் தூங்காநகரம் என்று பேறுபெற்ற மதுரை மாநகரில் அமைந்துள்ள பிரம்மாண்டமான ஆலயம் இது. இக்கோவிலின் மூலவர் சுந்தரேசுவரர் என்றாலும் மீனாட்சி அம்மையே இங்கு ஆட்சி செய்கிறாள் என்பது ஐதீகம். ஆம், சிவபெருமானுக்கு உகந்தது சிதம்பரம் கோவில் என்பதுபோல், மீனாட்சி அம்மனுக்கு பெருமை சேர்ப்பது மதுரை. 2500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இவ்வாலயம் சிவபெருமான் நடராசராக நடனம் ஆடிய பேறுபெற்றவைகளுள் ஒன்று. வெள்ளி சபை என்று குறிக்கும் வகையில் இக்கோவில் நடராசர் திருமேனி வெள்ளியால் ஆனவர். திருஞான சம்பந்தரால் பாடல்பெற்ற தலம் இது.

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே

என்று திருநீற்றுப் பதிகம் பாடிய பேறுபெற்ற ஆலயம் இதுதான். எவராலும் தீர்க்கமுடியாத, கூன் பாண்டியனின் வெப்பு நோய் அகலற்பொருட்டு, குலச்சிறையாரின் ஆலோசனையின் பேரில் திருஞானசம்பந்தப் பெருமானாரை வேண்டி அழைத்துவருகின்றனர். அவன் வெப்பு நோயை விலக்க அனல் வாதம் புனல் வாதம் செய்து, பாண்டி நாட்டில் சைவத்தை நிலைபெறச் செய்யும்பொருட்டு பாடியருளியது இத் திருநீற்றுப் பதிகம் .

இது காரணம்கொண்டே சிவன் சன்னதி எதிரேயுள்ள கொடிமரத்தில் வழக்கமாக பொறிக்கப்படும் விநாயகர், நந்தி உருவங்களுக்குப்பதிலாக சம்பந்தர் உருவம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. திருநீற்றுப்பதிகம் பாடி மடைப்பள்ளி சாம்பலை கொண்டே கூன் பாண்டியனின் வெப்பு நோயைக் குணமாக்கிய பேறுபெற்றவர். இந்த வகையில் சமண மதத்தினருடன் போட்டியிட்டு மீண்டும் சைவ சமயத்தை நிலைநாட்டி மதுரையில் சிவ வழிபாடு தழைப்பதற்கு காரணமாக இருந்தவர் சம்பந்தர் என்பதாலேயே சுவாமி சன்னதி கொடிமரத்தில் சம்பந்தரை வடித்துள்ளனர்.

ஆடி வீதிகளில் நாற்புறங்களும் ஒன்பது நிலைகளைக்கொண்ட நான்கு உயர்ந்த கோபுரங்களும் வெவ்வேறு காலகட்டங்களில் கட்டப்பட்டுள்ளன. தெற்கு கோபுரம் 160 அடியில் நெடிதுயர்ந்து நிற்பதைக் காணலாம். கிழக்குக் கோபுரம் கி.பி. 1216 – 1238 ஆண்டிலும், மேற்கு கோபுரம் கி.பி. 1323 ஆம் ஆண்டிலும், தெற்கு கோபுரம் கி.பி. 1559 ஆம் ஆண்டிலும், வடக்கு கோபுரம் கி.பி. 1564 – 1572 ஆம் ஆண்டிலும் கட்டப்பெற்று முடிக்கப் பெறாமல், பின்னர் 1878 ஆம் ஆண்டில் தேவகோட்டை நகரத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த வயிநாகரம் குடும்பத்தினரால் முடிக்கப்பட்டதாகவும் வரலாறு மூலமாக அறிய முடிகிறது.

ஏனைய பிற ஆலயங்களுக்கு இல்லாத ஒரு பேறு மீனாட்சியம்மன் கோயிலுக்கு உண்டு. அதாவது தமிழ் மாதங்களில் நடக்கும் விழாவின்போது, சுவாமியும், அம்மனும் எந்தெந்த வீதிகளில் எழுந்தருளுகிறார்களோ அந்தந்த வீதி, அம்மாதத்தின் பெயரிலேயே அழைக்கப்படுகிறது. ஆடி, சித்திரை, ஆவணி, மாசி வீதி என கோயிலைச் சுற்றி நான்கு வீதிகள் இருக்கின்றன. சிவபெருமானின் சிறப்பான திருவிளையாடல்களில் ஒன்றான “பிட்டுக்கு மண் சுமந்த லீலை’ நடந்த ஆவணி வீதி மட்டும், மூல நட்சத்திரத்துடன் இணைந்து ‘ஆவணி மூல வீதி’ என அழைக்கப்படுகிறது. இவ்விழாவின் போது சுவாமி வீதியைச் சுற்றி வலம் வருகிறார்.

மீனாட்சி அம்மன் ஆலயத்தில் சொக்கநாதர் கருவறை 48 ஆண்டுகளாக மூடப்பட்டு இருந்ததாக வரலாறு கூறுகின்றது. 1330ஆம் ஆண்டு அன்னியர் படையெடுப்பின் போது மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் திருவுருவங்களை நாசம் ஏற்படுத்த முயற்சி நடந்திருக்கிறது. இதன் காரணமாக கருவறையில் இருந்த சிவலிங்கத்தை மூடி அதன்மேல் கிளிக்கூண்டு ஒன்றை அமைத்து மணலைப் பரப்பி, கருவறை வாசலை கற்சுவர் கொண்டு மூடியும்விட்டனர். பின் கருவறைக்கு முன்னால் அமைந்துள்ள அர்த்த மண்டபத்தில் வேறொரு சிவலிங்கத் திருமேனியை அமைத்து வைத்துள்ளனர். அன்னியர்கள் அந்தச்சிலைதான் சுந்தரேசுவரர் என நினைத்து அதைச் சிதைக்க முற்பட்டனர். சிதைக்கப்பட்ட அந்த சிவலிங்கமும் தற்போது சுவாமி சன்னதியை ஒட்டி உள்ளதைக் காணலாம். சுந்தரேசுவரர் கருவறை கிட்டத்தட்ட 48 ஆண்டுகள் தொடர்ந்து அடைக்கப்பட்டு பூசை செய்யப்படாமல் இருந்த நிலையில், கம்பண்ணர் என்ற வீரர் அன்னியர்களை வென்று மீண்டும் கருவறையைத் திறக்க ஏற்பாடு செய்துள்ளார். 48 ஆண்டுகளுக்குப் பிறகு கருவறையை திறந்தபோது, முன்பு பூசப்பட்ட சந்தனத்தின் மணம் மாறாமல் இருந்ததோடு, சிவலிங்கத்திருமேனியின் இருபுறமும் ஏற்றி வைக்கப்பட்ட வெள்ளி விளக்குகள் அணையாமல் எரிந்துகொண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. இது இவ்வாலயத்தின் அதிசயிக்கத்தக்கதொரு செய்தி.

அம்மன் சன்னதி நுழைவு வாயிலை ஒட்டி உள்ளது ஊஞ்சல் மண்டபம் . ராணி மங்கம்மாள் இதை உருவாக்கியுள்ளார். ஊஞ்சல் மண்டபத்தின் எதிர்புறம் தெப்பக்குளத்தின் மேற்குக் கரையில் மங்கம்மாள் மற்றும் நாயக்க அரசர்களின் தளபதியாகிய ராமப்ப அய்யர் போன்றோருக்குச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அருகில் உள்ள சங்கிலி மண்டபத்தில் சுக்ரீவன், வாலி, கிராதார்ச்சுனர் ஆகியோரின் சிலைகள் உள்ளன. சுவாமி சன்னதிக்கு வெளியே, கொடிமரத்தின் அருகே அமைந்துள்ள, தற்போது தியான மண்டபமாக உள்ள நூறு தூண்கள் கொண்ட நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. 1526ஆம் ஆண்டில் சின்னப்ப நாயக்கர் என்பவர் இதைக் கட்டியுள்ளார். நடராசப்பெருமானின் திருநடனக் காட்சியையும் இங்கு காணலாம்.

கிழக்கு கோபுரத்தின் வழியாக அம்மன் சன்னதிக்குள் நுழையும்போது முதலில் வரும் மண்டபம் அட்டசக்தி மண்டபம். இதில் உள்ள எட்டு தூண்களில் கவுமாரி, ரௌத்ரி, வைசுணவி, மகாலட்சுமி, எக்குரூபணி, சியாமளா, மகேசுவரி, மனோன்மணி ஆகிய எண்சக்திகள் காட்சியளிப்பது சிறப்பு. அட்டமா சக்திகளையும் வழங்கும் அன்னையர் இவர்களே.

இதனை அடுத்து அமைந்துள்ளது 160 அடி நீளம் கொண்ட மீனாட்சி நாயக்கர் மண்டபம். இங்கு ஆறு வரிசைகளாகத் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருமலைநாயக்க மன்னரின் அமைச்சரான மீனாட்சி நாயக்கர் என்பவர் கட்டியதால் இம்மண்டபம் மீனாட்சி நாயக்கர் மண்டபம் என்று வழங்கப்பெற்றுள்ளது. அடுத்து, கடந்தை முதலியார் என்பவர் கட்டிய முதலி மண்டபம். இங்கு சிவபெருமான் பிட்சாடணராக திருக்காட்சியளிக்கிறார். மோகினியின் சிற்பத்தில் ஆடை மடிப்புகள் மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளவை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு கோபுரத்தின் எதிரே, 133 அடி நீளமும் 105 அடி அகலமும் கொண்ட புது மண்டபம், 25 அடி உயரமுள்ள 500 தூண்களுடன் கட்டப்பட்டுள்ளது. “வசந்த மண்டபம்”என்றும் இதைக் கூறுகிறார்கள். கோடைக்காலத்தில் இந்த மண்டபத்தின் இரு பக்கமும் உள்ள பள்ளங்களில் குளிர்ந்த நீரை நிரப்புவதால் மண்டபத்திற்கு உள்ளே அமர்ந்திருப்பவர்களுக்கு வெப்பம் நீங்கி குளிர்க்காற்று வீசும்.

சுந்தரேசுவரர், பிரம்மன், இந்திரன், அர்த்தநாரீசுவரர், ஊர்த்துவதாண்டவர், சங்கரநாராயணர், அதிகார நந்தி, கருங்குருவிக்கு உபதேசித்த லீலை போன்ற எண்ணிலடங்காச் சிற்பங்கள் கண்ணைக்கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல சுவாமி சன்னதியின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கம்பத்தடி மண்டபத்தில் கயிலாசரூடர், சந்திரசேகர், இடபாந்திகர், லிங்கோத்பவர், சாமதகனர், நடராசர், சுகாசனர், காலசம்காரர், மார்க்கண்டேயர், சோமசுந்தரர், தட்சிணாமூர்த்தி போன்ற பல திருவுருவத்திருமேனிகள் கோலாகலமாகக் காட்சியளிக்கின்றன.

மீனாட்சி அம்மன் கோயிலில் மிக முக்கியமாகக் கருதப்படும் ஆயிரங்கால் மண்டபம் நாயக்க மன்னர்களின் தளவாயாக இருந்த அரியநாத முதலியார் என்பவரால் அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு கலைக்கூடமாக, அதாவது தொன்மையான பொருட்களின் களஞ்சியமாகவே இருக்கிறது. உலகப்பிரசித்தி பெற்ற இசைத்தூண்கள் இங்குதான் அமைந்துள்ளன.

முக்குறுணி விநாயகர்

amv

மீனாட்சி அம்மன் ஆலயத்தில் திரும்பிய புறமெங்கும் ஏராளமான விநாயகர் சிலைகள் இருப்பினும் முக்குறுணி விநாயகரே உருவத்தால் பெரியவர். ஒரு குறுணி என்பது 4 படி, அதாவது 6 கிலோ. இந்த விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தி நாளில், 18 கிலோ பச்சரிசி மாவால் அதாவது மூன்று குறுணி பச்சரிசி மாவினால் ஆன கொழுக் கட்டை படைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதனாலேயே இவருக்கு முக்குறுணி விநாயகர் என்ற பெயரே நிலைத்துவிட்டது. திருமலை நாயக்கர் வண்டியூர் எனும் இடத்தில் தெப்பக்குளம் வெட்டியபோது பூமிக்குள் இந்த விநாயகர் சிலையை கண்டெடுத்துள்ளனர். அதை மீனாட்சியம்மன் கோயிலில் நிறுவச் செய்துள்ளார். இதற்கு ஆதாரமாக இந்த விநாயகர் முன்பு உள்ள நிலை விளக்குகளில் திருமலை நாயக்கர் மற்றும் அவரது குடும்பத்தினரின் உருவங்களைக் காணமுடிகிறது. 1877 ஆம் ஆண்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மிகப்பெரும் அளவில் குடமுழுக்கு நடந்துள்ளது குறித்து டாக்டர் உ.வே.சாமிநாத அய்யர் குறிப்பிட்டுள்ளார்.

தெற்கு கோபுரத்தைக் கடந்து உள் நுழையும் இடத்தில் பக்தர்கள் திருநீறு கொண்டு அர்ச்சனை செய்யும் விபூதி விநாயகர் அருள்பாலிக்கிறார். மீனாட்சியம்மன் சன்னதிக்கு இடதுபுறத்திலும் பிரகாரத்திலும் இரட்டை விநாயகர் சன்னதி இருக்கிறது.

இரணியனைக் கொன்ற நரசிம்மர் கோபம் தணியாமல் இங்குமங்கும் அலைந்தார். நரசிம்மரின் கோபாவேசத்தைத் தணிக்கும்படி தேவர்கள் சிவபெருமானை தொழுது நின்றபோது, பெருமான் மனிதன், மிருகம், பறவை என்று பல்வேறு உருவங்களுடன் வந்து நரசிம்மரைத்தழுவி அமைதிப்படுத்துகிறார். இவ்வழகிய காட்சிகள் திருக்கல்யாண மண்டபத்திற்கு எதிரில் உள்ள தூணில் மிகச்சிறப்பாக ஓவியமாக தீட்டப்பட்டுள்ளன.

அன்னையின் மீது பிள்ளைத்தமிழ் பாடிய குமரகுருபரருக்கு குழந்தை வடிவில் காட்சி கொடுத்து தம் முத்து மாலையையும் பரிசாக அளித்த அருட்கடலான அன்னையின் அற்புதக்கோலங்கள் அழகிய ஓவியமாக அம்மன் ஆலயத்தின் முன்புள்ள ஆறு கால் மண்டபத்தில் காணலாம்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, தொழில்நுட்பம் பெரிதும் வளர்ச்சியடையாத அந்த காலகட்டத்திலேயே தமிழக சிற்பக் கலைஞர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் வகையில், மீனாட்சிசுந்தரேசுவரர் ஆலயத்தில் வெகு நேர்த்தியான வடிவமைப்பு ஆச்சரியமேற்படுத்தக்கூடியது. இந்த ஆலயம் 8 கோபுரங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. 8 கோபுரங்களும், நான்கு முனை சதுர வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. ஆலயத்தின் கிழக்கு கோபுரத்தின் நடுவிலிருந்து மேற்கு கோபுரம் நோக்கி ஒரு கோடு கிழித்தால், அது சரியாக சிவலிங்கத் திருமேனியின் நடு உச்சி வழியாக போகுமாம். அதேபோன்று வடக்கு தெற்கு கோபுரங்களுக்கு கோடிட்டுப் பார்த்தால் சுவாமி சன்னதியை இரண்டாக பகிர்ந்து செல்லுமாம்.

6ஆம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த பாண்டிய மன்னன் குலசேகரன் உருவாக்கிய மதுரை நகரில் அமைந்துள்ள மீனாட்சி கோவில் பாண்டியர் ஆட்சியில் உருவாக்கபட்ட போதிலும் தற்போது இருந்து வரும் இக்கட்டிட அமைப்பு நாயக்கர் ஆட்சிக்கு உட்பட்ட 17ம் -18ம் நூற்றாண்டில் கட்டிமுடிக்கப்பட்டதாகவே இத்தலத்தின் வரலாறு குறிப்பிடுகின்றது. தொன்மையான இவ்வாலயம் திராவிட நாகரீகத்திற்கும், சிற்பக் கலைக்கும் ஓர் எடுத்துக்காட்டாக விளங்குவதே நிதர்சனம். கோவிலின் தலவரலாற்றை எடுத்துரைக்கும் முக்கிய நிகழ்ச்சி என்றால் அது மிகப்பிரபலமான சித்திரைத் திருவிழா என்பதும் உண்மை. ஆனி மாதம் ஊஞ்சல் உற்சவம், ஆவணி மூலம், நவராத்திரி விழா, கார்த்திகை தீபத்திருவிழா, மார்கழி உற்சவம், தை தெப்பம், பங்குனி உத்திரம் ஆகிய திருவிழாக்களும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

தல வரலாறு:

குழந்தையில்லாத மலையத்துவச பாண்டியனும் அவன் மனைவி காஞ்சனமாலையும் புத்திர யாகம் செய்த போது தீயிலிருந்து பார்வதி தேவி குழந்தையாகத் தோன்றுகிறாள். ஆனால் பார்வதிக்கு மூன்று மார்பகங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றான் பாண்டிய மன்னன். அந்த நேரத்தில் அசரீரியாக ஒரு குரல் ஒலித்தது. அவள் தன் கணவனைக் காணும் அத்தருணமே அந்த மூன்றாவது மார்பு மறைந்துவிடும் என்றது அக்குரல் . சமாதானமடைந்த பாண்டிய மன்னன் மனமகிழ்ச்சியுடன் அக்குழந்தைக்கு தடாகை என்று பெயரிட்டு வளர்த்து வந்தான். போர்க்கலை,சிற்பக்கலை, குதிரையேற்றம் போன்ற ஆய கலைகள் அறுபத்து நான்கையும் சிறப்புறக் கற்றுத் தேர்ந்தாள் அவள். தடாகைக்கு முடிசூட்ட நினைத்த பாண்டிய மன்னன் அக்கால வழக்கப்படி தடாகை, பிரம்மனின் சத்தியலோகத்தையும், திருமாலின் வைகுந்தத்தையும், கைலாயத்தையும் வென்றுவர அனுப்பிவைத்தான். முதல் இரண்டு உலகையும் வென்றுவந்த தடாகை கைலாயத்திற்கு சென்றபோது சிவபெருமானைக் கண்டு நாணிநின்ற நேரம் அவளுடைய மூன்றாவது மார்பு மறைந்துவிட்டது. இதன் காரணத்தை அறிந்த தடாகை, தான் பார்வதி தேவியின் மறுவடிவம் என்பதையும் உணர்ந்து கொண்டாள். பின் சிவபெருமானுடன் மதுரை வந்து முடிசூட்டிக்கொண்டு சிவபெருமானை மதுரையம்பதியில் திருமால் தலைமையில் மணந்துகொள்கிறாள்.

2500 ஆண்டுகால பழமை வாய்ந்த இக்கோவிலின் மூலவரான சிவபெருமான் நடராசராக திருநடம் புரிந்த ஆலயங்களுள் இதுவும் ஒன்று. இது வெள்ளி சபை. இக்கோவில் நடராசர் திருமேனி வெள்ளியால் ஆனவர்
. பல இடங்களில் இடது கால் தூக்கி ஆடிய சிவபெருமான், மதுரையில் பாண்டிய மன்னனுக்காக வலது கால் தூக்கி ஆடினார். மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்திற்கு வந்திருந்த வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகிய முனிவர்கள் விருந்து சாப்பிடவில்லை. காரணம் இவ்விருவரும் சிதம்பரத்தில் நடராசரின் திருநடனம் கண்டபின்பே உண்ணும் வழக்கமுடையவர்கள். இதனையேற்று சிவபெருமானார் அங்கேயே சிவதாண்டவக் காட்சியளித்து அவர்களை மகிழ்வித்து விருந்து உண்ணச்செய்தார்.

இக்கோவிலில் மட்டுமே வலதுகாலை தூக்கி ஆடிய கோலத்தில் இருக்கும் நடராசப் பெருமானை தரிசிக்க முடியும் என்பது சிறப்பு. அதாவது சிவத்தலங்களில் இங்கு மட்டுமே சிவனின் பாதத்தை தரிசிக்கலாம் என்பது விசேசம். மதுரையை ஆண்ட ராசசேகர பாண்டியன் தன்னுடைய நடனக்கலை பயிற்சியை வெற்றிகரமாக முடித்துவிட்டு ஐயனிடம் ஆசிபெற வந்தவன், சில காலம் நடனம் பயின்ற தமக்கே இத்துணை சிரமமும், வலியும் இருக்கும்போது, காலம் முழுவதும் காலைத் தூக்கியவண்ணம் வைத்திருக்கும் பெருமானுக்கு எத்துணை துன்பம் இருக்கும் என்று மனமுருக வேண்டி, ஈசன் தம் திருப்பாதம் மாற்றி ஆடவேண்டும், இல்லையேல் தாம் உயிர் துறப்பது நிச்சயம் என்று வீழ்ந்தபோது அம்மன்னனை ஆட்கொள்ளும்பொருட்டு தம் வலப்பாதம் தூக்கி ஆடுகிறார்.

தருமி என்ற புலவருக்காக, சிவபெருமானே நேரில் வந்து தரிசனம் தந்து தமிழ் மொழியின் புகழையும் நிலைநாட்டிய திருத்தலமும் இதுதான். நக்கீரர் வாழ்ந்த புண்ணிய பூமியும் இதுதான். இராமர், இலக்குவண் மற்றும் பல தேவர்களும், முனிவர்களும் தவம் புரிந்த புண்ணிய தலமும் இதுவே. மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம், பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற்புராணம், அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் போன்றவைகள் இத்தலம் குறித்த சிறப்பான பதிகங்கள்.

1981 ஆம் ஆண்டு 14.5 அடி உயரமான, உரூ.14,07,093.80, (அப்போதைய மதிப்பில்) உருவாக்கப்பட்ட மீனாட்சியம்மையின் தங்க இரதம் காண்போரை தம் வசம் இழக்கச் செய்யக்கூடியது என்றால் அது மிகையில்லை.

ககோளம் – பூகோளம்

amk

மீனாட்சி அம்மன் ஆலயத்தின் பழைய திருமண மண்டபத்தில் ககோளம், பூகோளம் என்ற இரண்டு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த ஓவியங்களைக் காணும்போதும், இதன் விளக்கங்கள் குறித்து அறியும்போதும் ஆச்சரியத்தில் நம் கணகள் விரியாமல் தவிர்க்கவியலாது. இந்த ஓவியங்களில் பாற்கடல், தயிர்க்கடல், நெய்க்கடல், தேன்கடல், சுத்த நீர் கடல் போன்றவைகளைக் காணும்போது இதன் அடிப்படை தத்துவங்கள் மற்றும் அறிவியல் காரணங்கள் குறித்து எண்ணற்ற கேள்விகள் எழாமல் இல்லை. இதற்கான விளக்கங்கள் ஆய்வுக்கு உட்பட்டவை என்றே எண்ணத்தோன்றுகின்றது.

ககோளம் : சூரிய மண்டலம் 9 ஆயிரம் யோசனை (ஒரு யோசனை என்பது 24 கி.மீ.) பரப்பளவு கொண்டதாக இருந்திருக்கிறது. அதைச்சுற்றி இரண்டாயிரத்து எழுநூறு யோசனை பரப்பு கொண்ட வளையம் இருந்ததாம். நாம் வாழும் பூமி 50 கோடி யோசனை பரப்பளவு உடையதாக இருந்திருக்கிறது. இந்த பூமியின் நடுவில் ஜம்புத்வீபம் என்ற தீவு இருந்திருக்கிறது. அந்தத் தீவில்தான் மேருமலை அமைந்திருந்ததாம்.

இந்த மேரு மலைக்கு கிழக்கே இந்திர பட்டணமும், தெற்கில் எமபட்டணமும், மேற்கில் வருண பட்டணமும் இருந்தனவாம். இந்த பட்டணங்களில்தான் உலகைக்காக்கும் தேவர்கள் வசிப்பார்களாம். மேலும் இந்த மண்டலங்களில் வேறு எந்தெந்த தீவுகள், வீதிகள் இருந்தன என்பன குறித்த விவரங்களும் இந்த ககோள ஓவியத்தில் பதியப்பட்டிருப்பது ஆச்சரியத்தின் உச்சம். இதைத்தான் தேவலோகம் என்றார்கள் போல் உள்ளது. அசுவினி, பரணி, கிருத்திகை, மிருகசீரிஷம் ஆகிய நான்கு நட்சத்திரங்களைக் கொண்ட நாகவீதி, புனர் பூசம், பூசம், ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்கள் அடங்கிய ஐராவத வீதி, ஆர்ஷ வீதி, கோ வீதி, திருவோணம், அவிட்டம், சதயம் ஆகியவை இணைந்த ஜரத்துருவ வீதி, அஸ்தம், சித்திரை, சுவாதி அடங்கிய மற்றொரு நாகவீதி, விசாகம், ஜேஷ்டம், அனுஷம் ஆகியவை அடங்கிய மிருகவீதி, மூலம், பூராடம், உத்திராடம் ஆகியவை அடங்கிய வைஸ்வாநர வீதி உள்ளிட்ட பல வீதிகள் இந்த ஓவியங்களில் பதியப்பட்டுள்ளன.

பூகோளம் : சுவேதத்வீபம் என்னும் கிரகத்தில்தான் பாற்கடல் உள்ளது என்றும் பூமியில் உப்புநீர் கடல் உள்ளதுபோன்று ஏனைய மற்ற கிரகங்களில் பலவகைப்பட்ட சமுத்திரங்கள் இருப்பதாக வேத இலக்கியங்களிலிருந்து அறிய முடிகிறது. இந்த கடல்களுக்குள் கசேறு, இந்திர தீவு, தாமிரபரண தீவு, கபஸ்திமம், நாகத்தீவு, சவுமிய தீவு, காந்தர்வ தீவு, பாரத்தீவு ஆகியவைகள் இருந்தனவாம். இவை பற்றிய மேலதிகத் தகவல்களும் இந்த ஓவியங்கள் மூலம் அறியலாம்.

அடுத்த முறை மீனாட்சியம்மன் சன்னதிக்குச் செல்லும்போது தவறாமல் இந்த ஓவியங்களைக் கண்டுகளித்து வாருங்கள்!

மாணிக்க மூக்குத்தி அணிந்த மரகதவல்லி!

ame

அன்னை மீனாட்சி மதங்களுக்கு அப்பாற்பட்டு அன்பிற்கு மட்டுமே கட்டுப்பட்டவள்!

நம் இந்தியா பிரித்தானியர் ஆட்சியில் கட்டுண்டு இருந்த காலம் அது. 1812ஆம் ஆண்டு ரஸ் பீட்டர் என்பவர் மதுரையின் ஆளுநர் பொறுப்பில் இருந்தார். நல்ல மனமும் நேர்மையான குணமும் கொண்ட ஆட்சியாளர் அவர். மக்கள் கொலை, கொள்ளை, திருட்டு போன்ற அச்சங்கள் இன்றி நிம்மதியாக வாழ்ந்த காலமும் அதுதான் என்பதால் மக்கள் அவரை அன்போடு “பீட்டர் பாண்டியன்” என்று அழைத்தனர். ஒரு நாள் இரவு நேரம். இடி மின்னலுடன் மழை கொட்டிக்கொண்டிருந்தது. பீட்டர் ஏதோ ஆழ்ந்த யோசனையில் இருந்தார். இந்த நேரத்தில் சிற்றாடை கட்டிய ஒரு அழகிய சிறுமி மழையில் நனைந்தவாறு மளமளவென்று பீட்டர் இருந்த அறைக்குள் வந்தவள் கண்களில் பேரொளி மின்னியவாறு இருந்தது. அவள் அணிந்திருந்த மூக்குத்தியோ அதனோடு போட்டி போட்டு மின்னிக்கொண்டிருந்தது.

இச்சிறுமியைக் கண்டவுடன் சற்றே ஆச்சரியப்பட்டவர், அவளுக்கு ஏதோ பிரச்சனை போலும், இந்த அகால இரவில் தம்மைத் தேடி வந்திருக்கிறாளே என்றே எண்ணியிருந்தாராம். அவளிடம் என்ன பிரச்சனை என்றும் கேட்டாராம். ஆனால் அவளோ பதில் ஏதும் சொல்லாமல் அவர் கையைப்பிடித்து இழுத்து தரதரவென வெளியே அழைத்து வந்துவிட்டாளாம். அப்போதும் அவள் தன் பிரச்சனைக்காக எங்கோ அழைத்துச் செல்கிறாள் என்றே நினைத்தாராம் அவர்.

அந்த மாளிகையை விட்டு அவர்கள் வெளியே வந்ததுதான் தாமதம், ‘டமார்’ என்ற பேர் இரைச்சலுடன் கண்கள் கூசும் பெரும் மின்னல் ஒளியும் வெட்டியதாம். திடுக்கிட்டு சத்தம் வந்த திசையில் பார்த்தவர் அதிர்ச்சியில் அப்படியே வாயடைத்துப் போனாராம். காரணம் பெரும் மின்னலும் இடியும் தாக்கி அவர் இருந்த அந்த மாளிகை தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததாம். சற்று நேரத்தில் அவர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அக்கட்டிடம் மொத்தமாக இடிந்து தரை மட்டமானதாம்.

அதிர்ச்சியில் உறைந்து நின்றவர் மீண்டு வந்து சுய உணர்வு பெற்று திரும்பிப் பார்த்தபோது அந்தச் சிறுமி அங்கே இல்லை.அவர் சுற்றும் முற்றும் தேடிப் பார்த்தபோது அவள் வெகு தூரத்தில் சென்று கொண்டிருந்ததைப் பார்த்தவர் வேக வேகமாகப் பின் தொடர்ந்தார். ஆனால் அந்தச் சிறுமியோ ரஸ் பீட்டர் எட்டிப் பிடிக்க முடியாதபடி வேகமாக சென்று கொண்டிருந்தாள். இப்படியே இருவரும் மதுரை மீனாட்சியம்மனின் மேலைக் கோபுர வாயிலை அடைந்திருக்கின்றனர். முன்னால் சென்ற சிறுமியோ ரஸ் பீட்டரை சற்றே திரும்பிப் பார்த்தவள், மெல்ல புன்னகைத்தாள். பின் கோவிலுக்குள் நுழைந்தவளைக் காணாமல் தேடிக்கொண்டே கோயிலுக்குள் நுழைந்தார் ரஸ் பீட்டர். சத்தம் போட்டு கூப்பிட்டும் அவள் வரவில்லை. எங்குமே அவள் தென்படாமல் மாயமாகிவிட்டிருந்தாள் அவள்.வெகுநேரம் ஆலயத்தில் அமர்ந்தவாறே காத்திருந்த ரஸ்பீட்டர் பின்னர்தான் உணர்ந்தார், சிறுமியாக வந்து தன் உயிரைக் காத்தது அந்த மீனாட்சியம்மைதான் என்பதை. அன்னை மீனாட்சியின் திருவருளை எண்ணி வியந்தவர் அவள்மீது தீவிர பக்தி கொண்டார். அந்த அன்பின் காரணமாக மீனாட்சி அம்மனுக்கு பல ஆபரணங்களைக் காணிக்கையாக்கினார். ரஸ் பீட்டர் தன்னுடைய இறுதிக் காலத்திலும் அன்னையின் பார்வையிலேயே இருக்கவேண்டும் என்று வேண்டினார். அது போலவே ரஸ் பீட்டர் இறந்த பின்பு அவரது உடல் செயிண்ட் பீட்டர் தேவாலயம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. அன்னை ஆலயத்தை நோக்கியவாறு இருக்குமாறு அவர்தம் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்றும் மதுரையில் ரஸ் பீட்டரின் சமாதியை செயிண்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் காணலாம். அன்னைக்கு அணிவிக்கப்படும் அவரது நகைகளையும் காணலாம்.

கிளி ஏந்திய அன்னை!

ame1

அன்பே உருவான அன்னையின் கையில் ஏன் இந்த கிளி எப்போதும் இருக்கிறது தெரியுமா? பக்தர்கள் மனமுருகி அம்மனிடம் வைக்கும் வேண்டுதல்களை இந்தக் கிளி திரும்ப திரும்பச் சொல்லி நினைவூட்டிக்கொண்டே இருக்குமாம். அன்பே உருவான அன்னையும் விரைவில் தம் பக்தர்களின் துயர் களைகிறாள்.

மதுரை மீனாட்சியம்மன் ஆலயம் ஏழு உலக அதிசயங்களில் ஒன்றாகத் தேர்வு செய்யப்படுவதாக இருந்தது என்பதும் சிறப்பான தகவல். இதன் மூலம் இவ்வாலயத்தின் தனிப்பெரும் சிறப்புகளை உணரமுடிகிறது.

நன்றி – சொற்கோயில் ஆன்மீக இதழ்

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “நான்மாடக்கூடல் நாயகி!

  1. பல நூறு முறைகள் புறக்கண்களால் கோவிலைப் பார்த்திருந்தாலும், உங்கள் கட்டுரை அகக்கண்களையும் அறிவுக்கண்களையும் திறப்பதாக அமைந்துள்ளது… வாழ்த்துக்கள். !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.