இயற்கை சாயம்!
பவள சங்கரி
விவசாயிகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு ஊக்கம் தரும்விதமாக விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு. மாதுளம் பழம், மஞ்சள் ஆகிய இரண்டு விவசாயப் பொருட்களின் சாறுகளிலிருந்தும் சாயம் தயாரிக்கும் புதிய உத்தியை கண்டுபிடித்துள்ளனர். சிகப்பு, மஞ்சள், பச்சை, வெள்ளை, நீலம் போன்ற நிறங்களின் சாயப்பொருட்களை உருவாக்கியுள்ளனர். சென்னை ஐ.ஐ.டி இரசாயண பிரிவைச் சார்ந்த ஆய்வாளர்களான, டாக்டர் விக்ரம்சிங், பேரா. அசோக் மிஸ்ரா ஆகியோர் இதனைக் கண்டுபிடித்து சாதனைப்படைத்துள்ளனர். இதில் அடுத்தக் கட்டமாக மஞ்சளைத் தவிர்த்து மாதுளம்பழச்சாற்றிலிருந்தே வெண்மை நிறத்தைக் கொண்டுவந்துள்ளனர். இந்த வெள்ளை நிறம் நீலநிறத்தோடு கலந்துள்ளதானாலும் அதற்குரிய வெண்மைத்தன்மையுடனேயே இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் இயற்கை பருத்தி (ஆர்கானிக் பருத்தி) ஆடைகளும் இயற்கை சாயம் ஏற்றப்பட்ட ஆடைகளுக்கும் நல்ல வரவேற்பு உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த இயற்கை சாயத்தினால் தோல் வியாதிகள் முற்றிலுமாக தடுக்கப்படுவதோடு மண் மணம் மாறாமல் இயற்கையோடு இயைந்திருக்கும்! அந்த இரு இளம் விஞ்ஞானிகளையும் பாராட்டி ஊக்கப்படுத்துவதன் மூலம் நம் விவசாயப்பெருங்குடிகளின் வாழ்வாதாரமும் உயரும் என்று நம்புவோம்!