மார்கழி மணாளன் (9)
க. பாலசுப்பிரமணியன்
திருப்பார்த்தான்பள்ளி – அருள்மிகு தாமரையாள் கேள்வன் பெருமாள்
காவிரியைக் கமண்டலத்தில் கசிவின்றி அடைத்தவன்
கயிலையின் திருமணத்தைப் பொதிகையிலே பார்த்தவன்
கரையில்லா ஆர்வத்துடன் கலைகளெல்லாம் கற்றவன்
கடுந்தவத்தில் தனைமறந்து மகிழ்ந்தான் அகத்தியன்
பார்த்தனுக்கே பருகிடவே நீரின்றிப் பார்த்தவனும்
படைத்தவனை வேண்டிடவே பரிந்துரை செய்திடவே
பங்கயச் செல்வியின் பார்வையுடை கோவிந்தன்
பாண்டவனுக்கு அருளிடவே பாற்கடலைத் துறந்தான்
போர்முனை எதிரிகள் போலவரும் உணர்வுகள்
வாள்முனை அச்சத்தில் வளர்ந்திடும் கனவுகள்
தேர்முனை பார்த்தவன் திசையின்றி நின்றிடவே
ஊழ்வினை களைந்திட உத்தமனை அழைத்தானே !
போர்முனையில் அறம்காக்கக் கீதையைச் சொன்னவன்
விதிமுனையில் மனம்காக்க வாழ்க்கையைச் சொன்னான்
தோள்முனையில் துளிர்த்திட்ட வல்லமைகள் வீழ்கையிலே
வாழ்முறையில் வளம்காக்க மறைசொன்னான் மாதவனே !
“பொருளில்லா வாழ்க்கைக்குப் புவியில் இடமேது
பொருள்மட்டும் தேடுகின்ற மனத்திற்குப் புகலேது
புகலொன்றே பார்த்தா பொற்பாதம்! இணையேது
புரிந்தாலே மன்னுயிர்க்கு மண்ணுலகில் முடிவேது ?
விண்ணெல்லாம் அலைந்தாலும் விடையறியா அமரர்கள்
மண்ணெல்லாம் அலைந்தாலும் மனதறியா மாந்தர்கள்
கண்ணெல்லாம் ஒளியாக்கிக் கல்லுள்ளே பார்த்தாலும்
தன்னுள்ளே வைத்திருந்தால் த தவறாமல் வந்திடுவேன்! ”
இலையென்று சொல்லாத இயல்பென்றும் உனக்குண்டு
நிலைகெட்ட மனிதரிலும் கலைபடைக்கும் திறனுண்டு
விலையில்லா அருள்தந்து வழிகாட்டும் வேங்கடவா
விதையிட்ட பொருப்பேற்று விதிக்காக்க வருவாயோ ?

