-தமிழ்த்தேனீ

“திருவாடிப்பூர நாயகி” ஆண்டாள் நினைவு

ஶ்ரீவில்லி புத்தூர் திருவண்ணாமலை ஶ்ரீனிவாசன் திருக்கோயில் காண https://www.youtube.com/watch?v=6UWnTvJWtvc நானே எடுத்த காணொளி.

********

என் சொந்த  ஊர்  ஶ்ரீவில்லிபுத்தூர். ஶ்ரீவில்லிபுத்தூரில் முதல் வக்கீல் என்னும் பெருமை கொண்ட என் பாட்டனார்  என்  தந்தை திரு ஆர்  ரங்கசாமி  அவர்களின்  தகப்பனார் அங்கே ஆண்டாள் கோயிலில் நிர்வாகியாகக் கைங்கர்யம் செய்து கொண்டிருந்த திரு ராமபத்ரன்அவர்கள்.

அவர்  செய்த  புண்ணியத்தாலோ  அல்லது என் முன்னோர்கள் செய்த புண்ணியத்தாலோ என் பெற்றோர் ஆண்டாளைப் பற்றி என் மனதில் விதைத்த நல்ல சிந்தனைகளை  உங்களுடன்  என் பாணியில்  நான் எழுதப் போகிறேன். சிந்தனையின் மூலக் கருவூலம்  என் முன்னோர்கள்  எழுதுவது  அடியேன். ஆகவே படித்து இன்புறுவது  நாமெல்லோரும். வாருங்கள்… ஆண்டாளைப் பற்றிய இனிய நினைவுகளில் தோய்வோம்.

ஒவ்வொரு பெண்ணும்  தந்தைதாய் வீட்டிலிருந்து புக்ககம் சென்று அந்த வீட்டில் விளக்கேற்றி,  புகுந்த இடம் சரியான இடம்தான் என்று ஒரு தீர்மானம் வரும் வரையில்,  பெத்த தகப்பனுக்கு மனம் கனத்துத்தான் இருக்கும். பெண்ணும் மாப்பிள்ளையும் மனமகிழ்ச்சியோடு குடும்பம் நடத்துவதைப் பார்த்த பின்னர் ஒரு நிம்மதி ஏற்படும்.

என்னதான் இருந்தாலும் தான் செல்லமாக வளர்த்த பெண்ணைத்  தன் மடியில் வைத்துத் தாரை வார்த்துக்கொடுக்கும் போது அவரையறியாமல்  அடிவயிற்றிலிருந்து விம்மி ஆனந்தம் கண்ணீராக அவர் கண்ணில்  ஊற்றாகப் பெருக்கெடுக்கும். இது ஒரு ஆனந்த நிலை; அனுபவித்தவர்க்கே புரியும் அற்புத உணர்வு.

அப்படிப்பட்ட  அனுபவத்தை  அனுபவித்த பெற்றவர் பலரைப் பார்த்திருக்கிறேன்’  நானும் அந்த சுகத்தை  அனுபவித்திருக்கிறேன். அந்த ஆனந்தக் கண்ணீருக்கு  என்ன பொருள் என்று யோசித்திருக்கிறேன். பெண்ணிற்கு ஒரு நல்ல வாழ்வைத் தேடித்தரவேண்டும் என்னும் பொறுப்புடைய  தகப்பன்,   தன்  பொறுப்பென்ற  கனம்  சரியான முறையில் சரியான  இடத்தில் இறக்கி வைத்த  ஒரு நிம்மதி, ஆனந்தம் என்றே தோன்றுகிறது,  சாதாரணமான  மானுடப் பெண்களுக்கே  இப்படிப்பட்ட  நெகிழ்வு ஏற்படுகிறது ஒவ்வொரு தகப்பனுக்கும் என்றால்  லோக மாதாவான ஆண்டாளை  மகளாகப் பெற்ற பெரியாழ்வாரின் நிலை  சொல்லவும் கூடுமோ! மஹாலக்‌ஷ்மி ஆண்டாளை மகளாக மனதார ரசித்து வாழ்ந்த பெரியாழ்வாரின் நிலை சொல்லவும் கூடுமோ?

திருமழிசைஆழ்வார், நம்மாழ்வார், குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார் ஆகிய  நான்கு ஆழ்வார்களுடன் முதலாழ்வார்கள் என்று சொல்லக்கூடிய ஆழ்வார்களும் சேர்த்து  அஞ்சுக்குடி ஒரு அதிசியம் என்னவென்றால் பெரியாழ்வாரின் பரம்பரையில் பெரியாழ்வாரின் தம்பி மகன் என்று நினைக்கிறேன் அவர்தான் கடைசி வாரிசு அவரைச் சந்திக்கும் பாக்கியக் கிடைத்தது, அவரைப் பேட்டி எடுத்தேன்; காணொளியாக வைத்திருக்கிறேன். நிச்சயமாக அந்தக் காணொளியை அளிக்கிறேன். காணொளியைக் காணலாம்  பெரியாழ்வார் பரம்பரை மற்றும் ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்:  https://www.youtube.com/watch?v=yfrWeDtVZMs

பாகம் 2

பெரியாழ்வாரின் நிலையை சொல்லத்தான் வேண்டும். ஒவ்வொரு பெண்ணைப் பெற்ற தகப்பனும் பெரியாழ்வாரே, கண்டெடுத்த பெரியாழ்வாருக்கே இந்நிலை யென்றால்  மாப்பிள்ளையின்  நினைவுகளை மனதில் தாங்கி, மடியில்  அமர்ந்திருக்கும்  மஹாகனம் பொருந்திய  மகளை, அவளின் குழந்தைப் பருவம் முதல் பெண்களின் 7 பருவங்களான   எட்டு வயது வரை பேதை, பத்து வயது வரை பெதும்பை, பதினோரு வயது முதல் 14 வயது வரை மங்கை, பதினைந்து வயதிலிருந்து பதினெட்டு வயது வரை மடந்தை  பத்தொன்பது வயது முதல் இருபத்தி நாலு வயது வரை  அரிவை, இருபத்து ஐந்து வயது முதல் இருபத்தி ஒன்பது வயது வரை தெரிவை,  முப்பது வயதுக்கு மேல் பேரிளம் பெண்  என்றாலும்  இருபத்தி நாலு வயது வரை வளர்த்து வயிற்றிலே நெருப்பைக் கட்டிக்கொண்டு  கண்விழித்துப்  பாதுகாத்து  பாசம் காட்டி பாதுகாத்து வளர்த்த  நினைவுகளை அசைபோட்டுக்கொண்டே இருந்து எங்க வேடிக்கை பாக்கறீங்க  மந்திரத்தை சொல்லுங்க  முஹுர்த்தத்துக்கு நேரம் ஆச்சு திருமாங்கல்ய தாரணம் சரியான  நல்ல சுப வேளையிலே  நடக்கணும் என்றதும் திடுக்கிட்டு விழித்து  மாங்கல்ய தாரணம் ஆனதும், மாப்பிள்ளையின் கையில் பிடித்துக்கொடுத்து நிம்மதிப் பெருமூச்சு விட்டாலும், மகளின் பிரிவு  மஹாலக்‌ஷ்மியின் பிரிவல்லவா? அதைத் தாங்கப் பெரியாழ்வாராலேயே  முடியவில்லை என்றால்  சாதாரண மானுடர்களின் நிலையை  நினைத்துப் பார்க்கிறேன். கண்டெடுத்த பெரியாழ்வாருக்கே இந்நிலை யென்றால் பெற்றெடுத்த பெரியாழ்வார்களின் நிலை? ஹும்…”பாசம்” மிகவும் கனமானதுதான்.

பெற்றெடுத்த தந்தைகளுக்கு  என்ன நிலை  என்று எண்ணிப் பார்த்தேன்.  ஒவ்வொரு தகப்பனும் பெரியாழ்வாரே. “ஆனால் பிறக்கும் எல்லாப் பெண்களும் ஆண்டாள்  அல்ல. அந்தப் பெண்களைக் கொள்ளும் ஆண்களும்  அரங்கன் அல்ல”   இதுதான் இன்றைய  பிரச்சனை.  இப்படிப்பட்ட இந்தக் காலத்தில்  ஒவ்வொரு தகப்பனின் நிலையும் பரிதாபம்தான்.

சுற்றிநோக்கில் எனைப் பற்றித் தொற்றிய எண்ணம் முற்றிய‘  நிலையால் பற்றிய கருத்து அலையால் சுட்டிய எண்ணம். உலகில் பெண்ணைப்பெற்ற ஒவ்வொருவரும் பெரியாழ்வார் அல்லர்.  பிறந்து புக்ககம் போகும் ஒவ்வொரு பெண்ணும் ஆண்டாளும் அல்லள்.. பெற்றவர்கள்  எல்லோருமே தங்களைப் பெரியாழ்வாராக நினைக்காவிடினும்,   தங்கள் பெண்ணை  மஹாலக்‌ஷ்மியாகவும், ஆண்டாளாகவும் நினைத்தே வளர்க்கின்றனர்,  அதனால்தான்  நம் சாத்திரத்தில்  பெண்ணைத் தாரை வார்த்து அளிக்கும்போது தன் பெண்ணைக் கைப்பிடிக்கவிருக்கும்  மாப்பிள்ளையை  மஹாவிஷ்ணுவின் அவதாரமாக நினைத்தே  பாத பூஜை செய்து  தங்கள் பெண்ணாகிய மஹாலக்‌ஷ்மியை  அந்த மஹாவிஷ்ணுவுக்குத் திருமணம் செய்து கொடுப்பதாகவே  நினைத்துத்தான்  திருமணங்களை  நடத்துகின்றனர்.

பெண்களும்  ஆண்டாளாகவே தம்மை  வரித்துக்கொண்டுதான்  தன்னைக் கைப்பிடிக்கும் மணாளனை அரங்கனாக நினைத்துதான்  திருமணமும்   செய்துகொள்ளுகின்றனர். திருமணம் ஆன பின்னர் சுயரூபம் தெரியும் போதுதான் பெண்ணுக்கும் புரிகிறது, ஆணுக்கும் புரிகிறது.  தான்  ஆண்டாள் அல்ல என்பதுவும்  தன் மணாளன்  அரங்கன் அல்ல  என்பதுவும்  என்ன செய்ய?

பாகம் 3

நாம் பாதை மாறிவிட்டோம் அப்பா.  என் கணவரின் தகுதி அறிந்து செய்ய முடியவில்லை  என்றால் ஏன் எனக்குத்  திருமணம் செய்து வைத்தீர்கள்  என்று தகப்பன் மேல் பாய்ந்த  எத்தனையோ  பெண்களைக் கண்ணால் கண்டவன் நான்.  தந்தையர்களின்  கஷ்டம் அறியாத பெண்கள் பலர் உள்ளனர். ஒருவனைப் பற்றி ஓரகத்திரு என்பார்கள் பெரியவர்கள்.

இந்தக் காலத்தில் அப்படி ஆணும் நடந்து கொள்வதில்லை பெண்களும் நடந்து கொள்வதில்லை . முந்தைய காலங்களில் கட்டிய கணவனை மனைவி பரிபூரணமாக நம்பினாள். கட்டிய  மனைவியைக் கணவன் பரி பூரணமாக நம்பினான். இங்கேயும் சில விதிவிலக்குகள் இருந்தன. அப்படி இருந்த சில வேண்டாத  விதிவிலக்குகள் சில மனிதர்களைத் தடுமாற  வைத்திருக்கலாம். ஆனால் இப்போது  எல்லா மனிதர்களுமே தடுமாறுகிறார்கள் வாழ்க்கைத்  துணையைத் தேர்ந்தெடுக்க.

தன் வாழ்க்கைத்  துணையைத் தேர்ந்தெடுக்க  பெற்றவர்களையும் நம்புவதில்லை.  அது பரவாயில்லை… தாங்களே தேர்ந்தெடுக்கும் வாழ்க்கைத் துணையையும் இரு பாலருமே நம்புவதில்லை. ஓடும் வரை ஓடட்டும்; பிய்த்துக் கொள்ளும் நேரம் வந்தால் பிய்த்துக் கொண்டு வேறு துணையை தேடிக் கொள்ளலாம் என்னும் நிலையைக் காணமுடிகிறது இந்நாளில்.

இந்த மானுட ஜென்மத்தில் நமக்குப் பிறந்த  பிள்ளைகளை  நம் பிள்ளைகள் என்று நினைக்கும் பேதைகள் நாம். அதனால் பாசத்திலும்  அன்பிலும் கரைந்து நாம்தான் அவர்களை  வளர்க்கிறோம்.  நாம்தான் அவர்களை ஆளாக்குகிறோம்   என்றெல்லாம்  நினைத்துக் கொண்டு  அவர்கள் பிரிவில்  வாடுகிறோம். என்னே பேதமை என்று புரிகிறது  ஆனாலும்  மாற்றிக் கொள்ள இயலாமல் அஞ்ஞானம் தடுக்கிறதே!  எப்போது மெய்ஞ்ஞானம்  பெறுவோம்?    குதிரை இருப்பறியும்  கொண்டவள் குணமறிவாள் என்று ஒரு பழமொழி உண்டு!  குதிரை  தன் மேல் பயணிக்க ஏறும் மனிதரின் அணுகு முறையை வைத்தே  நம்மை அடக்கியாள தகுந்தவனா இல்லையா என்பதை முடிவு செய்துவிடும், அதற்கேற்ப  அடங்கி ஓடவோ  அல்லது திமிறிக் கீழே தள்ளவோ செய்யும்.

அது போலத்தான் பெண்களும்   அவர்களுக்கு  அவர்களைக் கொண்டவர்களின் குணம் மிக நன்றாகத் தெரியும், ஏனென்றால் இந்த  உலகில்  மிக நெருக்கமாக  பழகும் ஒரே ஜீவன் அவர்களைப் பொறுத்தவரை கணவன்தான் அதாவது  அவர்களைக் கொண்டவர்கள்தான்.

என்னதான் சாமர்த்தியமாக ஏமாற்றினாலும்  எப்படியோ கண்டு பிடித்துவிடுவார்கள் அவர்கள். ஆனால் ஆண்களால் அவர்களைக் கண்டுபிடிக்க முடியாது.  ஏனென்றால் கடலாழம் காண முடிந்தாலும் பெண்கள் மனதாழம் காண முடியாது  என்பார் பெரியோர்.

பாகம்  4

இன்னும் சில  பெண்கள் தூரத்திலிருந்தே பார்த்தாலும் ஒரே பார்வையில்  அல்லது அங்க அசைவில் அல்லது அவர்களின் பார்வையை வைத்தே  கண்டுபிடித்து  ஏங்க இந்த ஆளு சரியில்லே  என்று  சொல்லிவிடுவார்கள். ஆனால் அதை நம்பாமல் ஆண்கள் எந்தச் செயல் புரிந்தாலும்  மாட்டிக்கொண்டு  அவதிப்படுவார்கள். ஆமாம் பெண்களுக்கு  மிக நுணுக்கமான உணர்வுகள் உண்டு . அதையும்மீறிச் சில நேரங்களில் பாசத்தாலோ  அல்லது காதலாலோ  ஏமாற்றப் படுகிறார்கள். ஆனால் பெரும்பாலும்  பெண்கள் ஏமாறுவதில்லை. ஆண்களே ஏமாறுகிறார்கள்.  அது போலத்தான்  ஆண்டாள் இளவயதிலேயே அவளுக்கேற்ற  மணாளன் அரங்கன்தான் என்பதை  மிக நுணுக்கமாக அறிந்து கொண்டு அரங்கனை அணுக்கமாகத் தொடர்ந்தாள் மனதால், அப்படி தொடரும்போது  அந்த  உணர்ச்சி மேலீட்டால் பக்தியால் காதலால் பரவசத்தால் ஆழ்வார்களின் இயல்பான தோய்ந்து போதலால் ஆழ்ந்து போதலால் அவள் அரங்கனோடு ஒன்றிக் கலந்தாள். அவள் பாடிய  திருப்பாவை படித்தால் தெரியும், எவ்வளவு அணுக்கம்  இணக்கம் உருக்கம் அடடா!  அதன் சுவை நாமும் திருப்பாவை படித்தால்தான் தெரியும்.

சிலர்  எழுத்துக்களைப் படிக்கும்போதே அவர் கூட்டிப் போகும் கற்பனை உலகுக்கு  நாமும் நம்மை அறியாமலே  அவரோடு பயணிப்போம், அப்படிப் பயணித்து  மீண்டு வரும்போதுதான் தெரியும்… ஓ நாம் இவர் எழுதியதைப் படித்தோம் அவ்வளவே. ஆனால் எல்லா நிகழ்ச்சிகளிலும்  கூடவே  இருந்தாற் போன்ற  உணர்வை ஏற்படுத்தி விட்டாரே என்று ஆச்சரியப் படுவோம். அப்படி எழுத  மஹான்களால் ஆழ்வார்களால் நாயன்மார்களால் தான் முடியும் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களால் இயலாத  காரியம் அது.

“மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளாள் “என்று தொடங்கும் முதல் திருப்பாவையின் முடிவிலே “நாராயணனே நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்“  என்கிறாள்.  வைணவர்களின் 108 திவ்ய தேசங்களில் 106 ஐத்தான் தரிசனம் செய்ய முடியும்;  மற்ற இரண்டும் இங்கே பூவுலகில் இல்லை.  ஆகவே 108 ஆவது திவ்யதேசம் வைகுண்டம் அங்கே இருப்பவன்தான் நாராயணன். அவனைப் படிந்து பாடுவோம்  என்கிறாள் ஆண்டாள்.

எப்படிப்பட்ட  அழைப்பு இது! வாருங்கள்  எல்லோரும் நாராயணனைத் தொழ வைகுண்டம் போவோம்  என்று தீர்க்கமாக செய்த தீர்மானமான  அறிவிப்பல்லவா  இது! இப்படித் தெளிவாக யாரால் அழைக்க முடியும் ஆழ்வார்களால்தான் அழைக்க  முடியும். நாம் பெரியாழ்வாரை பெரியாழ்வார்  என்று ஆண்டாளைச் சின்னாழ்வார் என்றும் சொல்வேன்  ஆனால் பெரியாழ்வாரோ  ஆண்டாளே பெரியாழ்வார் என்பார்.

 “வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்கு”  என்னும் இரண்டாம் பாசுரத்திலே  பாற்கடலுள் பையத் துயின்ற பரமனடி பாடி  என்கிறாள் செய்யாதன செய்யோம் என்கிறாள் உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய் என்கிறாள்.   இந்தப் பாசுரம் 107ஆவது  திவ்ய தேசமான திருப்பாற்கடல் பற்றி பாடியிருக்கிறாள். பையத் துயின்ற என்கிறாள்  அதாவது மெல்லத் தூங்குகின்ற கோலத்திலே ஆதிசேஷன் மேல் நிச்சலனமாக படுத்திருக்கும்  ஆதி மூலமாகிய நாராயணன் என்கிறாள்.

பாகம் 5

“ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி” என்னும் மூன்றாம் பாசுரத்திலே உத்தமன் பேர் பாடினாலே மாதம் மும்மாரிப் பெய்யும், ஓங்கும் பெருஞ்செந்நெல், என்கிறாள் வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்  என்று  முழுமையான செல்வத்தை  நிறைவான செலவத்தை நீங்காத செல்வத்தை அளிப்பவன் நாராயணனே என்று பாடுகிறாள்.

வாமனாவதாரத்தின் பெருமையைச் சொல்கிறாள். அவதாரத்துக்குள்ளேயே மிக உத்தமமான அவதாரம் வாமனன் என்கிறாள்; அவன் பாதம் பட்டாலே  மோக்‌ஷம் நிச்சயம் என்கிறாள்; திருக்கோவிலூர் உலகளந்த  பெருமானைப் பற்றி ஸ்லாகித்துப் பேசுகிறாள்.

 நான்காவது பாசுரத்திலே “ஆழிமழைக்கண்ணா ஒன்று நீ கைகரவேல்”

ஆழியுள் புக்கு முகர்ந்து கொடார்த்தேறி  என்கிறாள்.   சார்ங்கம் உதைத்த சரமழைபோல்  நாங்கள் வாழ உலகினில் பெய்திடாய்; நாங்களும் மார்கழி நீராடவேண்டும்  இந்தப் பூவுலகமே நிறைவான மகிழ்ச்சியோடு வளமாக வாழ வேண்டுகிறாள். உலகமே  வளமாக வாழவேண்டும் என்று நினைப்பவர்கள் எப்படிப்பட்ட பொதுவான  மனநிலையில்  எந்த  பேதமும் இல்லாமல் வாழவேண்டும்  என்று எடுத்துரைக்கிறாள்.  தூய்மையான மனதோடு வேண்டவேண்டும் என்கிறாள்; கூட்டுப் ப்ரார்த்தனையின் மகிமையைச் சொல்கிறாள்.

ஐந்தாவது பாசுரமான  “மாயனை மன்னு வட மதுரை மைந்தனை” என்னும் பாசுரத்தில்  தூய பெருநீர் யமுனைத் துறைவன்  ஆயர் குலத்தில் தோன்றும் அணிவிளக்கை  தாயையே குடல் விளக்கம் செய்த  தாமோதரனே  என்கிறாள். தேவகிக்கு  எப்படிப்பட்ட புண்ணியத்தைக் கொடுத்தான் அவள் வயிற்றிலே  பிறந்து  என்கிறாள். அப்படிப் பிறந்த அந்தக் கிருஷ்ணனை தாமோதரனைப்  பாடினால் “போய  பிழையும்  தீயினில் தூசாகும்” என்கிறாள்.  அதாவது  நம் பாவங்களைப் போக்கிக்கொள்ள  எளிய வழியே மாதவனைப் பற்றிப் பாடி அவனைச் சரண் அடைவதுதான் என்று உணர்த்துகிறாள்.

“புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்” என்னும் ஆறாவது  பாசுரத்திலே  வெள்ளை விளிசங்கின் ஓம் என்னும் ப்ரணவ ஒலியைக் கேட்கவில்லையோ; பூதகியின்  பேய்முலை நஞ்சுண்டு என்கிறாள்   நஞ்சுண்டால்  உண்டவர் சாவார்.  ஆனால் என் கண்ணன்  நஞ்சுண்டு  பூதகிகிக்கு  மோக்‌ஷம் அளித்தான் என்கிறாள். கள்ளச்சகடத்தை உதைத்தே அழித்த மாயனை உள்ளத்திலே  கொண்ட முனிவர்களும் யோகிகளும் அரி என்கிற பேரரவம் கேட்டு உள்ளம் குளிர்ந்த கதையை சொல்கிறாள்.

அம்பலப் புழை அருகிலே இருக்கும் திருவமுண்டூர் என்னும் திவ்யதேசத்தைக் குறிப்பிடுகிறாள்.

பாகம் 6

”கீசு கீசென்றெங்கும்  ஆனைச் சாத்தன் கலந்து என்னும் ஏழாவது  பாசுரத்திலே  ஆனைச்சாத்தன் என்னும் வலியன்குருவிகள் கிசுகிசுக்கும் ஒலி கேட்கவில்லையோ  நாயகப் பெண்பிள்ளாய்  நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும்  நீ கேட்டே கிடத்தியோ?” என்கிறாள். அதாவது ஆயர்குலப் பெண்கள் தயிர் கடைந்து வெண்ணெய் எடுக்கும் ஒலி கேட்கிறது.

நாங்கள் நாராயணன் என்னும் கேசவனைப் புகழ்ந்து பாடும் பாட்டைக் கேட்டும் எழுந்திருக்காமல் இருக்கிறீர்களே எழுந்து கதவைத் திறந்து வாருங்கள் நாம் அவன் புகழ் பாடுவோம் என்றழைக்கிறாள். மதுராவின் அருகிலே இருக்கும் ஆயர்பாடி என்னும் திவ்ய தேசத்தை மனதிலே வைத்துக்கொண்டு  பாடுகிறாள்.

கீழ்வானம் வெள்ளென்று எருமைச் சிறுவீடு என்னும் எட்டாவது பாசுரத்திலே பாடிப் பறைகொண்டு மாவாய் பிளந்தானை என்கிறாள். அதாவது கேசி  என்னும் அரக்கன் குதிரை வடிவில் வந்த போது அதன் வாயைப் பிளந்து கொன்றானே கம்சனால் அனுப்பப்பட்ட முஷ்டிகர் போன்ற மல்லர்களைக் கொன்றானே  அவனைக் குழந்தை என்றா நினைக்கிறீர்கள் அவன்தான் பரம் பொருள் என்கிறாள். அந்த தேவாதி தேவனைச் சேவித்தால் அருள் தருவான் என்கிறாள். சின்னக் காஞ்சீபுரத்தில் இருக்கும் தேவாதிதேவன் என்று செல்லமாக அழைக்கப்படும்  அத்திகிரி வரதராஜப் பெருமானை நினைத்துப் பாடுகிறாள். இந்தப் பாடலிலே வெகு நுணுக்கமாக ஒரு செய்தியைச் சொல்லுகிறாள். பெண்கள் வீரர்களைத்தான் விரும்புவார்கள் என்று வீரம் என்பது நல்லவர்களை அழிப்பதல்ல துஷ்டர்களை அழிப்பதுதான் வீரம் என்பதை  மிக அழகாக சொல்லும் பாசுரம் இது.

“தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய” என்னும் ஒன்பதாவது பாசுரத்திலே மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றெல்லாம் நாமம் சொல்லிப் பாடவேண்டிய நேரத்திலே  தூங்கிக்கொண்டிருக்கிறாளே உன் மகள் அவளை எழுப்புங்களேன் என்கிறாள்; உன் மகள் ஊமையா செவிடா என்கிறாள்;  நாங்கள் கூவி அழைக்கிறோமே அவள் காதில் விழவில்லையா என்கிறாள்.

பகவானைப் பாடும் உன்னதமான வேலை இருக்க மலரணையில் படுத்துக் கிடப்பது நியாயமோ என்கிறாள். சொகுசுவாழ்க்கை  தராத சொர்கத்தை அவனல்லவோ தருவான். ஆகவே அவன் இருக்கும்  வைகுந்தமே நாம் அடைய வேண்டிய இடம் என்பதை வலியுறுத்துகிறாள்.

(தொடரும்)

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *