நான் அறிந்த சிலம்பு – 233
-மலர் சபா
மதுரைக் காண்டம் – கட்டுரை காதை
பாண்டியர் குலத்தின் இயல்பு உரைத்தல்
அந்தணர் தம்
வாயால் ஓதுகின்ற
வேதங்களின் ஓசை
கேட்டவனே அல்லாது, 
ஒருபோதும் குறைகூறும்
ஆராய்ச்சி மணியின் நாவோசையைக்
கேட்காதவன் மன்னன்;
அவன் தாள் பணிந்து வணங்காத,
கைகூப்பாத பகையரசர்கள் வேண்டுமெனில்
அவன்மீது பழிகூறக்கூடும்;
ஆனால், குடிமக்கள்
அவனை ஒருபோதும்கொடுங்கோலன்
எனக் கூறியது கிடையாது.
கேட்பாயாக!
எம் அரசன் பிறந்த குடிமாண்பினை…
நல்ல நெற்றியை உடைய மகளிர்
தம் அழகு மிகுந்த
பார்வையின் காரணமாய்,
தன்னிடத்தே மதம் வெளிப்பட்டு
எல்லை மீறிச் செல்லும்
இளமையாகிய யானை,
கல்வி எனும் பாகனுக்கு அடங்காமல்
விடாத ஊக்கத்துடன் ஓடினாலும்,
அது நல்லொழுக்கத்துடன்
இக்குடியில் பிறந்த
பாண்டியர்களுக்குச் சிறு பழியைக்கூடத் தராது.
இன்னமும் கூறுவேன் கேள்;
