மருத்துவ மேற்படிப்பிற்கான கட்டணங்கள் பற்றி அரசு அறிவிப்பு ஏற்கக்கூடியதா?
பவள சங்கரி
தலையங்கம்
மருத்துவ மேற்படிப்பிற்கான கட்டணங்கள் பற்றி அரசு அறிவிப்பு ஏற்கக்கூடியதா?
மிகப்பெரிய ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தியுள்ள, அரசு ஒதுக்கீட்டிற்கும் கல்லூரி நிர்வாகத்தின் ஒதுக்கீட்டிற்கும் தனித்தனி கட்டணம் என்ற வகையில் கட்டண விகிதங்கள் நிர்ணயிப்பது வருந்தத்தக்கது . இதனால் மாணவர்களின் சுமையை அதிகமாக்கக்கூடியதாகவே இருக்கும். மருத்துவப் படிப்பு முடித்தவுடன் ஓராண்டு கிராமப்புறங்களில் பணி செய்யவேண்டிய சூழலில், அவர்கள் மேற்படிப்பு படிக்க ஆர்வம் இருந்தால், ஆண்டிற்கு 12 /13 இலட்சம் என எப்படி கட்டணம் செலுத்த முடியும்? இதைத் தவிர்த்து தங்கும் விடுதி செலவு, உணவு, போக்குவரத்து போன்றவற்றின் அதிகப்படியான செலவு அவரவர் விருப்பம்போல் செய்துகொள்ளலாம். தரம் மிகுந்த மருத்துவர்களை உருவாக்கவேண்டும் என்ற நல்லதொரு செயல் திட்டத்திற்கு இதுபோன்ற முட்டுக்கட்டைகள் பாதகமாக அல்லவா இருக்கும்? அரசு ஒதுக்கீட்டைப் போன்றே மற்ற அனைத்து ஒதுக்கீடுகளுக்கும் பொதுவாக குறைவான கட்டணங்களை நிர்ணயித்து திறமை மிகுந்தவர்களை ஊக்குவிக்க வேண்டியது அரசின் கடமை. உயிர் காக்கும் மருத்துவத்தைப் பொறுத்தவரை, பொருளாதார நோக்கில், வருமானம் சம்பாதிப்பதைக் குறியாகக்கொண்டு கல்லூரி நடத்துவது ஏற்புடையதல்ல.
அனைவருக்கும் 12ஆம் வகுப்புவரை இலவச கல்வி என்று பல மாநிலங்கள் செயல்பாட்டில் இருக்கும்போது ஒன்றாம் வகுப்பிற்கு 4000 ரூபாய், 12 ஆம் வகுப்பு வரை பல்வேறு கட்டணங்கள் இருப்பது அரசின் கொள்ளைகளில் உள்ள குளறுபடிகளைக் காட்டுகிறது. 12ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்துப் பள்ளிகளும் அரசுடைமையாக்கப்படவேண்டும் என்பதே கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோள்.