நீ சொல்வாயா?
புவன் கணேஷ்
நான் நானாய் இருந்தேன்
நீயும் நீயாகவே இருந்தாய்
நான் விழிப்புடன் இருந்தேன்
கம்பி மீது நடந்து ஆற்றை
கடப்பவன் போல், எச்சரிக்கையுடன்,
நான் – எனது எல்லைக்குள்.
கூடப் படித்த பெண்ணாய்,
ஓய்வு நேரத்தை என்னுடன் பகிரும் தோழியாய்
நீயும் – உனது எல்லைக்குள்தான்.
ஆனால் – இன்று எனக்குத்தான்
புரியவில்லை – என்று நீ நுழைந்தாய்
என் எல்லைக்குள் என்று.
உன்னை ஆண்டுக் கணக்கில்
அறிந்து இருந்தும், எனக்குள்
நீ நுழைந்த கள்ளத்தனம் –
என்னை ஆச்சரியம் மட்டுமே
படவைக்கிறது.
பின்னொரு நாளில் – நீயும்
என்னிடம் சொன்னாய் – நானும்
உனது எல்லைக்குள் – அதுவும்
உனது அனுமதியின்றி, என்று.
எனக்குச் சிரிப்பு தான் வந்தது.
அதெப்படி? தவறும் கூட
நாம் இருவரும் ஒன்றே போல்
செய்து, ஒன்றாகிறோம்?
நான் மலைச் சாரலிலே,
கற்பாறை நடுவே
கரைபுரளும் காட்டாறாய்!
என்னை அமைதியாக்கி,
மிடுக்குடன் நடக்கச் செய்த
சமவெளியாய் நீ!
ஆதவனின் ஆற்றல் போல்,
காற்றிலே வீணானது எனது
ஆற்றல் – ஆடி போன்ற
உன்னாலே ஒருங்குவித்து இன்று,
காற்றையும் எரிக்கின்றேன் நான்!
இதயத்து எல்லைகளைக் கடப்பதில்
ஒன்று போல் குற்றம் செய்த நாம்,
இன்று திருமண இணைப்பில்
ஒன்று போல் சிந்திக்காதது ஏன்?
உன்னை மறந்து, முகம் தெரியா
மூன்றாம் பெண்ணின் கழுத்திலே
மாலையிடக் கூறுகிறாள் – என்
அன்பு அன்னையவள்.
கண்களால் பயின்று, இதயத்தால்
வளர்த்த காதல் – அத்தனை
எளிதில் கரைந்து காற்றாகிவிட
அது என்ன கற்பூரமா?
மனத்திலே நீ.
என் மனையிலே இன்னொருத்தி.
முடியுமா இது?
என் கவிதைகளுக்கு
இன்னொரு நாயகியா?
அடுக்குமா இது?
தன் கடமையென்று தாய் நினைத்து,
புதுச் சொந்தம் கொண்டுவர
முயல்கிறாள் – என் தாய்க்கு அது சரி.
என் காதலென்று நான் நினைத்து
சொந்தம் புதுப்பிக்க நினைக்கிறேன்.
எனக்கு நான் சரி.
நீ என்ன நினைக்கின்றாய்
என்பதை அறிய இயலா
தூரத்தில் நான். துயரத்தில் நீ.
என்னையும் கொல்லாமல், நீயே
உன்னையும் கொல்லாமல்
எல்லோரும் இன்புற்று இருக்கும்
ஓர் அமுத முடிவினைச் சொல்வாயா?
superb…….