வேர்களுக்கு ஒரு விழா!
ஷைலஜா
ஆசிரியர் தினம் வருவதற்கு முன்பே சிறந்த ஆசிரியர்களுக்கான விருதை வழங்கிக் கௌரவித்திருக்கிறது ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்.
சென்னையில் நடந்த ‘அன்புள்ள ஆசிரியர்க்கு’ என்ற இந்த நிகழ்ச்சியில் விருது வாங்கிய 14 ஆசிரியர்களில் 7 பேர் பெண்கள் என்பது இன்னொரு சிறப்பு!
இவர்கள் அனைவரும் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள். இவர்கள் கடந்த ஆண்டு தனியார் பள்ளிகளுக்கு இணையாக 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி சதவிகிதத்தைச் சாதித்துள்ளார்கள்.
ஆசிரியர்களைக் கௌரவப்படுத்துவதில் எல்லையில்லா மகிழ்ச்சி அடைவதாகச் சொன்ன ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர் முரளி, தன்னுடைய பள்ளிப் பருவ அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். அவரது பேச்சு, தம் ஆசிரியர்கள் மீது அவர் வைத்திருந்த அன்பை உணர்த்துவதாக இருந்தது
தன் பேச்சில் மனதைத் தொடும் ஒரு சம்பவத்தை அவர் நினைவுகூர்ந்தார்.
ஒருமுறை தம் ஆசிரியரின் பிறந்த நாளை ஞாபகம் வைத்து அதனைப் பத்திரிகை ஒன்றில் புகைப்படத்துடன் அளித்து வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.
படத்தைக் கண்ட நண்பர்கள் பலருக்குப் பழைய நினைவுகளை அது கிளறிவிட, அவர்களும் ஆசிரியருக்கு உடனே போனில் வாழ்த்துச் சொன்னார்களாம்! ஆசிரியர் நெகிழ்ந்துபோய்விட்டாராம்.
இதைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் இவருடைய நண்பர்கள் ஆசிரியரின் பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்களாம்! இதைச் சொன்ன முரளி, மாணவர்களும் ஆசிரியர்களைத் தங்கள் வாழ்நாளில் மறவாமல் இருக்க வேண்டும் என்றார். ஆசிரியர்களும் மாணவரிடம் அன்போடும் பரிவோடும் நடந்துகொள்ள வேண்டும் அப்போதுதான் சிறந்த குடிமகனாக ஒரு மாணவன் உருவாக முடியும் என்றார்.
சென்னை ஐஐடியின் துணைப் பதிவாளர் சூர்யகுமாரும் ஆசிரியரின் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்தினார். விருது பெற்ற ஆசிரியர்களுக்கு மறக்க முடியாத பொன்னாளாக அன்றைய தினம் அமைந்தது.
சில மாதங்கள் முன்பு வாழ்ககையில் வெற்றி பெற்ற பிரபலங்களின் அன்னையர்களைக் கௌரவித்தது இதே கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம். அதனைத் தொலைக்காட்சி ஒன்றில் பிறகு காண்பித்தார்கள். இப்போது நாளைய தலைமுறையை உருவாக்கும் ஆசிரியர்களைக் கௌரவிக்க விழா எடுத்திருப்பது வேர்களை என்றும் நினைவுபடுத்துவதாக இருக்கிறது!