நாஞ்சில் நாடனுடன் ஒரு பயணம் – 10
தி.சுபாஷிணி
திகம்பரம்
சென்ற வருட இறுதியில் விஜயா பதிப்பகம், கோவை, இந்நூலை வெளியிட்டு இருக்கிறார்கள். பக்கங்கள் 288. மொத்தம் 29 கட்டுரைகள் இந்நூலில் அடக்கம். “திகம்பரம் என்றால் நிர்வாணம்” என்கிறார் நாஞ்சிலார் தன் முன்னுரையில்.
மேலும், “கதை எழுதும் போது ஒரு விவாதச்சூழல் உண்டு. அது கூட வாய்க்காமற் போயிற்று சுந்தர ராமசாமிக்கு, ‘பிள்ளை கொடுத்தாள் விளை’ எழுதிய போதும் நான் ‘ஊதுபத்தி’ எழுதிய போதும். கட்டுரை எனில் எழுதுபவன் முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு ஆக வேண்டும். துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்கு! மேலும் கட்டுரை என்பது கலை, இலக்கியம், சமூகம், பொருளாதாரம், அரசியல் என எத்துறை பற்றி எழுதினாலும் விவாதத்துக்கு இடம் தருவது, மாற்று முகாம் அறைந்தால் வலிப்பது.
கதை எழுதுவதற்கான உழைப்பும் கட்டுரை எழுதுவதற்கான உழைப்பும் கூட ஒப்பிட இயலாதது. கதைகளுக்கு கலைத்தளம், புனைவுத்தளம். கட்டுரைகளுக்கு ஆய்வுத்தளம், அறிவுத்தளம். தளங்களே வெவ்வேறானவை எனும்போது ஒப்பீட்டுக்கு இடமேது?
இந்தப் புரிதல்களுடன் மனிதம் சார்ந்த எந்த விவாதத்தையும் முன்னெடுத்துச் செல்ல முயல வேண்டும் என்பது என் துணிபு. மேலும் எத்தனை நேர்மையாகச் சிந்தித்தாலும் எழுதினாலும் அது ஈரேழு பதினாலு எனும் வாய்ப்பாட்டுத் துல்லியம் அல்ல. சிறந்த மனத்துடன் வாசிக்கப்படுதலும் விவாதிக்கப் படுதலும் எழுதுபவனின் வேண்டுதல். காழ்ப்பற்ற, வன்முறை அற்ற, முன் முடிவுகள் அற்ற, ஆரோக்கியமான எந்த விவாதத்துக்கும் என்னை எப்போதும் தயாராக வைத்துக் கொண்டிருக்கிறேன். தீவிர, நுண்ணிய வாசிப்பைப் பெறுவது, எந்தப் படைப்புக்கும் கர்வம், தவம். அவை கிட்டுமாயின் மகிழ்வு.” என்று கூறுகிறார் நாஞ்சில் நாடன்.
ஒரு கணித மாணவன் எனும் விதத்தில் எல்லா எண்களுமே கவித்துவம் வாய்ந்தவை என்கின்ற எண்ணம் உடையவர் நாஞ்சில். முதலில் ‘அட்டம்’ என்னும் எட்டைப்பற்றி எழுதத் தொடங்கி, 7, 6, 5 ஆகிய நான்கு எண்களின் விரிவினை ஆய்வுக் கட்டுரைகளாக மலர்த்தி இருக்கிறார்.
பெரும்பாலும் தகவல்கள் இலக்கியம், பேரகராதி(லெக்ஸிகன்), அபிதான சிந்தாமணி, அபிதான கோசம், அபிதான மணிமாலை ஆகியவற்றை ஒப்பு நோக்கியும், ஆசிரியரது நினைவுக் கிடங்கிலிருந்து தோண்டப் பெற்றவையுமாகும். சொல் என்பது நச்சரவம் போல, நுண்ணியக் கவனத்துடன் கையாளப்பட வேண்டியது என்று ‘ஆதியில் சொல் இருந்தது’ என்ற கட்டுரையில் சொல்கிறார் ஆசிரியர். “எல்லாச் சொல்லும் சுத்தமானதுதான். சொல் என்பது அது பெறப்படும் பாத்திரத்தின் வடிவத்தைப் பொறுத்தது. சொல் சுடுவது போல அன்னத்தூவி போல மென்மையாகத் தடவி இதமானதும் ஆகும். சிந்தனையைச் சொல்லாக மாற்றுவது அஃதோர் பெயர்ப்பு. சொல் மூலம் சிந்தனையை எய்துவது அதன் மறுதலை” என்று சொல்லைப் பற்றி உரைக்கிறார் ஆசிரியர்.
‘எறிகதிர் நித்திலமாய்த்’ திகழ்ந்த மோதிசாரைப் பற்றிய கட்டுரை நட்பின் மாண்பினைப் பற்றிக் கூறுகிறது. “எறிகதிர் நித்திலம்” என்னும் கட்டுரையில், “வடிவ ஒழுங்கற்ற, ஒழுங்கின்மை காரணமாய் வாங்குகிறவர் ஒதுக்கிப்போட்ட உருளைக் கிழங்கு, சுவையும் பயனும் அற்றதாக ஆகிவிடுமா?” என வினவுகிறார் நாஞ்சிலார்.
“அழகற்றவர் எனக் கருதப்படும் பெண்களை என்ன செய்யலாம் பெற்றோரே! தமையன் மாரே! சமூக அறங்காவலரே!! வெட்டிப் புதைத்து விடலாமா? பேயுறையும் நாயஞ்சும் கொடுங் காட்டில் கொண்டுபோய் விட்டுத் திரும்பிப் பாராமல் வந்து விடலாமா? பாம்புப் புற்றுக்குள் கை விடச் செய்யலாமா? அரளி வேர் அரைத்துத் தங்கக் கிண்ணத்தில் பருகத் தரலாமா? கல்லைக் கட்டி நீலப் பெருங்கடலில் தாழ்த்தி விடலாமா? காட்டாற்றில் தள்ளி விட்டு விடலாமா? மழையே பெய்யாத நாட்டில் காட்டாற்றுக்கு எங்கே போவது? பாலில் கலந்த பத்து உறக்க மாத்திரைகள் போதுமா? இல்லை ஐந்து லிட்டர் மண்ணெண்ணெய் ஊற்றி சொக்கப்பனை கொளுத்தி விடலாமா? அழகற்றவர் என சமூகம் கருதும் பெண் மக்களை என்ன செய்யலாம் சான்றோரே!” என்று நாஞ்சிலார் கேட்கிறார். ‘அழகெனப்படுவது’ என்னும் கட்டுரையில். நாம் அவருக்கு என்ன சொல்லலாம்?
“பெண்ணின் மார்பகங்களின் மீது மனிதனுக்கு இத்தனை பகை ஏன் வந்து சேர்ந்தது என்பது தெரியவில்லை. மனோவியல் அறிஞர் சிலர் சொன்னதுண்டு, பிள்ளைப் பிராயத்தில் பால் அருந்திய உறுப்பை ஆழ்மனத்தில் அமிழ்த்தி வைத்திருந்ததன் வெளிப்பாடுதான் பருவ வயது வந்த பின்னும் பெண்களின் முலைகளை உறுத்துப் பார்க்க ஆரம்பித்தான் என. எனில் பெண்கள் ஏன் உற்றுப் பார்ப்பதில்லை எனும் கேள்வி எழுகிறது நமக்கு. பட்டினத்தடிகள் ‘கறந்த இடத்தை நாடுதே கண்’ என்கிறார். குழந்தைகளாய் ஆணும் பெண்ணும் கறந்த இடம்தானே அது? மேலும் பால் கொடுத்து வளர்த்த உறுப்பின் மீது பாசம் பொங்குவதற்கு மாறாகக் காமம் பொங்குவதன் காரணம் என்ன? பாலூட்டும் பாசமுள்ள உறுப்பு, ஆண்களுக்கு காமக்கிரியா ஊக்கி என்பனவற்றைப் புரிந்து கொள்வதில் சிரமமில்லை. ஆனால் ஆண்களுக்கு அவற்றின் மீது குரோதம் பொங்கிப் பெருகி வளர்வதன் காரணம் புரியவில்லை.
இந்தியா முழுவதும் கற் சிலைகள் செதுக்கப்பட்டுள்ள கோயில்கள், வரலாற்றுத் தலங்கள் என நீங்கள் பயணம் செய்து காணவியலும். முலைக்காம்புகள் சிதைக்கப்பட்ட, முலைகள் உடைத்துப் பெயர்க்கப்பட்ட சிலைகளை. அவை வடிவான முலைகள் உடைய சிலைகள் அல்ல ஆபாசமானவை. முலைகள் சிதைக்கப்பட்ட சிலைகள் பரிதாபமும் ஆபாசமும் நிறைந்தவை. படையெடுப்புகள் சேதப்படுத்திய சிலைகள் ஒருபுறம் எனில், படையெடுப்பு நடக்காத காலங்களில் அறியாமை காரணமாகவும் ஆழ்மன வஞ்சம் காரணமாயும் உடைத்து நொறுக்கப் பட்டவை மறுபுறம்.
பக்தி மார்க்கத்திலும் கொங்கைகளை முன்னிறுத்தி ஆண்டாளும் மாணிக்கவாசகரும் பேசுகிறார்கள். ‘என் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சொற்க’ என்று பார்க்கிறோம். இதில் மனதில் கொள்ளவேண்டியது, சேர்வது தோளல்ல, மெய்யல்ல, உதடல்ல, முகமல்ல, முலைகள்.
பிறகு ஏன் இத்தனை வன்மம் முலைகள் மீது? வாதாபியில் நானும் ஜெயமோகனும், தமிழினி வசந்தகுமாரும், மதுரை சண்முக சுந்தரமும் ‘படைப்புத் தேவி’ என தலைப்பிடப்பட்ட கற்சிலை ஒன்று பார்த்தோம். ஐந்நூறு ஆண்டுகள் முந்திய சிலை. புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. நாங்கள் வழி மறித்து நிற்க வசந்தகுமார் படமெடுத்தார். பேற்றுக்குத் தயாரான நிலையில் தொடைகள் விரித்து, முழங்கால் அகற்றித் தூக்கி, யோனி காட்டி, பருத்த முலைகள் தெறிக்க, முகம் இருக்க வேண்டிய இடத்தில் மலர்ந்து விரிந்த மலராக அமைந்ததோர் சிற்பம். படைப்பின் ஊக்கம் யோனி எனில் ஆக்கம் முலைகள்.
அந்த முலைகளின் மீது ஆணின் பகை நம்மைப் பதைக்கச் செய்கிறது. இன்றும் நகரங்களிலும் கிராமங்களிலும் ஒட்டப்பட்டிருக்கும் திரைப்பட சுவரொட்டிகளில் முலைப்பாகம் கிழிக்கப்பட்டோ, சேதப்படுத்தப்பட்டோ, கரி பூசப்பட்டோ காட்சி தருகின்றன. இத்தனை கசப்பு, வெறுப்பு, வஞ்சம், குரோதம் எதனால்? பாலூட்டியதாலா? தனக்கில்லை எனும் பொறாமையாலா? பெண்ணின் மார்பகம், ஆண் மனப் புற்றா?” என்று ‘ஆண்மனப் புற்று’ என்று ஆண் மனத்தை அலசுகிறார் ‘கலைமாமணி’ நாடன். அதற்கு மறு வினையாகப் பெறப்பட்டதையும் வெளியிட்டிருக்கிறார்.
‘திகம்பரம்’ என்னும் கட்டுரையில், நிர்வாணம், நிராயுதபாணி என்று அலசி ஆராய்ந்து, “படைப்பாளி நிராயுதபாணி” என்கிறார் நிதர்சனத்தை தரிசித்த நாஞ்சிலார். “அம்மணத்துக்குப் பிறகு எனக்கேதும் அஞ்ச வேண்டியதும் இல்லை. இழப்பதற்கு கோவணம் தவிர வேறேதும் இல்லாத இந்திய விவசாயி போல, பட்டனன் என்ற போதும் எளிதினிற் படாதவன் எழுத்தாளன். எனினும் திகம்பரம் என்பதையும் ஆயுதமாகக் கருதுவதே படைப்பு மனநிலை.”
“ஆம்! பொய், புனை சுருட்டு, வஞ்சகம், வாரிச் சுருட்டுதல், எத்தைச் செய்தும் அதிகாரத்தின் அண்டையில் நிற்றல், படைப்பைக் கட்கத்தில் இடுக்கிக் கொண்டு குற்றேவல் செய்தல் என மண்டிக் கிடக்கும் உலகில், நான் வந்தடைந்திருக்கும் இடம் திகம்பரம். அன்பு, அறம், வாய்மை, தியாகம், காதல், கேண்மை போன்றவற்றின் சன்னிதானங்களில் நிராயுத பாணியாக நிற்பதில் பெருமையுண்டு. மாறாக துரோகத்தின், வெறுப்பின், சுயநலத்தின் முன் நிராயுத பாணியாக நிற்பதற்கு அவமானமாக இருக்கிறது.” என்று திகம்பரமாய் காட்சி அளிக்கிறார் நாடன் மனதைத் திறந்து .
“நூற்றாண்டுகளின் மௌனம் காட்டும் கவிதைகள்” தாணு பிச்சையா எழுதிய ‘உறை மெழுகின் மஞ்சாடிப் பொன்’ என்னும் கவிதைத் தொகுப்பு என்கிறார். தலைப்பே ஒரு சமூகத்தைப் பேசுகிறது. நூற்றாண்டுகளாய் அப்பகுதி மக்களின் நாவில் வழங்கும் தொன்மம் அது. இன்னும் உயிருடன் இருப்பது. அத்தொழில் சார்ந்த குறுங்குழு ஒன்றின் மொழி, பண்பாடு, தொன்மங்கள், அவர்க்கான முறையீடுகள், அவலங்கள் எனப் பேசுகின்றன.
“பழந்தமிழ்ப் பாடல் ஒன்றுண்டு. தினம் எட்டுத் தேர் செய்யும் தச்சன் ஒரு திங்கள் உழைத்து ஒரு தேரின் சக்கரத்து ஆரக்கால் செய்தது போல், எம்முளும் உளன் ஒரு பொருநன் என்று. அது போலுள்ளன இந்தக் கவிதைகள். எம்மொழிக்குச் சேரும் எந்தப் பெருமையும் எமக்குச் செருக்களிப்பது. அந்தச் செருக்குடன் வாழ்த்துகிறேன். தமிழ் கூறும் நல்லுலகம் தாணுபிச்சையாவின் எதிர்காலக் கவிதைகளுக்காகக் காத்திருக்கும்”
‘நெஞ்சுரம் என்பதோர் கவிக்கூறு’ என்னும் கட்டுரையில், நூற்றைந்து ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த கவிஞன், எழுத்துக்காகத் தனது உடல் பொருள் ஆவியை அர்ப்பணித்தவன், பசி, பிணி, மூப்பு, சாக்காடு என யாவற்றையும் பார்த்து அல்லற்பட்டு அழுது ஆற்றாது சிரித்துக் கொண்டே வாழ்ந்தவன் எனும் ஆகிருதியை நாம் வெள்ளியங்காட்டான் எனும் கவிஞரிடம் சந்திக்கிறோம். நாளையும் கோளையும் பற்றிப் பேசுகிறது, ‘நாள் என்ன செய்யும்’ கட்டுரை. ‘இலைமறை காய்’ என்னும் கட்டுரை ‘வண்ண நிலவன்’ என்கின்ற எழுத்தாற்றல் மிக்க படைப்பாளி பற்றிப் பேசுகிறது. கவி எனப்படுவது என்னும் சொல்லாராய்ச்சி நன்று நடைபெற்றிருக்கிறது இந்நூலில். “நாய்பெற்ற தெங்கம் பழம்” என்னும் கட்டுரையில் மொழியின் நலிவு பற்றிச் சாடுகிறார் நாஞ்சில் நாடர். ‘அன்பு என்பதோர் உத்தமப் பொதுக்காரணி’ ‘கவித்தென்றல்’ எனக் கவியரசு கண்ணதாசனைப் பாடிப் புகழ் பெற்ற ‘கா.சு.மணியன்’ பற்றிய கட்டுரையாகும்.
‘இன்னும் வாசிக்கப்படுகிற அந்த நாவல்’ என்று தன் முதல் நாவலாகிய ‘தலைகீழ் விகிதத்தை’ப் பற்றி விளக்குகிறார் அது பிறந்த கதை, அச்சிட்ட கதை, வெளியிட்ட கதை என படிப்படியாக விளக்குகிறார். நாவலை எழுதி முடித்த கையோடு, சென்னை வந்து பதிப்பகத்தின் கடைக் கண்களுக்கு நின்று, ஏமாந்து, பம்பாய் திரும்பி விட்டார் நாஞ்சில். பின் நண்பர்கள் பணம் போட்டு ‘பட்ஸ்’ என்னும் பதிப்பகம் தொடங்கி அதில் அச்சிடுவதாகத் திட்டம் இட்டனர். ஞான.ராஜசேகரன் அட்காவை வடிவமைத்தார். அச்சிடுவதற்கு சென்னைக்கு மீண்டும் வந்தார்.
” ‘தீபம்’ அலுவலகத்தில் நா.பார்த்தசாரதியின் சகோதரி மகன் எஸ்.திருமலை அலுவலக நிர்வாகியாக இருந்தார். அவரும் ஒரு எழுத்தாளர்தான். சிறந்த வாசகரும் எடிட்டரும்கூட. என் எழுத்துக்கள் தீபத்தில் வெளியானபோது என்னை மதித்து நட்புப் பூண்டவர், ஊக்குவித்தவர். மறுபடியும் சென்னை வந்த என்னை அவர் அழைத்துக் கொண்டு பாண்டி பஜார் வந்தார். அங்கு கே.கே.ராமன் என்பவரின் அச்சகத்துக்கு அழைத்துக் கொண்டு போனார். அவரிடம் இருந்த 10 பாயின்ட் எழுத்துருக்கள் எம்.வி.வெங்கட்ராமனின் ‘வேள்வித் தீ’ எனும் நாவலில் என்கேஜ் ஆகி இருந்தன. ஆகவே 12 பாயின்ட் எழுத்துருக்கள் கொண்டு அச்சிடலாம் என்றார். எனக்கு யாதொன்றும் அப்போது அர்த்தமாகவில்லை. முன்பணம் கொடுத்தாயிற்று.
நங்கநல்லூரில் என் சகோதரி வீட்டில் தங்கி இருந்தேன். 1977-ம் ஆண்டு பழவந்தாங்கல் அல்லது மீனம்பாக்கம் லோக்கல் ரயில் நிலையங்களில் ஆட்டோ ரிக்ஷா கிடையாது. அதிகாலை ஏழரை மணிக்கு சகோதரி வீட்டில் காலைப் பலகாரம் சாப்பிட்டு, மத்தியானத்துக்கும் கட்டிக் கொண்டு பொடி நடையாகப் புறப்பட்டுப் போவேன். ஒன்பது மணிக்கு அச்சகம் திறக்கும் போதே போய்விடுவேன். காலி புரூப், பக்கம் புரூப் எல்லாம் நானே பார்த்தேன். முன்னிரவில் மாம்பலத்துக்கு நடந்து, ரயில் பிடித்து, ஓரமாக நடந்து, சுடுகாடு மற்றும் இடுகாடு வழியாக, பேய்க்கும் வழிப்பறிக்கும் அஞ்சி, ரங்கா தியேட்டர் வரும் வரை உயிர் குரல் வளையில் நிலை கொண்டிருக்கும்.
தங்கை வீட்டுக் கிணற்று நீர் தரையோடு தரையாகக் கிடக்கும். சென்னையின் வெயிலுக்கும் புழுக்கத்துக்கும் இரவும் குளிக்காமல் கிடக்க ஏலாது. கால் கால் வாளியாகச் சுரண்டிக் கோரிக் குளித்து, சாப்பிட்டுப் படுக்க பதினொன்றாகி விடும். தினசரி ஒன்றரை பாரம் புரூஃப் தருவார் காசிராமன். ஒரு பாரம் என்பது 16 பக்கங்கள். எனக்கு வேலையில்லாத நேரத்தில், அச்சகம் இருந்த கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்த ‘கலைஞன் பதிப்பகம்’ போவேன். தீவிர எழுத்தாளர் பலரின் புத்தகங்களை அன்று ‘கலைஞன்’ மாசிலாமணி வெளியிட்டு வந்தார். அங்கு போய் உட்கார்ந்து சா.கந்தசாமி, அசோகமித்திரன், ஆ.மாதவன் என வாசிப்பேன்.
பெரியவர் மாசிலாமணி காந்தியவாதி, தமிழிலக்கியப் போக்குகள் உணர்ந்தவர். அவருடன் உரையாடுவது சுவாரசியமான அனுபவம். எனக்கு அப்போது தமிழிலக்கியச் சூழல் புதியது. எப்போதும் அந்த மிரட்சியுடன் இருந்தேன். இன்றும், கோவையில் அவரது மகள் வீட்டில் ஓய்வுக்கு மாசிலாமணி அவர்கள் வந்து தங்கி இருக்கும்போது எமக்குள் நீண்ட உரையாடல் நடக்கிறது.
‘தலைகீழ் விகிதங்கள்’ நாவலின் அட்டைப்படம் மவுண்ட் ரோடில் ஒரு அச்சகத்தில் அடித்தோம். அன்று அது அண்ணா சாலையாக ஆகி இருக்கவில்லை. அன்றைய தமிழகச் சட்டமன்ற சபாநாயகராக இருந்த க. ராஜாராமுக்கு சொந்தமான அச்சகம் அது, ஆனந்த் தியேட்டர் பக்கம். நாங்கள் செய்து கொண்டு வந்திருந்த பிளாக்குகளில் ஒன்று ‘மெரிக்க’வில்லை என்றனர். மறுபடியும் பிளாக் எடுத்து சரி செய்ய ஞான.ராஜசேகரன் பம்பாயில் இருந்து புறப்பட்டு சென்னை வந்தார். ‘தீபம்’ திருமலை உதவி இல்லாமல் அத்தனை எளிதில் எனது முதல் புத்தகம் வெளி வந்திருக்காது.
அச்சடித்த ஒவ்வொரு பாரமும் காணக்காண பரவசம். ஆனால் 12 பாயின்ட் எழுத்தில், புத்தகத்தின் பக்கங்கள் மண் புற்றுப்போல் வளர்ந்து கொண்டே போயின. எட்டாயிரம் ரூபாய் திகையுமா என படபடக்க ஆரம்பித்தது மனது. கடன் தரும் செழிப்புடன் அன்று உறவினர்களும் இல்லை. அச்சாக சரியாக 19 நாட்கள் எடுத்தன. 456 பக்கங்கள். 19* 24 = 456, கணக்கு சரிதானா? எனது விடுமுறையும் தீரும் தறுவாயில் இருந்தது. பிறகு பைண்டிங், கட்டிங் எனச் சில நாட்கள்.
முதல் புத்தகம் வந்த தினம் நினைவில் இல்லை. ஆனால் அச்சிட்டு முடித்த அன்று, அச்சுக் கோர்த்த நான்கு இளம் பெண்கள் என்னிடம் வந்து நாவலை வியந்து பேசினார்கள். பின்பு எத்தனை பாராட்டுக்கள் பெற்ற போதும், அதற்கு இணையான கர்வம் ஏற்பட்டதில்லை. அச்சகத்தில் பணிபுரிந்த யாவருக்கும் என்னுடைய செலவில் மாலையில் மசால்தோசை வாங்கிக் கொடுத்தேன். பாண்டிபஜாரின் ரத்னா கபேயா, கீதா கபேயா, இன்று நினைவில் இல்லை.” (கீதா கபே எழுத்தாளரே)
மூன்று நாட்கள் பொறுத்துப் போன போது, மை, அட்டை வார்னீஷ் மணக்க எனது முதல் புத்தகம் கையில் இருந்தது. அன்று எனக்கும் தெரியாது. தமிழின் குறிப்பிடத் தகுந்த நாவலாக அது கொண்டாடப்படப் போகிறது என்று. நன்றியுடன் கையெழுத்திட்டு அச்சுக் கோர்த்த இளம் பெண்களுக்கும், அச்சக உரிமையாளர் காசிராமனுக்கும், கலைஞன் மாசிலாமணிக்கும், தீபம் திருமலைக்கும் முதல் படிகள் தந்தேன். அன்று சகோதரி வீட்டுக்கு நடக்கும்போது சுடுகாட்டு, இடுகாட்டுப் பேய்கள் என்னை மரியாதையுடன் கண்டு வணக்கம் செய்தன.
பெயர் குறிப்பிடாமல், ஒரு முழுப்பக்கத்தில் ‘அப்பாவுக்கு’ என்று மட்டும் அச்சிட்டு, முந்திய ஆண்டில் தனது 55 வயதில் காலமானவருக்கு சமர்ப்பணம் செய்திருந்தேன். அவர் என்னை ‘அவையத்து முந்தி இருக்கச்’ செய்தவர். நாவல் வெளியானது 1977 ஆகஸ்டில். ஆயிரம் படிகளை பாரி நிலையத்தாரிடம் விற்பனைக்குக் கொடுத்து 180 படிகளை பம்பாய்க்குப் பார்சல் அனுப்பி, கையில் சில படிகளுடன் பம்பாய்க்கு வண்டி ஏறினேன்.
அந்த ஆண்டில் சென்னை Christian Literature Societyl CLS நடத்திய நண்பர் வட்டக் கருத்தரங்கில், நாவல் நூற்றாண்டு விழாக் கொண்டாட்ட தினத்தில், பன்னிரண்டாவது அமர்வில் சிலிஷி பொதுச் செயலாளர் திரு.பாக்கியமுத்து, ‘தலைகீழ் விகிதங்கள்’ நாவலை அறிமுகம் செய்தார். அறிமுகம் செய்து உரையாற்றியவர் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர், பேராசிரியர். ச.வே. சுப்பிரமணியம். அரங்கில் அமர்ந்திருந்தவர்கள் ‘சிட்டி’ பெ.கோ. சுந்தரராஜன், பேராசிரியர் சிவபாத சுந்தரம், சி.சு. செல்லப்பா, தி.க.சி., வல்லிக் கண்ணன், அசோக மித்திரன், ஆ.மாதவன், சா.கந்தசாமி, பூமணி, சு.சமுத்திரம், பேராசிரியர் கனகசபாபதி, அக்னிபுத்திரன் (இன்று கனல் மைந்தன்), பேராசிரியர் கா.சிவத்தம்பி எனப் புகழ் பெற்ற பலர். வேறென்ன வேண்டும் முதல் பிரவேச நாவலாசிரியனுக்கு?
ஆயின 32 ஆண்டுகள். ஓய்வு பெற இன்னும் எட்டு ஆண்டுகள் வேண்டும் என விரும்புகிறேன். காலம் எவர் கட்டுப்பாட்டில்? நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன் பாரி நிலையம் திரு.செல்லப்பன் அவர்களை. ஆயிரம் படிகளையும் விற்று ஒரே தவணையில் பணம் தந்தார். அவர்போல் ஒரு பதிப்பாளர், புத்தக விற்பனையாளர் காண்பதரிது. ஐந்து பதிப்புகள் ஓடி விட்டன. ‘சொல்ல மறந்த கதை’ என திரைப்படம் ஆனது. சேரன் முதலில் நடித்த தங்கர் பச்சான் இயக்கிய படம். இன்னும் அந்த நாவல் வாசிக்கப்பட்டுக் கொண்டும் இருக்கிறது.” இது நாடனின் குரல்.
நாஞ்சில் நாடன் சார்! எனக்கொரு படி கொடுப்பீர்களா? நான் அதைத் தொட்டுப் பார்க்க வேண்டும் சார். அது நீங்கள் நடந்த நடையைப் பற்றிப் பேசும். நங்கநல்லூரில் அந்த சுடுகாடு, இடுகாடு வழியாக நடந்த கதைகள் கூறும். முதல் முதலில் பிரிண்டில் மிளிர்ந்த போழ்து, உங்கள் முகத்தின் பரவசத்தைப் பற்றிப் பகரும். உங்களிடம் இருக்கிறதா நாஞ்சிலார் அவர்களே!