இன்னம்பூரான்
22 05 2017

முன்னேற்றம் கடினம்; கரடுமுரடான பாதை, கல்லும், முள்ளும், பரல்களும், விரோதமும், எதிர்வினைகளும் இன்னல்களை விளைவிக்கும். பின்னடைவு எளிது. உதட்டசைவும், போலி நடப்பும், கூடாநட்பும், பித்தலாட்டமும் போதும், குப்புறத்தள்ளி, குழி பறிக்க. இரண்டில் ஒன்றை தேர்வு செய்வது தமிழனின் கடமை. தமிழ்நாட்டில் பிறந்து, தமிழில் கடிதம் எழுதி ஆங்கில கையொப்பம் இடுபவர், தமிழார? அப்படி பார்க்கப்போனால், தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த நான் தமிழனானது 75 வயதில்! அது வரை பவணந்தி முனிவர் எழுதிய நன்னூல் நாலடியாரை போல அறநூல் என்று நினைத்திருந்தேன். நான் அதுவரை தமிழன் இல்லையா? வீரமாமுனிவரை தமிழன் அல்ல என்று சொல்வது தகுமா? தற்காலத்து புலவர்களில் ழான் லுக் செவியர், டொமினிக் குட்ஆல், திருக்குறள் விருது பெற்ற ஈவா வில்டன் போன்ற பல அன்னிய நாட்டினர் தமிழர்களாகவும் ஆகிவிட்டனர். அயல் நாடுகளில் வாழும் தமிழர்கள், தமிழ் சந்ததியினர் எல்லாருமே தமிழகம் தான். இனபற்று அடிப்படையில் யாரையும் ‘தமிழன்’ இல்லை என்று ஒதுக்கி, தனித்து வாழ்வது, ‘தமிழ் சமுதாயம் 2067க்கு’ உகந்த அறிவுரை அல்ல. ஆங்கிலம் ஆங்கிலேயர்களுக்கு தாய்மொழி என்றாலும், அது உலகமொழி. ஆங்கிலத்தில் உரையாடுபவர்கள் எல்லாரும் ஆங்கிலேயர்களும் அல்ல. ஆங்கிலேயர்கள் ஆர்வத்துடன் பலமொழிகள் கற்றுக்கொள்கிறார்கள். ஆங்காங்கே, தமிழ் தென்படுகிறது.

முதலில் தமிழர்கள் மற்ற மொழிகளை ஒதுக்காமல், பன்மொழி வித்தகர்களாக இயங்கினால், 2067ல் அவர்கள் முன்னேற்றம் அடையலாம். ஒரு இளைஞர். தமிழாசிரியர். ‘தமிழில் இல்லாதது வடமொழியில் இல்லை’ என்று கொக்கரித்தார். பொறுமையாக வினவிய பின்னர், இரு மொழிகளிலும் தனக்கு தெரியாததை தான் அவர் அள்ளி தெளித்தார் என்று தானே புரிந்து கொண்டு, வெட்கி தலை குனிந்தார்.

ஒரு சான்று இங்கே:

செந்தமிழ் ஆய்வு என்பதை துவக்கியவர் மு.ராகவ ஐயங்கார். அவருடைய உறவினர் ரா.ராகவ ஐயங்காரும் தமிழ் ஆய்வாளர் தான் அவரிடம் சம்ஸ்கிருதம் (வடமொழி) கற்றுக்கொண்ட நாகர்கோயில் ராமசுப்ரமணிய ‘நாவலர்’ அவர்கள் (மதுரை தமிழ்ச்சங்கம் அளித்த விருது) எழுபது நூல்கள் படைத்திருக்கிறார். அவற்றில் ஒன்று தமிழ் உரிசொல் பனுவல். அதில் அவர் சம்ஸ்கிருத சொற்களை பிரயோகிக்கவில்லை. மதுரை தமிழ்ச்சங்கம் தமிழை போற்றி வளர்ப்பதில் மிகவும் பணி செய்துள்ளது. மலையாளியாக பிறந்த நாவலர் அவர்கள் தன் சொந்த முயற்சியால் தமிழ் கற்றுக்கொண்டு, தமிழ் விற்பன்னர் ஆனார். தமிழிலும், சம்ஸ்கிருதத்திலும் வித்வானாக புகழ் எய்திய ரா.ராகவ ஐயங்காரிடம் நாவலர் சம்ஸ்கிருதம் கற்றுக்கொள்ள சீடரானர். அதற்கு அவர் கூறிய காரணம்: அந்த மொழியில் பாண்டித்தியம் இருந்தால் தான் தமிழ் மொழியின் நுட்பங்களை, ஆழத்தை புரிந்து கொள்ள இயலும் என்ற தெளிவான வெளிப்பாடு. அவ்வாறு அவர் கூறக்கேட்டவர், அவருடைய மைந்தர் மோஹனராஜன். நாவலர் அவர்கள் செந்தமிழ் நிலையம் என்ற பிரசுராலயத்தையும், தமிழ் விளக்கு என்ற தமிழ் இதழையும் நடத்தி வந்தார். சதாவதானி ஷைக்கு தம்பி பாவலருடன் வள்ளலார் பற்றி உரை நடத்திய தமிழ் ஆசிரியர் இவர், கவிராஜ பண்டிதர் என்று ஶ்ரீ ராமகிருஷ்ணமடத்தால் போற்றப்பட்ட நாவலர் பகவான் ராமகிருஷ்ணரின் சரிதத்தை தமிழில் எழுதினார். தன்னடக்கத்துடன் குடத்துள் விளக்காக விளங்கிய நாவலர் பற்றி விவரம் கிடைப்பதில்லை. இருக்கும் மேலதிக விவரங்களுக்கு, உசாத்துணை நோக்குக.
நாவலர் அவர்கள் தமிழரா? இல்லையா?

உசாத்துணை:
http://www.thehindu.com/news/national/tamil-nadu/a-multi-faceted-personality-who-shunned-limelight/article18453325.ece

சித்திரத்துக்கு நன்றி:

https://qph.ec.quoracdn.net/main-qimg-7b5f042642e94e9f0a6f89ce846ec3b6-c

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *