செண்பக ஜெகதீசன்

 

 

சிறுபடையான் செல்லிடஞ் சேரி னுறுபடையா

னூக்க மழிந்து விடும்.

       –திருக்குறள் –498(இடனறிதல்)

 

புதுக் கவிதையில்…

 

சிறிய படையுடையவன்

இருக்கும் இடத்தின்

இயல்பறியாமல் அங்கு

பெரிய படையுடையவன் சென்றால்,

தோற்று

பெருமை அழிந்திடுவான்…!

 

குறும்பாவில்…

 

இடத்தின் இயல்பறியாமல்

சிறுபடையுடையோன் இருப்பிடம் சென்றால்

பெரும்படையுடையவனும் பெருமையழிவான்…!

 

மரபுக் கவிதையில்…

 

சின்னஞ் சிறிய படையுடையோன்

     சேரந்த யிடத்தின் இயல்பறிந்தே

மன்னன் ஒருவன் பெரும்படையோன்

   மறத்தில் வெல்லச் செலல்வேண்டும்,

இன்னல் வருமே இல்லையெனில்,

  எல்லை யில்லாப் பெரும்படையும்

சின்னா பின்ன மாகியேதான்

  சிறப்பெலா மழிவான் மன்னனுமே…!

 

லிமரைக்கூ..

 

சிறுபடையின் இருப்பிடயியல்பை அறி,

அறியாதங்கே போரிடச் சென்றால்

அழிந்திடும் பெரும்படையின் நெறி…!

 

கிராமிய பாணியில்…

 

அறிஞ்சிபோகணும் அறிஞ்சிபோகணும்

இருப்பிடநெலம அறிஞ்சிபோகணும்..

 

சின்னப் படயா இருந்தாலுமே

அதன்

இருப்பிட நெலம தெரியாம

பெரியபடையே போனாலும்,

தோத்து

பெருமயழிஞ்சி போயிடுமே,

ராசா

பேருங்கெட்டுப் போயிடுமே..

 

அதால,

அறிஞ்சிபோகணும் அறிஞ்சிபோகணும்

இருப்பிடநெலம அறிஞ்சிபோகணும்…!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.