தமிழ்த்தேனீ

                                            உ

 காயத்ரி  அம்மாகிட்டே  பேசிண்டு இருந்தா  எனக்கும் உன் மாப்பிள்ளைக்கும்  சண்டை தெரியுமா? நான் அவர்கிட்டே  சரியா  பேசி  ஒரு மாசமாச்சு  என்றாள்  ,  ஏண்டி  இப்பிடி  மாப்பிள்ளை ரொம்ப நல்லவர் ஆச்சே  ,அவர்கிட்டே என்ன  சண்டை  என்றாள் அம்மா  !   ஆமா  உன்  மாப்பிள்ளையை  நீதான் மெச்சிக்கணும் . ஒண்ணுகூட   எனக்கு சாதகமா  செய்ய மாட்டார் , எதுக்கெடுத்தாலும் நாந்தான் அடங்கிப் போகணும்   எதுக்குமே  அவர் எனக்கு ஆதரவா பேசி இந்த ஒரு வருஷத்திலே நான் பாக்கலே.  அவருக்கும் எனக்கும் ஒத்துவராது  அதுனாலே  நாங்க ரெண்டு பேரும்  விவாகரத்து செஞ்சிடலாம்னு இருக்கோம் என்றாள் காயத்ரி.

என்னடி சொல்றே இதுதான் உங்களுக்கு  தலை தீபாவளி, கல்யாணம் ஆகி  ஒரு வருஷம் கூட  ஆகலே அதுக்குள்ளே  ஒருத்தரை ஒருத்த என்ன புரிஞ்சிண்டீங்க. வாழ்க்கைங்கறது  சினிமா பாக்கறா மாதிரி இல்லே  இடைவேளை விட்டுட்டு  மறுபடியும் பாக்கறதுக்கு,  இப்பிடியெல்லாம் ஒளறாதே  நல்ல நாளும் அதுவுமா எனக்கு பகீர்ங்கறது, அந்த  பகவான்தான்  உனக்கு நல்ல புத்தி குடுக்கணும்  ,முட்டாள்தனமா  ஏதாவது செஞ்சுடாதே  பொறுமை வேணும் பொம்மனாட்டிக்கு  என்றாள் அம்மா. சரி  சரி  சீக்கிரமா வா  இதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம், எல்லாம் சரியாயிடும். அவசரப்பட்டு எந்த  முடிவுக்கும் வந்துடாதே  . அவசரமா  முடிவெடுத்துட்டு  அப்புறம்  காலம் காலமா வருத்தப்பட்டாலும்  அதெல்லாம் சரியாகாது,  அங்கே கூடத்திலே உங்க அப்பா  மாப்பிள்ளை  எல்லாரும்   நலங்கு இடப்போறோம்னு காத்திண்டு இருக்கா  என்றபடி  காயத்ரியையும்  அழைச்சிண்டு கூடத்துக்கு  வந்தாள். எல்லா  கவலையையும்  மனசுக்குள்ளே  வெச்சிண்டு  ஆனா சிரிச்ச முகமா  அம்மா வந்து  எல்லார் எதிரிலேயும் வந்து உக்கார்ந்தாள் .

வாங்கோ மாப்பிள்ளை  நீங்களும் வந்து உக்காருங்கோ   காயத்ரி மாப்பிள்ளை பக்கத்திலே  வந்து உக்காரு என்றாள். காயத்ரியும்  அரைகுரை மனசோடு வந்து  உட்க்கார்ந்தாள் ,  எதிரே  தாம்பூலத் தட்டிலே  வெற்றிலை பாக்கு , வரளி மஞ்சள் வாழைப்பழம் அரைத்த  விழுது மஞ்சள், குங்குமம்,   ஒரு கிண்ணத்திலே நல்லெண்ணெய் போன்ற  எல்லாம் நிறைந்து இருக்கிறது.   மணைகளில்  கோலம் போட்டு  வைத்திருக்கிறது, வெளி வாயிலில்   புழக்கடை வாயிலில்  கோலம் போட்டு பளிச்சென்று இருக்கிறது. வீடே  ஒளிமயமாக  இருக்கிறது.

நல்ல  தூக்கத்திலே  எழுப்பி    பல் தேய்த்து  வந்தவுடன்   காலை  ஒரு  காப்பியைக் கொடுத்து  கொஞ்ச நஞ்சம் இருக்கும்  தூக்கத்தையும் போக்கி  மணையிலே  உட்காரவைத்து  காலை நீட்டு ரெண்டு காலையும்  பக்கத்திலே  பக்கத்திலே சேர்த்து வெச்சுக்கோ  என்றபடி   விழுது மஞ்சளை எடுத்து   புறங்காலிலிலிருந்து  முழுப்பாதத்துக்கும் சேர்த்துப் பூசி    குங்கும விழுதால் புறங்காலிலே  கோலம் போன்ற கோடுகள் வரைந்து அதன் நடுவிலே பொட்டு வைத்து  ஒரு வெற்றிலை கொஞ்சம் பாக்கு சற்றே   சுண்ணாம்பு  வைத்து  அதை வாயிலே போட்டு  கடிச்சு  நல்லா மென்னு முழுங்கு  என்றபடி கொடுத்துவிட்டு    துடையிலே  நல்லெண்ணையால்  ஏழு பொட்டுக்கள்  வைத்து    உச்சந்  தலையிலும்   நல்லெண்ணெய்  தேய்த்துவிட்டு  சீக்கிரம் போயி   குளிச்சிட்டு வாங்கோ , வந்து   வாங்கி இருக்கோமே   அந்தப் புதுத் துணிகளை  போட்டுண்டு  வாங்கோ சீக்கிரம் என்று அனுப்புகிறாள்  அம்மா,     இந்த  வரிசையில் முதலில் நடந்தது  கண்ணுக்கு குளிர்ச்சியான  செயல், அப்பாவை மணையிலே உட்காரவைத்து அவர் காலில்  முதலில்  இந்த  எல்லாம் நடந்து முடிந்து  அவருக்கு வெற்றிலை பாக்கு கொடுத்தாள்  அம்மா  , அதன் பிறகு  அம்மாவை மணையிலே உட்காரவைத்து   அப்பா  அம்மாவின் காலிலே அதே போல்  மஞ்சள் பூசி எல்லாம் குங்குமம் செய்து  இட்டார். அய்யய்யே  அம்மா  காலை அப்பா பிடிக்கிறார்  என்றேன் நான்

டேய் கண்ணா  இதுக்கு பேரு  காலைப் பிடிக்கறது இல்லே   அம்மா  என்னை மஹா விஷ்ணுவாக  நினைத்து எல்லாம் செய்தாளே  அது மாதிரி  நானும் உங்க  அம்மாவை மஹாலக்ஷ்மியாய்  நினைச்சுண்டு   அவளோட  பாதத்துக்கு  மஞ்சள் பூசி  குங்குமம்  வெச்சு வெற்றிலை பாக்கு குடுத்து  மரியாதை செய்யறது  என்றார் அப்பா.    ஒரு வருஷம் முழுவதும்  உங்க அம்மா  நமக்கெல்லாம்   எல்லாம் செய்யறாளே  அதுனாலே  அதுக்கு மரியாதை  குடுக்கறா மாதிரி  இன்னிக்கு  அம்மாவுக்கு நாமளும்  நல்லதெல்லாம் செய்யணும்  , இன்னிக்கும்   , பெருமாளுக்கு  பூஜை செய்யறதுக்கு  எல்லாம் எடுத்து வெச்சிருக்கா   பண்டிகை  சமையல் செஞ்சு வெச்சிருக்கா, பட்டாசெல்லாம் வெச்சிருக்கா , பக்‌ஷணமெல்லாம் செஞ்சு வெச்சிருக்கா சீக்கிரம் போயி குளிச்சிட்டு  வந்து   , அந்த தட்டிலே  நமக்கெல்லாம் புதுத் துணி எல்லாம் வெச்சிருக்காளே அதையெல்லாம் எடுத்து  போட்டுண்டு  பெருமாளையும்

லக்‌ஷ்மியையும்  சேவிச்சு  எல்லாரையும் மகிழ்ச்சியா  வையுங்கன்னு   வேண்டிகிட்டு  பட்டாசெல்லாம் வெடிச்சு கொண்டாடுவோம் .   நம்ம பெரியவங்க  எல்லாத்தையுமே  யோசிச்சு ஏற்பாடு செஞ்சு வெச்சிருக்காங்க  உங்க அம்மாவுக்கு  என் மேலே  ஏதாவது கோவம் இருந்தா  அதே மாதிரி  எனக்கு உங்க அம்மா மேலே  எதுக்காவது  கோவம் இருந்தா  வருஷத்துக்கு  ஒரு நாள் இப்பிடி  செஞ்சா  கோவமெல்லாம் போயி  அன்பு வந்துடும் ,பாசம் வந்துடும் அதுக்குத்தான் இதெல்லாம் செய்யறது.   இதுக்கெல்லாம்  விடியற் காலையிலே எழுந்து  இவ்ளோ செஞ்சு வெச்சிருக்காளே  அதுக்காக  நாமெல்லாரும்  அம்மாவுக்கும் நன்றி சொல்லணும். ஐதுக்கு பேரு  நலங்கு இடுறது   காலைப் பிடிக்கறது இல்லே  என்றார்

அடுத்ததா  மாப்பிள்ளை  பொண்ணு  ரெண்டு பேரையும்   உக்கார வெச்சு  அவங்களுக்கும்   நலங்கு இட சொல்லிக் கொடுத்தாள் அம்மா.   பொண்ணு காயத்ரி மாப்பிள்ளையை  உட்கார வைத்து  அவர் காலுக்கு நலங்கு இட்டாள்,  மாப்பிள்ளை  காயத்ரியை உக்கார  வெச்சு  நலங்கு இட்டு விட்டாள்.   சீக்கிரம் குளிச்சிட்டு வாங்கோ  மாப்பிள்ளை  ,காயத்ரி  நீயும் சீக்கிரம் குளிச்சிட்டு வா   பூஜை பண்ணிட்டு  சாப்படலாம்  பசிக்கறது    என்றார்.  அப்பா  ,

டே கண்ணா  ஒரு விஷயம்  தெரியுமா  இன்னிக்கு  நாம  வாங்கி வெச்சிருக்கோமே  அந்த  கங்கா ஜலம் இருக்கற  சொம்பை எடுத்து அதிலேருந்து  கங்கா ஜலம் எடுத்து  அதை  மொத்த  தண்ணீரிலே கொட்டி   கங்கா ஸ்னானம் செய்யணும் என்றார்.  உங்களுக்கெல்லாம் ஒரு  விஷயம் சொல்லணும்  எத்தனையோ சாக்கடைகள்  வந்து கலக்கறது நதிகளிலே  .  அதே மாதிரிதான்  கங்கையிலேயும்  பல சாக்கடைகள் வந்து கலக்கறது   அதுக்கும் மேலே  அந்த கங்கையிலே  பல  அழுகிய உடல்கள் மிதக்கறது,  இவ்ளோ மாசுபடுத்தறோம் அந்த  கங்கையை. ஆனா  அந்த  கங்கா நதி இத்தனை அழுக்கையும் சுமந்து கொண்டு  புனித நதின்னு பேர் வாங்கறதே  அது எப்பிடி”  அதுமட்டுமில்லே  அந்த கங்கை நதியோட  தண்ணீரை  ஒரு சொம்பிலே கொட்டி அதை பாது காத்து வெச்சா  எத்தனை வருஷமானாலும்  அதோட  புனிதம்  கெட்டுப் போகாமே  அப்பிடியே இருக்கே  அதான் அந்த கங்கையோட  பவித்ரம், சக்தி  அது மாதிரிதான்  நாமளும்   நம்மோட  வாழ்க்கையிலே எத்தனையோ  கோபதாபங்கள், வெறுப்புகள்  சண்டைகள் ஊடல்கள் , எல்லாத்தையும்  அனுபவிச்சாலும் அடிப்படையான  நம்மோட தரத்தை இழக்காம அப்பிடியே இருக்கணும்  அப்பிடீங்கறதைத்தான் அறிவுறுத்தறது  இந்த  கங்கா  மாதான்னு நம்மாலே வர்ணிக்கப்படற  கங்கை நதி  என்றார்  அப்பா.

புது ஆடைகள் பொட்டுண்டு  வந்து உக்கார்ந்த  மாப்பிள்ளை நீங்க சொன்னதெல்லாம் உண்மை நாம் எப்பவுமே  நல்லதுக்குதான்  சொல்றோம் நல்லதுக்குதான் செய்யறோம்னு  புரிஞ்சிக்கறவங்களுக்கு  அவங்களோட  தரம் குரையறதே இல்லே  என்றார், காயத்ரியையே பார்த்தபடி.   உள்ளே வந்த  காயத்ரி அம்மா  நீங்க  சொன்னதெல்லாம் யோசிச்சிண்டே  கங்கா ஜலத்திலே  குளிச்சேன் , இப்போ  மனசு தெளிவா இருக்கு, அதோட  அப்பா சொன்னதையெல்லாம் கேட்டேன்,  கவலைப்படாதே  அவரையும்  சரி செஞ்சு  நானும் சந்தோஷமா இருக்கேன், என்றபடி   அந்த  அல்வாவைக் குடு எங்க ஆத்துக்காரருக்கு  ரொம்பப் பிடிக்கும்  என்றபடி அல்வாவை எடுத்துக் கொண்டு போன  காயத்ரியைப் பார்த்து  பெருமாளே  நீதான்  இவளுக்கு நல்ல புத்தியைக் குடுத்தே  , கங்கா மாதா  எல்லாம் உன் அருள்  என்றபடி  சீக்கிரம் பட்டாசு  வெடிச்சிட்டு சாப்பிட வாங்கோ  என்றாள்,

இந்தாங்கோ உங்களுக்கு  அல்வா பிடிக்குமேன்னு குடுக்கச் சொன்னா அம்மா  என்றாள் காயத்ரி   .மாப்பிள்ளை  அல்வாவை  வாங்கியபடி   நீ ரொம்ப கெட்டிக்காரி  எனக்கே அல்வா குடுக்கறையா  என்று சிரித்தபடியே  எழுந்து  இந்தப் புடவை  உனக்கு ரொம்ப நல்லா இருக்கு  சரி வா  சங்கு சக்கரம் கொளுத்தலாம் என்றார்.

உங்களுக்கு கூட  இந்த  வேஷ்டியும்  சொக்காயும்  ரொம்ப நல்லா இருக்கு கையிலே  ஒரு  சங்கும் சக்கரமும்தான்  பாக்கி  அப்பிடியே  மஹா விஷ்ணு மாதிரியே  இருக்கும்   என்றாள் காயத்ரி காதலுடன்  அவனையே பார்த்துக் கொண்டு  சிரித்தபடி ..    எல்லோரும்  ஹோ என்று கத்திக் கொண்டே எழுந்து ஓடிப்போய் குளிச்சிட்டு புதுத்துணியெல்லாம் போட்டுண்டு  வாசல்லே போயி  பட்டாசு வெடிச்சிண்டு இருக்காங்க  நீங்க  என்னா செய்யறீங்க   கங்கா ஸ்னானம் ஆச்சா?  சீக்கிரம்  சீக்கிரம் , மகிழ்ச்சியா  தீபாவளி கொண்டாடுங்க.

                                 சுபம்

அன்புடன்

தமிழ்த்தேனீ

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.