அன்பினியவர்களே!

அன்பான வணக்கங்கள். ஏறத்தாழ ஒரு மாத இடைவெளியின் பின்னால் மீண்டும் உங்களுடன் மடல் மூலம் மனம் திறப்பதில் மகிழ்வடைகிறேன். ஒவ்வொரு வருடமும் ஒரு மூன்று அல்லது நான்கு வார கால விடுமுறையில் நான் சென்னை வருவதுண்டு. அவ்வரிசையில் இவ்வருடம் ஜனவரி மாத இறுதியில் நான் மேற்கொண்ட சென்னைப் பயணத்தினாலேயே இவ்விடைவெளி ஏற்பட்டது.

இன்று நான் இம்மடலை வரைந்து கொண்டிருக்கும் நாள் ஒரு சிறப்பான நாள். ஆம், மார்ச் 8ஆம் திகதி சர்வதேசப் பெண்கள் தினத்தை தன்னுள் அடக்கிக் கொண்ட பெருமையை இவ்வாரம் பெறுகிறது. பெண்களுக்கென ஒரு தினம் அவசியமா? அவசரமா? எனும் வகையில் சிலரும், பெண்களுக்கென ஒரு தினத்தை கொண்டாடுவது அவர்களைச் சிறுமைப்படுத்துவது போலாகாதா எனும் வகையில் வேறுசிலரும் சமூக வலைதளங்களில் கருத்துக்களை முன்வைத்து வாதிடுவதைக் கண்ணுற்றேன்.

சற்றுச் சிந்தித்தேன். . .

“அம்மா” எனும் புனிதமான உறவோடு ஆரம்பிக்கிறது அனைவரது பெண்களுடனான உறவு. அந்தத் தாய் எமக்களிக்கும் அன்பிலும் வளர்ப்பிலுமே நாம் பணிவு, அன்பு, அடக்கம் என்பதனைக் கற்றுக்கொள்கிறோம். ஒரு குழந்தையை வளர்ப்பதற்கு ஒரு பெண் தன் வகையில் செய்யும் தியாகங்கள் அளப்பரியன. அதற்காக ஒரு குழந்தை வளர்ப்பில் தந்தையர்க்கு இருக்கும் பங்களைப்பை நான் குறைத்து மதிப்பிடுவதாக யாரும் எண்ணிவிடக்கூடாது.

இந்தச் சமுதாயம் பல காலங்களாக பெண்கள் மீது விதித்திருந்த கலாசாரக் கட்டுப்பாடுகள் கணக்கற்றவை. உதாரணத்துக்கு இதிகாசங்களையே எடுத்துக் கொள்வோமே ! சீதை தன்னை உத்தமி என்று நிரூபிப்பதற்காக மேற்கொண்ட சோதனைகள், மற்றும் துரியோதனனுடைய சபையிலே துகிலுரியப்பட்ட திரோபதை அந்நிலைக்க்குக் காரணமாக அவள் சூதாட்டத்தில் ஒரு படுபொருளாக பணயம் வைக்கப்பட்டமை. இவைகள் கட்டுக்கதைகள் தானே என்று வாதிடலாம். ஆனால் அக்கதைகளை புனைவோரின் மனதில் பெண்கள் குறித்து நிலவிய கண்ணோட்டம் எவ்வகையானது என்று எண்ணத் தலைப்பட வேண்டியுள்ளது.

மகாகவி பாரதியாரின் மனைவி செல்லம்மா ஊருக்குப் போய்விடுகிறார். நண்பன் குவளைக்கண்ணனுடன் இருந்த மகாகவி காலையில் பாலைக்காய்ச்ச முயற்சித்துச் சலிப்படைகிறார். அக்கணத்திலே அவர் மனத்தில் தான் ஒருநாள் செய்ய முடியாது சலிப்படையும் காரியத்தைத் தன் மனைவி தனக்காகக் காலமெல்லாம் செய்கிறாளே எனும் எண்ணம் துளிர்க்கிறது. இது தன் மனைவிக்கு மட்டுமல்ல அனைத்துப் பெண்களுக்குமே பொருந்தும் எனும் உண்மை அவருக்குத் துல்லியமாகப் படுகிறது. பிறக்கிறது “பெண் விடுதலைக்கான”கவிதைப் பொறிகள்.

இவைகளை எதற்காகக் குறிப்பிடுகிறேன் என்றால் இத்தகைய ஒரு கால கட்டத்தினூடாகத்தான் பெண்களின் வாழ்வு பயணித்தது. மேலை நாட்டை எடுத்துக் கொண்டால் கூட இங்கிலாந்தில் பெண்களுக்கான வாக்குரிமை போராடித்தான் பெறப்பட்டது. உலகெங்கும் பெண்கள் அன்றைய காலகட்டத்தில் ஒருபடி குறைவாகவே மதிக்கப்பட்டார்கள்.

காலம்பல மாற்றங்களுக்குள்ளாகியது. இன்று பெண்களின் நிலை முற்றிலும் மாறுபட்ட நிலையிலுள்ளது. ஆண்கள் செய்யும் அனைத்துப் பணிகளும் பெண்களாலும் முடியும் என்று நிரூபிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. பெண்கள் வீட்டை மட்டுமல்ல நாட்டையும் கட்டிக்காக்கும் திறமை கொண்டவர்கள் என்பது அத்தாட்சியுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அனைத்து உள்ளங்களும் சரியான வகையில் இக்காலமாற்றத்தை உள்வாங்கியிருக்கிறதா? என்பது இன்னமும் கேள்விக்குறியே! சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலை எடுத்துக்கொள்ளுங்கள். அதிலே அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் வேட்பாளாராக ஹிலரி கிளிண்டன் அவர்கள் போட்டியிட்டார். அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதி என்று சரித்திரத்தில் இடம்பெறப் போகிறார் என்று பேசப்பட்டது. அதேநேரம் அவருக்கு எதிரான அணியில் ’பெண்’ எனும் அந்தஸ்தைக்காட்டித் தேர்தலில் வெற்றிபெற முயற்சிக்கிறார் என்று குற்றம் சாட்டப்பட்டது. இது பெண்கள் எதிர் நோக்கும் ’கண்ணாடிக்கூரை (Glass ceiling)’ இன்னும் தகர்ப்படவில்லையோ எனும் ஜயத்தைத் தோற்றுவிக்கிறது.

அதேநேரம் தற்போதய அமெரிக்க ஜனாதிபதியும் அப்போதைய அமெரிக்க குடியரசுக் கட்சியின் வேட்பாளருமான ’டொனால்ட் ட்ரம்ப்’ பெண்களைப் பற்றி கொண்டிருந்த அபிப்பிராயம் மிகவும் கீழத்தரமானது என்று ஊடகங்களின் செய்திகளில் வெளிவந்தபோதும் அவர் தேர்தலில் வெற்றிபெற்றது அமெரிக்க மக்களின் மனதிலுள்ள ஆணாதிக்கத் தன்மை இன்னும் மழுங்கவில்லையோ எனும் ஜயப்பாட்டைத் தோற்றுவிக்கிறது..

இங்கிலாந்தில் இன்றும் ஒரேபணியில் இருக்கும் ஆணுக்கும்,பெண்ணுக்கும் இடையில் ஊதியத்தில் வேறுபாடு இருப்பது மறுக்க முடியாத உண்மை.

இப்படியான பல நிகழ்வுகள் இன்றைய காலகட்டத்தில் இன்னும் நிகழ்ந்து கொண்டிருப்பதனால் பெண்களுக்கான சமஉரிமைக்கான கோஷத்தின் தேவை இன்னமும் இருக்கிறது என்றே கொள்ளவேண்டும். இதனை வலியுறுத்தும் வகையில் இப்பெண்கள் தினம் கொண்டாடப்படுவதும் காலத்தின் கட்டாயமாகிறது என்பதே என் கருத்தாகிறது.

அனைத்துச் சகோதரிகளுக்கும், அன்புத்தோழிகளுக்கும் எனது அன்பு கலந்த சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மீண்டும் அடுத்த மடலில்…

அன்புடன்
சக்தி சக்திதாசன்

***

அம்மா
எனும் முன்றெழுத்தோடு
ஆரம்பம்
எமது வாழ்க்கை
சும்மா
அல்ல குழந்தை வளர்ப்பு
சுகமான சுமையென்பர் அவரே
ஊறிப்போன
கலாசாரக் கட்டுப்பாட்டால்
உயர முடியாது வாடினர் பலரே
பாரதி
எனும் முத்தமிழ்க் கவிஞன்
பாவிலே வைத்தான்
புதுமைப் பெண்களை
சாரதி
பெண்ணே குடும்பத்தேருக்கு
சார்ந்தே நாமெல்லாம் அவர்பால்
அறிவால்
குறைந்திடவில்லை என்றே இன்று
அவனியில் பெண்கள் சாதிக்கின்றார்
பெண்கள்
என்றால் அடுப்படி வாசம் என்றே
எண்ணிய மடமைச் சமுதாயம்
கண்கள்
அவர்கள் புவியின் முன்னேற்றத்துக்கு
ஆற்றுகின்றார்கள் அரிய பல பணிகள்
வீட்டினை
மட்டுமல்ல தம்மால் தாம் வாழும்
நாட்டினையும் ஆள முடியும் எனக்காட்டினர்
போற்றிட
வேண்டும் பெண்களை மானிடா!
தோற்றிட வேண்டாம் வாழ்வில் என்றால்
பூட்டிய
சமுதாய விலங்குகளை உடைத்துக்
காட்டிட வேண்டும் ஆதரவு தன்னை
சர்வதேச
பெண்கள் தினத்தில் அனைவரும்
சங்கற்பம் இன்றே பூண்டிட வேண்டும்
வீட்டில்
அன்பால் சாதிக்கும் பெண்கள் இன்று
நாட்டில் அறிவால் சாதிக்கும் நிலை காண்பாய்
கண்ணாடிக்
கூரையை உடைத்து முன்னேற
பெண்கள் போடும் ஈடில்லா யுத்தம்
நாளைய
சமுதாயத்தில் ஆண்கள், பெண்கள்
நாமெல்லாம் சமமே என்றே கூறி
வாழிய 
பெண்கள் என்றே வாழ்த்துவோம்
பெண்கள் தினத்தில் வாருங்கள் தோழர்காள்!

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *