கைம்மைத் துயர் களையப்பட வேண்டும்!

2

-மேகலா இராமமூர்த்தி 

பெண்களுக்குச் சமூகம் இழைத்த, இழைத்துவரும் தீங்குகளிலேயே மிகக் கொடுமையானது ’கைம்மை’ எனும் துயரநிலை. திருமணமான பெண் யாது காரணத்தினாலோ தன் கணவனைப் பறிகொடுத்தால் அவள் அதன்பின்னர்த் தன் வாழ்நாள் முழுவதும் கைம்பெண்ணாகவே வாழவேண்டிய கொடூரநிலை சங்ககாலம் தொட்டே நமக்குக் காணக் கிடைக்கின்றது. அவர்களை அன்போ அருளோ சிறிதுமின்றி இச்சமூகம் மிகவும் கீழ்த்தரமாகவும் வருந்தத்தக்க வகையிலும் நடத்தியிருக்கிறது.

கணவனை இழந்த பெண்ணின் கைம்மைநிலையைத் ’தாபத நிலை’ என்ற பெயரால் தொல்காப்பியம் சுட்டுகின்றது. தாபதம் என்றால் தவநிலை என்று பொருள். கணவனை இழந்த பெண் தவ வாழ்க்கை வாழவேண்டும் என்பதை இந்தச் சொல்லே நம்க்குச் சொல்லாமல் சொல்கிறது.

கைம்மைநிலை அடைந்த ஒரு பெண் தன் நிலையை விளக்கும் சங்கப் பாடலொன்று.

அளிய தாமே சிறுவெள் ளாம்பல்
இளையம் ஆகத் தழையா யினவே இனியே
பெருவளக் கொழுநன் மாய்ந்தெனப் பொழுது மறுத்து
இன்னா வைகல் உண்ணும்
அல்லிப் படுஉம் புல் ஆயினவே.
(ஒக்கூர் மாசாத்தனார்:  புறம்-248)
 

அந்தோ! இந்த அல்லி (ஆம்பல்) மிகவும் இரங்கத்தக்கது. நான் இளையவளாக இருந்தபோது இந்த அல்லியைத் தழையாடை செய்து உடுத்து மகிழ்ந்திருந்தேன். அவ்வினிய காலம் கனவாய்க் கழிந்துபோனது. இப்போது கணவனை இழந்த கைம்மை நிலையில் இதே அல்லி எனக்கு உண்ணும் புல்லரிசியாய் உதவுகின்றது என்கிறாள் மிகுந்த வேதனையோடு! 

கைம்மைக் கோலத்தால் இவ்வாறு துயருற்றவர்கள் சாமானியப் பெண்கள் மட்டுந்தானா அல்லது பெரிய இடத்துப் பெண்களுக்கும் இதே நிலைதானா எனும் கேள்வி இத்தருணத்தில் நமக்கு எழுகிறது. இது குறித்து அறிந்துகொள்ள உதவும் பாடலொன்றும் புறநானூற்றில் நமக்குக் கிடைக்கிறது.

பாண்டிய நாட்டில் சிறப்புற அரசு செலுத்தியவன் பூதப்பாண்டியன் எனும் மன்னன். அவன் ஒருநாள் போரில் இறந்துபட்டான். கணவனின் மரணத்தையறிந்த அவன் மனைவி பெருங் கோப்பெண்டு, தீயில் பாய்ந்து உயிர்விடக் கருதினாள். இறந்த கணவனைப் பிரிந்துவாழ அஞ்சிய அவள் ஒன்றுமறியாத பேதைப்பெண் அல்லள்; அறிவிற் சிறந்தவள்; அரசியல் நீதிகளை நன்கு அறிந்தவள். பூதபாண்டியனுக்குப்பின் பாண்டிநாட்டைக் காக்கும் பண்புடை வேந்தர் யாரும் இன்மையால், அரசியல் சுற்றத்தாராகிய சான்றோர் பலர் அவளைத் தீப்பாயவேண்டாம், அரசுகட்டிலேறி ஆட்சிபுரிக என்று எவ்வளவோ வேண்டினர். ஆயினும், கணவனை இழந்தபின் கைம்மைநோன்பு மேற்கொண்டு துன்புற வேண்டிய தன் நிலையைப் பெருங்கோப்பெண்டு சிறிதும் விரும்பவில்லை என்று தெரிகிறது.

அப்படிக் கணவனை இழந்துவாழும் கைம்பெண்கள் படும் பாட்டை அவளே  ஒரு பாட்டாய் வடித்துள்ளது அவளுடைய எண்ணவோட்டத்தை நமக்குத் தெற்றென விளக்குகின்றது.

பல்சான் றீரே பல்சான் றீரே
செல்கெனச் சொல்லாது  ஒழிகென விலக்கும்
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே
அணில்வரிக்
கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட
காழ்போல் நல்விளர்
நறுநெய் தீண்டாது
அடையிடைக்
கிடந்த கைபிழி பிண்டம்
வெள்ளெள்  சாந்தொடு புளிப்பெய்து  அட்ட
வேளை வெந்தை வல்சி யாகப்
பரல்பெய் பள்ளிப் பாயின்று வதியும்
உயவல்
பெண்டிரேம் அல்லேம்  மாதோ
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்
நுமக்கரி தாகுக தில்ல எமக்குஎம்
பெருந்தோள்
 கணவன் மாய்ந்தென  அரும்பற
வள்ளிதழ் அவிழ்ந்த தாமரை
நள்ளிரும்
பொய்கையுந்  தீயும்  ஓரற்றே. (பெருங்கோப்பெண்டு: புறம்- 246)

”சான்றோரே! கணவன் இறந்தபின் நீயும் அழி என்று என்னைச் சொல்லாது அந்த எண்ணத்தை ஒழி என்று சொல்கிறீர்களே! அணிலின் வரிபோலும் வரியுடைய வளைந்த வெள்ளரிக்காயின் விதைபோன்றதும், வாசமிகு நெய் பெய்யப்படாமல் கையால் பிழிந்து இலையில் இடப்பட்ட நீர்ச் சோற்றுத் திரளுடனே; வெள்ளை எள்ளின் விழுதையும் புளிப்பெய்து சமைத்த வேளைக்கீரையையும் உணவாய்க் கொண்டு பருக்கை கற்களாற் அமைக்கப்பட்ட கொடிய படுக்கையில் பாயின்றிக் கிடந்து, கைம்மைநோன்பு நோற்று வருந்தும் பெண்களைப் போன்றவளல்லள் நான்!

சுடுகாட்டின்கண் உண்டாக்கப்பட்ட பிணப்படுக்கை உங்களுக்கு வேண்டுமானால் அரிதாகவும் அச்சம் தருவதாகவும் இருக்கலாம். எனக்கு அப்படியன்று!  பெரியதோளையுடைய எம் கொழுநன் இறந்துபட்டபின், வள்ளிதழ் விரிந்த தாமரைப் பொய்கையும்,  தீயும் எனக்கு ஒரே  தன்மையானவையே” என்கிறாள். கைம்மைத் துயரால் வாடி, நோன்பு என்ற பெயரால் ஒவ்வொரு நாளும் துடிதுடித்துச் சாவதைவிட ஒரேயடியாய்ப் போய்விடுவதே மேல் என்ற விரக்தி எண்ணமே அரசியைத் தீப்பாய வைத்ததோ என்று எண்ணத்தோன்றுகிறது.

கணவனோடு ஒரு பெண்ணின் வாழ்வே முடிந்துபோனது என்று முடிவுசெய்த ஆணாதிக்கச் சமூகத்தின் சமத்துவம் விரும்பும் இன்றைய பெண்களுக்குக் கடுஞ்சீற்றம் ஏற்படவே செய்கின்றது. சங்க இலக்கியத்தில் இக்கொடுமை பதிவுசெய்யப்பட்டிருக்கிறது என்றால், அதற்கு வெகுகாலத்திற்கு முன்பே இக்கொடிய நிலை நம் சமூகத்தில் வேர்விடத் தொடங்கியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

ஈராயிரம் ஆண்டுகட்கு மேலாகப் பெண்களுக்கு இழைக்கப்பட்டுவந்த இவ் வன்கொடுமைக்கு எதிராகக் குரல் ஒலிக்கத்தொடங்கியது என்னவோ 19ஆம் நூற்றாண்டிலேயே என்பதை எண்ணும்போது அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை. இராஜா ராம்மோகன்ராய், ஈஸ்வரசந்திர வித்தியாசாகர், தயானந்த சரஸ்வதி, சுரேந்தரநாத் பானர்ஜி போன்ற நல்லுளம் படைத்த ஆடவர் சிலர் கைம்பெண்களை உடன்கட்டை ஏறச்செய்யும் ’சதி’ எனும் வழக்கத்தை நிறுத்தவேண்டும் என்று முனைப்போடு செயற்பட்டு அதில் வெற்றிகண்டனர். தமிழ்த்தென்றல் திருவிக, தந்தை பெரியார் போன்றோர் கைம்பெண்களின் உரிமைக்காகக் குரல்கொடுத்ததோடு நில்லாமல், அவர்களுக்கு மறுமணம் அவசியம் எனும் முழக்கத்தையும் முன்வைத்தனர்.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் இக்கருத்துக்கு வலிவும் பொலிவும் சேர்க்கும்வகையில் பல அற்புதப் பாடல்களைப் படைத்துள்ளார். மனைவிசெத்தால், பெருங்கிழவனும் காதல்செய்யப் பெண் தேடும்போது, இள மங்கையொருத்தி, கணவனை இழந்தால் மறுமணம் நாடுதல் பிழையோ? என்று ஆவேசமாகத் தன் கவிதையில் கேள்வியெழுப்புகிறார் அவர்.

”…பேடகன்ற அன்றிலைப்போல், மனைவி செத்தால்
     –பெருங்கிழவன் காதல்செயப் பெண்கேட் கின்றான்!
வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள்
     -மணவாளன் இறந்தால் பின் மணத்தல் தீதோ?
பாடாத தேனீக்கள் உலவாத் தென்றல்
      –பசியாத நல்வயிறு பார்த்த துண்டோ?” என்று கடுமையாய்க் கேட்கிறார்.   

கற்பு என்பதைப் பெண்களுக்கு மட்டுமே உரித்தாக்கிய நம் சமூகம், கணவனை இழந்த பெண்ணொருத்தி, தன் அனைத்து ஆசைகளையும் பொசுக்கிவிட்டு மிகக் கடுமையான நோன்புகளை நோற்றால்தான் அடுத்த பிறவியிலும் அதே கணவனோடு வாழும் பேற்றை (!!) அவள் பெறுவாள் எனும் மூடநம்பிக்கையில் மூழ்கிக்கிடந்தது. எனவே, இன்னொரு ஆடவனை மறுமணம் செய்தல் என்பது பெண்களின் கற்புநெறிக்கு இழுக்கு என்று அன்றைய சமுதாயம் செய்த கற்பிதமே இத்தனை அவலங்களுக்கும் ஆதிகாரணம்.

”கற்பு நிலை என்று சொல்ல வந்தார் இரு 
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்”
என்றான் மகாகவி. ஆனால் அப்படியோர் நிலை இன்றுவரை நடைமுறைக்கு வந்ததாய்த் தெரியவில்லை. பகுத்தறிவும் சிந்தனை வளமும் பெருகிவிட்டதாக நாம் எண்ணிக்கொண்டிருக்கும் இன்றைய சூழலிலும் பெண்ணுக்கு மட்டுமேயான ஒழுக்கமாகவே கற்பு திகழ்ந்துவருவதை மறுக்கமுடியுமா?

கைம்பெண்களை அன்றுபோல் இன்றைய சமூகம் இறந்த கணவனோடு சிதையில் தள்ளிக் கதையை முடிக்காவிட்டாலுங்கூட அப்பெண்களின் வாழ்க்கை நடைமுறைகளில், அவர்களுடைய நடை உடை பாவனைகளில் விரும்பத்தகாத மாற்றங்களை எதிர்பார்க்கவே செய்கின்றது. குடும்பங்களில் நடக்கும் மங்கல நிகழ்வுகளில்கூட அவர்களை ஒதுக்கிவைக்கும் மூடவழக்கம் இன்றும் தொடர்ந்துகொண்டுதானே இருக்கிறது? எங்கேனும் செல்கையில் அவர்கள் எதிர்ப்படுவதே அமங்கலம் எனும் நச்சுச் சிந்தனையிலும் மாற்றமில்லையே!!

இவையெல்லாம் முற்றாய்க் களையப்படவேண்டிய சமூக அவலங்கள். மனிதர்களை அவர்களின் பிறப்பின் காரணமாய் இழிவுபடுத்துவது எவ்வளவு பெரிய குற்றமோ அதுபோன்றதே கைம்பெண்களை உதாசீனப்படுத்துவதும் அவர்களின் ஆசைகளையும் உரிமைகளையும் தட்டிப் பறிப்பதும்.

பெண்களும் ஆண்களும் சரிநிகர் சமானராக எல்லாவிதத்திலும் நடத்தப்படவேண்டும். ஆளுக்கொரு நியாயம் எனும் அநியாயம் அடியோடு மடியவேண்டும். பெண்களை இழிவுபடுத்தும் கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப்போகவேண்டும். அப்போதுதான் மனிதநேயமும் சமத்துவமும் மண்ணில் காக்கப்படும். மாதர் தம்மை இழிவுசெய்யும் மடமையைத் தீயிட்டுக்கொளுத்துதல் புதுமைப் பெண்களின் கடமை.

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “கைம்மைத் துயர் களையப்பட வேண்டும்!

  1. சிந்தனையைத் தூண்டும் உணர்ச்சிபூர்வமான கட்டுரை… வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.