-மேகலா இராமமூர்த்தி

 

working women

புன்னகை சிந்தும் வனிதையர் குழாத்தை ஆசையாய்ப் புகைப்படம் எடுத்து வந்திருப்பவர் திருமிகு. அனிதா சத்யம். இப்படத்தைப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி!

மங்கையரின் பங்கயக் கைகள் இப் பாரில் செய்யாத பணியில்லை. ஒரு பெண், தனக்கென வாழ்வதைக் காட்டிலும் தன்னைச் சார்ந்தோர்க்காக  வாழ்வதே அதிகம். பிஞ்சுக் குழந்தையை நெஞ்சிலணைத்துத் துயில்கொள்ளச் செய்யும் அவளின் அருஞ்செயலில் தாய்மையின் தூய்மை தெரிகின்றது.

இனி, கவிதைகளை நோக்குவோம்! 

***

”மிஸ். இந்தியா போட்டியை மிஸ் செய்த அழகிகள் நாங்கள். கழிப்பறையே எங்கள் இருப்பறை. குபேரர் கொடுக்கும் பிச்சையில் கும்பி நிரப்பும் குசேலர் நாங்கள்” என வேதனைக் குரல் எழுப்பும் விளிம்புநிலை மாதரைக் காண்கிறோம் திரு. சி. ஜெயபாரதனின் கவிதையில்.

மிஸ். இந்தியா!

உலக
அழகிப் போட்டியில்
இதுவரைக்
கலந்து கொள்ளாத நான்தான்
மிஸ். இந்தியா!
என்னுடலில் ஓடுவது
யுக யுகமாய்ச்
செந்நிறக் குருதி அல்ல!
கறுப்பு ரத்தம்!
சூரிய பகவான்
கரியைப் பூசிக் கருப்பராகி
உரிமை பறிபோய்
ஒதுக்கப்பட்ட குடிமக்கள்
நாங்கள்!
கழிப்பறையே எமது
இருப்பறை!
கழுவிச் சுத்தம் செய்வதெம்
பொறுப்பு!
தெருக்குப்பை அள்ளுவான்
என் புருசன்!
பள்ளிக்கூட முற்றத்தில்
செருப்பு தைப்பான்
அருமை மகன்!
குபேரர் கொடுக்கும் பிச்சை
அமுதில்
கும்பி நிரப்பும்
குசேலர் நாங்கள்!
அனுதினம்
கிடைக்கும் கூலியை மதுக்
கடையில் கொட்டி
குடி வெறியில்
அடிப்பான் கட்டிய புருசன்!
குடிமக்கள் எங்களுக்கு
வீட்டிலும் சிறை!
விடுதலை
நாட்டிலும் சிறை!

++++++++++++++

”மன்பதையில் உயர்ந்த செல்வம் மழலைச் செல்வமே. ஏழை எம் வீட்டில் எமை வாழவைக்க முளைத்த வாழைக் குருத்து அது! எம்மிடம் வளமான மாடி வீடில்லைதான்; ஆனால் வாடிநிற்கும் பிள்ளையைத் தாங்கிப்பிடிக்கத் தளராத அன்புண்டே” எனும் வனிதையரின் வாஞ்சைக் குரலைத் தன் கவிதையில் ஒலிக்கவிட்டிருக்கிறார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

குழந்தைச் செல்வம்

ஏழையெங்கள் இல்லத்திலே
வாழைக்குருத்து முளைத்ததுவே
பாழுமெங்கள் வாழ்வினிலே – செல்வ
பேழையாய் வந்துச் சேர்ந்ததுவே

தொட்டிலில் இட்டிட வசதியில்லை
கட்டிலில் போட்டிட வாய்ப்புமில்லை
கட்டிய துணிக்கு மாற்றுயில்லை – இருந்தும்
மட்டிலா மகிழ்ச்சிக்குங் குறைவுமில்லை

எட்டு மாடி வீடு கட்டி-அதில்
பட்டு விரிப்போடு குளிரூட்டி
தொட்டு நிலா காட்டி – தினம்
ஊட்டிடச் சோறு கிட்டுவதில்லை

இருந்தும்…

வெட்டவெளியே வீடாகும்
கொட்டும் சூரியன் விளக்கேற்றும் – அன்னை
வேர்வைத்துளி பன்னீர்த் தெளிக்கும் – அவள்
சேலை தினமும் தூளி கட்டும்

இலவம் பஞ்சில் செய்த மெத்தை
இல்லை என்கிற போதிலுமே
உலவும் தென்றல் வாசல் வந்து
குளிரும் சாமரம் வீசி நிற்கும்

பட்டு நிலா பாய்விரிக்கும்
வெட்டவெளி உண்டு -அது
நித்தமிங்குக் காட்டும் பல
வித்தைகளும் உண்டு

கட்டி, இன்பங்கொட்டி –
இதழ்தொட்டு முத்தமிட்டு
விளையாடபெரும் சுற்றமுண்டு; அவர்
காட்டும் அன்பும் நன்று

மாடி வீடும் மெத்தையணையும்
காட்டிடாத நிம்மதியை
வாடி நிற்கும் காலந்தன்னில் – அன்னை
மடியின் அன்பு சுகந்தந்திடுமே!!!

***********

”கண்ணுங் கருத்துமாய்க் குடும்பம் காத்துக் குழந்தைகள் பேணும் நங்கையரை முற்றாய் நம்பிடு மானிடனே!” என்று நங்கையரின் சார்பாய் நல்வார்த்தைகள் உதிர்க்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

நம்பிடு நங்கையரை…

வேலையாய் வெளியே சென்றாலும்
வெட்டியாய்ப் பொழுதைக் கழித்தாலும்,
நாலுந் தெரிந்த ஆண்மகனும்
நம்பிட வேண்டும் பெண்ணினத்தை,
காலைச் சுற்றிடும் பிள்ளைகளை
கண்ணும் கருத்துமாய்க் காப்பதெல்லாம்
வாலைக் குமரி வந்தமனையாள்
வணங்குந் தாய்போல் வனிதையரே…!

**************

”பசியைத்தவிர எமக்குப் பக்கத்துணை யாருமில்லை; அதற்காய் நாங்கள் அழவில்லை; புன்னகையைப் பொன் நகையாய்ச் சூடி அழுகையை அருங்காட்சியம் அனுப்பும் வீர மகளிர் நாங்கள்” என்று கம்பீர முழக்கமிடும் வீரக் காரிகையரை நமக்குப் படம்பிடித்துக் காட்டுகிறார் திரு. பழ. செல்வமாணிக்கம்.

ஆதலினால் சிரித்திருப்போம்

வயிற்றுப் பசிக்கு இங்கே சோறில்லை!
பிள்ளைச் செல்வத்திற்கு இங்கே குறைவில்லை!
மண்ணில் பிறந்த காரணம் இன்னும் எங்களுக்கு
விளங்கவில்லை!
பசியைத் தவிர எங்களுக்கு பக்கத் துணை என்று
யாருமில்லை!
பசியை ருசித்ததால் கண்ணுறக்கம்
கொண்டதில்லை!
கண்ணுறக்கம் மறந்ததால் கனவுகள்
கண்டதில்லை!
ஆதலினால் கனவில் கூட வசதிகள்
பார்த்ததில்லை!
ஏழையாய் நாங்கள் பிறந்ததற்கு என்ன காரணம்
தெரியவில்லை!
இறைவா உந்தன் கருணைப் பார்வை இன்று வரை
எங்கள் மேல் விழவில்லை!
இருந்தும் நாங்கள் அழவில்லை!
என் பெண் பெற்ற பெண்ணே!
பொன்னாய் நீ கிடைத்தாய் !
ஆதலால் நாங்கள் அழவில்லை!
ஒருவருக்கு உணவில்லை என்றாலும்
உலகத்தை அழிக்கச் சொன்ன பாரதி
வழி நடப்பாய்!
ஆதலால் நாங்கள் அழவில்லை!
இன்று உன்னோடு புதிதாய் பிறந்தோம்!
ஆதலால் நாங்கள் அழவில்லை!
புன்னகை இனிப் பெண்களுக்கு
பொன் நகையாய் ஆகட்டும்!
அழுகை இனி அருங்காட்சியகம்
போகட்டும்!

******************

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பது வெறும் பேச்சு; உழைத்து, உழைத்து எங்கள் உடம்புதான் வீணாய்ப் போச்சு! என்றும் குமுறும் கோதையரைக் காட்டுகிறார் திரு. ரா. பார்த்தசாரதி.

கொடிது, கொடிது, இளமையில் வறுமை
அதிலும், ஏழையாகப் பிறப்பதே கொடுமை
ஏழை என்று பிறந்தாலே, உழைக்கும் உழைப்பாளி
கையும், காலுமே உதவி; அது தருமே தினக்கூலி!
வயிற்றுப்பசி குறைவானாலும், தீய பழக்கத்திற்குக் குறைவில்லை,
இன்றோ பசியைப் போக்க, தண்ணீர்கூடக் குடிக்கக் கிடைக்கவில்லை
ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்பது வெறும் பேச்சு
உழைத்து, உழைத்து எங்கள் உடம்புதான் வீணாய்ப் போச்சு!
தெருக் கூட்டுவதும் , கழிப்பறை சுத்தப்படுத்துவதும் எங்கள் வேலை,
கணவன்,மனைவி மற்றும் பிள்ளைகளுக்கும் வெவ்வேறு வேலை
காலைப் பசியாற, அம்மா உணவகமே, காலை உணவு
பசி போக்க அரசு காட்டும் திட்டத்தில் ஓர் நல வாழ்வு!
ஆளுக்கொரு வீடு, திட்டம் மறைந்து, மரத்தடியே வீடானது
எங்கள் குழந்தைக்குச் சேலைத் தொட்டில் கட்டும் மரத்தடியானது
நிலா வெளிச்சமும், மரக்கிளைகளும் கையசைத்துச் சிரிக்கும்
இரவில் தென்றல் காற்றே சாமரம் வீசி நிற்கும்!
ஏழையின் குடிசையில் மகிழ்ச்சிக்கு என்றும் அளவில்லை
பெற்ற பிள்ளைகளுக்கும் என்றும் குறைவில்லை
குடும்பக் கட்டுப்பாடு விளம்பரம் பார்க்க நேரமில்லை
ஏனோ எங்கள் வாழ்க்கைத் தரத்தினை நினைத்துப் பார்ப்பதில்லை!

***

ஏழைமையுடன் தோழமை கொண்ட பாவையர் படும் பாட்டைத் தம் பாட்டில் பக்குவமாய் விளக்கியிருக்கிறார்கள் கவிஞர்கள்! பாராட்டுக்கள்!

***

அன்றாடம் உழைத்தால்தான் அரைவயிற்றுக்கேனும் உணவு எனும் நிலையில் எத்தனையோ பெண்கள் தம் வாழ்வை வறுமைக்கு அடகுவைத்து மிகுந்த போராட்டத்திற்கிடையே வாழ்க்கைப் படகைச் செலுத்திவருகிறார்கள். அவர்களின் கலங்காத நெஞ்சுரமே அப்படகைக் கவிழாது காக்கும் துடுப்பு!

”வெயிலில் உழைத்து அவர்தம் மேனி  கறுத்திருக்கலாம்; ஆனால் அவர்கள் உள்ளத்தின் நிறமோ கள்ளமற்ற வெள்ளை! நாயுடன் நடைபயிலும் வசதிபடைத்த நகர நங்கையர்க்கு நடுவில் வாய்க்கும் வயிற்றுக்கும் போராடி உழைத்துண்ணும் இப்பெண்களே இவ்வுலகின் கண்கள்” என்று இப்பெண்டிரைக் கொண்டாடும் கவிதையொன்று!

உழைக்கும் பெண்கள் உலகின் கண்கள்..!

பெண்கள் முன்னேற்றமானது பேச்சள வில்தானோ
கண்கள் கசங்காத நாளில்லை..!

பணிக்குச் சென்றால்தான் எம்பசி தீருமென்று
பலவிதப் பணிக்கும் செல்கிறோம்..!

கல்மண் சுமந்து பெருங்கட்டிடங்கள் உருவாக
நெல்மணி வயலிலுழைத்தும் வாழ்கிறோம்..!

துவைப்பதும் சுத்தம் செய்வதும் பாத்திரம்
துலக்குவது மெங்களிதர வேலையாகும்..!

இடுப்பிலும் தலையிலும் இன்னலுறக் கைவண்டி
இழுக்கும் வேலைகூடச் செய்வோம்..!

அண்டை அயலூருக்குத் தினமுழைக்கச் செல்லும்
அவலத்தையும் நாங்கள் பொறுப்போம்..!

நாயுடனே நடைபயிலும்நகர நங்கைவாழ் மத்தியிலே
வாயுடன் வயிற்றிற்கும் போராடுகிறோம்..!

சுகம்காணும் எண்ணமுடன் சும்மாயில்லை நாங்கள்
சோதனைகள் ஏற்பதற்கே பிறந்தவரே..!

பிள்ளை சுமந்துகொண்டு உழைக்கும் வர்க்கமென
வெள்ளை மனக்கறுமேனி மாந்தர்கள்யாம்..!

முடமாகி வாழ்வில் முடங்காமல் வறுமையகலக்
கூடையேந்தி கூவிபலவிற் கவும்செய்வோம்..!

கல்யாணமானாலும் உழைத்து உழைத்து மனம்
கல்லாகிய வர்க்கம் தானெனினும்..

பற்றாக்குறைக் கூலியில் பகல்பூரா உழைத்துவிட்டுப்
பற்றுடன் நல்லுறவோடுதான் வாழுகின்றோம்..!

பெண்ணாய்ப் பிறந்தது உழைத்து மடிவதற்கேவெனும்
எண்ணத்துடன் வாழ்வதுதான் எங்கள்நிலையோ..!

நலிந்தால் வாழ்விலையென உழைப்பின் உயர்வை
மெலிந்தயெங்கள் தேகமதைச் சொல்லுமென்பதை..

களைபோக்குச் சிறுபயன் விளைக்க இவர்கள்
உடலைக் கசக்கி உதிர்த்த வியர்வையின்
ஒவ்வொரு துளியிலும் கண்டேன் – இவ்வுலகு
உழைப்பவர்க்கு உரியதென் பதையே..!

உழைக்கும் மகளிரை உயர்த்திப் பிடிக்கும் இக்கவிதையின் ஆசிரியர் பெருவை திரு. பார்த்தசாரதியை இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் எனக் குறிப்பிட்டுப் பாராட்டுகிறேன்.

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “படக்கவிதைப் போட்டி 112-இன் முடிவுகள்

 1. ஒவ்வொரு வாரமும் வல்லமை தருகின்ற படத்துக்கு ஏற்றவாறு கவிதை எழுத, சில மணி நேரம் ஒதுக்கீடு செய்வது வழக்கம். இந்த வாரம் சற்று கூடுதலாக நேரம் செலவிட்டு உழைத்தது ஞாபகம் வருகிறது..

  ஒவ்வொரு உழைப்புக்கும் ஒரு கூலி நிச்சயம் உண்டு என்பதுபோல், சென்ற வாரம் உழைத்தற்கு, இந்த வாரம் பரிசாக *சிறந்த கவிஞர்* என *தேர்வு செய்த நடுவர்* திருமதி மேகலா, பொறுப்பாசிரியர் சாந்தி மாரியப்பன். மற்றும் படம் கொடுத்த அனிதா சத்யம் அனைவருக்கும் எனது அகமகிழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்…

  மேலும் அன்றாட வாழ்வில் எத்தனையோ உழைக்கும் பெண்டிரை நாம் சந்திக்கிறோம், உதாரணத்திற்கு கீரை, காய்கறிகள், பழம், பூ முதலிய பொருட்களை தலையில் சுமந்து வந்து வீட்டு வாசலில் கொடுக்கும் அவர்களிடம் பேரம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்பதே இக்கவிதையின் சாரம்..

  கீரை, பூக்கள் விற்கும் பெண்களிடம் பேரம் செய்து பெரிதாக என்ன மிச்சம் செய்ய முடியும்.. பேரம் செய்ய நினைத்தால் நகைக்கடை, பட்டுப்புடவைக் கடையில் தங்கள் திறமையைக் காண்பிக்கலாமே..! உழப்பவர்களிடம் எதற்கு, கோபிக்காமல் யோசிக்க வேண்டும்..

  மீண்டும், என்னை யோசிக்க வைத்த, நடுவருக்கு நன்றி..

  அன்புடன் பெருவை பார்த்தசாரதி..

 2. உழைக்கும் பெண்கள் உலகை இழைக்கும் பெண்கள்
  என்று திரு பெருவை பார்த்த சாரதி அவர்கள் சொற்களை இழைத்திருக்கிறார்

  எப்போதுமே உழைக்கும் பெண்களால்தான் இந்த உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்திருக்கிறார்
  நல்ல கவிதை வாழ்த்துக்கள்

  அன்புடன்
  தமிழ்த்தேனீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *