செண்பக ஜெகதீசன்

 

அவிசொரிந் தாயிரம் வேட்டலி னொன்ற

னுயிர்செகுத் துண்ணாமை நன்று.

       –திருக்குறள் –259 (புலால் மறுத்தல்)

 

புதுக் கவிதையில்…

 

நெய் போன்றவற்றை

நெருப்பிலிட்டுச் செய்யும்

ஆயிரம் வேள்விகளைவிட

அதிகம் நன்மை பயப்பது,

உயிரொன்றைக் கொன்று

உண்ணாதிருத்தலே…!

 

குறும்பாவில்…

 

நெய்வார்த்துச் செய்யும் வேள்வியாயிரத்தையும்

வென்றிடும் நன்மையில்

உயிரொன்றைக் கொன்று உண்ணாதிருத்தல்…!

 

மரபுக் கவிதையில்…

 

மண்ணில் பிறந்த உயிரொன்றை

     மடியச் செய்தே அதனுடலை

உண்ணா திருக்கும் செயலதுதான்,

   உருகிடும் நெய்யை வார்த்தாங்கே

வண்ண நெருப்பை வளர்த்தேதான்

  வேள்வி யாயிரம் செய்தலினும்,

எண்ணம் போல அதிகநன்மை

  என்றும் தருமென அறிவீரே…!

 

லிமரைக்கூ..

 

உண்ணாதிருப்பாய் உயிரைக் கொன்று

நெய்யூற்றி வளர்க்குமாயிரம் வேள்வியினிலும்

அதுவே மிகவும் நன்று…!

 

கிராமிய பாணியில்…

 

கொல்லாத கொல்லாத உயிரக்கொல்லாத,

தின்னாத தின்னாத கொன்னுதின்னாத..

 

உயிரொண்ணக் கொன்னு அந்த

ஒடலத் திங்காமலிருப்பதுதான்,

கொடங்கொடமா நெய்யூத்தி

கோயிலுல யாகம் செய்யரதவிட

கூடுதல் நன்ம தந்திடுமே..

 

அதால,

கொல்லாத கொல்லாத உயிரக்கொல்லாத,

தின்னாத தின்னாத கொன்னுதின்னாத…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *