பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

16651916_1229546853766178_570270536_n

71516183@N03_rவெண்ணிலா பாலாஜி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (11.02.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “படக்கவிதைப் போட்டி – (98)

  1. ஒரு தந்தையின் குரல்…

    பாடுபட்டுச் சம்பாதித்து
    படிக்கவைத்த பிள்ளைகள்
    நாடுவிட்டுச் சென்றனர்,
    நல்ல வாழ்வு தேடியே..

    உறுதுணையாயிருந்த
    உத்தமியும்
    உலகைவிட்டுச் சென்றுவிட்டாள்..

    வேறுதுணை ஏதுமில்லை,
    உறவினரும்
    எறெடுத்துப் பார்க்க
    என்னிடம்
    எதுவுமில்லை சொத்தாக..

    சோறு கேட்கும் வயிற்றுக்குச்
    சொற்பமேனும் கொடுக்கத்தான்
    வேறு எவரையோ நாடி
    வேலைசெய்து பிழைக்கின்றேன்..

    சாகும்வரை யாரையும்
    சார்ந்திடாமல் நடமாட
    சக்திகொடு இறைவா..

    என்னைப்போல பலருண்டு
    இங்கேதான்,
    அதனால்
    எங்கிருந்தாலும் வாழ்க
    என்பிள்ளைகள் சுகமாய்…!

    -செண்பக ஜெகதீசன்…

  2. உழைப்பும் தன்னம்பிக்கையும்
    ============================

    எனக்ககவை எண்பதே…யானாலும்
    எனக்குற்ற துணையென்று “உழைப்பு” ஒன்றுதான்!

    என்கையே எனக்குதவியெனும் கருத்தில்
    என்மன உறுதி! இன்றைக்கும் எனைவாழவைக்கும்!

    தள்ளாத வயதினில் சமுதாய மெனைத்..
    தள்ளிவைப்பதாக யான்நினைத்தாலும்….

    வெறுப்புற்று வாழ்வியலா நிலை கண்டுநான்
    விரக்தியுற்று துவளும்மனம் கொண்டதில்லை!

    முதியோரில்லம் சேர்ந்தங்கொரு கோடியில்..
    முடங்கி உறங்கி சுருங்கிக் கிடக்கவும் விரும்பவில்லை!

    மனிதரிலே மனிதராக நானும் பிறந்தேன்..இளமைமுதல்
    மானத்தோடு வாழ்வதிலே முயன்று முதியவனானேன்!

    “சோம்பித் திரிவர் தேம்பித் திரிவர்”!
    “சோம்ப லிளமையில்” – “வறுமைமுதுமையில்”-யென்கிற..

    பழ மொழியின் உட்பொருள்தனை யறிந்துநம் மனதை
    வழ க்கப்படுத்தி நலம்வாழ முயற்சி செய்தால்..

    பந்தங்களும் சொந்தங்களும் உதவாத போதும்நம்..
    பரிதாப நிலைகண்டொரு நாளும்பதற வேண்டியதில்லை!

    சிற்பம்தனில் ஒளிந்திருக்கும் சிறு உளியின்சக்திபோல..
    உடம்பினுள் ஒளிந்திருக்கும் உன்னதசக்தி நீயறிந்தால்!

    காலிழந்த நங்கையொருவள் சிகரம்ஏறிய சாதனைபோல..
    நீயிழந்த நம்பிக்கை மீண்டுமெழ – நீயுமுண்டு வரலாற்றில்!

    பிறக்கும் போது தொட்டிலில் தொடங்கிய வாழ்க்கையை
    இறக்கும்வரை கட்டிலில் வீழ்ந்துவாழ மனமில்லை!

    இளமையில் சேர்த்ததெல்லாம் எனைவிட்டு விலகினாலும்..
    உழைக்குமெண்ணம் முதுமையிலும் விலகவில்லை!

    உழைப்பவர் போலசிலர் வேடந்தான் போடுகின்றார்!
    உண்மைஅறிந்து கொண்டபின்னே வெறுப்புதான் மிஞ்சும்!

    எண்பது வயதானாலும் உழைப்பயறாத..
    என்முதுகில் கூன்விழ மறுப்பது இயற்கையன்றோ!

    நாளிதழ் தினமும் படிக்கின்றேன் கண்ணொளி இன்னும் மங்கவில்லை!
    நலமுடன்வாழ நானிலத்தில் நானின்றும் உழைக்கின்றேன்!

    “நாடிவரும் அதிர்ஷ்ட மெனநினைத்து” உழைக்கமுயற்சி யிலையெனில்..
    ஓடிவிடும் உடல்நலம் வீணாய் நமைவிட்டு- ஒப்பி நானும்..

    தளராது தன்னம்பிக்கையில்….தெரிந்தகைத் தொழில்செய்து..
    அயராது உழைத்தினிதே…வாழ்வேன்அகவை நூறானாலும்..

    உட்கார்ந்த இடத்தினிலே, வயதான காலத்திலும்..
    உயர்வான எண்ணத்திலே, ஒருவருக்கும் தீங்கின்றி..

    வேளையொரு சோற்றுக்கு பிறரைவேண்டி வாழாமல்..
    சைக்கிளுக்கு காற்றடித்து பஞ்சர் ஒட்டிஉழைத்து பிழைப்பேன்!

  3. தனிமைக்கொரு தனிமை :
    குழி விழுந்த கண்கள்!
    ஒளி மறந்த விளக்குகள்!
    கண்ணீரை மறைக்க ஒரு
    கண்ணாடி!
    மேல் சட்டை முழுதும் அழுக்குக் கறை!
    உள்ளத்தில் தூய்மையின்
    வளர்பிறை!
    நரை நிறைந்த சிகை!
    வேதனை கலந்த ஒரு
    புன்னகை!
    கூடிக் கொண்டே போகும் அகவை!
    குறைந்து கொண்டே வரும் வாழ்க்கை!
    வறுமை இவர்களின் வாடிக்கை!
    வசதியும், இறைவனும் இவர்களுக்கு
    ஒன்று தான்!
    இரண்டையும் இதுவரை இவர்கள்
    பார்த்ததில்லை !
    செய்தித் தாளில் இவர்
    தேடுவது எதனை?
    தொலைத்த தன் வாழ்க்கையையோ!
    வாடிய பயிரைக் கண்டு வாடித்
    தவித்தது ஒரு காலம்!
    வாடிய உயிரையும், வேடிக்கை
    பார்ப்பது இக்காலம்!
    இவர்கள் வாழ்வில் என்று
    வரும் வசந்தகாலம்!
    இளமையில் வறுமை, கொடுமை
    என்றாள் ஔவைப் பாட்டி!
    உண்மையில் கொடுமை
    முதுமையில் தனிமை!
    பிறந்தவுடன் நீ தந்தைக்கு குழந்தை!
    இன்றைக்கு அவர் தான் உன்
    மூத்த குழந்தை!
    திருப்பித் தருவாய் உன்
    அன்பின் பகிர்வை !

    தனிமைக்கொரு தனிமை :
    குழி விழுந்த கண்கள்!
    ஒளி மறந்த விளக்குகள்!
    கண்ணீரை மறைக்க ஒரு
    கண்ணாடி!
    மேல் சட்டை முழுதும் அழுக்குக் கறை!
    உள்ளத்தில் தூய்மையின்
    வளர்பிறை!
    நரை நிறைந்த சிகை!
    வேதனை கலந்த ஒரு
    புன்னகை!
    கூடிக் கொண்டே போகும் அகவை!
    குறைந்து கொண்டே வரும் வாழ்க்கை!
    வறுமை இவர்களின் வாடிக்கை!
    வசதியும், இறைவனும் இவர்களுக்கு
    ஒன்று தான்!
    இரண்டையும் இதுவரை இவர்கள்
    பார்த்ததில்லை !
    செய்தித் தாளில் இவர்
    தேடுவது எதனை?
    தொலைத்த தன் வாழ்க்கையையோ!
    வாடிய பயிரைக் கண்டு வாடித்
    தவித்தது ஒரு காலம்!
    வாடிய உயிரையும், வேடிக்கை
    பார்ப்பது இக்காலம்!
    இவர்கள் வாழ்வில் என்று
    வரும் வசந்தகாலம்!
    இளமையில் வறுமை, கொடுமை
    என்றாள் ஔவைப் பாட்டி!
    உண்மையில் கொடுமை
    முதுமையில் தனிமை!
    பிறந்தவுடன் நீ தந்தைக்கு குழந்தை!
    இன்றைக்கு அவர் தான் உன்
    மூத்த குழந்தை!
    திருப்பித் தருவாய் உன்
    அன்பின் பகிர்வை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *