[பேரங்க நாடகம்]

மூலம்: ஷேக்ஸ்பியர் & பெர்னாட்ஷா

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

cleo1

 

அங்கம் -2 பாகம் -8

தைபர் நதிக்கரை மீதுள்ள
ரோமாபுரி எரிந்து உருகிடலாம்!
சாம்ராஜி யத்தின் விரிந்த
தோரண வளையம் கவிழ்ந்திடலாம்!
நானாடும் அரங்கவெளி இங்குளது!
பேரரசுகள் வெறுங் களிமண்! நம்மிருண்ட
தாரணியும் மண்ணே!
எதிர்த் திசையில் அதுவும்
மனித ரெனக் கருதி,
காட்டு விலங்குக்கு ஊட்டும் உணவு!
ஆண்பெண் இருவர் சேர்ந்து புரியும்
வாழ்வின் மகத்துவம் அதுவே!

வில்லியம் ஷேக்ஸ்பியர் [அண்டனி & கிளியோபாத்ரா]

நேரம், இடம்:

அலெக்ஸாண்டிரியாவில் எகிப்த் மன்னர் அரண்மனை. பாரோ மன்னர் வரலாற்று ஓவியங்கள் உயர்ந்த சுவர்களை அலங்கரிக்கின்றன. பகல் வேளை.

நாடகப் பாத்திரங்கள்:

பால்ய அரசன் டாலமி, போதினஸ், தியோடோடஸ், அக்கில்லஸ், ஜூலியஸ் சீஸர், ரூபியோ, ரோமானியக் காவலர், எகிப்தின் படையினர், கிளியோபாத்ரா, கம்பள வணிகன், பணியாளி.

ரூஃபியோ: [கோபத்துடன் வழிமறைத்து] நில் அக்கிலஸ்! நகராதே! மகாராணி கிளியோபாத்ரா பக்கத்தில் அடிவைத்தால், உமது சிரம் அறுபட்டுக் கீழே உருண்டோடும்! அங்கேயே நில்! எகிப்தின் பெண்ணரசிக்கு ரோமாபுரிப் படையினர் பாதுகாப்பு அளிக்கிறோம்! தள்ளி விலகி நில்! … என்ன மடத்தனமான செயலுக்கு உடன்பட்டிருக்கிறாய்? கூடவே ஜெனரல் சீஸரையும் சிறைப்படுத்தப் போகிறீரா? [வெடித்துச் சிரிக்கிறான்]

போதினஸ்: [தயக்கத்துடன்] எங்கள் எதிரி கிளியோபாத்ரா மட்டுமே! அவரைக் கைது செய்து சிறையில் அடைப்போம்! ரோமாபுரியின் ஜெனரல் எங்கள் சிறப்பு விருந்தினர்! எங்கள் இனிய நண்பர்! எங்கள் மதிப்பிற்கும், துதிப்பிற்கும் உரிய ரோமாபுரித் தளபதி!

ரூஃபியோ: [அழுத்தமாக] அதைப் போல கிளியோபாத்ரா ரோமாபுரியின் நண்பர்! ஜெனரல் சீஸர் எகிப்துக்குப் பேரரசியாக மகுடம் சூடப் போகும் மாண்புமிகு மாது! ரோமாபுரியின் மதிப்புக்கும் பாதுகாப்புக்கும் உரியவர்! அவரைச் சிறை செய்வது, சீஸரைச் சிறைப்படுத்தியதற்குச் சமம்!

போதினஸ்: எங்களுக்கு ரோமானியர் அனைவரும் நண்பர்! ரோமானியருக்கு கிளியோபாத்ரா நண்பர்! ஆனால் கிளியோபாத்ரா எங்களுக்கு நண்பர் அல்லர்! பெரும் பகையாளி! இன்றைக்கு அவர் உங்கள் நேரடிப் பாதுகாப்பில் தப்பி வாழ்கிறார். ஆனால் அவளைக் கைது செய்ய யாம் என்றும் தயங்க மாட்டோம்!

பிரிட்டானஸ்: நீங்கள் யாவரும் தற்போது சீஸரின் அரசியல் கைதிகள்!

ஜூலியஸ் சீஸர்: [முகத்தில் முறுவலுடன்] ஓ! இல்லை!இல்லை!இல்லை! நீங்கள் அனைவரும் சீஸரின் விருந்தாளிகள்.

கிளியோபத்ரா: [ஆத்திரமோடு] ஜெனரல் அவர்களே! பிரிட்டானஸ் சொல்வதுதான் சரி! டாலமி, டாலமியின் குரு, டாலமியின் படை அதிபதி அத்தனை பேரும் மூர்க்கவாதிகள்! அவரைச் சிறையிலிட்டு என்ன செய்வீர்! அறுசுவை உண்டி அளித்து உடலைக் கொழுக்க வைக்கப் போகிறீரா? உங்கள் நிலையில் நானிருந்தால் அத்தனை தலைகளும் இப்போது அறுக்கப்பட்டுத் தரையில் உருண்டோடிக் கொண்டிருக்கும்! அவரை எல்லாம் நீங்கள் சிரச்சேதம் செய்யப் போவதில்லையா?

ஜூலியஸ் சீஸர்: [சற்று அவளை உற்று நோக்கி] என்ன? உன் தமையன் பாலகன் டாலமியின் தலையைத் துண்டிக்கச் சொல்கிறாயா?

கிளியோபாத்ரா: ஏன் துண்டிக்கக் கூடாது! வாய்ப்புக் கிடைத்தால் டாலமி என் தலையை வாளால் சீவி எறிய மாட்டானா? கேளுங்கள்! ..[டாலமியைப் பார்த்து] டாலமி! எல்லோர் முன்பாக உண்மையைச் சொல்! என்னைச் சிரச்சேதம் செய்யாமல் பிழைத்து வாழ விட்டுவிடுவாயா?

cleo2

டாலமி: [சற்று மிரட்சியுடன்] பாம்பும், பாவையும் என் பக்கத்தே தீண்ட வந்தால், பாம்பை விட்டுவிட்டு நான் பாவையைத்தான் முதலில் அடித்துக் கொல்வேன்! ஏன்! பெரியவனானால் நானே அவள் தலையைத் வாளால் துண்டிக்கவும் தயங்க மாட்டேன்!

கிளியோபாத்ரா: பார்த்தீரா? ஆல கால விஷம் கக்கும் டாலமிப் பாலகனை!

ஜூலியஸ் சீஸர்: [தீர்மானமாக] டாலமி! போதினஸ்! தியோடோடஸ்! நீங்கள் யாவரும் போகலாம். விடுதலை உங்களுக்கு! போகும் போது உங்கள் படைகளையும் கூட்டிச் செல்லுங்கள்.

போதினஸ்: [தயக்கமுடன்] ஏன் நாங்கள் போக வேண்டும்! எங்கள் அரண்மனை யிது! போக வேண்டியது கிளியோபாத்ரா!

ஜூலியஸ் சீஸர்: [சற்று கடுமையாக] போதினஸ்! கிளியோபாத்ரா எகிப்தின் பேரரசியாகப் போகிறவள்! அவள் கையில் பிடிபட்டு உங்கள் தலையை யிழக்க விரும்புகிறீரா? அல்லது உங்கள் தலையை உடம்பில் ஒட்டியபடித் தூக்கித் தப்பிச் செல்ல விரும்புகிறீரா? உயிர் பிழைத்துக் கொள்ள ஒரு வாய்ப்பை அளிக்கிறேன் உமக்கு! ஒப்புக் கொண்டு உடனே வெளியேறுங்கள். அல்லது மறுத்துக் கொண்டு கியோபாத்ராவிடம் மாட்டிக் கொள்ளுங்கள். உங்கள் உண்மைத் தோழர்கள் வெளியே தெருவிலும் உள்ளார்! அதுதான் உங்கள் உலகம்! வெளியேறுவீர் சீக்கிரம்!

தியோடோடஸ்: மேன்மைமிகு சீஸர் அவர்களே! மறந்து விட்டீரா, உமது ஆருயிரைக் காப்பாற்றியவர் யாமென்று?

ஜூலியஸ் சீஸர்: என்ன? என்ன? புதிராக உள்ளதே! என்னுயிரைக் காப்பாற்றியவர் நீங்களா? எங்கே எப்போது என்னுயிரைக் காப்பாற்றி யிருக்கிறீர்? அதுவும் எனக்குத் தெரியாமல்! வியப்பாக உள்ளதே!

தியோடோடஸ்: ஆம், அது உண்மைதான். உங்கள் இனிய உயிருக்குப் பாதுகாப்பு! உங்கள் மகத்தான வெற்றிகளுக்குப் பாதுகாப்பு! உங்கள் பொன்மயமான எதிர்காலத்துக்குப் பாதுகாப்பு! அந்த மூன்றையும் நீங்கள் அறியாமலே பாதுகாத்தோம்.

போதினஸ்: மேன்மைமிகு சீஸர் அவர்களே! அதை நிரூபிக்க நானொரு சாட்சியை வரவழைக்கப் போகிறேன். [எகிப்தியர் படையாட்களில் ஒருவரைச் சுட்டிக் காட்டி] அதோ! அங்கே நிற்கிறார், லூசியஸ் ஸெப்டிமியஸ். அவரது தலைமையில்தான் அப்பணி நிறைவேறியது. [லூசியஸை நோக்கி] லூசியஸ்! நான் அழைப்பது உனக்குக் கேட்கிறதா? சீஸர் முன்வந்து நீ நடந்ததைச் சொல்வாயா?

[நல்ல உடற்கட்டும், நிமிர்ந்த பார்வையும் கொண்ட 40 வயது வாலிபன், ரோமன் உடை அணிந்தவன் சீஸர் முன் வருகிறான்.]

போதினஸ்: உண்மையைச் சொல், லூசியஸ்! ஜெனரல் சீஸர் எகிப்துக்கு ஏன் வந்தார்? தன் பகைவன் ரோமாபுரி பாம்ப்பியை தேடிப் பிடிக்க வந்தாரில்லியா? எகிப்தியர் நாம் என்ன செய்தோம்? பாம்ப்பியை எகிப்தில் ஒளித்து வைத்தோமா?

லூசியஸ்: [அழுத்தமாக] ஜெனரல் சீஸர் அவர்களே! பாம்ப்பியின் காற்தடம் எகிப்தின் கரையில் பட்டவுடன், அவரது தலையை என் வாளால் வெட்டித் துண்டித்து விட்டவன் நான்!

தியோடோடஸ்: [ஆணித்தரமாக] அவரது மனைவி, பிள்ளை இருவர் முன்னிலையில் சிரச்சேதம் செய்யப் பட்டான் பாம்ப்பி! நினைவிருக்கட்டும் ஜெனரல் சீஸர்! கப்பலை விட்டுக் கரையில் கால் வைக்கும் போது அவரிருவரும் கண்வலிக்கக் கண்ட காட்சி! நீங்கள் பலிவாங்கக் காத்திருந்ததை, நாங்கள் செய்தோம். ரோமாபுரி ஜெனரலுக்காக, எகிப்தியர் செய்த நன்றிக் கொலை! உங்கள் அன்பைக் கவர நாங்கள் செய்வத நல்ல காரியம், பாம்ப்பியைக் கொன்றது!

 

cleo3

ஜூலியஸ் சீஸர்: [மனவேதனை யுற்று, தடுமாறி அங்குமிங்கும் நடந்து] பாவிக் கொலைகாரர்களா! நீவீர் புரிந்தது படுகொலை! நன்றிக் கொலையா அது? நரபலிக் கொலை! ரோமாபுரித் தளபதி பாம்ப்பி வீரத்தில் எனக்கு நேரானவன்! போரிடுவதில் எனக்கு நிகரானவன்! போரிட்டுக் கொல்லாமல் வீரனை படுகொலை செய்த நீவீர் அனைவரும் கொலைகாரர்கள்! குற்றவாளிகள்! உம்மைச் சும்மா விட்டுவிட மாட்டேன்! பகைவனாயினும் ஒரு ரோமனைப் போரிடாமல் கொல்வது, என்னெறிப்படி ஒரு படுகொலை! யாரிந்த சதியைத் திட்டமிட்டது? ஏ! லூசியஸ்! யாருனக்கு ஆணை யிட்டது? யாருன்னை அனுப்பிக் கொலை செய்யத் தூண்டியது? என் மனத்தைத் துடிக்கச் செய்த அந்த பயங்கரவாதி யார்? .. யார்? …யார்?

போதினஸ்: துணிச்சலான அச்செயல் ஜெனரல் சீஸருக்காகச் செய்யப் பட்டது! அதைத் திட்டமிட்டவன் நான்தான்! நினைத்ததை முடித்த நான் அதற்குப் பெருமைப் படுகிறேன்! பயங்கரத் தளபதி பாம்ப்பியைக் கொன்றதற்குச் சான்றுகள் இன்னும் உள. [அக்கில்லஸைப் பார்த்து] அக்கில்லஸ்! கொண்டுவா அடுத்த குடத்தை! ஜெனரல் சீஸருக்குக் காட்டு அடுத்த சான்றை!

[அக்கில்லஸ் முன்வர இரண்டு அடிமைகள் மூடிய ஒரு பானையைத் தூக்கிக் கொண்டு வந்து தரையில் வைக்கிறார்கள்.]

அக்கில்லஸ்: [பானை மூடியைத் திறந்து] ஜெனரல் சீஸர் அவர்களே! இதோ, பாம்ப்பியின் தலை! துண்டிக்கப் பட்ட தலை! பார்க்க விரும்புகிறீரா? உங்கள் பகைவனை ஒழித்து விட்டோம்! [அடிமைகள் மூடியைத் திறந்து தலையை எடுக்க முனைகிறார்கள்]

ஜூலியஸ் சீஸர்: [மனமுடைந்து, அலறிக் கொண்டு] கொலைகாரரே! நிறுத்துங்கள்! நானதைக் காண விரும்பவில்லை! அயோக்கியர்களே! முரடர்களே! பாம்ப்பி என்னும் ரோமாபுரி வீரன் என் பகையாளி என்று மட்டுமா நினைத்தீர்? அவன் என் மகள் ஜூலியாவை மணந்தவன். என் மருமகன் அவன்! காலமான பாம்ப்பியின் முதல் மனைவி எனது ஒரே மகள் ஜூலியா! அவளும் என்றோ காலமாகி விட்டாள்! கடவுளே! என்ன கொடுமை யிது? ஓ! பாம்ப்பி! நீ இப்படியா இந்த மூர்க்கர் கையில் அறுபட்டுச் சாவாய்?

அக்கில்லஸ்: [சீஸரை அணுகி, வருத்தமுடன்] இதோ பாம்ப்பியின் அடையாள மோதிரம்!

ஜூலியஸ் சீஸர்: [சோகத்துடன் கையில் வாங்கிக் கொண்டு அழுகிறார்] இந்த மோதிரத்தைப் பாம்ப்பியின் கைவிரலில் முதன்முதல் போட்டவள் என்னருமைப் புதல்வி ஜூலியா! ரோமாபுரித் தளபதி கை மோதிரமிது! பரிசும், பாராட்டும் பெற வேண்டிய மோதிரமிது! கொலைகாரர் களவாடினாலும் விலை மதிப்பில்லா மோதிரமிது! … யாரங்கே! ரூபியோ! பிரிட்டானஸ்! விலங்கோடு வாருங்கள்! கொலைகாரர் யாவரையும் கைது செய்யுங்கள்! முதலில் போதினஸை இன்றே சிரச்சேதம் செய்ய வேண்டும்! டாலமியைக் கைது செய்து சிறையில் தள்ளுங்கள்! அரண்மனை அனைத்தும் ரோமானியக் காவலரை நிறுத்துங்கள்! கிளியோபாத்ராவுக்கு முழுப் பாதுகாப்பு அளித்திடுங்கள்!

தொடரும்…

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *