Featuredஇலக்கியம்கட்டுரைகள்

நேரம் பொன்னானது!

-தமிழ்த்தேனீ

clock

அன்பு நண்பர்களே! உலகத்திலே நாம் எதை இழந்தாலும் மீண்டும் கிடைக்காதுதான். நல்ல உறவுகள், நல்ல நட்பு, நல்ல சிந்தனைகள், நல்ல நேரங்கள், நல்ல வாய்ப்புகள், ஆகிய எதை இழந்தாலும் மீண்டும் கிடைப்பது கடினம். அப்படிப்பட்ட வாழ்க்கையில் இறைவன் நம்மைப் பிறக்க வைக்கிறான் மீண்டும் அழைத்துக் கொள்கிறான்.

இந்த இடைப்பட்ட காலத்திலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் “நேரம் இருக்கிறதே” அதன் ஒவ்வொரு மணித்துளியும் பொன்னானது இழக்கக் கூடாதது. ஆகவே ஒவ்வொரு மணித்துளியையும் மிகவும் உபயோகமாகச் செலவிடவேண்டிய அவசியத்தில் இருக்கிறோம் என்பதை நாமெல்லோரும் உணர்ந்தே ஆகவேண்டும்.

அன்றாட வாழ்க்கையில் நாம் இழப்பது எவ்வளவோ உள்ளது. நம் உடலில் உள்ள திசுக்கள் ஒவ்வொரு கணமும் தேய்கின்றன, வளர்கின்றன. பழைய திசுக்கள் அழிந்து புதுத் திசுக்கள் உருவாகின்றன. இப்படி அன்றாடம் நிகழும் இந்த மாற்றத்தினால் ஏற்படும் திசுக்களின் அழிவைத் தடுக்க முடியாது. அப்படி அழிந்த திசுக்களை நாம் மீண்டும் பெற முடியாது.

அப்படி இழந்த திசுக்களை மீண்டும் பெற முடிந்தால் நம் இளமை எப்போதும் நம்மிடம் இருக்கும். இந்த ரகசியத்தைத்தான் சித்தர்கள் ஆராய்ந்து அவர்களின் இளமையை தக்கவைத்துக் கொண்டார்கள். மேலும் உடலால் அழிந்தாலும் உயிரால் அழியாமல் சிரஞ்சீவியாக இன்னமும் பல சித்தர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.

அதேபோல் ஒவ்வொரு கணமும் உலகில் இயற்கையில் பல மாறுதல்கள் அதாவது அழிவுகளும், வளர்ச்சிகளும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அப்படி இயற்கை மாற்றத்தினால் ஏற்படும் அழிவுகளையும் நாம் மீண்டும் திரும்பப் பெற முடியாது. இவையெல்லாம் நம் சக்திக்கு மீறி நடந்து கொண்டிருக்கிறது. அவைகளைக் கட்டுப் படுத்த நமக்கு ஆற்றல் போதாது.

இவைகளில் முக்கியமானது “காலம்” கடிகாரத்தை நிறுத்தலாம் ஆனால் காலத்தை நிறுத்த முடியுமா? காலச் சுழற்சியை யாராலும் நிறுத்த முடியாது. ஒவ்வொரு வினாடியும் கடந்து கொண்டே இருக்கிறது. இப்படி ஓடிக்கொண்டே இருக்கும் காலத்தின் விளைவால் கழியும் மணித் துளிகள் விரயமாவதை நாம் திட்டமிட்டு ஓரளவுக்கு உபயோகப்படுத்த முயன்றால் ஓரளவு காலத்தின் விரயத்தைத் தடுக்க முடியும். ஆனால் காலத்தை நிறுத்த முடியாது.

ஆகவே திட்டமிடுதல் மிக முக்கியமான ஒன்று. அது மட்டுமல்ல. நாம் நம் திட்டங்களை முறையாக வகுத்துக் கொள்ளாததனால் எவ்வளவு விரயங்களை சந்திக்கின்றோம் என்பதை நாம் அறியாமலே இருக்கிறோம். இப்படி நாம் இழக்கும் பலவிதமான இழப்புகளை சில உதாரணங்களால் நாம் அளந்து கொள்ளலாம். அப்படி அளக்கும் போதுதான் நம்முடைய இழப்பை நாம் உணருவோம். அப்படி உணரும் போது நாம் அதிர்ந்து போவோம். அப்படி நம்முடைய இழப்பைக் கணக்கிட்டு அதைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்வோம்.

ஆகவே, நேரத்தின் அருமையை விளக்க ஒரு நடைமுறை நிகழ்வை வைத்துப் புரிந்துகொள்ள முயல்வோம். இப்போது நான் இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் நேரம் மாலை 7 மணி 15 நிமிடம் 7/4/2017 ஆம் ஆண்டு. ஆனால் இனி என் வாழ்வில் இந்த மாலை 7 மணி 15 நிமிடம் 7/4/2017 ஆம் ஆண்டு, இந்த வினாடியை, மணித்துளிகளை, ஆண்டை திரும்பப் பெற முடியுமா? அட இதை எழுதிக் கொண்டிருக்கும் போதே இப்போது மாலை 7 மணி 16 நிமிடம் 7/4/2017 ஆம் ஆண்டு என்றும், மாலை 7 மணி 17 நிமிடம் 7/4/2017 ஆம் ஆண்டு என்றும், மாலை 7 மணி 18 நிமிடம் 7/4/2017 ஆம் ஆண்டு என்றும் ஓடிக்கொண்டே இருக்கிறது.

நம்முடைய அலக்ஷியத்தால், முறையான திட்டமிடுதல் இல்லாமையால் ஒரு நிமிடத்தை இழந்தால்கூட அதை எப்போதுமே திரும்பப் பெற முடியாது. ஆகவே ஒரு நிமிடம் தானே என்று அலக்ஷியப் படுத்தாதீர்கள். கடந்து போன, நீங்கள் இழந்த அந்த ஒரு நிமிடம் உங்கள் வாழ்க்கையின் பொன்னான தருணத்தைத் தவற விட்டிருக்கிறீர்கள். வாழ்வின் உச்சிக்குச் சென்றிருக்க வேண்டிய வாய்ப்பை நம்மை அறியாமலே தவற விட்டிருப்போம்.

ஆகவே இப்போது புரிகிறதா நேரத்தின் அருமை?! இழந்தது ஒரு நிமிடமென்றாலும் அதை மீண்டும் பெற முடியாது என்பதை உணர்கிறீர்களா? இனி ஒரு நிமிடத்தையும் வீணாக்காதீர்கள்.

Print Friendly, PDF & Email
Download PDF
Share

Comments (1)

 1. Avatar

  நேரத்தின் மதிப்பைப் பற்றி எழுதிய தங்களின் பெயரிலேயே இருக்கும்…

  தும்பியும் கூட…. நல்ல
  தம்பிக்கெல்லாம் நேரம் பற்றிய செய்தி சொல்லும்..

  “ஒரு பவுண்ட் தேனை சேகரிக்க,
  தேனீ இருபது லட்சம் மலர்களைத்
  தேடிச்செல்கிறது”

  இதற்கு தேனீ எடுத்துக் கொள்ளும் நேரம் பற்றி, ஒருமுறையாவது சிந்தித்திருக்கிறோமா?…

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க