உறியடியும் வழுக்கு மரமும்!
காயத்ரி பாலசுப்ரமணியன்
கண்ணன் பிறந்த நாள் கோகுலாஷ்டமி அன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. பல கோயில்களில் உறியடி உற்சவமும் வழுக்கு மரம் ஏறும் போட்டியும் நடைபெற்றன. உறியடி உற்சவம், வழுக்கு மரம் இவை இரண்டுமே மனித வாழ்வின் தத்துவத்தை நமக்கு அழகாக எடுத்துரைக்கின்றன.
உறியடி உற்சவத்தில், உயரத்தில், மண் பானையில் பரிசுப் பொருள் கட்டப்பட்டிருக்கும். அதனை அடிக்க ஆசைப்படுபவர்களின் கண்ணும் கட்டப்பட்டிருக்கும். விளையாட்டில் பங்கேற்பவர்களில் பலரும் அங்கும் இங்கும் அலைமோதி, இறுதியில் ஒருவர் மட்டுமே பானையை உடைத்துப் பரிசைப் பெறுவார்.
பானை என்பது பரம்பொருள். எட்ட முடியாத உயரத்தில் இருக்கிறது. பரம்பொருளை அடைய வேண்டும் என்ற ஆசையில்தான் மனித வாழ்க்கை ஆரம்பம் ஆகிறது. ஆனால் நடுவில் பல அலைக்கழிப்புகளுக்கு ஆளாகி பல ஜீவன்கள் இறைவனை அடைய முடியாமல் போய் விடுகிறது. ஆனால் இறைவனை அடைய வேண்டும் என்ற குறிக்கோளோடு உறுதியாகச் செயல்பட்டு, அகங்காரம் என்னும் பானையை உடைத்து விட்டால், இறையருள் எனும் பரிசு கிடைத்து விடுகிறது!
அது சரி. ஏன் கண்ணைக் கட்டிக்கொள்ள வேண்டும்? மனிதனின் புறக் கண்கள் திறந்திருக்கும் வரை ஆசாபாசம், யாவும் அவனை அலைக்கழித்துக் கொண்டே இருக்கும். புறக் கண்களை மூடிவிட்டால், மனிதனின் அகக் கண்கள் தானே திறந்து விடும். இதனை உணர்த்தும் விதமாகவே உறியடி உற்சவம் கொண்டாடப்படுகிறது.
அடுத்து வழுக்கு மரம். சாதாரண மரத்தில், வழுக்கும் தன்மையுள்ள பொருட்களை அரைத்துப் பூசி விடுகிறார்கள். அதன் உச்சியிலும் பரிசுப் பொருள் கட்டப்பட்டிருக்கும். மனிதன் வாழ்வில் இறைவனை அடைய ஆசைப்பட்டு அதற்கான முயற்சியில் இறங்குகிறான். ஆனால் பிரச்சினைகள், கவலைகள் யாவும் அவனை பின்னோக்கி இழுத்து விடுகின்றன. மீண்டும் அவன் முயற்சி செய்ய வேண்டியிருக்கிறது.
இப்படி பல தடவைகள் பல பிறவிகளில் முயற்சி செய்தே இறைவனை அடைய முடியும். இதனை நமக்கு வலியுறுத்தவே நம் முன்னோர்கள் இது போன்ற வைபவங்களை வைத்துள்ளார்கள்.
இந்த தத்துவத்தைப் புரிந்துகொள்வோம், விடாமல் முயற்சி செய்வோம்! இறையருள் எனும் பரிசு தானே கிடைத்துவிடும்!