உழைப்பின் மேன்மையை உணர்த்தியவர் !
த. ஸ்டாலின் குணசேகரன்
கார்ல் மார்க்ஸ் படித்த பள்ளியில் இறுதிவகுப்புப் படிக்கும் மாணவர்கள் வித்தியாசமான தலைப்பொன்றில் ஆய்வுக் கட்டுரை எழுத வேண்டுமென்பதை வழக்கமாக வைத்திருந்தனர். இதற்காக மாணவர் மார்க்ஸ் ‘ எதிர்காலப் பணியைத் தேர்வு செய்வது குறித்து ஒரு இளைஞனின் சிந்தனைகள் ’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார்.
அக்கட்டுரையில் “ ஒரு வேலையைத் தேர்ந்தெடுக்கும்போது நமது பிரதான வழிகாட்டியாக இருக்க வேண்டியது மனித குலத்தின் நலனையும், நமது சொந்த மேம்பாட்டையும் காத்துக் கொள்ளுதல் என்பதேயாகும். இவ்விருநலன்களும் ஒன்றோடொன்று மோதக் கூடியவை என்று நினைக்கக்கூடாது. ஒரு நலன் மற்றொரு நலனை நாசம் செய்துவிடும் என்று கருதக்கூடாது. அதற்குமாறாக, சகமனிதர்களின் மேம்பாட்டுக்காக, நன்மைக்காகப் பாடுபடுவதன் மூலமே, ஒருவர் தன்னுடைய மேம்பாட்டை அடைய முடியும் ” என்று குறிப்பிட்டுள்ளார்.
“ ஒருவர் தன்னுடைய நலனுக்காக மட்டுமே பாடுபடுவதென்றால் அவர் ஒருவேளை பெரிய அறிவாளியாக விளங்கலாம். ஒரு பெரிய ஞானியாகத் திகழலாம். ஒரு மிகச்சிறந்த கவிஞனாக உயரலாம். ஆனால் அவர் ஒருபோதும் முழுமனிதனாக உருவெடுக்க முடியாது ” என்று அந்தக்கட்டுரையில் முத்தாய்ப்பாகப் பதிவு செய்துள்ளார். மாணவர் மார்க்ஸுக்கு அப்போது வயது 17.
மார்க்ஸின் தந்தை ஹென்ரிச் மார்க்ஸ் ஜெர்மன் நாட்டிலுள்ள தனது சொந்த ஊரான டிரியர் நகரில் வழக்கறிஞராகத் தொழில் செய்து வந்தார். அந்நகரின் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவராகவும் விளங்கினார்.
தந்தை கல்வியின் முக்கியத்துவம் புரிந்து மகனை ஊக்கப்படுத்துபவராக விளங்கியபோதிலும் மார்க்ஸ் இயல்பாகவே சுயசிந்தனை உள்ளவராகவும் அறிவுத் தேடல் மிக்கவராகவும் திகழ்ந்தார்.
பான் பல்கலைக்கழகத்தில் பயின்று கொண்டிருந்தபோது பான் நகரில் ‘ கவிஞர்கள் சங்கம் ’ என்ற ஓர் அமைப்பு இருந்தது. இச்சங்கத்தில் சேர்ந்து ஏராளமான கவிதைகள் பாடினார் மார்க்ஸ். மார்க்ஸின் கவிதைகள் மிகச்சிறப்பாக இருந்ததால் மிக விரைவில் அச்சங்கத்திலேயே மிகச்சிறந்த மூன்று கவிஞர்களில் மார்க்ஸூம் ஒருவர் என்று பிற கவிஞர்களால் பாராட்டப்பட்டார்.
பெர்லின் பல்கலைக்கழகத்தில் மார்க்ஸ் தத்துவம், வரலாறு, கலை, இலக்கியம், சட்டம் ஆகியவற்றை ஆழ்ந்து படிப்பதில் தீவிரகவனம் செலுத்தினார். சட்டத்தையும் தத்துவத்தையும் ஒரே அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றில் மூழ்கிக்கிடந்தார் மாணவர் மார்க்ஸ். ‘ சட்டத்தின் தத்துவம் ’ என்றுகூட தனது தந்தைக்கு எழுதிய கடிதத்தில் ஒரு சொற்றொடரையே உருவாக்கி எழுதியுள்ளார்.
மார்க்ஸ் மாணவராக இருந்த காலத்தில் தத்துவஞானி ஹெகல் ஜெர்மனியில் பெரிதாகப் பேசப்பட்டவர். 1831 இல் ஹெகல் மறைந்த பிறகு இளம் ஹெகலியவாதிகள் ஒன்றுகூடி ‘ டாக்டர்ஸ் கிளப் ’ என்ற ஓர் அமைப்பை பெர்லினில் நடத்தி வந்தனர். இவ்வமைப்பின் முக்கியப்பணியே தத்துவம், பொருளாதாரம், வரலாறு, அரசியல் போன்ற சமூக மாற்றத்திற்கும் முன்னேற்றத்திற்குமான ஆழமான கருத்துக்கள் பற்றி மனம்விட்டு அக்கறையோடு விவாதிப்பதாகும். இவ்வமைப்பின் உறுப்பினர்கள் எல்லோரும் ஆகச் சிறந்த அறிவாளிகள் என்பதோடு மார்க்ஸைக்காட்டிலும் 10, 12 வயது மூத்தவர்கள். மார்க்ஸுக்குப் பல வருடங்களுக்கு முன்பே பட்டம் பெற்றவர்கள். இருப்பினும் மார்க்ஸை தங்களைக் காட்டிலும் மேலானவராக மனப்பூர்வமாக மதித்தனர். மார்க்ஸின் மேதமை அவ்வமைப்பின் நிர்வாகிகளையே ஆச்சரியப்படவைத்தது. இவ்வமைப்பின் முக்கிய மூத்த நிர்வாகியான கோப்பன் தன்னுடைய ‘ மகா பிரடெரிக்கும் அவரது எதிராளிகளும் ’ என்ற சிறந்த நூலை இளைய கார்ல் மார்க்ஸுக்குக் காணிக்கையாக்கியிருந்தார். அக்காணிக்கைக் குறிப்பில் மார்க்ஸைப் பற்றி ‘ சிந்தனைகளின் உண்மையான ஆயுதக்கிடங்கு ; மெய்யான கருத்துப் பட்டறை ’ என்று குறிப்பிட்டிருந்தார்.
மற்றொரு ஆகச் சிறந்த அறிவாளியாக அப்போது மதிக்கப்பட்ட ஹெகலியவாதி மோசஸ் 1841 இல் நண்பருக்கு எழுதிய கடிதத்தில்
“ மிகப் பெரிய, வாழும் ஒரே மெய்யான தத்துவ ஞானியைச் சந்திக்க நீ தயாராகலாம்… டாக்டர் மார்க்ஸ் என்று அழைக்கப்படும் எனது நாயகன் மிகவும் இளைஞனே… 24 வயதிற்கும் மேலிருக்காது. இடைக்கால மதம் மற்றும் அரசியலுக்கு அவனே மரண அடி கொடுக்கப் போகிறவன். தத்துவதாகமும் நகைச்சுவை உணர்வும் ஒருங்கே அமையப்பெற்றவன். ரூசோ, வால்டேர், ஹோல்பாக், லெசிஸ், ஹைனே, ஹெகல் ஆகிய அனைவரும் ஒரே மனிதனாக உருப்பெற்று வந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்துகொள். ஒரே மனிதனாக என்றால் இயந்திர கதியான கலவையும் அல்ல. டாக்டர் மார்க்ஸைப் பற்றிய ஓரு சித்திரம் உனக்கு இப்போது கிடைத்திருக்கும் என நம்புகிறேன் ” என்று எழுதியுள்ளார்.
மார்க்ஸ் தனது இருபதாவது வயதிலிருந்தே தத்துவ ஆராய்ச்சியில் மூழ்கினார். கிரேக்க வரலாற்றையும் தத்துவங்களையும் ஊன்றிப்படித்தார். கிரேக்கத் தத்துவத்தில் சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் என்றுதான் பொதுவாக ஆராய்சியாளர்கள் கவனம் செலுத்துவார்கள். மார்க்ஸ் இவர்களின் தத்துவங்களை ஆய்வு செய்ததோடு எபிகூரஸ், டெமாக்ரிடஸ் ஆகிய இரண்டு கிரேக்கத் தத்துவ ஞானிகளின் புதுமையான சிந்தனைகள் குறித்து வேறு எவரும் செய்திராத அளவுக்கு அவரின் இளமைக் காலத்திலேயே ஆழமாக ஆய்வு செய்துள்ளார்.
“ கிரேக்கத் தத்துவ வரலாற்று ரகசியங்களின் சாவி இவர்களது சிந்தனையோட்டத்தில் இருந்தது ” என்று மார்க்ஸ் தக்க ஆதாரங்களோடு முதன்முதலாக நிறுவினார்.
டெமாக்ரிடஸ் கி.மு. 420 காலகட்டத்தைச் சேர்ந்தவர். சாக்டரடீசின் சமகாலத்தில் வாழ்ந்தவர். “ சாக்ரடீசுக்குக் கிடைத்த புகழ் டெமாக்ரிடஸ் என்ற மாபெரும் ஞானிக்கு ஏன் கிடைக்கவில்லை ? ” என்ற கேள்வியை மார்க்ஸ் எழுப்பியுள்ளார். அதேபோல எபிகூரஸ் கி.மு. 342 காலத்தைச் சேர்ந்தவர். அவர் பள்ளிக்கூடங்களை நிறுவி தனது தத்துவங்களை போதித்தவர். “இருவரும் கிரேக்க ஞானிகளாகத் திகழ்ந்தும் மற்ற தத்துவ ஆசிரியர்களைப் போல பேசப்படாததற்கும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப் படாததற்கும் காரணம் வெறும் கதைகளுக்கும் நடைமுறை நம்பிக்கைகளுக்கும் முக்கியத்துவம் தராமல் அறிவியல் ஆதாரங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்ததாகும்” என்கிறார் மார்க்ஸ்.
மார்க்ஸ் தனது மேற்பட்டவகுப்பை முடித்தபிறகு ‘டெமாக்ரிடஸ் மற்றும் எபிகூரஸ் ஆகியோரின் இயற்கை பற்றிய தத்துவத்தின் வேறுபாடு’ என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு பல்கலைக்கழகத்தில் சமர்பித்து டாக்டர் பட்டம் பெற்றார்.
டாக்டர் பட்டம் பெற்ற பிறகு விரிவுரையாளர் வேலையில் சேர முயற்சி செய்தார். மார்க்ஸை ஆசிரியர் பணிக்கு கல்லூரிகள் ஏற்கவில்லை. அவரளவுக்குக் கல்வித் தகுதியும் ஆற்றலும் ஆளுமையும் பெற்றவர் அப்போது அங்கு எவருமில்லையாயினும் மார்க்ஸின் சிந்தனை மாறுபட்டது என்பதே பணி மறுப்புக்குக் காரணம்.
ரைன்லாந்து பகுதியில் வளர்ந்து கொண்டிருந்த சில தொழில் முனைவோர் ஒன்றுசேர்ந்து ‘ ரைனிஷி ஷெய்டுங் ’ எனும் தினசரி பத்திரிகையைத் தொடங்கினார்கள். இதில் மார்க்ஸ் கட்டுரைகள் எழுதி வந்தார். பத்திரிகை சுதந்திரம் குறித்து ஒரு அரசியல் விவாதம் அவ்வூர் சட்டமன்றத்தில் நடைபெற்றபோது மார்க்ஸ் எழுதிய கட்டுரையில் “வாழ்வதற்கும் எழுதுவதற்கும் எழுத்தாளன் சம்பாதிக்க வேண்டும் என்பது உண்மையே… ஆனால் சம்பாதிப்பதற்காகவே அவன் வாழவோ எழுதவோ கூடாது. எழுத்தாளனுக்கு அவனது எழுத்து ஒரு கருவி அல்ல. அது தன்னளவிலேயே முடிந்த ஒரு இலக்கு, தேவைப்பட்டால், எழுத்து உயிர்பெற்றிருக்க தனது உயிரையும் அவன் தியாகம் செய்வான் ” என்று எழுதினார். இக்கட்டுரை சுமார் 50 பக்கங்களுக்கும் மேலானதாகும்.
தொடர்ந்து இந்த இதழில் வெளியான மார்க்ஸின் கட்டுரைகள் அந்த இதழுக்கே வலுசேர்த்தன. பத்திரிகை நிர்வாகம் மார்க்ஸை அவ்விதழின் ஆசிரியராக நியமித்தது. 24 வயதில் தனது வித்தியாசமான சிந்தனையாலும் எழுத்தாலும் மார்க்ஸ் தினசரி பத்திரிகையாசிரியரானார். இவர் ஆசிரியரானதும் இவருடைய முயற்சியாலும் இவரது வித்தியாசமான கருத்துக்களாலும் கவரப்பட்டு வாசகர்களின் எண்ணிக்கை விரைவிலேயே இரட்டிப்பு ஆயிற்று. பிற்காலத்தில் மார்க்ஸின் வாழ்நாள் அணுக்கத்தோழராக விளங்கிய பிரடரிக் எங்கெல்ஸ் மார்க்ஸுடன் எவ்விதத் தொடர்பும் இல்லாத நிலையில் இந்த இதழின் இங்கிலாந்து நாட்டு நிருபராகப் பணியாற்றினார். கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்ற விரும்பிய மார்க்ஸ் பத்திரிகையாசிரியராகப் பணியாற்றியதோடு அதில் அழுத்தமான முத்திரையும் பதித்தார்.
ஜோசப் பிரெளதான் என்ற தத்துவ அறிஞர் ‘ வறுமையின் தத்துவம் ’ என்ற ஒரு நூலை எழுதினார். அந்நூலில் “ சமுதாயத்தின் வரலாறு என்பது கருத்துக்களின் போராட்டமே ” என்றும் “ ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் நல்ல அம்சமும் உண்டு கெட்ட அம்சமும் உண்டு ; நல்லதை எடுத்துக் கொண்டு கெட்டதை விட்டு விடலாம் ” என்றும் “ இப்போது உள்ள அமைப்பின் பொருளாதார அடிப்படைகளை மாற்றக் கூடாது ” என்றும் பொத்தாம்பொதுவான சில பழைமைவாதக் கருத்துக் களை அடிப்படையாகக் கொண்டு ‘ வறுமையின் தத்துவம் ’ என்ற நூலை எழுதியிருந்தார்.
கார்ல் மார்க்ஸ் இந்நூலை வாசித்துவிட்டுக் கொதித்தெழுந்து ஜோசப் பிரௌதான் முன்வைத்த ஒவ்வொரு கருத்துக்கும் ஆணித்தரமான மாற்றுக் கருத்தை முன்வைத்ததோடு அந்நூலின் வாதங்கள் அனைத்தையும் முற்றாக முறியடிக்கும் வகையில் ‘ வறுமையின் தத்துவம் ’ என்ற நூலுக்கு மறுப்பு நூலாக ‘ தத்துவத்தின் வறுமை ’ என்ற நூலை எழுதினார். இது மார்க்ஸின் மிகப் பிரசித்திபெற்ற நூலாகும்.
ஜெர்மனியிலிருந்து பல்வேறு காரணங்களுக்காக வெளியேறி வேறுபல நாடுகளில் குடியிருந்தோர் அனைவரும் தங்களுக்குள் ஒரு ஒருங்கிணைப்பை உருவாக்கி நியாயவான்கள் கழகம் ( League of the just ) என்ற அமைப்பை உருவாக்கியிருந்தனர். லண்டனில் இதன் தலைமை அலுவலகம் செயல்பட்டது. இதில் மார்க்ஸ் இணைந்தார். பொதுவாக இருந்த ‘ நியாயவான்கள் கழகம் ’ என்ற அமைப்பின் பெயர் மார்க்ஸின் ஆலோசனைப் படி ‘ கம்யூனிஸ்ட் கழகம் ’ என்று மாற்றப்பட்டது. அனைவரும் சகோதர்களே ( All Men Are Brethren ) என்ற இந்த அமைப்பின் முழக்கம் ‘ உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் ’ என்று மாற்றியமைக்கப்பட்டது.
இவ்வமைப்பின் மாநாட்டில்தான் கார்ல் மார்க்ஸ் – பிரடெரிக் எங்கெல்ஸ் ஆகிய இருவருக்கும் ஒரு அரசியல் அறிக்கை தயாரிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. அந்த மகத்தான வரலாற்றுப் பொறுப்பை நிறைவேற்றும் பொருட்டுத்தான் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை ( Manifesto of communist party ) என்ற ஆவணத்தை மார்க்ஸும் எங்கெல்ஸும் இணைந்து 1848 இல் நடைபெற்ற ‘ கம்யூனிஸ்ட் லீக் ’ அமைப்பின் மாநட்டில் சமர்ப்பித்தனர்.
‘ கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை ’ என்ற இச்சிறு நூல்தான் இன்றளவும் உலக வரலாற்றில் ஒரு முக்கிய அரசியல் ஆவணமாத் திகழ்கிறது. பிற்காலத்தில் மார்க்ஸ் எழுதிய ‘ மூலதனம் ’ என்ற பெருநூலின் முன்னுரைபோல் இந்நூல் அமைந்துவிட்டது. உலகின் பலமொழிகளில் இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதோடு ஏராளமான பெரும்பெரும் திறனாய்வு நூல்கள் இந்நூலைப் பற்றியே வெளிவந்திருக்கின்றன. இத்தகைய சிறப்புமிக்க நூலை எழுதியபோது கார்ல் மார்க்ஸுக்கு வயது 30 ; பிரடரிக் எங்கெல்ஸுக்கு வயது 28.
மார்க்ஸின் இருபத்தைந்தாண்டுகால தொடர் உழைப்பில் உருவானது ‘ மூலதனம் ’ என்ற நூல். அந்நூலை முழுவதுமாக முடித்த பிறகு அச்சிடுவதற்கு சற்று தொலைவிலுள்ள வேறு ஒரு ஊருக்குச் சென்று பதிப்பகத்தாரிடம் நேரில் கொடுக்க வேண்டும். அதற்காகப் புறப்பட்ட மார்க்ஸ் தான் அடமானம் வைத்திருந்த கோட்டையும் கைக்கடிகாரத்தையும் மீட்பதற்கு எங்கெல்ஸுக்குக் கடிதம் எழுதி அதற்கான தொகையையும் பயணச் செலவுக்கான தொகையையும் பெற்ற பிறகே புறப்பட முடிந்தது..
மார்க்ஸின் குழந்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக பராமரிப்பு இல்லாமல் இறந்து போயினர். ஒரு குழந்தை இறந்த பிறகு சடலமாகக் கிடக்க மார்க்ஸ் குடும்பமே அடுத்த அறையில் உட்கார்ந்து குழந்தையை அடக்கம் செய்வதற்கு சவப்பெட்டி வாங்க யாரிடம் உதவி கேட்கலாம் என்று இரவு நேரத்தில் கண்ணீரோடு கலந்து பேசினர்.
உலகத்தின் வறுமையை நீக்க தன் வாழ்நாள் பூராவும் இடையராது உழைத்த கார்ல் மார்க்ஸ் கற்பனைக்கெட்டாத வறுமையில் வாடியுள்ளார்.
பிரபுக் குடும்பத்தில் பிறந்தவரும் பேரழகுப் பெட்டகமாக விளங்கியவருமான மார்க்ஸின் மனைவி ஜென்னி வர்ணிக்க முடியாத வறுமையில் வாடியபோதும் மார்க்ஸுக்கு ஆதரவாகவும் ஆறுதலாகவும் இருந்திருக்கிறார். மூலதனத்தின் மூலதனமாக ஜென்னி விளங்கியுள்ளார். இந்தத் தம்பதியர் முன்னுதாரணமான கணவன் – மனைவிக்கு இலக்கணம் வகுத்துள்ளனர்.
வசதியான குடும்பத்தில் பிறந்த எங்கெல்ஸ் மார்க்ஸின் உயிர்நாடியாகத் திகழ்ந்துள்ளார். இலக்கியங்களிலும் இதிகாசங்களிலும் மட்டுமே காணப்படுகிற உண்மை நட்பின் உன்னத இலக்கணமாக மார்க்ஸ் – எங்கெல்ஸ் நட்பு திகழ்ந்துள்ளது.
மார்க்ஸைப் போலவே எங்கெல்ஸும் மேதமை மிக்கவர். மார்க்ஸ் இறந்ததற்குப் பிறகு அவர் முடிக்காமல் விட்டுச் சென்ற அத்தனை அரும்பணிகளையும் மார்க்ஸ் பெயராலேயே முடித்துவிட்டு மூச்சை விட்டுள்ளார் பிரடரிக் எங்கெல்ஸ்.
உழைப்பின் உன்னதத்தை உலகுக்கு உணர்த்திய மார்க்ஸின் சிந்தனையும் உழைப்பும் மகத்தானவை.
கார்ல் மார்க்ஸின் 200 ஆவது பிறந்த தினச்சிறப்புக் கட்டுரை
தினமணி, 06.05.2017
( கட்டுரையாளர் : மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் )